Tuesday, 31 July 2012

கதை போல ஒன்று - 33


கதை போல ஒன்று - 33

அதிமிக்கேல் தெருவில் வசிக்கும், பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திடீர் திடீரென காணாமல் போவது தெருவாசிகளிடையே பயத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கிற்று.

சேலைகளுக்கு ஒன்றுமில்லை. சுடிதார்களுக்கும்ஒன்றுமில்லை.
உள்ளாடைகள் மட்டும் காணாமல் போகின்றன.

ஏதோ ஒரு ‘சைக்கோ’ தெருவில் நடமாடுகிறான் என்ற வதந்திதான் அந்த மர்மத்திற்கு விடையாகி நின்றதால், வேறு வழியில்லாமல் எல்லோரும் அதிக கவனமாயிருந்தனர்.

பகலில் மொட்டை மாடியில் துணிகாயப்போடுவதை நிறுத்தினர்.உள்ளாடைகளை வீட்டினுள்ளே காயப்போட்டனர்.அப்படி இருந்தும் திருட்டை முழுவதும் நிறுத்த முடியவில்லை.

“என்னடி பத்து வயசுல இருந்து அறுவயசு வரை பொம்பளைங்களே இருக்க முடியாது போல் இருக்கே இந்த தெருல “
தெரு பெண்கள் கேலியும் கெக்கலிப்புமாக பேசினாலும் அடிவயிற்றில் இருந்ததென்னவோ திகில்தான்.

போலீஸ்ஸிடம் சொல்லாமா என்று யோசித்து , இதை எல்லாமுமா சொல்வார்கள் என்று விட்டு விட்டனர்.

இளவட்ட பயலுகளுக்கு இது  குஜாலான டாபிக்காகவும், தன் வீட்டு பெண்களுக்கு நேரும் போது கண்சிவக்கும் டாபிக்காகவும் இருந்தது.

பொங்கலுக்கு முந்தின நாள், மதியம் மூன்று மணியளவில், தெருவில் இருக்கும் டீச்சர் வீட்டு கதவில், சொத்தென்று ஏதோ விழ, திறந்து பார்த்தால்.  பொதிந்த இன்ஸ்கர்ட்டில் கல்லை வைத்து யாரோ எறிந்திருக்கிறான்.

அது டீச்சரின் ஆடைதான்.

அதில் ஒரு கடிதம் ஒன்றும் இருந்தது. “ டீச்சர் உங்க மகளை எனக்கு பிடிச்சிருக்கு. அவளுக்கு நான் சீக்கிரம் முத்தம் கொடுப்பேன்” என்பதுதான் கடிதத்தின் வாசகம்.

 டீச்சர் மயக்கம் போட்டு விழுந்தார். தலையடித்து பெரிதாக அழுதார்.

யாராயிருக்கும் யாராயிருக்கும் என்று பெரிய சஸ்பென்ஸாகி கிடந்தது தெரு. இளவட்டங்கள் துப்பறிந்து கொண்டே இருக்கிறான்கள்.

அவனுகளுக்குள்ளே யாராவது இதை செய்த்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தாலும், அதை வெளிக்காட்டாமல் இருந்தார்கள்.

தெருவில் டியூசன் எடுக்கும் பெண் , நோட்டை கொடுத்து, இந்த கையெழுத்தும், லட்டரின் கையழுத்தும் ஒன்றாய் இருக்கிறதா என்று சோதிக்க சொன்னார்.

சோதித்ததில் கையழுத்து ஒத்து போனது.

அதை எழுதியவன் பதிமூன்று வயதே ஆன குமரன் என்கிற பையன். தெரு அதிர்ந்தது.

குமரனின் அப்பா ரயில்வேயில் உயரதிகாரி. அம்மா வேலைக்கு போகவில்லை.

குமரன் எல்லா வீட்டிற்கும் செல்லப்பிள்ளை. பரம் சாது என்று பெயர் பெற்றவன்.

குமரன் அப்பா அவனை கேபிள் வயரால் அடித்தார். அம்மா சூடு வைத்தாள். வீட்டை விட்டு வெளியே போ போ என்று வாரியலால் அடித்தாள்.

சிவந்த நிறமான குமரன் முகம் அழுது கதறி வீங்கியது.இளவட்டங்கள் எல்லோரும் நடுத்தெருவில் வைத்து அடித்தனர்.

பெண்ணின் தாய்மை குணத்தை எப்படி ஆணால் புரிந்து கொள்ள முடியாதோ ,அப்படியேத்தான் ஆணின் காமமும் என்று தெருவாசிகளுக்கு யார் புரியவைக்க முடியும்.

பதினைந்து வயது பையன் சைக்கிளில் கிழே விழுந்து முட்டி சிரைத்தால் , அதை பார்த்து தாய்மை உணர்வோடு காயத்துக்கு மருந்து போடும் முப்பது வயது பெண்ணையும் காமத்தோடுதான் ஆண் பார்ப்பான். அவன் அவ்வாறே இயற்கையால் படைக்கபட்டிருக்கிறான் என்று யார் சொல்வது தெருகாரர்களுக்கு.

குமரன் முகமெல்லாம் ரத்தம் ஒழுகிற்று. காயத்திற்கும் மருந்து கூட போடவில்லை. குமரனின் மாமா வந்து அவனை திருச்சி கூட்டி போய்விட தெரு அமைதியானது.

டீச்சர் குமரனா இதை செய்தான் என்று வருந்தி சாபம் போட்டு கொண்டே இருந்தாள். ஏனென்றால் குமரன் கடித்தில் எழுதிய டீச்சரின் மகள் கல்யாணம் ஆனவள்.

மூன்று மாதம் கழித்து குமரனை மாமா கூட்டி வந்தார். அவனுக்கு மொட்டை போட்டிருந்தது.

தெரு மறுமடியும் பதட்டமாகி குமரன் வீட்டின் முன் கூடிற்று.

 ரோஸ்லின் அம்மாதான் முதலில் சத்தம் போட்டார் “இந்த பய தெருல இருந்தா எங்களுக்கு நிம்மதியில்ல. இவன் ஹாஸ்டல்ல சேத்துருங்க. எங்க மானத்துக்கு கேடு இவனால “ என்று ஆரம்பிக்க எல்லாரும் கத்த ஆரம்பித்தனர்.

உச்ச கட்டமாக ”பையன் அம்மா ஒழுக்கமானவளா இருந்திருந்தா பையனும் ஒழுங்கா இருந்திருப்பான்” என்று ஆரம்பிக்க, கதவு படீரென்று திறந்தது.

குமரனின் மாமா ஆவேசமாக குமரனை தெரு கும்பலில் தள்ளினார்.

“ அன்னைக்கே இவன எல்லோரும் அடிச்சிட்டீங்க. இவன் தப்பு பண்ணலன்னு சொல்லல. ஆனா அது வயசு உணர்ச்சியில செய்ஞ்சது. தெரியாம செய்ஞ்சது. ஆம்பிள வயசுக்கு வரும் போது தப்பு தப்பாத்தோணும். கனவுல எல்லார் கூடவும் கிடப்பான். காலையில் கண்முழிச்சு தப்பு தப்பா தோணுதேன்னு அழுவான்.”

“ யாருக்கு தைரியமும் பக்குவமும் இருக்கு அவனுக்கு இதெல்லாம் சொல்லி குடுக்க. நாம எல்லோரும் சாமர்த்தியாம மறைச்சிருவோம். அவனுக்கும் மறைக்க தெரியல.இப்பவும் அவன் துணி திருடுன அசிங்கத்த நியாப்படுத்தல.
 ”ஆனா அதுக்காகவே அவன அழிக்கவும் முடியாதல்லாய்யா. கெஞ்சி கேட்டுக்கிறேன். யோசிங்க.”

இப்போது டீச்சரை பார்த்து

“டீச்சர் இவன உங்க கிட்ட விடுறேன். இவன அடிச்சி கொன்னாலும் சரி. போலீஸ்ல புடிச்சி குடுத்தாலும் சரி. எரிச்சாலும் எனக்கு சரிதான். ஒருத்தனுக்கு ஒரு தடவைதான் தண்டனை கொடுக்கனும் “

என்று சொல்லி கதவை சாத்தினார்.

டீச்சர் குமரனை பார்த்து யோசித்து ”சாப்பிட்டியாப்பா “ என்றார்.


Sunday, 29 July 2012

இந்த எழுத்தாளர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்...


தீராநதி இதழ் ஆரம்பித்த புதிர்தில் சுந்தரராமசாமி, வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்.

அதில் “வால்கா முதல் கங்கை முதல்” புத்தகத்தை பற்றி வாசகர் கேட்க, அதற்கு சு.ரா சுற்றி வளைத்து
இந்தியர்களுக்கு கருத்தை மிட்டாயாக்கி கொடுத்தால்தான் சாப்பிடுவார்கள் என்று வருத்தபட்டும்.
அமெரிக்காவில் வரும் “For Dummies" புத்தகமே படிக்க கஸ்டமாய் இருக்கும் என்றும் ”வால்கா முதல் கங்கை வரை” புத்தகம் சரியில்லை என்பது மாதிரி சொல்லியிருப்பார்.

முதன் முதலில் சு.ரா மேல் எரிச்சல் வந்தது. அது வரை சு.ரா சொன்ன எல்லாமும் உண்மை என்றே நினைப்பேன்.( பத்தாம் வகுப்புவரை பாலகுமாரன் எனக்கு அப்படி ). அன்று முதல் சு.ரா மேல் உள்ள விமர்சனம்தான் என்ன படிக்க ஆரம்பித்தேன்.

முதலி சாரு நிவேதிதா சு.ரா மேல் வைக்கும் விமர்சனம். சு.ரா ஒரு மத்தியதரமான எழுத்தாளர் என்று நிறைய சொல்லியிருப்பார். அது என்னை ரொம்ப ஈர்க்கவில்லை. ஆனால் “சு.ரா மேட்டிமைதனத்தில் உறையும் அற்பவாதம்” என்கிற கட்டுரை பிடித்திருந்தது.

அந்த கட்டுரையின் டிராபேக் என்னவென்றால் அதில் தெரியும் துவேசம். மற்றபடி அது நல்ல கட்டுரை.இப்படி சு.ரா மேல் ஒரு பேலன்ஸ் வந்தது.

ஒ.கே. அடுத்தது.

சாரு நிவேதிதா அருந்ததிராயின் ஆங்கிலத்தை விமர்சிக்கிறார். அருந்ததி தட்டையாய் எழுதிகிறார் என்கிறார். நான் பெரிய படிப்பாளி இல்லை என்றாலும் சாரு சொல்வது தவறு என்பது என்னளவில் பளிச்சென்று தெரிகிறது.

