Friday, 6 July 2012

கதை போல ஒன்று - 24

திங்கட்கிழமை வரும் போது ”ஜஸ்டின் சார்” இறந்து விட்டார் என்ற செய்தி உலுக்கிற்று.

உமர் பாரூக்தான் சொன்னான்.

ஸ்கூல் தொடங்கியவுடன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி லீவு விட்டார்கள். மாணவர்கள் எல்லாம் கலைந்து செல்ல, நானும் உமர்பாருக்கும் சோகமாக பேசிக்கொண்டோம்.

ஜஸ்டின் சார் முதுகிலே சுளீர் சுளீர்ன்னு அடித்தாலும் அவர் நல்லவர் என்ற முடிவுக்கு வந்தோம்.பத்து நிமிடம் சோகமாய் இருந்தாயிற்று.

உமர் தொடங்கினான் “ மக்கா! சினிமா போவுமால”.

எனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. நான் கேட்க கூச்சபட்டதை எவ்வளவு எளிதாய் கேட்டுட்டான்.

வெட்கபட்டபடியே “ போலாம் மக்கா! ஆனா வேற யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா தப்பா நினைப்பானுங்கல்லா” என்றேன்.

நாங்கள் இருவரும் ஜெயகுமாரி இறக்க ரோட்டில் சைக்கிளைவிட்டு , இடதுபக்கம் வடசேரி சந்தை தாண்டி , தங்கம் தியேட்டர் வந்தோம்.

“சூர்யவம்சம்” படம்
.
இவனுங்கெல்லாம் எப்போ பொறந்தானுங்ககிற மாதிரி அப்படி ஒரு கூட்டம்.

நாகர்கோவில் தியேட்டர்களில் சைக்கிள்
கொண்டு வந்தால் முன்னுரிமை. சைக்கிள் கொண்டுவருபவர்களை கேட்டை திறந்து முதலில் விட்டுவிடுவார்கள்.

உமரும் நானும் சைக்கிளை கொண்டு அந்த தியேட்டரின் பழைய கேட்டை இடித்து கொண்டு நிற்கிறோம்.

கூட்டம் அதிகமாகி கொண்டே போகிறது. பின்னால் இருந்து சைக்கிளை தள்ளுமுள்ளூ செய்கிறான்கள். இப்போ நெருக்கடி தாங்காமல் பழைய கேட் அப்படியே அடியற்ற மரமாய் சாய்கிறது.

தியேட்டர்காரர்களுக்கு வெறி வர, பிரம்புகளோடு மூன்று பேர் ,சைக்கிள்காரகள் மேல் தடியடி நட்த்த, நான் நடுவில் நின்றதால் வசமாய் மாட்டிக்கொண்டேன்.

என் முதுகில் சுள்ளென்று அடிவிழுந்தது. தலை சுற்றியது.

சைக்கிளை பின் இழுக்கும் போது இன்னொருவர் மோத சைக்கிளோடு கீழே விழுகிறேன். விழுந்ததில் முட்டியில் இருந்து ரத்தம் கொட்டுகிறது.

ஒரு வழியா தப்பிச்சு வெளியே வர, உமர் பாரூக் தண்ணி பாக்கெட் கொடுக்கிறான். அவன் ஒதுங்கி நின்றதால் தப்பித்து விட்டான்.

“மக்கா ! வேணாம்ல படம் பார்க்க வேண்டாம் “ என்று உமர் சொல்ல “ போல சனியனே படம் பாக்குறோம். நீ போய் சைக்கிள்ள உள்ள எடுத்து ரெண்டு டிக்கெட எடுத்து வைச்சிரு. நான் பத்து நிமிசத்துல வரேன்” என்றேன்.

உமர் தியேட்டர் உள்ள போக. எனக்கு நண்பன் சதீக்ஷ் வீடு பக்கத்தில் இருப்பது நினைவுக்கு வந்தத்து.

சைக்கிளை தள்ளி கொண்டு, காலிங்பெல்லை அழுத்தினேன்.

சதீக்ஷ் மூன்று வருடம் என்னுடன் படித்து அப்புறம் வேறு ஸ்கூலுக்கு மாறினவன். அவன் அப்பா என் தோஸ்த் மாதிரி பழகுவார்.

ரத்தத்தை பார்த்ததும் பதறியவர் டிஞ்சர் போட்டு துடைத்து கட்டினார். கை சுளுக்குக்கு காயத்திருமேணி எண்ணெய் போட்டு தடவி விட்டார்.

“அங்கிள் புருஃபென் மாத்திரை இருக்கா “

.கொடுத்தார்
.
விழுங்கிய போது . சதீக்ஷ் அம்மா காபி கொடுக்க ,குடித்து அவசரமாய் வெளியே வந்தேன்.

“அங்கிள் சைக்கிள் இங்க இருக்கட்டும். மத்தியானம் எடுத்துக்கிறேன் “

“எங்கடே போற, அவசரமான ஜோலியோ”

“இல்ல அங்கிள் சும்மாதான்”

“ அட சொல்லுப்பா”

“ இல்ல படத்துக்கு போறேன் சூர்யவம்சம்”

“இன்னைக்கு ஸ்கூல் கட் அடிச்சிட்டியோ”

“ இல்ல, சேச்சே, எங்க வாத்தியார் இறந்துட்டார், அதுனால ஸ்கூல்லேயே லீவு”

சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

சதீக்ஷ்யின் அம்மாவும் அப்பாவும் என்னையே பார்ப்பது “குறுகுறுவென்று” தெரியத்தான் செய்கிறது.

தட்டிவிட்டு, கிந்தி கிந்தி தியேட்டர் நோக்கி நடந்தேன்.

No comments:

Post a Comment