Sunday, 11 January 2015

ஊடக பரிமாறல் VS வெகுஜன ரசனை...

ஆனந்த விகடனில் பூமணி பேட்டி படித்தேன்.பூமணி மாதிரி ஒரு எழுத்தாளரிடம் மிகச் சின்னதான பேட்டியை எடுத்திருக்கிறார்கள்.அந்தப் பேட்டி பக்கங்களின் லேஅவுட் வருமாறு.
முதல்பக்கத்தில் அரைப்பக்கம் “இந்தாப்பா தாராளமா எடுத்துக்கோ” என்ற வாசகம் (பெரிய எழுத்துக்களில்).மிச்ச அரை பக்கத்தில் முன்னுரை.
இரண்டாம் பக்கத்தில், பக்கம் முழுவதும் பூமணியின் நான்கு போட்டோக்கள்.அதில் ஒரு போட்டோவில் பூமணி கைகளை விரித்து காட்டுகிறார்.இன்னொரு போட்டோவில் கைகளை தலையில் கட்டிக்கொண்டு போஸ்கொடுக்கிறார்.அடுத்து ஒரு போட்டோவில் பூமணி கால்மேல் கால்களைப் போட்டிருக்கிறார்.அதே போட்டோவை Zoom செய்து ஒரு போட்டோ.
ஆக இரண்டாம் பக்கம் முழுவதும் பூமணியிம் விதம் விதமான போட்டோக்கள்.
மூன்றாம் பக்கத்தில் பேட்டி. அதன் நடுவே சின்னதாய் “அஞ்ஞாடி” நாவலின் அட்டைப்படம்.
கடவுள் செயலாக நாலாவது பக்கத்தை லேஅவட் நபர்களும், ஆசிரியர்களும் போனால் போகுது என்று முழுவதும் எழுத்துகளாக கொடுத்திருக்கிறார்கள்.
வெகுஜன ரசனை VS ஊடகங்கள் என்பதற்கு இது உதாரணம்.
//முழுசும் ”எழுத்தா” இருந்தா எவன்ய்யா படிப்பான்.அப்படியே கடந்து போயிருவான்.//
// இவ்வளவு நீளமா பேட்டி இருந்தா மிடில் கிளாஸ் ஜனங்க.எப்படி படிப்பாங்க.அவுங்களே அயிரம் ஸ்டிரெஸ்ல இருப்பாங்க.பொழுது போக்க பத்திரிக்கை படிக்கிறாங்க.//
// ஒவ்வொரு பக்கத்த எடுத்தாலும் கலர்ஃபுல்லா இருக்கனும்.இதப்பாருங்க போட்டோக்கள் வந்து,படங்கள் வந்து எழுத்தோட வேகமா மக்கள ரீச்சாகும்//
இதுமாதிரி தொடர்ச்சியா வரும் போது புதுசா வர்ற சின்னப் பசங்க என்ன நினைக்கிறாங்கன்னா ”ஒரு பேட்டின்னா இப்படித்தான் இருக்கும் போல”.அவன் அந்த முன்கருத்துக்களுடன் வளர்கிறான்.அதைத்தாண்டி நீளமாக எதாவது பேட்டியைப் பார்த்தால் அவன் பதட்டமாகிறான்.
நம் தியேட்டர்களில் கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அலப்பறை இருக்க வேண்டும்.அதைத்தான் இளைஞர்கள் விரும்புகிறார்கள்.ஒரு காட்சி பின்னனி இசை இல்லாமல் அமைதியாக ஐந்து நிமிடம் ரசனையாக நகர்ந்தால் அவர்களால் தாங்க முடியாது. ஆளுக்கொரு கமெண்ட் அடிப்பார்கள்.மவுனத்தை அவர்களால் ஒத்துக் கொள்ளவே முடியாது.
சரியா.மக்களால்
-நீண்ட பேட்டிகளைத் தாங்கிக் கொள்ளமுடியாது
-மவுனக்காட்சிகளைத் தாங்கிக் கொள்ளமுடியாது.
அதனால் இதைக் கொடுக்கிறோம் என்று ஊடகமோ படைப்பாளிகளோ சொல்வது நியாயம் என்றாலும்.
தைரியமாக அதை அப்படியே கொடுத்துக் கொண்டே வருவது மட்டுமே மாற்றத்தை உண்டு பண்ணும்.நான் என்ன சொல்கிறேன் ஆனந்த விகடன் முழுவதும் கொண்டாட்டமாக நடத்துங்கள்.ஆனால் ஒரே ஒரு கட்டுரையையோ அல்லது பேட்டியோ அல்லது ஆய்வையோ மிக நீண்டதாக வெளியிடுங்கள். மிக நீண்டதாக பொறுப்புள்ளதாக.
சுவாரஸ்யத்துக்கு படிக்கிறவன் புரட்டி படித்து முடித்து விட்டு, என்றாவது ஒருநாள் அந்த நீண்ட அர்த்தமுள்ளதை படிக்கமாட்டானா? அதன் மூலம் மாற்றம் வராதா?
“அடப்போய்யா மூடிகிட்டு.அதுக்கு எவ்வளவோ சிறுபத்திரிக்கை இருக்கே.அதப் போய் படிக்க வேண்டியதுதானே” என்று சொல்லலாம்.அவைகளுக்கு ரீச்சே கிடையாது. இதை நக்கலான பதத்தில் சொல்லவில்லை.அதுதான் உண்மை.
சோத்துக்காக குழம்பு, குழம்புக்காக சோறு, அந்தச் சோத்துக்காக குழம்பு என்று அதிகம் சாப்பிடுபவனைப் போல.
வெகஜன ரசனைக்காக(ரசனைக்குறைவு) ஊடக அட்ஜெஸ்ட்மெண்ட்,
ஊடக அட்ஜெஸ்மெண்டினால் வெகுஜன ரசனைக் குறைவு,
வெகுஜனரசனைக் குறைவால் ஊடக அட்ஜெஸ்ட்மெண்ட்
என்று மிக ஆபத்தாக தேய்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
ஆனந்த விகடன் மாதிரி பிரபல பத்திரிக்கைகள் இது பற்றி யோசிக்க வேண்டும்.
அதான் நூத்துக்கணக்கான மாணவ அப்பரண்டீஸ்கள வெச்சியிருக்கீங்களே. யோசிங்க.

No comments:

Post a Comment