Saturday, 14 July 2012

கதை போல ஒன்று - 26”நீ கோழி வளக்கியா இல்ல கொமரி வளக்கியா இப்படி சமஞ்சபிள்ள வீடு வராதது போல இருக்கிய வடிவு.
மூஞ்சியேன் புளிவித்த மூஞ்சி மாதிரி இருக்குவு” 

அன்னவடிவு பாட்டி பதில் சொல்லாமல்வெறுமே திண்ணையில் இருக்க ,கேள்வி கேட்ட ராஜக்கம்மாவுக்கு கோவம் வந்து போய்விட்டார்.

ஆனால் பாட்டி கவலையாய்த்தான் இருந்தாள்.

கட்டைகால் என்னும் பேருள்ள அவர் வளர்க்கும் கோழி இன்னும் வீடு திரும்பவில்லை.

குஞ்சு பருவத்திலிருந்து கோழி பருவத்துக்கு போகும் வேளையில், கட்டைகாலின் காலை , பெருச்சாளியோ பூனையோ கடித்து துப்பிவிட,ரத்த ஒழுகலோடும் பிய்ந்த சதையோடும் சாகக்கிடந்தது.

மருத்துவம் பார்த்து கட்டைகாலை காப்பாற்றினாலும் அதன் இடது காலை காப்பாற்ற முடியவில்லை.

கட்டைகாலுக்கு பெயர் வந்தது அப்படித்தான்.

கால் போனவுடன் மகன் மருமகள் பேரன் பேத்திகள் எல்லாம் கட்டைகால் "வேஸ்ட்" என்றும் "தீவாளிக்கு வெட்டி பொரிச்சிர வேண்டியதுதான்" என்று சொல்ல, பாட்டிக்கு இஸ்டமில்லை.

அவர் ஒன்றும் கோழிகறி சாப்பிடாதவரெல்லாம் இல்லை. சாதரணமாக வீட்டில் விருந்தாட்கள் வந்தாலோ, தீவாளிக்கோ, ஞாயித்து கிழமையிலோ தோட்டத்துல மேயுற கோழிகளை பாட்டிதான் கொன்று மருமகளுக்கு கொடுப்பாள்.

பைப் டேப்பின் தலையை திருகுவோமே அது மாதிரி கோழியின் தலையை திருகிக்கொண்டே இருப்பாள். கோழி கத்தி , ஒலம் போட்டு ஈனஸ்வரமாகி அடங்கி அன்றைய சமையலுக்கு போகும்.

பாட்டிக்கு கோழியின் எல்லா பகுதியும் சுவைதான்.

ஆனாலும் கட்டைகால் மேல் இனம் தெரியாத பரிவு வ்ந்துவிட்டது.

அதை கொல்ல வேண்டாம் என்று சொல்ல, பாட்டியின் பேச்சை எதிர்ப்பவர் யார் ? கிண்டலை தவிர்க்க முடியவில்லை. காலில்லாத கோழி மேல் பாசமாய் இருப்பது ஆச்சர்யமாய் போய்விட்டது எல்லோருக்கும்.

மற்றவர்கள் பாட்டியை எள்ள எள்ள அது வைராக்கியமாய் வளர்ந்து, கட்டைகால் மேல் இன்னும் அதிக பற்றாய்தான் ஆனது. கம்பம்புல்லை கட்டைகாலுக்கு தாராளாமாய் போடுவார்.

கட்டைகாலை கையில் எடுத்து கிளி போல் தடவிக்கொடுப்பார். இல்லாத காலை வாஞ்சையோடு பாட்டியின் கைகள் தடவும் போது நெகிழ்ச்சிதான்.

கட்டைகால் முட்டை போடும் பருவம் வந்தது. முதல் முட்டை ஒடு மெலிதாக இருக்க, விட்ட உடனே உடைந்து போயிற்று. பாட்டிக்கு ரணமாய் போனது மனது. இரண்டாவது முட்டையும் அதுபோல போட, வீட்டில் எல்லோரும் பாட்டியை பார்த்து நமுட்டு சிரிப்புதான் சிரித்தார்கள்.

கட்டைகாலை பிடித்து யாருக்கும் தெரியாமல் கோயிலில் திருநீறு வாங்கி பூசிவிட்டு வந்தார்.

அடுத்த நாள் முதல் கட்டைகாலை காணவில்லை.

ஒரு வாரமாக கட்டைகால் இல்லை. பாட்டி படுக்கையில் விழுந்தார். முதன் முதலாக குடும்பத்தினருக்கு பயம் வந்தது.

ரொம்பவும் பயப்படுத்தாமல் கட்டைகால் வர பாட்டி மறுபடியும் உற்சாகமாய் ஆனார். மறுபடியும் இரண்டு நாள் கழித்து கட்டைகாலை காணவில்லை.

பாட்டி திண்னையில் அமர்ந்திருக்கிறார்.

காட்டு பூனை ஒருவேளை அடித்து தின்றிருக்கலாம். அல்லது நோயால் செத்து போயிருக்கலாம், அல்லது வாலிப விடலைகள் சாராயத்துக்கு அடித்து பொரித்திருக்கலாம், பக்கத்து வீட்டு ராஜாக்கம்மா மேல் கூட சந்தேகம இருக்கிறது. என் கோழி எங்க? எம்புள்ள எங்க? ன்னு மனசெல்லாம் அடிச்சிக்குது. திண்ணையில் பாட்டி உட்கார்ந்திருக்கும் போது பேத்தி ஒடிவந்தாள்.

“பாட்டி வாங்க “

“எங்கட்டி”

“ வாங்க வாங்க” இழுத்து போனாள்

அந்த காட்சியை பார்த்து பாட்டி கத்தினார் “ யட்டி கட்டகாலுடி. அட இதப்பாத்தியா குஞ்சு கோழி. எத்தன ஒண்ணு ரெண்டு. மூணு ....... ஏழு. யட்டி ஏழு குஞ்சு பொரிச்சிருக்கு. பாத்தியா இங்கன முட்ட உடைஞ்சு விழுதுன்னு, காட்டுல யாருக்கும் தெரியாத இடத்தில மூட்ட விட்டு, நாய் நரி கழுகுன்னு பாதுகாத்து, அடை காத்து , குஞ்சு பொரிச்சு வளத்து , என்ன தேடி வந்திருக்கு பாத்தியா . ஒரு கால வெச்சு எப்படிட்டி இத்தன குஞ்சுகள பாதுகாத்துச்சு.“ மகிழ்ச்சி படபடப்பில் பேத்தியை கட்டி கொண்டு கத்திவிட மகன் மருமகள் தெருக்காரர்கள் பேரன் எல்லோரும் அந்த காட்சியை பார்த்தனர்.

பின்கட்டு வேப்ப மரத்தடியில் கட்டைகால் தன் ஏழு ஆரோக்கியமான குஞ்சுக்களோடு புழு பூச்சிகளை கொத்தி கொண்டிருந்தது.

No comments:

Post a Comment