Monday 26 January 2015

Pk மற்றும் பராசக்தி...

வயதானவர்களில் சிலர் இப்படி சொல்வார்கள் “நான் அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி.அது என்ன மாதிரி படிப்பு.இந்த காலத்து எம்.ஏ வுக்கு சமம் ( இப்போது இப்படி யாரும் சொல்வதில்லையோ.நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன்).
அதைக் கேட்கும் போது ” ஆமா அந்த காலத்துப் கொஞ்சம் படிப்பு = இந்த காலத்து நிறையப் படிப்பு” என்றொரு தேற்றத்தை நானே உருவாக்கிக் கொண்டேன்.ஆனால் பின்னால் அதை ஆராயும் போது அப்படியில்லை என்பதை கண்டுகொண்டேன்.
இப்போது பத்தாம் வகுப்பில் படிக்கும் திரிகோணமதியை (கணிதம்) அவர்க பியூசி தாண்டிதான் தொட்டிருக்கிறார்கள்.இப்போதைய பிளஸ் டு கால்குலஸ் எல்லாம் கல்லூரி காலத்தில்தான் படித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் பெருமைக்காக எங்கள் படிப்பு ஒசந்தது என்றொரு தொனியில் அப்படி சொல்வார்கள்.அதை ஒரு இங்கிதத்துக்காகவும், சபை கண்ணியத்துகாகவும் பேசுபவரை மறுக்காமல் ”ஆமா இல்ல” என்ற தொனியில் தலையாட்டிச் சென்று விடுவோம்.
அது போன்ற ”அந்த காலத்து எஸ்.எல்.சி” என்ற டாம்பீகம்தாம் பராசக்தி திரைப்படம்.
அதை அமீர்கானின் பி.கே படத்தோடு ஒப்பிட்டு,”நாங்கெல்லாம் இதை அப்போதே சொல்லிவிட்டோம்” என்று ஒன்றிரண்டு குரல்கள் கேட்டால் பரவாயில்லை, ஆனால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் அதை சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் இதை எழதுகிறேன்.
பி.கே என்ற ஹிந்திப்படத்தின் அருகில் கூட பராசக்தியால் வரமுடியாது என்பது என் கருத்து.
பி.கே 1000 என்றால் பராசக்தி 50 துதான்.இதுதான் உண்மை.பராசக்தியின் காலகட்டத்துக்கு பராசக்தி ஒக்கே.ஆனால் பராசக்தியில் அப்படியே எல்லா இடங்களிலும் பகுத்தறிவு கருத்துக்கள் பரவியிருக்கவில்லை.பராசக்தி பெரும்பான்மையான இடங்களில் பெண்ணின் பிரச்சனையை மட்டும்தான் பேசுகிறது.மத எதிர்ப்பு கொஞ்சம்தான் வருகிறது.
ஆனால் பி.கே முழுவதுமாய் மூடக்கருத்துக்களை எதிர்ப்பதை மட்டுமே பேசுகிறது.அதற்கு படைப்பாளி தேர்ந்தெடுத்திருக்கும் வேற்று கிரக கேரக்டர் என்ற வசதி அருமையானது.
பெரிய சிலை பெரிய அருளையும், சின்ன சிலை சின்ன அருளையும் தருமா? என்று கேட்பதாகட்டும்.
ராங் நம்பர் என்று இந்தியாவின் அனைத்து ”கடவுள் மனிதர்களையும்” சந்தேகப்படுவதாகட்டும்.
படம் முழுவதும் பி.கேவுக்கு ஒரே குறிக்கோள்தான்.அது மக்களுக்கு சில செய்திகளை சொல்வது மட்டுமே.
ஆனால் பராசக்தி அப்படியில்லை.செய்தி சில இடங்களில் மட்டுமே வருகிறது.
அடுத்து பி.கே திரைப்படம் சொல்லும் முக்கியமான கருத்து “முன்முடிவு” பற்றி.
பாக்கிஸ்தான் காதலனை (சர்ஃபரஸ்) இந்திய காதலி (ஜக்கு) திருமணம் செய்ய நினைத்து ஏற்கனவே இருவரும் திட்டமிட்டபடி சர்ச்சில் காத்திருக்கிறாள்.