இவரின் ஆயிரக்கணக்கான வாசகர்களும் இப்படித்தானே நினைப்பார்கள். இப்போது வரை சாருவில் இருந்து தன்னை ஆரம்பிக்கிற வாசகன் சுந்தரராமசாமியின் அற்புத எழுத்துக்களை படிக்காமலேயே போய்விடுகிறானே ! ஜெ.ஜே சில குறிப்புகள் குப்பை என்று சொல்லி வா. மு கோமுவை சிலாகிக்கும் முட்டாள்களையும் சாரு போன்ற எழுத்தாளர்கள் அவர்களை அறியாமல் உருவாக்கி விடுகின்றனர்.

எஸ். ரா “காவல்கோட்டத்தை” ஆயிரம் பக்கம் அபத்தம் என்று அசால்ட்டாக சொல்லிவிடுகிறார். அதை படித்து நானும் முதலில் நம்பிவிட்டேன். பிற்பாடு அது பொய் என்று தெரிகிறது. அதற்கு சாருவேறு எஸ்.ரா வுக்கு சப்போர்ட்டு. ஏனென்றால் அப்போது சாருவும் எஸ்.ராவும் உயிர்மெய் குரூப்.( அப்போதெல்லாம் சாரு மனுக்ஷ்யபுத்திரனை அடிக்கடி சிலாகித்து எழுதுவார். இப்போது விட்டு விட்டார் ). பாஸ்கரதாஸ் நாள் குறிப்பை சாரு பால் கணக்கு புத்தகம் என்கிறார்.

அடுத்து மாமல்லன். மாமல்லனுடைய கட்டுரைகள் மேல் எனக்கு அலாதி காதல். ஆனால் அவர் சாருவின் நல்ல படைப்பான “எக்ஸைலை” வாசிக்கவே முடியவில்லை என்று சொல்ல ஏமாற்றம் வருகிறது. அது நல்லாயில்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் வாசிக்கவே இல்லை என்று சொன்னால் அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. என்னளவில் சாருவே வாசிப்பின்பத்தில் தமிழில் முதல் எழுத்தாளர் ( சுஜாதவையும் விட ). பிறகு ஏன் இந்த கமெண்ட் ? தெரியவில்லை.

ஜெயமோகன் நகுலனை பற்றி எழுதிய கட்டுரைகளை க்ஷேர் ஆட்டோவில் போகும் போது படித்து மன உளைச்சல் அடைந்தேன். நகுலனை அவர் திறமைக்கு அதிகமாக நாம் போற்றுகிறோமாம். அவர் எழுத்து மத்திய தரமானாதுதானாம். ஆனால் பூமணி, நாஞ்சில் நாடன் எல்லோரும் சூப்பராம்.

வி.எஸ் நெய்பால் பற்றி ஒருவர் கேட்டதற்கு, வி.எஸ் நெய்பால் எழுத்து சுவாரஸ்யமானது ஆனால் கருத்து துவேசமானது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று வி.எஸ் நெய்பாலை பற்றி தவறான கருத்தை தன் வாசகர்களுக்கு தூவுகிறார்.அது போல் அருந்ததிராய் விசயத்திலும்.

இவர்கள் கருத்தையெல்லாம் பார்க்கும் போது இலக்கிய உலகில் அடியடுத்து வைக்கும் வாசகன் கவனமாக இருக்க வேண்டும் என்றே சொல்வேன்.

என்னுடைய கருத்து என்னவென்றால், எழுத்தாளர் ஒரு படைப்பை புகழும் போது அதை எடுத்து கொள்ளலாம்.

ஆனால் படைப்பை விமர்சிக்கும் போது அல்லது இகழும்போது அதை அப்படியே எடுத்துகொள்ளாதீர்கள்.

எழுத்தாளர் அப்படி சொல்வத்ற்கு பல பேராமீட்டர்ஸ் இருக்கிறது.

அவர் சொந்த விருப்பு வெறுப்பு, அவர் இருக்கும்  வட்டம் அல்லது பதிப்பகம் ( காலச்சுவடு வெஸ் உயிர்மெய் ) மாதிரி, அவரின் அன்றைய மூட், அன்று நடக்கும் இலக்கிய அரசியல் ( உதாரணம் சாருவுக்கு மனுஸ்சுக்கும் ஒவ்வோமை நடந்த புதிதில், மனுஸ் அண்ணா நூலகத்தை மாற்றுவதை கண்டித்திருந்த போது, சாரு நிவேத்திதா அதை கிண்டல் செய்கிறார் ) என்று பல விசயம் உள்ளது. எழுத்தாளர்கள் இண்டெலக்ட் என்பதால் கருத்தை உருவாக்கி அதை சப்போர்ட் செய்யும் கலை அறிந்தவர்கள்.

வாசகர்களாகிய நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

நீங்களே முன்கருத்தின்றி படைப்பை படிப்பதே புத்திசாலித்தனம்.

சுரா சொல்வதால் நா பார்த்தசாரதியையும்
சாரு சொல்வதால் சுந்தர ராமசாமியையும்
ஜெயமோகன் சொல்வதால் சாருவையும்
மாமல்லன் சொல்வதால் ஜெயமோகனையும்
வினவு சொல்வதால் சுஜாதவையும்
கீழாய் நினைக்க வேண்டாம்.
உனக்கான அன்னபறவைத்தனத்தை
நீயே தீர்மானம் செய்....

Friday, 27 July 2012

கதை போல் ஒன்று - 32


 ·  · 

Thursday, 26 July 2012

கதை போல ஒன்று - 31

முருகேசனும் அவரின் ஆறாம் வகுப்பு படிக்கும் பையனும், சைக்கிளில் நாகர்கோவில் செட்டித்தெருவை சுத்தி கொண்டே இருக்கிறார்கள்.

எதாவது ஒரு வீட்டை முருகேசன் கூர்ந்து பார்பார், சைக்கிளில் உட்கார்ந்த படியே. பிறகு யோசித்து தலையசைத்து மேலே மிதிப்பார்.

பின்னால் பையன் “யப்பா ஞாபகம் இருக்கா” என்பான்.

“இருப்பா” யோசிச்சு கிட்டே இருக்கேன் என்றார் சைக்கிள் ஓட்டியபடியே.
-----------------------------
பலசரக்கு கடைதான் பெரிதாய் இருக்கிறதே அதில் மூலையில் ஏன் சுரண்டல் லாட்டரி நடத்த கூடாதென்று லாட்டரி ஏஜெண்ட் வற்புறுத்த, அரைமனதாய் தலையாட்டிய முருகேசன், பின்னர் ,அதில் வரும் வருமானத்தை பார்த்து,தான் முன்னாடியே அதை நடத்தியிருக்க வேண்டுமென்று ஆதங்கப்பட்டார்.

மனிதர்கள் இவ்வளவு பைத்தியகார பயல்களா ? என்று ஆச்சர்யபடும் விதத்தில் கூலி வேலை செய்பவர்களில் இருந்து, கார்களில் வரும் பெரிய பார்ட்டிகள் வரை சுரண்டல் லாட்டரிகளை சுரண்டினார்கள்.

லாட்டரியில் உள்ள நம்பரை மறைக்கும் நீள்சதுர வெள்ளி முலாமை சுரண்டி , நம்பர் மெல்ல மெல்ல தெரியும் போது அவர்கள் கண்களை பார்க்க வேண்டுமே.

வாழ்க்கையே தெரிவது மாதிரியான முகபாவனைகள்.

பெரும்பான்மையாக அதில் தோற்றாலும், நாளைக்கு ஜெயிப்பேன் என்று சொல்லி போவார்கள்.

பால்ராஜ் புரோட்டா கடை மொதலாளி, தன் பைக்கை அவசர செலவுக்கு வித்து இருபதாயிரம் ரூபாய் கொண்டு வந்தார். எதேட்சையாக கடையில் அம்பது ரூபாய் லாட்டரியை சுரண்ட ஆரம்பித்து, இரவு ஒரு மணிவரை விளையாடி அவர் தொலைத்த தொகை நாலாயிரம்.

தினம் இருநூறு நூறு வாங்கும் கொத்த வேலை செய்பவர்கள் நிறைய சுரண்டுவார்கள்.

முதலில் ஐநூறு ரூபாயை கொடுத்து விட வேண்டும்.

அப்புறம்தான் முருகேசன் லாட்டரி டிக்கட்களையே கொடுக்க ஆரம்பிப்பார்.

பால்ராஜ் அப்படித்தான் ரெகுலர் கஸ்டமரானார்.

தினமும் இருநூறு ரூபாய்க்கு சுரண்டுவார்.

கரெக்டா காசை கொடுத்துருவார். ”எங்க இருந்து வே வரீரு” என்று முருகேசன் கேட்டால். “எனக்கு கோவில்பட்டி பக்கத்துல உள்ள பசுவந்தனை அண்ணாச்சி. நான் இங்க வந்த கதை பெரிய கதை” என்பார். அதைத்தாண்டி சொல்ல மாட்டார்.

தீவாளிக்கு இரண்டு வாரத்துக்கு முன்னால், பால்ராஜுக்கு அறுநூறு ரூபாய் போனஸ் கிடைத்ததாக முருகேசனிடம் சொல்லி, சுரண்டினார்.

சொல்ல சொல்ல கேட்காமல் ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு சுரண்டும்போது முருகேசன், மேலும் லாட்டரி கொடுக்காமல் “காச வைச்சிட்டு சுரண்டு பால்ராஜு “ என்று சொல்ல, பால்ராஜ் “நாளைக்கு தாரேன் அண்ணாச்சி “ என்று சொல்ல, கண் சிவந்த முருகேசன், பால்ராஜ் கையில் வைத்திருந்த துணிப்பையை பிடிங்கி கடைக்குள் வீசினார்.

“என் யாவாரத்துல கடனே கிடையாது. காச கொடுத்துட்டு பைய எடுத்துட்டு போ “
பால்ராஜ் ரொம்ப நேரம் கெஞ்சிவிட்டு போய்விட்டார்.

தீவாளிக்கு முந்தின நாள் முருகேசனின் பையன் அந்த பையை தற்செயலாக சோதிக்க, அதில் பால்ராஜ் அவர் மூன்று வயது குழந்தைக்கு, சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து எடுத்த ரோஸ்கலர் பட்டு பட்டுசட்டையும், பச்சைகலர் பாவாடையும் இருக்க, முருகேசன் அதை ரொம்ப நேரம் பார்த்தவர்.
“நான் செய்ஞ்ச பாவம். நான் செய்ஞ்ச பாவம்” என்று தலையில் வெடிக்க அடித்தார்.

இதோ பையனை சைக்கிளில் ஏற்றி பால்ராஜ் வீட்டை விசாரித்தபடியே போகிறார்.

இன்னும் பால்ராஜ் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

உங்களுக்கு பால்ராஜ் வீடு தெரிந்தால் சொல்லுங்கள்.

