Tuesday, 31 July 2012

கதை போல ஒன்று - 33


கதை போல ஒன்று - 33

அதிமிக்கேல் தெருவில் வசிக்கும், பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திடீர் திடீரென காணாமல் போவது தெருவாசிகளிடையே பயத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கிற்று.

சேலைகளுக்கு ஒன்றுமில்லை. சுடிதார்களுக்கும்ஒன்றுமில்லை.
உள்ளாடைகள் மட்டும் காணாமல் போகின்றன.

ஏதோ ஒரு ‘சைக்கோ’ தெருவில் நடமாடுகிறான் என்ற வதந்திதான் அந்த மர்மத்திற்கு விடையாகி நின்றதால், வேறு வழியில்லாமல் எல்லோரும் அதிக கவனமாயிருந்தனர்.

பகலில் மொட்டை மாடியில் துணிகாயப்போடுவதை நிறுத்தினர்.உள்ளாடைகளை வீட்டினுள்ளே காயப்போட்டனர்.அப்படி இருந்தும் திருட்டை முழுவதும் நிறுத்த முடியவில்லை.

“என்னடி பத்து வயசுல இருந்து அறுவயசு வரை பொம்பளைங்களே இருக்க முடியாது போல் இருக்கே இந்த தெருல “
தெரு பெண்கள் கேலியும் கெக்கலிப்புமாக பேசினாலும் அடிவயிற்றில் இருந்ததென்னவோ திகில்தான்.

போலீஸ்ஸிடம் சொல்லாமா என்று யோசித்து , இதை எல்லாமுமா சொல்வார்கள் என்று விட்டு விட்டனர்.

இளவட்ட பயலுகளுக்கு இது  குஜாலான டாபிக்காகவும், தன் வீட்டு பெண்களுக்கு நேரும் போது கண்சிவக்கும் டாபிக்காகவும் இருந்தது.

பொங்கலுக்கு முந்தின நாள், மதியம் மூன்று மணியளவில், தெருவில் இருக்கும் டீச்சர் வீட்டு கதவில், சொத்தென்று ஏதோ விழ, திறந்து பார்த்தால்.  பொதிந்த இன்ஸ்கர்ட்டில் கல்லை வைத்து யாரோ எறிந்திருக்கிறான்.

அது டீச்சரின் ஆடைதான்.

அதில் ஒரு கடிதம் ஒன்றும் இருந்தது. “ டீச்சர் உங்க மகளை எனக்கு பிடிச்சிருக்கு. அவளுக்கு நான் சீக்கிரம் முத்தம் கொடுப்பேன்” என்பதுதான் கடிதத்தின் வாசகம்.

 டீச்சர் மயக்கம் போட்டு விழுந்தார். தலையடித்து பெரிதாக அழுதார்.

யாராயிருக்கும் யாராயிருக்கும் என்று பெரிய சஸ்பென்ஸாகி கிடந்தது தெரு. இளவட்டங்கள் துப்பறிந்து கொண்டே இருக்கிறான்கள்.

அவனுகளுக்குள்ளே யாராவது இதை செய்த்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தாலும், அதை வெளிக்காட்டாமல் இருந்தார்கள்.

தெருவில் டியூசன் எடுக்கும் பெண் , நோட்டை கொடுத்து, இந்த கையெழுத்தும், லட்டரின் கையழுத்தும் ஒன்றாய் இருக்கிறதா என்று சோதிக்க சொன்னார்.

சோதித்ததில் கையழுத்து ஒத்து போனது.

அதை எழுதியவன் பதிமூன்று வயதே ஆன குமரன் என்கிற பையன். தெரு அதிர்ந்தது.

குமரனின் அப்பா ரயில்வேயில் உயரதிகாரி. அம்மா வேலைக்கு போகவில்லை.

குமரன் எல்லா வீட்டிற்கும் செல்லப்பிள்ளை. பரம் சாது என்று பெயர் பெற்றவன்.

குமரன் அப்பா அவனை கேபிள் வயரால் அடித்தார். அம்மா சூடு வைத்தாள். வீட்டை விட்டு வெளியே போ போ என்று வாரியலால் அடித்தாள்.

