Thursday 19 July 2012

கதை போல ஒன்று - 27

சின்ன பாபு எங்கள் ஜங்சனிலேயே சுத்தி கொண்டிருக்கும் பதினைந்து வயது பையன்.

”புத்தி சுவாதீனம்” என்று ”ஆரோக்கியமானவர்கள்” என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் சொல்லும் பதத்திற்க்கு உரியவன்.

வட இந்தியாவில் வீட்டில் வளர்க்க முடியாத குழந்தைகளை, பதின் வயது பையன்களை, வயதானவர்களை கன்னியாகுமரியில் கோயிலுக்கு வரும் சாக்கில் விட்டு விட்டு போகும் பண்பாட்டின் விளைவாக வந்தவன்.

ஹிந்தி பேசுகிறானா இல்லை வேறு எதாவது பேசுகிறானா என்பதை கண்டுபிடிக்க முடியாது.

பொதுவாகவே உருமலாகவேத்தான் தன்னை வெளிப்படுத்துவான்.பம்பாயில் பதினாறு நாட்களே இருந்து, ஓடிவந்த மைக்கேல் அண்ணன், அவன் பேசும் பாக்ஷை ஹிந்தி இல்லை என்று அடித்து சொன்னார்.

கன்னியாகுமரியில் இருந்து நடந்தே வந்து, நாகர்கோவிலில் எங்கள் ஜங்சனில் ஐக்கியமாகிவிட்டான்.

நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்சன் பரோட்டாவுக்கு பேமஸ்.வெகு தூரத்தில் இருந்து பரோட்டா சாப்பிட வருவார்கள். குறைந்தது பதினைந்து பரோட்டா கடைகளாவது இருக்கும்.

சின்ன பாபு ரொட்டி தின்று வளர்ந்தவனாய் இருந்தாலும், ப்ரோட்டா கடையில் சரியா வராத பரோட்டாவை சின்ன பாபுவுக்கு கொடுத்ததாலும் ஜங்சனின் அங்கமாகிவிட்டான்.

எப்போதும் கிழியாத பேண்டும் மெரூன் சட்டையும் பின்னல் போல் இருக்கும் பெல்ட்டும் அணிந்திருப்பான்.

வாயின் கடையிலிருந்து ஒழுகும் எச்சில் சின்ன பாபுவின் தன்மையை சொல்லிவிடும்.

சிரித்த படியே இருப்பதால் ”செல்ல கிறுக்கன்” என்ற பேரும் கிடைத்தது .

முதன் முதலில் சின்ன பாபுவுக்கு வேலை கொடுத்தது செவலிங்கம் தான். செவலிங்கம் ஜங்சனின் முக்கிய பலசரக்கு கடைக்காரர். ஒருநாள் அவனை பார்த்து கொண்டே இருந்த செவலிங்கம் “டே சின்ன பாபு இங்க வாடே! இந்த பார்சல மனோ புரோட்டா ஸ்டால்ல கொடுத்திரு “ சைகையும் தமிழுமாய் சொன்னார்.

அதிசயமாக சரியாக மனோ பரோட்டா ஸ்டாலில் கொடுக்க, சின்ன பாபு தேவைப்பட்டால் உபயோகிக்கபடும் வேலைக்காரனனான்.

முப்பது முட்டை உள்ள தட்டை செவலிங்கம் கொடுத்து பார்த்தார். அது விசப்ரிட்சை என்று ஜங்சனே நினைத்தது. ஆனால் முட்டைகளை, ரோடு கிராஸ் செய்து அனாசியமாக உடையாமல் கொடுத்தான்.

சின்ன பாபுவை எல்லோரும் கிண்டலடிப்பார்கள்.

ஆனால் எரிச்சலூட்டுபவர் துரை மட்டும்தான்.

துரை சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருப்பவர். “எல சின்ன பாபுன்னு” கூப்பிட்டு தலைலடிப்பார். சைக்கிள் டியூப் ஒட்டும் சொல்யூசனை எடுத்து அவன் வாயில் தேய்ப்பார்.

