அது எப்போ நடந்தது வியாழக்கிழமையா ? ஆமாமா வியாழக்கிழமைதான்.
லட்சுமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு “மேலச்சூரங்குடி” போகும் பஸ்ஸில்
நான் அண்ணன் அப்பா அம்மா எல்லோரும் ஏறி இருக்கிறோம்.
மணி இரவு ஒன்பதரை ஆகிவிட்டது.
ஒன்பது மணிக்கு மேல் மேலச்சூரங்குடிக்கு அதுதான் கடைசி பஸ்ஸாக இருக்க வேண்டும்.
கூட்டம் பிதுங்கியது.அம்மாவுக்கு, முன்னால் பெண்கள் சீட்டில் இடம் கிடைத்தது.
அப்பா நாங்கள் எல்லோரும் பின்னால் உட்கார்ந்து கொண்டோம். இறங்கவேண்டிய பஸ்ஸ்டாப் “ராமன்புதூர்” .
பஸ் மீனாட்சிபுரத்தை தாண்டி இடலாக்குடி ஜங்சனை தாண்டி, ஈத்தாமொழி ஜங்சனை தாண்டி, கோட்டாறு ஏற்றத்தில் ஏறி, செட்டிகுளம் ஜங்சனிக்கு வந்து, ராமன்புதூர் வந்து நின்றது.
அப்பா அம்மாவுக்கு குரல் குடுத்தார்.
கூட்டத்தில் அம்மாவை பார்க்க முடியவில்லை.
நான் அண்ணன் அப்பா மூவரும் கிழே இறங்கினோம்.
அம்மா இறங்கவில்லை.
அம்மா முன்னால் இறங்கி நிற்பார் என்று எதிர்பார்த்திருந்தால் அப்படி இல்லை. அம்மா இறங்கவில்லை.
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பஸ் எடுக்கபட்டு வேகம் பிடித்து ஒடியது.
அப்பாவுக்கு புரிந்து விட்டது. எங்கள் இரண்டு பேரையும் சட்டென்று பக்கத்தில் இருக்கும் பரோட்டா ஸ்டாலில் சொல்லி, நிற்க வைத்துவிட்டு, ஆட்டோவை மறித்து பஸ்ஸை பின் தொடர்ந்தார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தி ஒன்பதில் நாகர்கோவிலில் தெருவிளக்கே கிடையாது.
இரவில் இருட்டு குகைக்குள் போவது மாதிரியே இருக்கும்.
ராமன்புதூர் விட்டால் கார்மல் ஸ்கூல் ஸ்டாப். அதன் பிறகு “புண்ணகாட்டுவிளை”. இரண்டுமே கள்ள சாராயத்துக்கும் கொலை கொள்ளைக்கும்புகழ்பெற்றிருந்தது
வாழ்க்கையில் முதன் முதலாக பயம் என்றால் என்ன அப்போதுதான் உணர ஆரம்பித்தேன்.
தொண்டை வலித்தது.
அம்மா எங்கே? அம்மா இனி வருவாரா? அம்மா மேல் பாசமும், அம்மா இல்லா பயமும் என்னுடைய ஒன்பதாம் வயதில் முதன் முதலில் அடைந்தேன்.
அம்மா மட்டும் கிடைத்தால் இனிமேல் கோபமே படக்கூடாது.
அவர் சொல்வதையெல்லாம் கேட்பேன். அவர் சொல்வது மாதிரியே நல்லா படிப்பேன்.
ஆனால் அம்மா கிடைக்க வேண்டுமே.
அண்ணனும் பீதியில் இருந்ததால் எதுவேமே பேசவில்லை.
பேசுவதற்கு என்ன இருக்கு இன்னும் அரை மணி நேரத்தில் அம்மா உண்டா கிடையாதா என்று தெரிந்து விடும்.
பஸ்ஸில் தூங்கிய அம்மா முழித்து பார்க்கும் போது ஸ்டாப்பை தவறவிட்டதை புரிந்து கொண்டார்.