பாவம் முருகேசன்! நாளை தீபாவளி கொண்டாட வேண்டும்.

Tuesday, 24 July 2012

கதை போல ஒன்று - 30

கார் புடிச்சி குடும்பம் மொத்தமா போய் திருத்தனியிலயே மீராவுக்கு மொட்டை போடாலாம்மா! சும்மா, திருச்செந்தூர் முருகனுக்குத்தான் போடனும்ன்னு சொல்லிட்டே இருந்தா எப்படி? மொக்க போடாதீங்க.”

”இல்லடா உங்க எல்லாருக்கும் திருச்செந்தூருலதான போட்டோம் அதான் சொல்றேன்”. இது அம்மா.

”இதபாருங்க, கடவுளே ஃபர்ஸ்டு கிடையாது. இதெல்லாம் ஒரு பார்மாலிட்டி தானம்மா.”
திருச்செந்தூர் திருந்த்தனி ரெண்டுமே அறுபடை வீடுதான. எங்க போட்டா என்ன? திருத்தனி பக்கலாம்மா? “

“அப்ப வடபழனி கோயில்ல போடு. அது ரொம்ப பக்கம் இல்ல” அம்மா போனை துண்டிக்கவும் எரிச்சலானேன்.

முத்துநகர் எக்ஸ்பிரஸ்சில் தூத்துகுடி போய், அங்கிருந்து கார்பிடித்து திருச்செந்தூர் லட்சுமி லாட்ஜில் ரூம் எடுத்து கோயிலுக்கு மொட்டை போட போனோம்.

தாய்மாமா மடியில் வைத்து மொட்டை போடுவதற்குள்ளாகவே மீரா ஊரை கூட்டி அழுதாள்.

காது குத்துவதை முதலிலேயே தடுத்திருந்தேன்(கன் க்ஷாட்டில் வலிக்காமல் காது குத்துகிறார்களாமே)

அப்பா மாமா எல்லோரும் கடலில் குளித்து, மீராவையும் குளிக்க வைத்து கொண்டிருந்தனர்.

மீராவின் சந்தனம் பூசிய மொட்டை மண்டை சூரிய ஒளியில் பளபளத்தது.

இந்த முடியை எடுக்க 650 கிலோ மீட்டர் வரனுமா?

கடவுள் சுத்தமா இல்லன்னு நல்லா தெரியுது.

ஆனாலும் மற்றவர்களுக்காக நடிக்கிறோமோ?

அப்படின்னு சொல்ல முடியாது. மூலஸ்த்தான சாமிய பாக்கும் போது சிலிர்ப்பாதான இருக்குது.

அப்படி இல்லல்லா! அமுக்கி, புழுங்கடிச்சி, பல கதைகள சாமி மேல ஏத்தி வைச்சு, மனச தயார் படுத்தி திடீர்ன்னு அழகான கூர்மையான கண்களையுடை சிற்பத்தை கடவுள்ன்னு காமிச்சா சிலிர்க்கத்தான் செய்யும்.

அப்படியும் சொல்ல முடியாது. எத்தனை பேர் பிரச்சனைக்காக கடவுள் கண்களை பார்த்து கண்கள் பனிக்க வேண்டியிருப்பார்கள். அது தெய்வீகமில்லையா?

இதே திருச்செந்தூர் முருகனைத்தானே வீரபாண்டிய கட்டபொம்மனும் கும்பிட்டார்.
கட்டபொம்மன் கும்பிட்டாரா இங்க. கூகிள் செய்து பார்க்கனும்.

மனசு அலைபாய, எல்லோரும் கடல் குளியல் முடிந்து (நான் கடல் நீரை தலையில் தெளித்தேன்) கோயிலுக்கு ரெடியானார்கள்.

ஒரளவுக்கு கூட்டம் இருக்க ஸ்பெசல் தரிசனம் போகலாம் என்றால் ஒரு டிக்கட் நூறு ரூபாய்.

பதினைந்து பேருக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்.

கோயிலில், தெரிந்தவர் நீங்கள் பணம் வேஸ்ட் பண்ண வேண்டாம் சாதரண தரிசனத்திலே வாருங்கள் எல்லாம் ஒன்றுதான் என்று சொல்ல கீயூவில் நின்றோம்.

கோவில் உள்ளே போனதும், இனம் தெரியாத ஆசை வந்தது மூலஸ்த்தான செந்திலாண்டவரை காண.

அந்த உணர்வை சொல்ல முடியாது.

அந்த கனமே முருகனை பார்த்து விடும் ஆசை.

ஒருவன், தாசிக்கு குடை பிடித்து கிடக்க , “இந்த தாசியின் கண்களை விட அழகான கண்களை காட்டுகிறேன் என்று ஒரு ஞானி, பெருமாளின் கண்களை காட்டி அவனை பக்தியில் திளைக்க வைத்த கதை நினைவுக்கு வந்தது.

அது மாதிரி நானும் மூலஸ்தானத்து முருகர் கண்களை பார்த்து பரவசபட போகிறேன் என்பதை நினைத்தாலே சிலிர்த்தது.

கூட்டம் நகர்கிறது.

சுற்றி ,மரப்பலகைகளில் ஏறி, முருகன் பக்கத்தில் வரும் போது கண்களில் கண்ணீரே வந்து விடும் போலிருந்தது.

முருகா ! முருகா ! என்று விம்மி கொண்டே இருக்கிறேன்.

மீரா அப்பாவின் தோளில் இருந்து முருகனை கும்பிட்டு வீட்டாள். அம்மாவும் கும்பிட்டார்கள்.

இதோ பக்கத்தில் வருகிறேன்.

”முருகா உன்னை பார்க்க போகிறேன்”.

முருகனுக்கு நேர் எதிரே வரும் போது அது நடந்தது.

அடிக்கடி உடம்பு சரியில்லாமல் வரும் கைக்குழந்தையும், ’அதன் அம்மாவும்’ கம்பிக்கு அந்தபக்கம், அர்ச்சகர்கள் பக்கம் நிற்க, அவர் தீர்த்தம் கொடுக்க, தீர்த்தத்தை முகத்தில் பளிச்சென்று குழந்தை முகத்தில் அடிக்க ”அந்த இளம் அர்ச்சகரை” குழந்தையின் அம்மா வற்புறுத்த, பதட்டத்தில் தீர்த்தத்தை, அவர் வேகமாக அடிக்க , பிள்ளை முகத்தில் பட்டு, ஹீவ்வென்று வலிப்பு வந்தாற் போல குழந்தை இழுத்து கொண்டு போக, நான் பதறி ’ஐயோ!’ என்று கத்த, சரியாக முப்பது வினாடி கழித்து குழந்தை சரியானது.

என் கண்கள் அந்த குழந்தையின் நலத்தையையே வேண்ட, சரியானதும் நிம்மதியாகி வெளியே வந்தேன்.

வந்ததும் சுரீரென்றது ஒன்றுணர்ந்தேன்.

திருச்செந்தூர் முருகனை நான் பார்க்கவில்லை

Sunday, 22 July 2012

கதை போல ஒன்று - 29

ஏ பி என் பஸ்ஸில் ஏறி ஒரு மணி நேரம் பிறகுதான், என் சட்டை பாக்கெட்டை தொட்டு பார்க்கிறேன்.

என் மூன்று டெபிட் கார்டுகள் அடங்கிய பவுச்சை காணவில்லை. 

திக்கென்றிருந்தது.

மொத்த சேமிப்பும் அந்த மூன்று அட்டைகளில்தான் இருக்கிறது.ரெண்டு நிமிடம் என்ன செய்வதென்றே தோண்றவில்லை.

சரி கார்டை முதலில் கேன்சல் செய்வோம்.

பண்ணெண்டு இலக்க அக்கவுண்ட் நம்பர் தெரியுமா ?

தெரியாது.

மாமா பையனிடம் போன் போட்டு என் இண்டெர்நெட் பேங்கில் அக்கவுண்ட் நம்பர் பார்க்க சொல்கிறேன்.

போனது ஸ்லீப்பர் பஸ் ஆனதாலும், கூட்டம் இல்லாத்தாலும் வசதியாக இருந்தது.

அவனிடம் நம்பரை கேட்டு எழுதிவிட்டு, அப்புறம் தான் தெரிந்த்து பேங்க் கஸ்டமர் கேர் நம்பரும் என்னிடம் இல்லையன்று.

மாமா பையனிடமே மறுபடியும் கேட்க வெட்கபட்டு, தம்பிக்கு போட்டு அவனிடம் திட்டு வாங்கி நம்பரை போட்டு, குரல் தழுதழுக்க மூன்று கார்ட்டுகளையும் கேன்சல் செய்து ஐந்தாவது நிமிடம், தெரியாத நம்பரில் இருந்து போன். தெலுகிலும் ஆங்கிலமுமாய் பேசுகிறார்.

“நீங்க விஜய்யா”

“ஆமா”

“உங்க கார்டுகள் என்கிட்ட இருக்கு.மியாபூர் பஸ் ஸ்டாப்பிலே விட்டுடீங்க பாஸ்”

“ஆமா. அத வைச்சுக்கோங்க நான் இரண்டு நாள் கழிச்சு வாங்கிக்கிறேன் “.

“இல்ல பாஸ் இன்னைக்கு நைட்டு நான் குண்டூர் போறேன். முடிஞ்சா இன்னும் ஒரு மணி நேரத்துல வாங்கிக்க்கோங்க”

“சரி பாஸ். நான் எப்படியாவது பிரண்ட்ஸ் கிட்ட சொல்லியாவது வாங்கிக்கிறேன். ஃபைவ் மினிட்ஸ்ல வரேன் “ என்று சொல்லி கட் செய்தேன்.

யார விட்டு வாங்கலாம். ஒன்றுமே ஒடவில்லை. கைகள் நடுங்கி கொண்டே இருக்கின்றன.

கோதண்டராமன் ஞாபகம் வர போன் போட்டு விவரம் சொல்லி, கார்ட்டு வைத்திருந்தவரிடம் பேசுமாறு சொன்னேன்.

ரெண்டு நிமிடத்தில் ராமனிடம் இருந்து போன்.

அந்த நம்பரில் ஏதோ ஒரு பெண் பேசுகிறார். கார்டு என்று சொன்னால் ஏதோ தெலுகில் கத்துகிறார் என்று சொல்ல பதட்டமாகிறது.

சரி என்று நம்பரை செக் செய்தால். ஒரு நம்பரை தப்பா கொடுத்திருக்கிறேன்.

அடச்சே என்று மறுபடி நம்பரை கொடுத்து பேசி, தன்னை எஸ். ஆர் நகர் பஸ் ஸ்டாப்புக்கு வரும்படி சொல்லி இருக்கிறார் என்று ராமன் சொல்ல.