சிவந்த நிறமான குமரன் முகம் அழுது கதறி வீங்கியது.இளவட்டங்கள் எல்லோரும் நடுத்தெருவில் வைத்து அடித்தனர்.

பெண்ணின் தாய்மை குணத்தை எப்படி ஆணால் புரிந்து கொள்ள முடியாதோ ,அப்படியேத்தான் ஆணின் காமமும் என்று தெருவாசிகளுக்கு யார் புரியவைக்க முடியும்.

பதினைந்து வயது பையன் சைக்கிளில் கிழே விழுந்து முட்டி சிரைத்தால் , அதை பார்த்து தாய்மை உணர்வோடு காயத்துக்கு மருந்து போடும் முப்பது வயது பெண்ணையும் காமத்தோடுதான் ஆண் பார்ப்பான். அவன் அவ்வாறே இயற்கையால் படைக்கபட்டிருக்கிறான் என்று யார் சொல்வது தெருகாரர்களுக்கு.

குமரன் முகமெல்லாம் ரத்தம் ஒழுகிற்று. காயத்திற்கும் மருந்து கூட போடவில்லை. குமரனின் மாமா வந்து அவனை திருச்சி கூட்டி போய்விட தெரு அமைதியானது.

டீச்சர் குமரனா இதை செய்தான் என்று வருந்தி சாபம் போட்டு கொண்டே இருந்தாள். ஏனென்றால் குமரன் கடித்தில் எழுதிய டீச்சரின் மகள் கல்யாணம் ஆனவள்.

மூன்று மாதம் கழித்து குமரனை மாமா கூட்டி வந்தார். அவனுக்கு மொட்டை போட்டிருந்தது.

தெரு மறுமடியும் பதட்டமாகி குமரன் வீட்டின் முன் கூடிற்று.

 ரோஸ்லின் அம்மாதான் முதலில் சத்தம் போட்டார் “இந்த பய தெருல இருந்தா எங்களுக்கு நிம்மதியில்ல. இவன் ஹாஸ்டல்ல சேத்துருங்க. எங்க மானத்துக்கு கேடு இவனால “ என்று ஆரம்பிக்க எல்லாரும் கத்த ஆரம்பித்தனர்.

உச்ச கட்டமாக ”பையன் அம்மா ஒழுக்கமானவளா இருந்திருந்தா பையனும் ஒழுங்கா இருந்திருப்பான்” என்று ஆரம்பிக்க, கதவு படீரென்று திறந்தது.

குமரனின் மாமா ஆவேசமாக குமரனை தெரு கும்பலில் தள்ளினார்.

“ அன்னைக்கே இவன எல்லோரும் அடிச்சிட்டீங்க. இவன் தப்பு பண்ணலன்னு சொல்லல. ஆனா அது வயசு உணர்ச்சியில செய்ஞ்சது. தெரியாம செய்ஞ்சது. ஆம்பிள வயசுக்கு வரும் போது தப்பு தப்பாத்தோணும். கனவுல எல்லார் கூடவும் கிடப்பான். காலையில் கண்முழிச்சு தப்பு தப்பா தோணுதேன்னு அழுவான்.”

“ யாருக்கு தைரியமும் பக்குவமும் இருக்கு அவனுக்கு இதெல்லாம் சொல்லி குடுக்க. நாம எல்லோரும் சாமர்த்தியாம மறைச்சிருவோம். அவனுக்கும் மறைக்க தெரியல.இப்பவும் அவன் துணி திருடுன அசிங்கத்த நியாப்படுத்தல.
 ”ஆனா அதுக்காகவே அவன அழிக்கவும் முடியாதல்லாய்யா. கெஞ்சி கேட்டுக்கிறேன். யோசிங்க.”

இப்போது டீச்சரை பார்த்து

“டீச்சர் இவன உங்க கிட்ட விடுறேன். இவன அடிச்சி கொன்னாலும் சரி. போலீஸ்ல புடிச்சி குடுத்தாலும் சரி. எரிச்சாலும் எனக்கு சரிதான். ஒருத்தனுக்கு ஒரு தடவைதான் தண்டனை கொடுக்கனும் “

என்று சொல்லி கதவை சாத்தினார்.

டீச்சர் குமரனை பார்த்து யோசித்து ”சாப்பிட்டியாப்பா “ என்றார்.


No comments:

Post a Comment