காதலன் வர நேரமாகிறது.
அப்போது சிறுவன் ஒருவன் கடிதம் கொடுக்கிறான்.அதில் சர்ஃபரஸ் “நம் கலாச்சார வேறுபாடு என் குடும்பத்துக்கு பிடிக்காது.அதனால் திருமணம் வேண்டாம்” என்று எழுதியிருக்கிறான்.
ஜக்கு அழுகிறாள்.
அதற்கு முன்னால் அவர்கள் குடும்ப சாமியார் “ அவன் பாக்கிஸ்தானி உன்னை ஏமாற்றி விடுவான்” என்று சொன்னது யூகித்தது உண்மைதான் என்றெண்ணி மனம் குமைகிறாள்.
ஆனால் வேற்று கிரகவாசி பி.கே அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறான்.
அந்த விளக்கம் கொடுக்கும் போது ஜக்குவின் குடும்பச சாமியார், ஜக்கு மற்றும் மக்கள் அனைவரும் இருக்கிறார்கள்.
பி.கே( மற்றும் பலரும்) ஜக்குவை சர்ஃபரஸுக்கு போன் செய்ய வைக்கிறார்கள்.போன் செய்தால் தெரிகிறது சர்ஃபரஸ் ஜக்குவை ஏமாற்றவில்லை.அவன் இன்றும் கண்ணீரோடும் காதலோடும் ஜக்குவுக்காக காத்திருக்கிறான் என்று.
அன்று அந்த சிறுவன் கொடுத்த கடிதம் சர்ஃபராஸால் எழுதப்படவில்லை. அது வேறு ஏதோ ஒரு ஆணால் வேறு ஒரு பெண்ணுக்கு எழுதப்பட்டக் கடிதம்.தவறுதலாய் ஜக்குவுக்கு கிடைத்துவிடுகிறது.
இப்போது பி.கே குடும்ப சாமியாரைப் பார்த்துச் சொல்கிறான்
“நீங்கள்தான் ஜக்கு சர்ஃபரஸைப் பிரித்தீர்கள்.பாக்கிஸ்தானி என்றாலே ஏமாற்றிவிடுவான்.அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்ற முன்முடிவை ஜக்குவின் மனதில் ஏற்றிவிட்டீர்கள்.திணித்தீர்கள்.அதனால்தான் ஜக்கு ஏன் எதற்கு என்று ஆராயாமல், அந்தக் கடிதம் சர்ஃபரஸ் எழுதியதுதான் என்று தீர்மானத்துக்கு வந்திருக்கிறாள்” என்கிறான்.
பிகே வெறும் கடவுள் மறுப்பையோ மனிதநேயத்தையோ மட்டும் பேசவில்லை. அது மனிதநேயத்தை சக மனிதனை எப்படி நேசிக்க வேண்டும் என்ற வழிமுறையையும் கற்றுத் தருகிறது.
”இனம்,மொழி,மற்றும் இன்னபிற அடிப்படையில் ”முன்முடிவோடு” யாரையும் அணுகாதே, அப்படி அணுகினால் உன்னால் அவர்களை நேசிக்க முடியாமல் போகும்.அவர்களை தவறாகப் புரிந்துக் கொள்வாய்” என்ற அற்புதமானக் கருத்தை பி.கே சொல்கிறது.
ஆனால் பராசக்தி அப்படியெல்லாம் சொல்லவில்லை.பல இடங்களில் தட்டையாக போகிறது.
ஆனாலும் ,
இரும்பு குதிரைகள் நாவலில் விஸ்வநாதன் காயத்திரியிடம் சொல்வான் (?) “ பாரதி பளபள தான்.ஒத்துக்கிறேன் அவர் கவிதை பளபளதான்.ஆனா அந்த காலகட்டத்துல மக்களுக்கு அந்த பளபள தேவைப்பட்டுச்சி” என்பான்.
அதுமாதிரி பராசக்தி என்பது” அந்த காலகட்டத்துக்கு ஒரு புரட்சிப்படமாக இருந்திருக்கலாம்.தைரியமான படமாக இருந்திருக்கலாம்.ஆனால் அதற்காக இப்போதைய பி.கேவை நாங்க அப்போதே சொல்லிட்டோம் என்று சொல்வதை மூடத்தனமான உணர்ச்சிவசப்பட்ட சொற்களாக நன் நினைக்கிறேன்.
இதுவும் பழம்பெருமை பேசும் தாத்தாத்தனம்தான்.
இதன் மூலம் பி.கே போன்ற நுணுக்கமான சில விசயங்களைச் சொல்லும் படங்களை நம்மையும் அறியாமல் இருட்டடிப்பு செய்கிறோமோ என்று தோன்றுகிறது.