“ராமன் எப்படியாவது ஆட்டோ பேசி உடனே அவர பிடியுங்க. ஃப்ளீஸ் அசால்ட்டா இருக்காதீங்க” என்று கெஞ்சினேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் ராமன் போன் போட்டு தான் மூன்று கார்டுகளை வாங்கிவிட்டதாக சொல்ல மூச்சு வந்த்து.

போனை கார்டை எடுத்தவரிடம் கொடுக்க சொல்லி பலமுறை நன்றி சொன்னேன்.

அதற்கு அவர் தான் சேல்ஸ்மான் ஆக இருப்பதாகவும் தான் ஹைதிராபாத் வந்து போன் போட்டால் அட்டெண்ட் செய்து பேசவும் என்றார்.

”கண்டிப்பா. என்ன ஹெல்ப் வேணுமின்னாலும் சொல்லுங்க செய்றேன்” என்று சொன்னேன்.

அவர் நம்பரை “மனிதகடவுள்” என்று உணர்ச்சிவசப்பட்டு பதிந்து வைத்திருந்தேன்.

மறுபடி ஹைதிராபாத் வந்து கார்ட்டு அன்பிளாக் செய்து நிம்மதி அடைந்தேன்.

இரண்டு வாரம் போனது. மல்லிகார்ஜுனா தியேட்டரில் “கப்பர் சிங்” படம் மூன்றாம் முறையாக பார்ப்பதற்கு ஆவலாய் உட்கார்ந்திருக்கிறேன்.

போன் அடித்தது “மனித கடவுள்” என்று காட்டிற்று. எரிச்சலாய் வந்தது, எடுக்காமல் சைலண்டில் போட்டேன்.

மறுபடி வந்தது “இவன் வேற மொக்க போடுறான்” என்று மனதில் சொல்லி எடுத்து “மனித கடவுளிடம்” சொன்னேன் “பாஸ் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். டிஸ்டர்ப செய்ய வேண்டாம். நானே போன் போடுறேன். இப்ப வைச்சிர்றேன். என்று வைத்தேன்.

கப்பர் சிங் படம் ஆரம்பமாகி கைத்தட்டல் கேட்க ஆரம்பித்தது.

Saturday, 21 July 2012

கதை போல ஒன்று - 28



திருமணம் பற்றி திருமணத்துக்கு முன்னர் உங்கள் கருத்து என்னவாய் இருந்தது ?

திருமணம் என்பதே ஒரு சிறையாய், மகிழ்ச்சியை அழிக்கும் விசயமாய் நினைத்தேன்.

ஒரே ஒரு சந்தோசத்திற்காக வாழ்க்கையை இழப்பது போல் தோணிற்று. ஆணும் பெண்ணும் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இவ்வளவு சடங்கா ?

அப்புறம் சப்பென்று ஆன பிறகு விடவும் முடியாமல் குழந்தை பாசம் என்று என்ஜாய் பண்ண முடியாமல் போய்விடும் என்று பயந்தேன்.

என் கனவெல்லாம், நல்ல அப்பார்மெண்ட். அதில் ஏஸி இருக்க வேண்டும். எப்போதெல்லாம் குளிக்க ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் சுடுநீர் ( சுடுநீர் குளியல் மேல் காதல் உண்டு ).

பிடித்த புத்தகங்களை வீடு நிறைய அடுக்கி கொள்ள வேண்டும்.

பெரிய டீவியும், ஹோம் தியேட்டரும் வைத்து உலக திரைப்படம் பார்க்க வேண்டும்.

அளவாய் என் சுதந்திரத்தில் தலையிடாத நான்கு நண்பர்கள் வேண்டும். அவ்வளவுதான். அதற்கு திருமண பந்தத்தில் சிக்காமல் இருத்தல் அவசியம் என்று நினைத்தேன்.

முதன் முதலில் திருமணம் பற்றி யோசிக்க வைத்தது எது ?

பிரபல நடிகரின் பேட்டி படித்தேன். அவர் ஒல்லியானவர். வயது அப்போது இருபத்தி இரண்டுதான் இருக்கும்.

”இருபது வயசுக்கு மேல எல்லா விசயத்தையும் அப்பா அம்மாகிட்ட பகிர்ந்துக்க முடியாது, நண்பர்கள்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாது அப்போதான் மனைவிங்கிற உறவு தேவைப்படுதுன்னு” சொல்லி இருந்தார்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவார்த்தைகள்ல ஒளி கிடைக்குமே அது மாதிரி எனக்கு அவர் சொன்னது ரொம்ப பிடிச்சிருந்தது.

திருமணத்துல உள்ளம் சார்ந்த்து எதாவது மேட்டர் இருக்குமோன்னு நினைச்சேன் முதன் முதலா.

இந்த விசயம் மட்டும்தானா ?

இல்லை.இன்னொன்றும் இருக்குது.பஸ்ஸில் போய் கொண்டிருக்கும் போது, என் பக்கத்தில் இருந்த நாற்பது வயது மதிக்கதக்க நபர் தன் , கொஞ்சம் தள்ளி நிற்கும் அவர் மனைவியிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்தார்.

மனைவிக்கு சரியாய் புரியவில்லை. அவரும் சைகையில் "என்ன சொல்றீங்க?" என்பது போல் கேட்டு கொண்டிருந்தார்.

இரண்டு நிமிடம் நாடகம் போய் கொண்டிருந்தது, நான் புத்தகம் படிப்பது மாதிரி, கள்ள கண்களால் அதை பார்த்து கொண்டே இருக்கிறேன்.

நாற்பது வயது நபர் திடுமென் எழுந்து மனைவி அருகே போக, நான் சிறிது எழுந்தாற்போல என்னசெய்கிறார் என்று பார்க்கிறேன், கணவன் மனைவி பக்கத்தில் போய் சட்டென்று , கிழே உட்கார்ந்த்தும் உட்காராமலும் , தன் கைக்குட்டையை எடுத்து, மனைவியின் கால் பெருவிரல் நகத்தில் படிந்திருந்த பெட்ரோல் சகதியை, அழுத்தமாக துடைத்து விடுகிறார்.

தன் மனைவி பதறி தடுப்பத்ற்குள் அதை செய்து விட்டார். அதற்கப்புறம் அவர் மனைவியின் முகத்தை பார்த்தேன்.

அதிலிருந்த பெருமிதமும் அன்பும் ஆனந்தம் சிலிர்க்க வைத்தது. கணவரை பார்க்கிறேன் அன்பாய் இருப்பதின் மூலத்தை கண்டுகொண்டவராகவே கண்களுக்கு பட்டார்.

இந்த சம்பவம் என்னை மேலும் திருமணம் மேல் ஆசையை தூண்டியது. அன்பு என்பது புரிந்த்து மாதிரி இருந்தது.

அப்புறம் இன்னொரு சம்பவமும் இருக்கிறது.

அந்த சம்பவத்தையும் சொல்லலாமே ?

க்ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். வெள்ளிக்கிழமை பெண்கள் விசேச அழகோடு இருப்பார்கள்.

அது போல வெள்ளிகிழமை அழகாய், குளித்து கோயிலுக்கு போய் நெற்றியில் சந்தனத்தோடு இருபது வயது பெண் என் அருகே அமர்ந்திருந்தார்.

சேலையை கச்சிதமாக கட்டியிருந்தார்.அவளின் நளினமும் தெளிவும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுபவை.

மல்லிகையை பாம்பின் உடல் மாதிரியும், ரோஜாவை பாம்பின் தலையாகவும் வைத்து இருந்தாள்.

ஆட்டோ ரெட்டேரியில் இருந்து அண்ணாநகர் டிப்போவில் நிற்க. இருவரும் இறங்க முற்பட்ட போது, அவளுடைய தலைமுடி, ஆட்டோவின் சைடில் இருக்கும் ஆணி அல்லது ஸ்குரூவில் மாட்டிக்கொண்டது.அவளலால் அதை எடுக்க முடியவில்லை.

“எக்கியூஸ் மீ கொஞ்சம் ஹெல்ப பண்றீங்களா ? “
எனவும் நானும் விரல்களால் அதை எடுக்க டிரை பண்றேன்.

முடியவில்லை.

வலது கையால் அவள் தலைமுடி அனைத்தையும் அமுக்கி பிடித்து, இடது கையால் முடியை எடுத்து விடுவிக்கிறேன்.

என் கையை அவள் தலை முடியில் வைக்கும் போது மின்சாரம் தாக்கியதுபோல் இருந்தது.பெண்ணின் மீதான புனிதமான ஒன்றை கண்டுபிடித்தது போல் இருந்தது.

அது இச்சைமாதிரியான உணர்ச்சியா ?

இப்படி கேட்கும் போது எனக்கு உங்கள் மேல் கோபம் வருகிறது.

இச்சை என்பது தெரியாத ஆணே கிடையாது. சினிமா, புத்தகங்கள், இண்டெர்நெட் என்று, பரவி கிடப்பதில்தான் எல்லாத்தையும் பார்க்க முடிகிறதே.

அது ”ஸ்பெசல் ஃபீலிங்”.

அந்த பெண்ணின் தலையை தொடும் போது, மனதில் ஏதோ இளகினாற் போல இருந்தது.

தலையில் உள்ள மல்லிகைப்பூ மனதிலும் மணத்தது போல் இருந்தது.

அவளை காலம் முழுவதும் பாதுக்காக்க வேண்டும், அவளுக்கு துன்பம் வந்தால் அதை தீர்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மாதிரியான எண்ணங்கள்.

அன்றுதான் முடிவு கட்டினேன் திருமணம் செய்யாமல் இருக்க முடியாது. அது மனதிற்கான கட்டாயதேவை என்று.

அப்பாவிடம் நான் திருமணம் செய்த்கொள்ள விரும்புவதகாக சொன்னேன்.

Thursday, 19 July 2012

கதை போல ஒன்று - 27

சின்ன பாபு எங்கள் ஜங்சனிலேயே சுத்தி கொண்டிருக்கும் பதினைந்து வயது பையன்.

”புத்தி சுவாதீனம்” என்று ”ஆரோக்கியமானவர்கள்” என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் சொல்லும் பதத்திற்க்கு உரியவன்.

வட இந்தியாவில் வீட்டில் வளர்க்க முடியாத குழந்தைகளை, பதின் வயது பையன்களை, வயதானவர்களை கன்னியாகுமரியில் கோயிலுக்கு வரும் சாக்கில் விட்டு விட்டு போகும் பண்பாட்டின் விளைவாக வந்தவன்.

ஹிந்தி பேசுகிறானா இல்லை வேறு எதாவது பேசுகிறானா என்பதை கண்டுபிடிக்க முடியாது.

பொதுவாகவே உருமலாகவேத்தான் தன்னை வெளிப்படுத்துவான்.பம்பாயில் பதினாறு நாட்களே இருந்து, ஓடிவந்த மைக்கேல் அண்ணன், அவன் பேசும் பாக்ஷை ஹிந்தி இல்லை என்று அடித்து சொன்னார்.

