Saturday 21 July 2012

கதை போல ஒன்று - 28



திருமணம் பற்றி திருமணத்துக்கு முன்னர் உங்கள் கருத்து என்னவாய் இருந்தது ?

திருமணம் என்பதே ஒரு சிறையாய், மகிழ்ச்சியை அழிக்கும் விசயமாய் நினைத்தேன்.

ஒரே ஒரு சந்தோசத்திற்காக வாழ்க்கையை இழப்பது போல் தோணிற்று. ஆணும் பெண்ணும் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இவ்வளவு சடங்கா ?

அப்புறம் சப்பென்று ஆன பிறகு விடவும் முடியாமல் குழந்தை பாசம் என்று என்ஜாய் பண்ண முடியாமல் போய்விடும் என்று பயந்தேன்.

என் கனவெல்லாம், நல்ல அப்பார்மெண்ட். அதில் ஏஸி இருக்க வேண்டும். எப்போதெல்லாம் குளிக்க ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் சுடுநீர் ( சுடுநீர் குளியல் மேல் காதல் உண்டு ).

பிடித்த புத்தகங்களை வீடு நிறைய அடுக்கி கொள்ள வேண்டும்.

பெரிய டீவியும், ஹோம் தியேட்டரும் வைத்து உலக திரைப்படம் பார்க்க வேண்டும்.

அளவாய் என் சுதந்திரத்தில் தலையிடாத நான்கு நண்பர்கள் வேண்டும். அவ்வளவுதான். அதற்கு திருமண பந்தத்தில் சிக்காமல் இருத்தல் அவசியம் என்று நினைத்தேன்.

முதன் முதலில் திருமணம் பற்றி யோசிக்க வைத்தது எது ?

பிரபல நடிகரின் பேட்டி படித்தேன். அவர் ஒல்லியானவர். வயது அப்போது இருபத்தி இரண்டுதான் இருக்கும்.

”இருபது வயசுக்கு மேல எல்லா விசயத்தையும் அப்பா அம்மாகிட்ட பகிர்ந்துக்க முடியாது, நண்பர்கள்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாது அப்போதான் மனைவிங்கிற உறவு தேவைப்படுதுன்னு” சொல்லி இருந்தார்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவார்த்தைகள்ல ஒளி கிடைக்குமே அது மாதிரி எனக்கு அவர் சொன்னது ரொம்ப பிடிச்சிருந்தது.

திருமணத்துல உள்ளம் சார்ந்த்து எதாவது மேட்டர் இருக்குமோன்னு நினைச்சேன் முதன் முதலா.

இந்த விசயம் மட்டும்தானா ?

இல்லை.இன்னொன்றும் இருக்குது.பஸ்ஸில் போய் கொண்டிருக்கும் போது, என் பக்கத்தில் இருந்த நாற்பது வயது மதிக்கதக்க நபர் தன் , கொஞ்சம் தள்ளி நிற்கும் அவர் மனைவியிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்தார்.

மனைவிக்கு சரியாய் புரியவில்லை. அவரும் சைகையில் "என்ன சொல்றீங்க?" என்பது போல் கேட்டு கொண்டிருந்தார்.

இரண்டு நிமிடம் நாடகம் போய் கொண்டிருந்தது, நான் புத்தகம் படிப்பது மாதிரி, கள்ள கண்களால் அதை பார்த்து கொண்டே இருக்கிறேன்.

நாற்பது வயது நபர் திடுமென் எழுந்து மனைவி அருகே போக, நான் சிறிது எழுந்தாற்போல என்னசெய்கிறார் என்று பார்க்கிறேன், கணவன் மனைவி பக்கத்தில் போய் சட்டென்று , கிழே உட்கார்ந்த்தும் உட்காராமலும் , தன் கைக்குட்டையை எடுத்து, மனைவியின் கால் பெருவிரல் நகத்தில் படிந்திருந்த பெட்ரோல் சகதியை, அழுத்தமாக துடைத்து விடுகிறார்.