டீ குடித்து கொண்டிருப்பவனின் தோளை பிடித்து ஆட்டுவார். டீ கீழே கொட்ட, சிரிப்பார்.காதை வேகமாக சுண்டி விடுவார்.

கைவிரலின் பின்புறத்தை வைத்து சின்ன பாபுவின் தொடை நடுவே தட்டுவார். அப்படித்தட்டினால் கொஞ்ச நேரம் கழித்து கடும் வலி ஏற்படும் என்று தெரிந்தே ரசிப்பார்.

சின்ன பாபு அனாதை என்பதாலும் துரை கொஞ்சம் கடுமை என்பதாலும் யாரும் துரையை கேட்பதில்லை. சின்ன பாபு துரையை பார்த்தாலே ஒடுவான்.

அன்று வழக்கம் போல விடிய, சின்ன பாபு கையில் இரண்டு முட்டைகள் உடைய தட்டை எடுத்து, கவனமாக துரை கடையை வேகமாக கிராஸ் செய்ய, துரை பிடித்து கொண்டார்.

சின்ன பாபுவின் நெஞ்சு முலைகளை அழுத்தமாக நசுக்க, வலியில் அலறி முட்டை ஒட்டை விட்டு விட்டான். அறுபது முட்டைகளும் உடைந்து மஞ்சள் குளுகுளுப்பாய் ஓட, அதற்க்கும் அவனை துரை முதுகில் அடித்தார்.

சின்ன பாபுவின் கண்கள் வேட்டை நாயின் கண்கள் போல் சிவந்தன. ஊம் ஹூரும்ம் ... உம்ம்ம் என்று அலறினான். அவன் அலறல் சத்தத்தின் வெறி அச்சமூட்டிற்று.

யாரும் எதிர்பார்க்காமல் சட்டென்று துரையின் தொடை நடுவே உள்ள இரண்டு விதை கொட்டைகளையும் இரண்டு கைகளால் இறுக்க பிடித்து நசுக்க தொடங்கினான். அவன் தலை துரையின் அடிவயிற்றில் முட்டியிருந்தது.

ஊம்... ஹூம்ம்ம்... உரூம்ம்..என்று அவன் நசுக்க நசுக்க துரை அலறினார். ஊளை போட்டார். பாவமாய் இருந்தது துரையின் வேதனை. குறிப்பிட்ட சமயத்தில் “யல சின்பாப் விடுல விடுல விட்டுறுல “ கதறினார்.சின்ன பாபு காதுக்கு எதுவுமே கேட்கவில்லை. இறுக்கினான்.

கிச்சலம் காட்டி பார்த்தார். எதுவுமே நடக்கவில்லை.

வலி பொறுக்காமல் பாக்கெட்டில் வைத்திருந்த தன் பைக் சாவியை எடுத்து அதன் கூர்மையான் பகுதியால் சின்ன பாபுவின் தலையில் குத்தினார். தன் பலமனைத்தும் கூட்டி குத்தினார்.

சின்ன பாபுவின் முடியைத்தாண்டி சாவி தலையில் இறங்குவதை எல்லோராலும் உணர முடிகிறது. ஒரு குத்து இரண்டு குத்து மூன்று குத்து என்று பதினைந்தாவது குத்தில் சின்ன பாபு தலை ரத்தகளரியாகி தரையில் மயங்கி விழுந்தான்.

தலையிருந்து ரத்தம் அடர்த்தியான முடியை முழுவதுமாக நனைத்திருந்தது.

அதன் பிறகு துரை சின்ன பாபுவை சீண்டுவதில்லை.

ஜங்சனில், டாக்டரிடம் போகாமல் மருந்து போடாமல் சின்ன பாபுவின் ”தலை ரத்த களறி “ எப்படி ஆறிற்று என்று பேசி பேசி மாய்ந்து போனார்கள்.

No comments:

Post a Comment