கன்னியாகுமரியில் இருந்து நடந்தே வந்து, நாகர்கோவிலில் எங்கள் ஜங்சனில் ஐக்கியமாகிவிட்டான்.

நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்சன் பரோட்டாவுக்கு பேமஸ்.வெகு தூரத்தில் இருந்து பரோட்டா சாப்பிட வருவார்கள். குறைந்தது பதினைந்து பரோட்டா கடைகளாவது இருக்கும்.

சின்ன பாபு ரொட்டி தின்று வளர்ந்தவனாய் இருந்தாலும், ப்ரோட்டா கடையில் சரியா வராத பரோட்டாவை சின்ன பாபுவுக்கு கொடுத்ததாலும் ஜங்சனின் அங்கமாகிவிட்டான்.

எப்போதும் கிழியாத பேண்டும் மெரூன் சட்டையும் பின்னல் போல் இருக்கும் பெல்ட்டும் அணிந்திருப்பான்.

வாயின் கடையிலிருந்து ஒழுகும் எச்சில் சின்ன பாபுவின் தன்மையை சொல்லிவிடும்.

சிரித்த படியே இருப்பதால் ”செல்ல கிறுக்கன்” என்ற பேரும் கிடைத்தது .

முதன் முதலில் சின்ன பாபுவுக்கு வேலை கொடுத்தது செவலிங்கம் தான். செவலிங்கம் ஜங்சனின் முக்கிய பலசரக்கு கடைக்காரர். ஒருநாள் அவனை பார்த்து கொண்டே இருந்த செவலிங்கம் “டே சின்ன பாபு இங்க வாடே! இந்த பார்சல மனோ புரோட்டா ஸ்டால்ல கொடுத்திரு “ சைகையும் தமிழுமாய் சொன்னார்.

அதிசயமாக சரியாக மனோ பரோட்டா ஸ்டாலில் கொடுக்க, சின்ன பாபு தேவைப்பட்டால் உபயோகிக்கபடும் வேலைக்காரனனான்.

முப்பது முட்டை உள்ள தட்டை செவலிங்கம் கொடுத்து பார்த்தார். அது விசப்ரிட்சை என்று ஜங்சனே நினைத்தது. ஆனால் முட்டைகளை, ரோடு கிராஸ் செய்து அனாசியமாக உடையாமல் கொடுத்தான்.

சின்ன பாபுவை எல்லோரும் கிண்டலடிப்பார்கள்.

ஆனால் எரிச்சலூட்டுபவர் துரை மட்டும்தான்.

துரை சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருப்பவர். “எல சின்ன பாபுன்னு” கூப்பிட்டு தலைலடிப்பார். சைக்கிள் டியூப் ஒட்டும் சொல்யூசனை எடுத்து அவன் வாயில் தேய்ப்பார்.

டீ குடித்து கொண்டிருப்பவனின் தோளை பிடித்து ஆட்டுவார். டீ கீழே கொட்ட, சிரிப்பார்.காதை வேகமாக சுண்டி விடுவார்.

கைவிரலின் பின்புறத்தை வைத்து சின்ன பாபுவின் தொடை நடுவே தட்டுவார். அப்படித்தட்டினால் கொஞ்ச நேரம் கழித்து கடும் வலி ஏற்படும் என்று தெரிந்தே ரசிப்பார்.

சின்ன பாபு அனாதை என்பதாலும் துரை கொஞ்சம் கடுமை என்பதாலும் யாரும் துரையை கேட்பதில்லை. சின்ன பாபு துரையை பார்த்தாலே ஒடுவான்.

அன்று வழக்கம் போல விடிய, சின்ன பாபு கையில் இரண்டு முட்டைகள் உடைய தட்டை எடுத்து, கவனமாக துரை கடையை வேகமாக கிராஸ் செய்ய, துரை பிடித்து கொண்டார்.

சின்ன பாபுவின் நெஞ்சு முலைகளை அழுத்தமாக நசுக்க, வலியில் அலறி முட்டை ஒட்டை விட்டு விட்டான். அறுபது முட்டைகளும் உடைந்து மஞ்சள் குளுகுளுப்பாய் ஓட, அதற்க்கும் அவனை துரை முதுகில் அடித்தார்.

சின்ன பாபுவின் கண்கள் வேட்டை நாயின் கண்கள் போல் சிவந்தன. ஊம் ஹூரும்ம் ... உம்ம்ம் என்று அலறினான். அவன் அலறல் சத்தத்தின் வெறி அச்சமூட்டிற்று.

யாரும் எதிர்பார்க்காமல் சட்டென்று துரையின் தொடை நடுவே உள்ள இரண்டு விதை கொட்டைகளையும் இரண்டு கைகளால் இறுக்க பிடித்து நசுக்க தொடங்கினான். அவன் தலை துரையின் அடிவயிற்றில் முட்டியிருந்தது.

ஊம்... ஹூம்ம்ம்... உரூம்ம்..என்று அவன் நசுக்க நசுக்க துரை அலறினார். ஊளை போட்டார். பாவமாய் இருந்தது துரையின் வேதனை. குறிப்பிட்ட சமயத்தில் “யல சின்பாப் விடுல விடுல விட்டுறுல “ கதறினார்.சின்ன பாபு காதுக்கு எதுவுமே கேட்கவில்லை. இறுக்கினான்.

கிச்சலம் காட்டி பார்த்தார். எதுவுமே நடக்கவில்லை.

வலி பொறுக்காமல் பாக்கெட்டில் வைத்திருந்த தன் பைக் சாவியை எடுத்து அதன் கூர்மையான் பகுதியால் சின்ன பாபுவின் தலையில் குத்தினார். தன் பலமனைத்தும் கூட்டி குத்தினார்.

சின்ன பாபுவின் முடியைத்தாண்டி சாவி தலையில் இறங்குவதை எல்லோராலும் உணர முடிகிறது. ஒரு குத்து இரண்டு குத்து மூன்று குத்து என்று பதினைந்தாவது குத்தில் சின்ன பாபு தலை ரத்தகளரியாகி தரையில் மயங்கி விழுந்தான்.

தலையிருந்து ரத்தம் அடர்த்தியான முடியை முழுவதுமாக நனைத்திருந்தது.

அதன் பிறகு துரை சின்ன பாபுவை சீண்டுவதில்லை.

ஜங்சனில், டாக்டரிடம் போகாமல் மருந்து போடாமல் சின்ன பாபுவின் ”தலை ரத்த களறி “ எப்படி ஆறிற்று என்று பேசி பேசி மாய்ந்து போனார்கள்.

Monday, 16 July 2012

தர்மம் தலை காக்கும்...

ஹைதிரபாத்திற்கு குடும்பமாய் பிரயாணம் செய்யும் போது, எதிர்தாற்போல் இருந்த நாற்பது வயதுள்ள பெண் , ரமணிசந்திரன் நாவல் படித்து கொண்டிருந்தார்.

மீரா வர்ஸினி விளையாடும் போது வழக்கமாக எந்த உம்மனாமூஞ்சி ஆட்களும் சிரிப்பார்கள்.

ஆனால் இவர் சிரிக்கவில்லை.

அதனால் எனக்கு அவர் மேல் இனம் தெரியாத எரிச்சல் வந்தது.

சாப்பிடும் வேளையில் எல்லோரும் சாப்பிட அவர் சாப்பிடவில்லை. 

சரி அப்புறம் சாப்பிடுவார் என்று நினைத்தோம். சாப்பிடவில்லை.

படுக்கையை ரெடி பண்ண ஆரம்பித்தோம். அப்பவும் சாப்பிடுவதற்கான அறிகுறி இல்லை.

நாங்கள் படுத்தோம். அவரும் படுத்து தூங்க ரெடியானார்.

லைட் ஆஃப் பண்ணியாச்சு.

தூங்கும் போது திடீரென அவரிடம் ஏதோ உந்துதலால் சத்தமாக “ நீங்க சாப்பிடலையா மேடம். சாப்பிடாம எப்படி தூங்குவீங்க” என்று கேட்டேன்.

அவர் சிறிய திகைப்பை காட்டி “ நீங்க ஆரஞ்சு பழம் சாப்பிட்டீங்கல்ல அதுல ஒரு பழம். ஒரே ஒரு பழம் கொடுங்க போதும்.” என்றார். திரும்ப திரும்ப “ஒரு பழம். ஒரே ஒரு பழம் “ என்றார்.

வைஃப் அதை பதட்ட அன்பாய் எடுத்து கொடுக்க சாப்பிட்டார்.

எனக்கென்னவோ அவர் சாப்பிடாமல் படுத்தற்கு பின்னால் அழமான ஏதோ காரணம் இருக்கும் என்று தோணிச்சு. 

அவர் கிட்ட ”சாப்பிட்டீங்களா” என்று கேட்க ஏன் இவ்வளவு தயங்கினேன் என்பதும் வெட்கத்தை கொடுத்தது.

எப்படியோ என்னுடைய ”தர்மம் தலை காக்கும்” பேங்கில் ஒரு ஆரஞ்சு பழம் அளவாவது புண்ணியம் கிடைத்த மகிழ்ச்சியில் தூங்க போனேன். :))

Saturday, 14 July 2012

கதை போல ஒன்று - 26



”நீ கோழி வளக்கியா இல்ல கொமரி வளக்கியா இப்படி சமஞ்சபிள்ள வீடு வராதது போல இருக்கிய வடிவு.
மூஞ்சியேன் புளிவித்த மூஞ்சி மாதிரி இருக்குவு” 

அன்னவடிவு பாட்டி பதில் சொல்லாமல்வெறுமே திண்ணையில் இருக்க ,கேள்வி கேட்ட ராஜக்கம்மாவுக்கு கோவம் வந்து போய்விட்டார்.

ஆனால் பாட்டி கவலையாய்த்தான் இருந்தாள்.

கட்டைகால் என்னும் பேருள்ள அவர் வளர்க்கும் கோழி இன்னும் வீடு திரும்பவில்லை.

குஞ்சு பருவத்திலிருந்து கோழி பருவத்துக்கு போகும் வேளையில், கட்டைகாலின் காலை , பெருச்சாளியோ பூனையோ கடித்து துப்பிவிட,ரத்த ஒழுகலோடும் பிய்ந்த சதையோடும் சாகக்கிடந்தது.

மருத்துவம் பார்த்து கட்டைகாலை காப்பாற்றினாலும் அதன் இடது காலை காப்பாற்ற முடியவில்லை.

கட்டைகாலுக்கு பெயர் வந்தது அப்படித்தான்.

கால் போனவுடன் மகன் மருமகள் பேரன் பேத்திகள் எல்லாம் கட்டைகால் "வேஸ்ட்" என்றும் "தீவாளிக்கு வெட்டி பொரிச்சிர வேண்டியதுதான்" என்று சொல்ல, பாட்டிக்கு இஸ்டமில்லை.