தன் மனைவி பதறி தடுப்பத்ற்குள் அதை செய்து விட்டார். அதற்கப்புறம் அவர் மனைவியின் முகத்தை பார்த்தேன்.

அதிலிருந்த பெருமிதமும் அன்பும் ஆனந்தம் சிலிர்க்க வைத்தது. கணவரை பார்க்கிறேன் அன்பாய் இருப்பதின் மூலத்தை கண்டுகொண்டவராகவே கண்களுக்கு பட்டார்.

இந்த சம்பவம் என்னை மேலும் திருமணம் மேல் ஆசையை தூண்டியது. அன்பு என்பது புரிந்த்து மாதிரி இருந்தது.

அப்புறம் இன்னொரு சம்பவமும் இருக்கிறது.

அந்த சம்பவத்தையும் சொல்லலாமே ?

க்ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். வெள்ளிக்கிழமை பெண்கள் விசேச அழகோடு இருப்பார்கள்.

அது போல வெள்ளிகிழமை அழகாய், குளித்து கோயிலுக்கு போய் நெற்றியில் சந்தனத்தோடு இருபது வயது பெண் என் அருகே அமர்ந்திருந்தார்.

சேலையை கச்சிதமாக கட்டியிருந்தார்.அவளின் நளினமும் தெளிவும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுபவை.

மல்லிகையை பாம்பின் உடல் மாதிரியும், ரோஜாவை பாம்பின் தலையாகவும் வைத்து இருந்தாள்.

ஆட்டோ ரெட்டேரியில் இருந்து அண்ணாநகர் டிப்போவில் நிற்க. இருவரும் இறங்க முற்பட்ட போது, அவளுடைய தலைமுடி, ஆட்டோவின் சைடில் இருக்கும் ஆணி அல்லது ஸ்குரூவில் மாட்டிக்கொண்டது.அவளலால் அதை எடுக்க முடியவில்லை.

“எக்கியூஸ் மீ கொஞ்சம் ஹெல்ப பண்றீங்களா ? “
எனவும் நானும் விரல்களால் அதை எடுக்க டிரை பண்றேன்.

முடியவில்லை.

வலது கையால் அவள் தலைமுடி அனைத்தையும் அமுக்கி பிடித்து, இடது கையால் முடியை எடுத்து விடுவிக்கிறேன்.

என் கையை அவள் தலை முடியில் வைக்கும் போது மின்சாரம் தாக்கியதுபோல் இருந்தது.பெண்ணின் மீதான புனிதமான ஒன்றை கண்டுபிடித்தது போல் இருந்தது.

அது இச்சைமாதிரியான உணர்ச்சியா ?

இப்படி கேட்கும் போது எனக்கு உங்கள் மேல் கோபம் வருகிறது.

இச்சை என்பது தெரியாத ஆணே கிடையாது. சினிமா, புத்தகங்கள், இண்டெர்நெட் என்று, பரவி கிடப்பதில்தான் எல்லாத்தையும் பார்க்க முடிகிறதே.

அது ”ஸ்பெசல் ஃபீலிங்”.

அந்த பெண்ணின் தலையை தொடும் போது, மனதில் ஏதோ இளகினாற் போல இருந்தது.

தலையில் உள்ள மல்லிகைப்பூ மனதிலும் மணத்தது போல் இருந்தது.

அவளை காலம் முழுவதும் பாதுக்காக்க வேண்டும், அவளுக்கு துன்பம் வந்தால் அதை தீர்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மாதிரியான எண்ணங்கள்.

அன்றுதான் முடிவு கட்டினேன் திருமணம் செய்யாமல் இருக்க முடியாது. அது மனதிற்கான கட்டாயதேவை என்று.

அப்பாவிடம் நான் திருமணம் செய்த்கொள்ள விரும்புவதகாக சொன்னேன்.

No comments:

Post a Comment