ஆசிரியர் , போர்டில் ”நீல நிற” மர்ர்கரால் பட்டையாய் தீட்டி ,இது என்ன? என்றார்.
”அது உலகின் நிறம். பொதுத்தன்மையின் பரவலை விவரிக்கிறது.” என்றான் ஒரு மாணவன்.
“பார்க்க பார்க்க உள்ளே இழுக்கும் சுழற்சியாய், ஆழ் மனதின் வெளிப்பாடு” என்றான் ஒருவன்.
“சார். நீல நிறம் “ என்றான் ஒருவன்.
அந்த கடைசி “சார். நீல நிறம் “ என்ற பதிலை கேட்டு ஆசிரியர் வேகமாக கைத்தட்டி. “நீ வீரன். உண்மையை சொல்லும் வீரம் உனக்கிருக்கிறது என்றார்.
அதே மாதிரிதாங்க உண்மையை போட்டு உடைப்பதில் ”சவுந்திரராஜன் சாரை” மிஞ்ச ஆளில்லை.
பத்தாம வகுப்பில் சயின்ஸ் பாடத்தை எடுப்பதற்க்கு முன்னால் , கிளாஸில் முதல் முறையாக அவர்
சொன்னது ” எல கேட்டுகிடுங்க ! உங்க அப்பா அம்மால்லாம் சீக்கிரம் செத்து போவாவ. உங்க காலம் முழுக்க இருக்க மாட்டாவ . அதனால உங்க படிப்புதான் கைக்கொடுக்கும்ம்ம்.
அந்த “ ம்” ஐ அழுத்தி சொல்வார். அப்பா அம்மா மேல பாசமா இருந்த பயலுக்கெல்லாம் அதிர்ச்சி. “என்னல இந்த ஆளு இப்படி சொல்றாருன்னு” பயலுக பேசிகிட்டான்கள்.
தினமும் பசங்களுக்கு அவரவர் பெற்றோர்களின் மரணத்தை ஏதாவது ஒரு விதத்தில் சொல்லி விடுவார். அவருக்கு அதில் ஒரு மகிழ்ச்சி என்பதைவிட , குறிக்கோளாய் இருப்பது போல்தான் தோண்றும்.
பாடம் எடுக்கும் போது எல்லோரும் அவர் கண்களைத்தான் பார்க்க வேண்டும். தப்பி தவறி வெட்டரிவாள் கிருதாவை, பார்த்தால் கூட கண்டுபிடித்து விடுவார். “எல இங்க வா . அங்க என்னல பார்வை “ விளாசி எடுப்பார்.
கஸ்டமான பாடத்தை கிளாஸ் ரூமில் வைத்து எடுப்பார். மறுநாள் அதே பாடத்தை வேப்ப மரத்தடியில் வைத்து எடுப்பார். ”கஸ்டமான பாடத்தை வேற வேற சூழ்நிலையில படிச்சா புரியும் கேட்டியா ? ” என்பார்.
பத்தாம் வகுப்பு பசங்க எவனாவது ஓவிய போட்டி பேச்சு போட்டின்னு கிளாஸுக்கு வராம போனா, அவன சண்டை போட்டு தூக்கி வந்திருவார். அப்புறம் அவன் செத்தான். அடியும் அட்வைசும் தூள் பறக்கும்.
தினமும் கேள்வி கேப்பார். கேட்டு அடிப்பார்.
அதுக்கப்புறம்தான் பாடம். கேள்வி நேரம் வந்தாலே அலறுவான்கள்.
கேட்டு ஒரு செகண்டுக்குள் சொல்லாவிட்டால் அடி உண்டு ( நல்லா படிச்சவன் டக்குன்னு சொல்லுவான் கேட்டியா ) .
சுதந்திர தினத்துக்கு முந்தின நாள், இது மாதிரி ”பாயன்சி லா “ என்றொரு கேள்வி கேட்டு வரும்போது என் முறை வந்தது.
எனக்கு அந்த் கேள்வியின் பதில் நல்லா தெரியும் , ப்தட்டத்துல வர மாட்டேங்குது. யாரோ வாய்குள்ள பஞ்ச வைச்சு அடச்சா மாதிரி திணறுறேன்.
அடுத்தவன்ட்ட போயிட்டார்.
இப்போ சொல்லாதவனுகளுக்கு பிரம்பால அடி கொடுத்துகிட்டே வரார். எனக்கு அடி கொடுக்க ஓங்கும் போது என் குரல் சத்தமாக எதிர்ப்பாய் ஒலிக்கிறது.
சவுந்திரராஜன் சார் கிளாஸில் அவர் குரலைதவிர ஒரு குரல் வரும் என்று யாரும் நினைத்து கூட பார்பதில்லையாதனால், என் குரலில் ஒலி சூழலுக்கு பதட்டத்தையும் சுவாரஸ்யத்தையும் கொடுத்திருக்க கூடும்.
“சார் நான் அடி வாங்க முடியாது எனக்கு ஆன்ஸ்ர் தெரியும்”
“கைய நீட்டுல.நீ பேசவே கூடாது கேட்டியா. பதில் தெரியலன்னா அடிப்பேன்”
“இல்ல சார் ஆன்ஸர் தெரியும். உங்கள பாத்து பயந்து சொல்ல வரமாட்டேங்குது. வாய் திக்குது .”
இப்போ என் சட்டைய பிடிச்சி வெளியே இழுத்தார். நேரே என்னை சுவத்தில வைச்சு முட்டு முட்டினார். முதுகு வலித்தது.
”திமிரால உனக்கு. பேர் என்னல “
“விஜய் சார். எனக்கு ஆன்ஸர் தெரியும். சொன்னா திக்குது சார் “ குரல் உடைய ஆரம்பித்தது.
”சரி வா ! போர்டுல எழுதி காமில வா இங்க.”
வெறி பிடித்தவனாய் பதில் எழுதினேன். ஒவ்வொரு சாக்பீஸ் தூளும் அழுத்தம் தாங்காமல் மாவாய் பதிய என் விடையும் அதற்குரிய சித்திரமும் பார்த்து அவருக்கு என் பிரச்சனை புரிந்தது.
என் உடம்பின் நடுக்கத்தை கட்டுபடுத்த முடியாமல் தவித்தை பார்ந்த்து என் தோளில் கை போட்டுக்கொண்டார்.
“என்ன பாத்தா பயமாவால இருக்கு. நான் அரக்கனால . உங்க நல்லதுக்குதானல சொல்றேன். படிங்க . பத்தாங் கிளாஸ்தான் வாழ்க்கை புரியுதா” என்று புலம்பினார்.
ஏதோ காயப்பட்டவர் மாதிரி பேசினாற் போலதான் இருந்த்து.
அடுத்து மூன்று நாட்கள் அவர் பள்ளிக்கே வரவில்லை.
நான்காம் நாள் அவருக்கு பதிலாய் புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார்.
ஒரு மாதம் கழித்து அவர் வேறு வகுப்புகளுக்கு எடுக்கிறார். எங்கள் வகுப்பை தவிர்த்து விட்டாராம்.
விசாரித்ததில் இபோதெல்லாம் அப்பா அம்மாவின் இறப்பை பத்தி பேசுவதே இல்லையாம். பாடம் எடுத்து போய் விடுகிறாராம்.
யாரையும் திட்டுவதில்லையாம். கேள்வி கேட்பதும் இல்லையாம். பாடம் எடுத்து போய்விடுகிறாராம்.
ஒரு ஆசியரின் உயிர்ப்பை கொன்று விட்ட பாவத்துக்கு , ஆன்ஸர் தெரியாதுன்னு பொய் சொல்லி அடி வாங்கிருக்கலாம் என்று தோண்றிற்று அப்போது ...
No comments:
Post a Comment