அவர் ஒன்றும் கோழிகறி சாப்பிடாதவரெல்லாம் இல்லை. சாதரணமாக வீட்டில் விருந்தாட்கள் வந்தாலோ, தீவாளிக்கோ, ஞாயித்து கிழமையிலோ தோட்டத்துல மேயுற கோழிகளை பாட்டிதான் கொன்று மருமகளுக்கு கொடுப்பாள்.

பைப் டேப்பின் தலையை திருகுவோமே அது மாதிரி கோழியின் தலையை திருகிக்கொண்டே இருப்பாள். கோழி கத்தி , ஒலம் போட்டு ஈனஸ்வரமாகி அடங்கி அன்றைய சமையலுக்கு போகும்.

பாட்டிக்கு கோழியின் எல்லா பகுதியும் சுவைதான்.

ஆனாலும் கட்டைகால் மேல் இனம் தெரியாத பரிவு வ்ந்துவிட்டது.

அதை கொல்ல வேண்டாம் என்று சொல்ல, பாட்டியின் பேச்சை எதிர்ப்பவர் யார் ? கிண்டலை தவிர்க்க முடியவில்லை. காலில்லாத கோழி மேல் பாசமாய் இருப்பது ஆச்சர்யமாய் போய்விட்டது எல்லோருக்கும்.

மற்றவர்கள் பாட்டியை எள்ள எள்ள அது வைராக்கியமாய் வளர்ந்து, கட்டைகால் மேல் இன்னும் அதிக பற்றாய்தான் ஆனது. கம்பம்புல்லை கட்டைகாலுக்கு தாராளாமாய் போடுவார்.

கட்டைகாலை கையில் எடுத்து கிளி போல் தடவிக்கொடுப்பார். இல்லாத காலை வாஞ்சையோடு பாட்டியின் கைகள் தடவும் போது நெகிழ்ச்சிதான்.

கட்டைகால் முட்டை போடும் பருவம் வந்தது. முதல் முட்டை ஒடு மெலிதாக இருக்க, விட்ட உடனே உடைந்து போயிற்று. பாட்டிக்கு ரணமாய் போனது மனது. இரண்டாவது முட்டையும் அதுபோல போட, வீட்டில் எல்லோரும் பாட்டியை பார்த்து நமுட்டு சிரிப்புதான் சிரித்தார்கள்.

கட்டைகாலை பிடித்து யாருக்கும் தெரியாமல் கோயிலில் திருநீறு வாங்கி பூசிவிட்டு வந்தார்.

அடுத்த நாள் முதல் கட்டைகாலை காணவில்லை.

ஒரு வாரமாக கட்டைகால் இல்லை. பாட்டி படுக்கையில் விழுந்தார். முதன் முதலாக குடும்பத்தினருக்கு பயம் வந்தது.

ரொம்பவும் பயப்படுத்தாமல் கட்டைகால் வர பாட்டி மறுபடியும் உற்சாகமாய் ஆனார். மறுபடியும் இரண்டு நாள் கழித்து கட்டைகாலை காணவில்லை.

பாட்டி திண்னையில் அமர்ந்திருக்கிறார்.

காட்டு பூனை ஒருவேளை அடித்து தின்றிருக்கலாம். அல்லது நோயால் செத்து போயிருக்கலாம், அல்லது வாலிப விடலைகள் சாராயத்துக்கு அடித்து பொரித்திருக்கலாம், பக்கத்து வீட்டு ராஜாக்கம்மா மேல் கூட சந்தேகம இருக்கிறது. என் கோழி எங்க? எம்புள்ள எங்க? ன்னு மனசெல்லாம் அடிச்சிக்குது. திண்ணையில் பாட்டி உட்கார்ந்திருக்கும் போது பேத்தி ஒடிவந்தாள்.

“பாட்டி வாங்க “

“எங்கட்டி”

“ வாங்க வாங்க” இழுத்து போனாள்

அந்த காட்சியை பார்த்து பாட்டி கத்தினார் “ யட்டி கட்டகாலுடி. அட இதப்பாத்தியா குஞ்சு கோழி. எத்தன ஒண்ணு ரெண்டு. மூணு ....... ஏழு. யட்டி ஏழு குஞ்சு பொரிச்சிருக்கு. பாத்தியா இங்கன முட்ட உடைஞ்சு விழுதுன்னு, காட்டுல யாருக்கும் தெரியாத இடத்தில மூட்ட விட்டு, நாய் நரி கழுகுன்னு பாதுகாத்து, அடை காத்து , குஞ்சு பொரிச்சு வளத்து , என்ன தேடி வந்திருக்கு பாத்தியா . ஒரு கால வெச்சு எப்படிட்டி இத்தன குஞ்சுகள பாதுகாத்துச்சு.“ மகிழ்ச்சி படபடப்பில் பேத்தியை கட்டி கொண்டு கத்திவிட மகன் மருமகள் தெருக்காரர்கள் பேரன் எல்லோரும் அந்த காட்சியை பார்த்தனர்.

பின்கட்டு வேப்ப மரத்தடியில் கட்டைகால் தன் ஏழு ஆரோக்கியமான குஞ்சுக்களோடு புழு பூச்சிகளை கொத்தி கொண்டிருந்தது.

நம்ம ஊர் தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன்...

வெளிநாட்டில், பப்ளிக் பிளேஸில் ஒருத்தர் முதலில் கதவை திறக்கிறார் என்று வைத்துகொள்வோம். 

அனைவரும் போகும் வரை அவர் அந்த கதவை பிடித்து கொண்டே இருப்பார். 

அது ஒரு மேனர்ஸ். 

நம்ம ஊர் தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன்.

சுண்டு விரலுக்கும் மோதிர விரலுக்கும் நடுவே ஒரு பாப்கார்ன் கோனின் அடிப்பகுதி , நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவே மற்றொரு பாப்கார்ன் கோனின் அடிப்பகுதி , இன்னொரு கையில் இரண்டு மாசா , கழுத்துக்கும் காதுக்கும் இடையே ஒரு அவசர போனை பேசியபடியே தத்தி தத்தி வருவார் குடும்பத்தலைவர். 

அவருக்கு ஒரு செகண்ட் கதவை பிடித்து உதவி செய்யாமல் , நங்கென்று மோதும் படி, கதவை விட்டு விட்டு உள்ளே சென்று “அடுத்தவனுக்கு உதவி செய்யனுனும்கிற “ வசனத்தை ஹீரோ பேசும் போது சிலிர்த்து கிளர்ந்து பார்ப்போம்...

Friday, 13 July 2012

பாஸிட்டுவா பேசுங்க...

ஏழாம் வகுப்பு படிக்கும் போது திருச்செந்தூரில் மாமாவின் மரக்கடையில், ஒரு கிளி ஜோசியரிடம் எனக்கு ஜோசியம் பார்த்தார் மாமா . 

விளையாட்டுக்குதான்.

கிளி எடுத்து தந்த சீட்டை ஜோசியர் பிரிக்க, எனக்கு வந்த படம் அய்யப்பன்.

கிளி ஜோசியர் சொன்னார் “தம்பிக்கு வந்திருக்கிறது அய்யப்பன். அப்படின்னா என்ன அர்த்தம்ன்னா , தம்பி தலையில கருங்கல்லை தூக்கி போட்டாலும் கல்லுதான் ரெண்டா உடையுமே தவிர, தம்பி ஜம்முன்னு இருப்பார்.

அப்போதே மூடநம்பிக்கையை எதிர்த்து ( நாகர்கோவில் பாஸ்டர் ஜான் பிரகாக்ஷின் “ மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் “ மந்திரமா ? தந்திரமா?” ”பேயா? நோயா?” போன்ற அற்புதங்கள்) பல புத்தகங்கள் படித்திருந்தாலும் அவர் வார்த்தை எனக்கு ஒரு “கிக்” காகவே இருந்தது. 

இப்போது வரையிலும் எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அந்த கிளி ஜோசியரின் குரலில் “ தம்பி தலையில கருங்கல்லை தூக்கி போட்டாலும் கல்லுதான் ரெண்டா உடையுமே தவிர, தம்பி ஜம்முன்னு இருப்பார் “ என்ற வசனம்தான் நினைவுக்கு வரும்.

உற்சாகமாய் இருக்கும்.

எப்போதும் சிறுவர்களிடத்தில் பாஸிட்டுவாகவே பேசுவீர்களாக... :))

Saturday, 7 July 2012

கதை போல ஒன்று - 25

மச்சி உனக்கென்ன வேணும், பெப்ஸியா, இல்ல கோக்கா, தம்ஸப்பா, ஸ்பிரைட்டா, ஃபேண்டாவா. என்னடா வேணும் ? சொல்லித்தான்
தொலையேன்டா நாய ?

”இல்ல நான் மாஸா அல்லது ஸ்லைஸ்தான் குடிப்பேன் என்றேன்.

எல்லோரும் என்னை விநோதமாக பார்த்தார்கள்.

“ஐயே இவன் கொயந்த பயண்ட்டா “ சிரித்தார்கள்.

இதுமாதிரி விசயங்களில் ஞானபழமாகவே என்னை பார்த்தார்கள்.

ஓடும் பஸ்ஸில் ஏறமாட்டேன். 23 சி யெல்லோ போர்ட்டு ஆல்பெர்ட் தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் நிற்காது.
அதனால நண்பர்கள் பஸ் திரும்பும்போது குதித்து விடுவார்கள்.

என்னையும் குதி குதி என்று கத்துவார்கள். என்னால முடியாது. எக்மோர் ரயில்வே ஸ்டேசனில் இறங்கி நடந்து வருவேன்.

”ஏன்டா! இவன வெச்சிகிட்டு இங்கிலீக்ஷ் படம்தான் எடுக்கனும் “ ன்னு கலாய்ப்பான்கள்.

பல சமய்ங்களில் ஜாலியா எடுத்துகிட்டாலும், இரும்பு குதிரைகள்ல வர டிரக் டிரைவர் மாதிரி எனக்குள்ளும் ஒருவன் கடுமை பழகி கொண்டிருந்தான்.

”என்னைக்காவது உங்கள அசத்துரேன் பாருங்கடா டேய் “ ன்னு மனசுக்குள்ளயயே சொல்லிகிட்டிருந்தேன்.

ஒடும் பஸ்ல எப்படி இறங்கிறாங்கிறத கூர்த்து பார்த்தேன். அதுல பாத்தீங்கன்னா அறிவியலின் சடத்துவ ( அதாங்க Inertia) விதியை பின் பற்றுகின்றனர். பஸ் ஸ்பீடுக்கு போய் கொண்டிருக்கும் உடலையும் காலையும் உள்ள தொகுப்பில் காலை மட்டும் சட்டென்று ஊன்றினால், உடல் எடையின் வேகத்தை கட்டுபடுத்த முடியாதல்லவா ?

பஸ்ஸில் இறங்கும் போது சட்டென்று குரங்கு பிடியாய் காலை ஊன்றாமல், ஏன் கொஞ்சம் ஒடி நிற்கின்றனர் என்று கண்டுபிடித்தேன். (inertia தான்)

இப்படி மேன்லியா என்னை காட்ட என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து கொண்டே இருந்தேன்.

தனியாக தம்ஸ் அப் குடித்து பார்த்தேன். ப்ஹா! ப்ஹா! என்று வாந்தி எடுத்தேன்.

யாராவது கேள்வி கேட்டால் சட்டென்று பதில் சொல்லாமல் , மேன்லியா பார்த்து தாடிய சொறிஞ்சிகிட்டு மெதுவா சொல்ல டிரை பண்ணினேன். முடியல. அவமானபடுத்து போல் இருந்தது.

ஒருநாள் சட்டென்று பல்தேய்க்கும் போது பொறி தட்டியது. நானே எனக்குள் சொல்லிக்கொண்டேன். “ ”சும்மா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருந்தா வேலைக்காகாது. பிராக்டிக்கலா இறங்கனும்”.

அன்று மாலை நண்பர்கள் எல்லோரும் மத்திய கைலாக்ஷில் இருந்து கிண்டி வந்து, கிண்டி எஸ்டேட் பஸ் ஸ்டாண்ட் உள்ள போகிறதுக்கு நிற்கிறோம்.

“மச்சி நீ சப்வேல வாடா ! நாங்க டிவைடர் ஏறி குதிச்சு வந்திர்றோம் “ என்று சொல்லி சட்டென்று ரோடு கிராஸ் செய்த்து டிவைடரை லாவகமாக ஏறி குதித்து, மறுபடியும் ரோடு கிராஸ் செய்து விட்டான்கள்.

டிவைடர் என்பது ரோட்டை பிரிக்க வைத்திருக்கும் பரவளைய ( parapola) கம்பிகள்.

நான் அவமானமாய் ஃபீல் பண்ண ஆரம்பித்தேன்.

சட்டென்று நானும் சப்வேயில் வராமல் ரோடு கிராஸ் செய்த்து மஞ்சள் நிற அரைவட்ட தொகுப்பான இரும்பு டிவைரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

பசங்கள் “ஓஹ்ஹோ “ என்று கைதட்டி சவுண்டு கொடுக்கிறான்கள்.

ஆனால் பாருங்கள் பக்கத்தில் வர வர டிவைடைரின் உயரம் அதிகமாகி போகிறது. அதை ”தாண்டி விடுவேனா ?”என்ற எண்ணம் ”தாண்ட முடியாது” என்ற எண்ணமாகி விட்டது.

ஆனாலும் ரோடு கிராஸ் பண்ணிட்டேனே. என்ன பண்றது பாஸ் ?

டிவைடரை துள்ளி குதித்து ஏறாமல், சுவர் ஏறுவது மாதிரி கால் போட்டு , மறு காலை கீழே போடும் போதானா அந்த மூன்று ’நீண்ட டிரக்குகள்’ மறுபுறம் வரவேண்டும்.

இப்போ ரெண்டு காலையும் டிவைடரின் இரண்டு பக்கமும் போட்டு பரிதாபமாக முழிக்கிறேன்.

நண்பர்கள் “வாடா லூசு , மச்சி வாடா “ என்று கத்துகிறான்கள்.

பதட்டத்தில் என்னால் கிழே இறங்க முடியவில்லை.

நான் ஒரு மஞ்சள் நிற குதிரையை ஓட்டுவது போல் இருக்கிறது. இரண்டு பக்கமும் கூட்டம் கூட ஆரம்பிக்கிறது.

செல்லமாள் காலெஜ் பொண்ணுங்கள் எல்லாம் சிரிக்கின்றனர். தாத்தா சிரிக்கிறார். கரும்பு சாறு பிழியும் பாட்டியும், பெட்ரோல் பங்கு ஊழியர்களும் அல்லவா சிரிக்கிறார்கள்.

கற்பனை செய்துதான் பாருங்களேன் கிண்டி பரபரப்பு சாலையில் ஒரு இளைஞன் டிவைடரில் சிறுக்குழந்தை மாதிரி தவித்து உட்கார்ந்திருப்பதை. அது நாந்தான் அய்யா !

கடைசியாக பிரவீன் ஓடி வந்து மெல்ல என்னை கிழே இறக்கி, கைத்தாங்கலாக கூட்டி போனான்.

என்னை யாரும் கிண்டல் செய்ய வில்லை. கடையில் உட்கார வைத்து தண்ணீ கொடுத்து, பஜ்ஜியும் வாங்கி தந்தான்கள்.

அப்போ ஒருத்தன் சொன்னான் “ விஜய் ! உன்னால உடைக்க முடியிற பலூன மட்டும் உடை .புரியுதா ?
சும்மா மயிராட்டாம் ஸீன் போட்டா, இப்படி நடு ரோட்டில் குதிரை ஒட்ட வேண்டியதுதான் “

இப்போ நான் சிரிக்க, நண்பர்கள் கூட்டம் “மச்சி டிரீட்டு டிரீட்டு” என்று கத்த ஆரம்பித்தது... :

Friday, 6 July 2012

கதை போல ஒன்று - 24

திங்கட்கிழமை வரும் போது ”ஜஸ்டின் சார்” இறந்து விட்டார் என்ற செய்தி உலுக்கிற்று.

உமர் பாரூக்தான் சொன்னான்.

ஸ்கூல் தொடங்கியவுடன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி லீவு விட்டார்கள். மாணவர்கள் எல்லாம் கலைந்து செல்ல, நானும் உமர்பாருக்கும் சோகமாக பேசிக்கொண்டோம்.

ஜஸ்டின் சார் முதுகிலே சுளீர் சுளீர்ன்னு அடித்தாலும் அவர் நல்லவர் என்ற முடிவுக்கு வந்தோம்.பத்து நிமிடம் சோகமாய் இருந்தாயிற்று.

உமர் தொடங்கினான் “ மக்கா! சினிமா போவுமால”.

எனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. நான் கேட்க கூச்சபட்டதை எவ்வளவு எளிதாய் கேட்டுட்டான்.

வெட்கபட்டபடியே “ போலாம் மக்கா! ஆனா வேற யாருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சா தப்பா நினைப்பானுங்கல்லா” என்றேன்.

நாங்கள் இருவரும் ஜெயகுமாரி இறக்க ரோட்டில் சைக்கிளைவிட்டு , இடதுபக்கம் வடசேரி சந்தை தாண்டி , தங்கம் தியேட்டர் வந்தோம்.

“சூர்யவம்சம்” படம்
.
இவனுங்கெல்லாம் எப்போ பொறந்தானுங்ககிற மாதிரி அப்படி ஒரு கூட்டம்.

நாகர்கோவில் தியேட்டர்களில் சைக்கிள்
கொண்டு வந்தால் முன்னுரிமை. சைக்கிள் கொண்டுவருபவர்களை கேட்டை திறந்து முதலில் விட்டுவிடுவார்கள்.

உமரும் நானும் சைக்கிளை கொண்டு அந்த தியேட்டரின் பழைய கேட்டை இடித்து கொண்டு நிற்கிறோம்.

கூட்டம் அதிகமாகி கொண்டே போகிறது. பின்னால் இருந்து சைக்கிளை தள்ளுமுள்ளூ செய்கிறான்கள். இப்போ நெருக்கடி தாங்காமல் பழைய கேட் அப்படியே அடியற்ற மரமாய் சாய்கிறது.

தியேட்டர்காரர்களுக்கு வெறி வர, பிரம்புகளோடு மூன்று பேர் ,சைக்கிள்காரகள் மேல் தடியடி நட்த்த, நான் நடுவில் நின்றதால் வசமாய் மாட்டிக்கொண்டேன்.

என் முதுகில் சுள்ளென்று அடிவிழுந்தது. தலை சுற்றியது.

சைக்கிளை பின் இழுக்கும் போது இன்னொருவர் மோத சைக்கிளோடு கீழே விழுகிறேன். விழுந்ததில் முட்டியில் இருந்து ரத்தம் கொட்டுகிறது.

ஒரு வழியா தப்பிச்சு வெளியே வர, உமர் பாரூக் தண்ணி பாக்கெட் கொடுக்கிறான். அவன் ஒதுங்கி நின்றதால் தப்பித்து விட்டான்.

“மக்கா ! வேணாம்ல படம் பார்க்க வேண்டாம் “ என்று உமர் சொல்ல “ போல சனியனே படம் பாக்குறோம். நீ போய் சைக்கிள்ள உள்ள எடுத்து ரெண்டு டிக்கெட எடுத்து வைச்சிரு. நான் பத்து நிமிசத்துல வரேன்” என்றேன்.

உமர் தியேட்டர் உள்ள போக. எனக்கு நண்பன் சதீக்ஷ் வீடு பக்கத்தில் இருப்பது நினைவுக்கு வந்தத்து.

சைக்கிளை தள்ளி கொண்டு, காலிங்பெல்லை அழுத்தினேன்.

சதீக்ஷ் மூன்று வருடம் என்னுடன் படித்து அப்புறம் வேறு ஸ்கூலுக்கு மாறினவன். அவன் அப்பா என் தோஸ்த் மாதிரி பழகுவார்.

ரத்தத்தை பார்த்ததும் பதறியவர் டிஞ்சர் போட்டு துடைத்து கட்டினார். கை சுளுக்குக்கு காயத்திருமேணி எண்ணெய் போட்டு தடவி விட்டார்.

“அங்கிள் புருஃபென் மாத்திரை இருக்கா “

.கொடுத்தார்
.
விழுங்கிய போது . சதீக்ஷ் அம்மா காபி கொடுக்க ,குடித்து அவசரமாய் வெளியே வந்தேன்.

“அங்கிள் சைக்கிள் இங்க இருக்கட்டும். மத்தியானம் எடுத்துக்கிறேன் “

“எங்கடே போற, அவசரமான ஜோலியோ”

“இல்ல அங்கிள் சும்மாதான்”

“ அட சொல்லுப்பா”

“ இல்ல படத்துக்கு போறேன் சூர்யவம்சம்”

“இன்னைக்கு ஸ்கூல் கட் அடிச்சிட்டியோ”

“ இல்ல, சேச்சே, எங்க வாத்தியார் இறந்துட்டார், அதுனால ஸ்கூல்லேயே லீவு”

சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

சதீக்ஷ்யின் அம்மாவும் அப்பாவும் என்னையே பார்ப்பது “குறுகுறுவென்று” தெரியத்தான் செய்கிறது.

தட்டிவிட்டு, கிந்தி கிந்தி தியேட்டர் நோக்கி நடந்தேன்.