2 comments:

  1. இந்த வாதத்தை ஏற்க முடியாது.ஒரு திரைபடத்தின் வீரியத்தை அது சொல்கின்ற கருத்தை வைத்து மட்டும் பார்க்க கூடாது.அது சொல்லபட்ட காலத்தையும் எண்ண வேண்டும்.அக்காலத்தில் இருந்த பழமை பாரத்தை எண்ண வேண்டும்.ஒருவன் மீது 1000 கிலோ பாரம் இருக்கும் போது அதை 1 அடி நகர்தியதின் வீரியம் 50 கிலோ பாரத்தை 10 அடி நகர்தியதின் வீரியதை விட பெரியது.So earlier initiative and try made by Parasakthi is always greater than PK.So a movies intensity should not be calculated only by the number of message given by that movie.
    In that sense I always support Parasakthi.Only when a movie touches a message that the society afraid to speak, then that is comparable with Parasakthi.

    ReplyDelete
  2. // இனம்,மொழி,மற்றும் இன்னபிற அடிப்படையில் ”முன்முடிவோடு” யாரையும் அணுகாதே, அப்படி அணுகினால் உன்னால் அவர்களை நேசிக்க முடியாமல் போகும்.அவர்களை தவறாகப் புரிந்துக் கொள்வாய்” என்ற அற்புதமானக் கருத்தை பி.கே சொல்கிறது.
    ஆனால் பராசக்தி அப்படியெல்லாம் சொல்லவில்லை.பல இடங்களில் தட்டையாக போகிறது.
    ஆனாலும் ,
    இரும்பு குதிரைகள் நாவலில் விஸ்வநாதன் காயத்திரியிடம் சொல்வான் (?) “ பாரதி பளபள தான்.ஒத்துக்கிறேன் அவர் கவிதை பளபளதான்.ஆனா அந்த காலகட்டத்துல மக்களுக்கு அந்த பளபள தேவைப்பட்டுச்சி” என்பான்.
    அதுமாதிரி பராசக்தி என்பது” அந்த காலகட்டத்துக்கு ஒரு புரட்சிப்படமாக இருந்திருக்கலாம்.தைரியமான படமாக இருந்திருக்கலாம்.ஆனால் அதற்காக இப்போதைய பி.கேவை நாங்க அப்போதே சொல்லிட்டோம் என்று சொல்வதை மூடத்தனமான உணர்ச்சிவசப்பட்ட சொற்களாக நன் நினைக்கிறேன்.// இதைத்தான் நான் சொல்லவருகிறேன். பராசக்தியை குறைத்து சொல்லவில்லை.ஆனால் பி.கேவையெல்லாம் பராசக்தி படம் அன்னைக்கே சொல்லிடுச்சுப்பா என்று பி.கேவை ஒதுக்குவது என்பது முறையல்ல. ஒரு காலத்தில் அரிஸ்டாட்டில் விஞ்ஞானியாய் விஞ்ஞானத்தை தொடங்கி வைத்திருக்கலாம்.அதற்காக யார் என்ன சாதனை செய்தாலும் “இதையெல்லாம் முன்னாடியே சொல்லிட்டாருப்பா அரிஸ்டாட்டில்” என்று சொன்னால் எப்படி :)

    ReplyDelete