பயத்தில் நடுங்கினார்.கார்மல் ஸ்கூல் பஸ்ஸ்டாப்பில் இறங்கி சேலையை கழுத்து முழுவதும் மூடி ஒட்டமும் நடையுமாக பத்து அடிதான் நடந்திருப்பார், அப்பா ஆட்டோவில் இறங்கி ”ஏறு” என்றிருக்கிறார்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் அப்பாவும் அம்மாவும் ஆட்டோவில் பரோட்டா கடைக்கு வந்து என்னையும் அண்ணனையும் ஏற்றி சென்றனர்.
அம்மாவை பார்த்ததும் மகிழ்ச்சி.
ஆனால் அம்மா பேசவே இல்லை. கண்கள் கலங்கி இருந்தது.
அப்பாவும் இறுக்கமாக இருந்தார்.
அப்பா திட்டி இருப்பார் என்று யூகித்தேன்.அப்பா எப்போதுமே அம்மாவை கைநீட்டி அடித்ததில்லை.
ஆனால் வார்த்தை பிரயோகங்கள் கோபத்தில் கடுமையானதாய் இருக்கும்.
இறுக்கத்தில் யாருமே ஆட்டோவில் பேச வில்லை.
மவுனம் பெரிய கல் மாதிரி எல்லோரையும் அழுத்தி கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்தோம். அப்பா பேசவில்லை. நான் பேசவில்லை. அண்ணனும் அம்மாவும்தான்.
அம்மா ரசம் வைத்து தேங்காய் துவையல் அரைத்தார்.
சாப்பிடும் போது வழக்கமாய் வீடு கலகலப்பாய் இருக்கும். பேசும் பேச்சில் எச்சில் தெரிக்கும்.
அன்று யாருமே பேசவில்லை.அப்பா பேருக்கு சாப்பாட்டை அலைந்து சாப்பிட்டு தூங்க போனார்.
படுக்கையில் படுத்து இரண்டு நிமிடத்தில் எழுந்து வந்து சமையல்கட்டை ஒழித்து கொண்டிருந்த அம்மாவிடம் வந்து “ நீ உன் பேக்குதனத்தால என்ன பைத்தியமாத்தான் அலைய விடப்போற “ என்றார்.
அம்மா அதை கேட்டதும் ஒங்கி அழுதார்.அப்பா போய் படுத்து கொண்டார்.
அம்மா ரொம்ப நேரம் அழுது கொண்டே இருந்தார். நான் கூடவே இருந்தேன்.அழும் உணர்வு எனக்கும் இருந்தது.
அப்பாவுக்கு அம்மாவுக்குமான சண்டையையும் முதன் முதலாக அப்போதுதான் பார்க்கிறேன்.
இனி வீட்டில் எப்போதுமே இப்படித்தானா, கலகலப்பே இருக்காதா என்று நினைத்து துக்கித்தேன்.
தூங்கி போனேன்.
இரவு மூன்று மணிக்கு ஒண்ணுக்கிருக்க எழுந்த போது, ஆரஞ்ச் விடிலைட் வெளிச்சத்தில் அப்பாவும் அம்மாவும் இறுக்க அணைத்து தூங்கிகொண்டிருந்தனர்.
காதலில். காமம் கொடுத்த மகிழ்ச்சியின் கதகதப்பை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அந்த அணைப்பின் அர்த்தம் ”நான் எதாவது தவறு செய்தால் மன்னித்து விடு” என்று பரஸ்பரம் கேட்பது போல் இருந்தது.
பாத்ரூம் போய்விட்டு, அந்த அறையில் படுக்காமல் பக்கத்து ரூமில் அண்ணன் கூட படுத்து கொண்டேன்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை இல்லை என்பதே உற்சாகமாய் இருந்தது.
இனி நிம்மதியாய் இருக்கலாம் வீடு சந்தோசமாய் இருக்கும்.
தூக்கம் வரவில்லை.
மணியை பார்த்தேன். நாலு மணி.
இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் வெள்ளிக்கிழமை சிறுவர்மலர் வரும்.
படிக்கலாம்.
படிப்பதற்காக முழித்திருந்தேன்.
உங்களது நடை நன்றாக இருக்கிறது.......தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteஅடிக்கடி வருவேன்
ReplyDelete