Thursday, 5 July 2012

மும்பையில் பெண்கள்


மும்பை - டோங்கிரி

ஜெனாபாய் கணவனை இழந்து, பின் அரிசி பதுக்கலில் கமிசன் வியாபாரம் செய்கிறார்.

அதில் போலீஸ்தொல்லை அதிகரிக்க, ஒருநாள் மும்பையின் அப்போதைய மிகப்பெரிய தாதாவாகிய “வரத ராஜ முதலியார்” ( அதாங்க நம்ம வேலு நாயக்கர். )டம் உதவி கேட்க, வரதராஜ முதலியார் ஜெனாபாய்யை திருட்டு மது விற்கும் பெரிய கும்பலை நிர்வகிக்க சொல்கிறார்.

அதிலிருந்து ஜெனாபாய் மிகப்பெரிய சக்தியாக உருவாகிறார்.

இத்தனை தப்பான தொழிலை செய்தாலும் அடிப்படையில் ஜெனாபாய் ஒரு அம்மாவின் குணத்தோடையே இருக்கிறார்.

மும்பை மிகப்பெரிய தாதாவான மஸ்தான் ஜெனாபாயிடம் உதவி கேட்கிறார்.

பெரிய புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போட்டி நடக்கிறது.

அதற்கு “ செலியாஸ்” என்னும் குஜராத்தி தாதாக்கள் தடையாக இருக்க மஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் “செலியாஸ்” தாதாக்கள் ஆக்ரோசமானவர்கள்.

ஜெனாபாய் மஸ்தானிடம் “செலியாஸை” அடக்க தாவூத் இப்ராகிம் குரூப்பையும் , பதான் சகோதர்களையும் ( கிரிக்கெட பதான்கள் அல்ல :) ) ஒன்று சேர்க்க சொல்கிறார்.

மஸ்தான் தாதா எப்படி ஒன்று சேர்ப்பது என்று தவிக்கிறார். ஜெனாபாய் தன் மதி சாணக்கியத்தனத்தால் தாவூத் மற்றும் பதான்களை ஒன்று சேர்கிறார்.

மும்பை நிழல் உலக தாதாக்ளின் புகழ்பெற்ற சமாதான உடன்படிக்கை ஏற்பட ஜெனாபாய்தான் காரணமாகிறார்.

1993 மும்பையில் மதக்கலவரம் நடக்கும் போது அதை சமானபடுத்த ஜெனாபாய் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

இது போல் மும்பை தாதா நிழல் உலகத்தில் நிறைய பெண்கள் பங்காற்றியிருக்கின்றனர்.

ஆனால் அது வெளியே தெரியாது. அதை பத்தி பேசுவதுதான் இந்த புத்தகம்

MAFIA QUEENS OF MUMBAI , STORIES OF WOMEN FROM THE GANGLANDS

WRITTEN BY S.HUSSAIN ZAIDI WITH JANE BORGES

எளிமையான ஆங்கிலம். சுவாரஸ்யம். புக்கை எடுத்தால் வைக்க முடியாது. ஒரே சிட்டிங்கில் படித்தேன்.

Sunday, 1 July 2012

கதை போல் ஒன்று - 23



ஆசிரியர் , போர்டில் ”நீல நிற” மர்ர்கரால் பட்டையாய் தீட்டி ,இது என்ன? என்றார்.

”அது உலகின் நிறம். பொதுத்தன்மையின் பரவலை விவரிக்கிறது.” என்றான் ஒரு மாணவன்.

“பார்க்க பார்க்க உள்ளே இழுக்கும் சுழற்சியாய், ஆழ் மனதின் வெளிப்பாடு” என்றான் ஒருவன்.

“சார். நீல நிறம் “ என்றான் ஒருவன்.

அந்த கடைசி “சார். நீல நிறம் “ என்ற பதிலை கேட்டு ஆசிரியர் வேகமாக கைத்தட்டி. “நீ வீரன். உண்மையை சொல்லும் வீரம் உனக்கிருக்கிறது என்றார்.

அதே மாதிரிதாங்க உண்மையை போட்டு உடைப்பதில் ”சவுந்திரராஜன் சாரை” மிஞ்ச ஆளில்லை.

பத்தாம வகுப்பில் சயின்ஸ் பாடத்தை எடுப்பதற்க்கு முன்னால் , கிளாஸில் முதல் முறையாக அவர்
சொன்னது ” எல கேட்டுகிடுங்க ! உங்க அப்பா அம்மால்லாம் சீக்கிரம் செத்து போவாவ. உங்க காலம் முழுக்க இருக்க மாட்டாவ . அதனால உங்க படிப்புதான் கைக்கொடுக்கும்ம்ம்.

அந்த “ ம்”  ஐ அழுத்தி சொல்வார். அப்பா அம்மா மேல பாசமா இருந்த பயலுக்கெல்லாம் அதிர்ச்சி. “என்னல இந்த ஆளு இப்படி சொல்றாருன்னு” பயலுக பேசிகிட்டான்கள்.

தினமும் பசங்களுக்கு அவரவர் பெற்றோர்களின் மரணத்தை ஏதாவது ஒரு விதத்தில் சொல்லி விடுவார். அவருக்கு அதில் ஒரு மகிழ்ச்சி என்பதைவிட , குறிக்கோளாய் இருப்பது போல்தான் தோண்றும்.

பாடம் எடுக்கும் போது எல்லோரும் அவர் கண்களைத்தான் பார்க்க வேண்டும். தப்பி தவறி வெட்டரிவாள் கிருதாவை, பார்த்தால் கூட கண்டுபிடித்து விடுவார். “எல இங்க வா . அங்க என்னல பார்வை “ விளாசி எடுப்பார்.

கஸ்டமான பாடத்தை கிளாஸ் ரூமில் வைத்து எடுப்பார். மறுநாள் அதே பாடத்தை  வேப்ப மரத்தடியில் வைத்து எடுப்பார். ”கஸ்டமான பாடத்தை வேற வேற சூழ்நிலையில படிச்சா புரியும் கேட்டியா ? ” என்பார்.

பத்தாம் வகுப்பு பசங்க எவனாவது ஓவிய போட்டி பேச்சு போட்டின்னு கிளாஸுக்கு வராம போனா, அவன சண்டை போட்டு தூக்கி வந்திருவார். அப்புறம் அவன் செத்தான். அடியும் அட்வைசும் தூள் பறக்கும்.

தினமும் கேள்வி கேப்பார். கேட்டு அடிப்பார்.
அதுக்கப்புறம்தான் பாடம். கேள்வி நேரம் வந்தாலே அலறுவான்கள்.

 கேட்டு ஒரு செகண்டுக்குள் சொல்லாவிட்டால்  அடி உண்டு ( நல்லா படிச்சவன் டக்குன்னு சொல்லுவான் கேட்டியா ) .

சுதந்திர தினத்துக்கு முந்தின நாள், இது மாதிரி ”பாயன்சி லா “ என்றொரு கேள்வி கேட்டு வரும்போது என் முறை வந்தது.

எனக்கு அந்த் கேள்வியின் பதில் நல்லா தெரியும் , ப்தட்டத்துல வர மாட்டேங்குது. யாரோ வாய்குள்ள பஞ்ச வைச்சு அடச்சா மாதிரி திணறுறேன்.

அடுத்தவன்ட்ட போயிட்டார்.

இப்போ சொல்லாதவனுகளுக்கு பிரம்பால அடி கொடுத்துகிட்டே வரார். எனக்கு அடி கொடுக்க ஓங்கும் போது என் குரல் சத்தமாக எதிர்ப்பாய் ஒலிக்கிறது.

சவுந்திரராஜன் சார் கிளாஸில் அவர் குரலைதவிர ஒரு குரல் வரும் என்று யாரும் நினைத்து கூட பார்பதில்லையாதனால், என் குரலில் ஒலி சூழலுக்கு பதட்டத்தையும் சுவாரஸ்யத்தையும் கொடுத்திருக்க கூடும்.

“சார் நான் அடி வாங்க முடியாது எனக்கு ஆன்ஸ்ர் தெரியும்”

“கைய நீட்டுல.நீ பேசவே கூடாது கேட்டியா. பதில் தெரியலன்னா அடிப்பேன்”

“இல்ல சார் ஆன்ஸர் தெரியும். உங்கள பாத்து பயந்து சொல்ல வரமாட்டேங்குது. வாய் திக்குது .”

இப்போ என் சட்டைய பிடிச்சி வெளியே இழுத்தார். நேரே என்னை சுவத்தில வைச்சு முட்டு முட்டினார். முதுகு வலித்தது.

”திமிரால உனக்கு. பேர் என்னல “

“விஜய் சார். எனக்கு ஆன்ஸர் தெரியும். சொன்னா திக்குது சார் “ குரல் உடைய ஆரம்பித்தது.

”சரி வா ! போர்டுல எழுதி காமில வா இங்க.”

வெறி பிடித்தவனாய் பதில் எழுதினேன். ஒவ்வொரு சாக்பீஸ் தூளும் அழுத்தம் தாங்காமல் மாவாய் பதிய என் விடையும் அதற்குரிய சித்திரமும் பார்த்து அவருக்கு என் பிரச்சனை புரிந்தது.

என் உடம்பின் நடுக்கத்தை கட்டுபடுத்த முடியாமல் தவித்தை பார்ந்த்து  என் தோளில் கை போட்டுக்கொண்டார்.

“என்ன பாத்தா பயமாவால இருக்கு. நான் அரக்கனால . உங்க நல்லதுக்குதானல சொல்றேன். படிங்க . பத்தாங் கிளாஸ்தான் வாழ்க்கை புரியுதா” என்று புலம்பினார்.

ஏதோ காயப்பட்டவர் மாதிரி பேசினாற் போலதான் இருந்த்து.

அடுத்து மூன்று நாட்கள் அவர் பள்ளிக்கே வரவில்லை.

நான்காம் நாள் அவருக்கு பதிலாய் புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார்.

ஒரு மாதம் கழித்து அவர் வேறு வகுப்புகளுக்கு எடுக்கிறார். எங்கள் வகுப்பை தவிர்த்து விட்டாராம்.

விசாரித்ததில் இபோதெல்லாம் அப்பா அம்மாவின் இறப்பை பத்தி பேசுவதே இல்லையாம். பாடம் எடுத்து போய் விடுகிறாராம்.

யாரையும் திட்டுவதில்லையாம். கேள்வி கேட்பதும் இல்லையாம். பாடம் எடுத்து போய்விடுகிறாராம்.

ஒரு ஆசியரின் உயிர்ப்பை கொன்று விட்ட பாவத்துக்கு , ஆன்ஸர் தெரியாதுன்னு பொய் சொல்லி அடி வாங்கிருக்கலாம் என்று தோண்றிற்று அப்போது ...