Tuesday, 24 July 2012

கதை போல ஒன்று - 30

கார் புடிச்சி குடும்பம் மொத்தமா போய் திருத்தனியிலயே மீராவுக்கு மொட்டை போடாலாம்மா! சும்மா, திருச்செந்தூர் முருகனுக்குத்தான் போடனும்ன்னு சொல்லிட்டே இருந்தா எப்படி? மொக்க போடாதீங்க.”

”இல்லடா உங்க எல்லாருக்கும் திருச்செந்தூருலதான போட்டோம் அதான் சொல்றேன்”. இது அம்மா.

”இதபாருங்க, கடவுளே ஃபர்ஸ்டு கிடையாது. இதெல்லாம் ஒரு பார்மாலிட்டி தானம்மா.”
திருச்செந்தூர் திருந்த்தனி ரெண்டுமே அறுபடை வீடுதான. எங்க போட்டா என்ன? திருத்தனி பக்கலாம்மா? “

“அப்ப வடபழனி கோயில்ல போடு. அது ரொம்ப பக்கம் இல்ல” அம்மா போனை துண்டிக்கவும் எரிச்சலானேன்.

முத்துநகர் எக்ஸ்பிரஸ்சில் தூத்துகுடி போய், அங்கிருந்து கார்பிடித்து திருச்செந்தூர் லட்சுமி லாட்ஜில் ரூம் எடுத்து கோயிலுக்கு மொட்டை போட போனோம்.

தாய்மாமா மடியில் வைத்து மொட்டை போடுவதற்குள்ளாகவே மீரா ஊரை கூட்டி அழுதாள்.

காது குத்துவதை முதலிலேயே தடுத்திருந்தேன்(கன் க்ஷாட்டில் வலிக்காமல் காது குத்துகிறார்களாமே)

அப்பா மாமா எல்லோரும் கடலில் குளித்து, மீராவையும் குளிக்க வைத்து கொண்டிருந்தனர்.

மீராவின் சந்தனம் பூசிய மொட்டை மண்டை சூரிய ஒளியில் பளபளத்தது.

இந்த முடியை எடுக்க 650 கிலோ மீட்டர் வரனுமா?

கடவுள் சுத்தமா இல்லன்னு நல்லா தெரியுது.

ஆனாலும் மற்றவர்களுக்காக நடிக்கிறோமோ?

அப்படின்னு சொல்ல முடியாது. மூலஸ்த்தான சாமிய பாக்கும் போது சிலிர்ப்பாதான இருக்குது.

அப்படி இல்லல்லா! அமுக்கி, புழுங்கடிச்சி, பல கதைகள சாமி மேல ஏத்தி வைச்சு, மனச தயார் படுத்தி திடீர்ன்னு அழகான கூர்மையான கண்களையுடை சிற்பத்தை கடவுள்ன்னு காமிச்சா சிலிர்க்கத்தான் செய்யும்.

அப்படியும் சொல்ல முடியாது. எத்தனை பேர் பிரச்சனைக்காக கடவுள் கண்களை பார்த்து கண்கள் பனிக்க வேண்டியிருப்பார்கள். அது தெய்வீகமில்லையா?

இதே திருச்செந்தூர் முருகனைத்தானே வீரபாண்டிய கட்டபொம்மனும் கும்பிட்டார்.
கட்டபொம்மன் கும்பிட்டாரா இங்க. கூகிள் செய்து பார்க்கனும்.

மனசு அலைபாய, எல்லோரும் கடல் குளியல் முடிந்து (நான் கடல் நீரை தலையில் தெளித்தேன்) கோயிலுக்கு ரெடியானார்கள்.

ஒரளவுக்கு கூட்டம் இருக்க ஸ்பெசல் தரிசனம் போகலாம் என்றால் ஒரு டிக்கட் நூறு ரூபாய்.

பதினைந்து பேருக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்.

கோயிலில், தெரிந்தவர் நீங்கள் பணம் வேஸ்ட் பண்ண வேண்டாம் சாதரண தரிசனத்திலே வாருங்கள் எல்லாம் ஒன்றுதான் என்று சொல்ல கீயூவில் நின்றோம்.

கோவில் உள்ளே போனதும், இனம் தெரியாத ஆசை வந்தது மூலஸ்த்தான செந்திலாண்டவரை காண.

அந்த உணர்வை சொல்ல முடியாது.

அந்த கனமே முருகனை பார்த்து விடும் ஆசை.

ஒருவன், தாசிக்கு குடை பிடித்து கிடக்க , “இந்த தாசியின் கண்களை விட அழகான கண்களை காட்டுகிறேன் என்று ஒரு ஞானி, பெருமாளின் கண்களை காட்டி அவனை பக்தியில் திளைக்க வைத்த கதை நினைவுக்கு வந்தது.

அது மாதிரி நானும் மூலஸ்தானத்து முருகர் கண்களை பார்த்து பரவசபட போகிறேன் என்பதை நினைத்தாலே சிலிர்த்தது.

கூட்டம் நகர்கிறது.

சுற்றி ,மரப்பலகைகளில் ஏறி, முருகன் பக்கத்தில் வரும் போது கண்களில் கண்ணீரே வந்து விடும் போலிருந்தது.

முருகா ! முருகா ! என்று விம்மி கொண்டே இருக்கிறேன்.

மீரா அப்பாவின் தோளில் இருந்து முருகனை கும்பிட்டு வீட்டாள். அம்மாவும் கும்பிட்டார்கள்.

இதோ பக்கத்தில் வருகிறேன்.

”முருகா உன்னை பார்க்க போகிறேன்”.

முருகனுக்கு நேர் எதிரே வரும் போது அது நடந்தது.

அடிக்கடி உடம்பு சரியில்லாமல் வரும் கைக்குழந்தையும், ’அதன் அம்மாவும்’ கம்பிக்கு அந்தபக்கம், அர்ச்சகர்கள் பக்கம் நிற்க, அவர் தீர்த்தம் கொடுக்க, தீர்த்தத்தை முகத்தில் பளிச்சென்று குழந்தை முகத்தில் அடிக்க ”அந்த இளம் அர்ச்சகரை” குழந்தையின் அம்மா வற்புறுத்த, பதட்டத்தில் தீர்த்தத்தை, அவர் வேகமாக அடிக்க , பிள்ளை முகத்தில் பட்டு, ஹீவ்வென்று வலிப்பு வந்தாற் போல குழந்தை இழுத்து கொண்டு போக, நான் பதறி ’ஐயோ!’ என்று கத்த, சரியாக முப்பது வினாடி கழித்து குழந்தை சரியானது.

என் கண்கள் அந்த குழந்தையின் நலத்தையையே வேண்ட, சரியானதும் நிம்மதியாகி வெளியே வந்தேன்.

வந்ததும் சுரீரென்றது ஒன்றுணர்ந்தேன்.

திருச்செந்தூர் முருகனை நான் பார்க்கவில்லை

1 comment: