Sunday 11 January 2015

அம்பேத்கர் மனதை பாதித்த ஆறுசம்பவங்கள்...

தன் மனதை பாதித்த ஆறு முக்கியமான சம்பவங்களாக அம்பேத்கர் சொல்வதை மிகச்சுருக்கமாக தருகிறேன்.
சம்பவம் 1:
1901 வருடம் அம்பேத்கரும் அவருடைய சகோதரர்களும் அவர் அப்பாவைப் பார்க்க கோரேகன் செல்கிறார்கள்.அம்பேத்கரின் அப்பாவுக்கு சரியான தகவல் கிடைக்காத குழப்பத்தால்,அம்பேத்கர் குதிரைவண்டியில் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்யவேண்டிய நிலமை ஏற்படுகிறது.
ஒரிரவு, தெரியாத ஊரின் ரோட்டோரம் தங்க வேண்டிய நிலமை. இந்தப் பயணத்தில் சிறுவன் அம்பேத்கருக்கு வித்தியாசமான பிரச்சனை ஏற்படுகிறது.அவனுக்கு சாப்பிட, வேண்டிய மட்டும் உணவை அவன் அம்மா கட்டிக்கொடுத்திருக்கிறார்.ஆனால் வழியில் அவருக்கு தண்ணீர் கொடுக்க ஆளில்லை.
தாழ்த்தபட்டவன் என்ற காரணத்தால் தண்ணீரே கிடைக்கவில்லை.
தண்ணீரில்லாமல் உணவு உண்ணுதல் முடியாத காரியம்.அதனால் கடைசிவரை அவற்றையெல்லாம் சாப்பிடாமலேயே அப்பாவைச் சென்றடைகிறார் அம்பேத்கர். ஜாதி வெறியின் கொடுமையின் வீரியத்தை அவர் புரிந்து கொண்டது இதிலிருந்துதான்.
சம்பவம் 2:
1916 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன் உயர்கல்வியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இந்தியா திரும்பும் அம்பேத்கருக்கு பரோடா மன்னருக்காக உழைக்க வேண்டிய வேலை. அவருக்கு வேலை கிடைக்கிறது.
ஆனால் தங்குமிடம் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பார்சி ஹாஸ்டலுக்கு செல்கிறார்.அங்கே அவரை பார்சி என்று நினைத்து தங்க இடம் கொடுக்கிறார்கள். அம்பேத்கரும் அதை மெயிண்டயின் செய்து வருகிறார்.
ஒரிரவு அம்பேத்கரின் ஜாதியை அறிந்து பார்சிக்கள் கூட்டம் கம்பு தடி எல்லாம் எடுத்து வந்து அவரை சுற்றிக்கொண்டு “எப்படி எங்கள் இன ஹாஸ்டலில் நீ தங்கியிருக்கலாம்” என்று அவரைச் சுற்றி அடிக்க நிற்கிறது. அம்பேத்கர் அவர்கள் அவேசத்தைப் பார்த்து பயந்து மன்னிப்புக் கேட்டு மனக்கஷ்டத்துடன் அந்த இடத்தைக் காலி செய்கிறார்.
இந்துக்களுக்கு பிடிக்காத தாழ்த்தப்பட்டவர்கள் பார்சிக்களுக்கும் பிடிப்பதில்லை என்பதை அவர் புரிந்து கொள்கிறார்.
சம்பவம் 3 :
1929 இல் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சனையொன்றைப் பற்றி விசாரனை செய்ய மும்பை அருகே ஒரு கிராமத்துக்குச் செல்கிறார் அம்பேத்கர். ரயில் நிலைத்திலிருந்து நான்கு மணி நேர டோக்லா வண்டிப் பிரயாணம். வண்டியை ஒட்டி வந்த வண்டிக்காரன் சரியாகவே ஒட்டவில்லை. பக்க மறைப்பு இல்லாத மரப்பாலங்களை அவன் கடக்கும் போது பல அசம்பாவிதங்கள் நடக்க இருந்தன.
அவனுக்கு வண்டி ஒட்டத்தெரியவில்லை என்பதை அம்பேத்கர் கண்டுபிடித்துவிட்டார். அன்றைய நாள் கடைசியில் அது பற்றி விசாரித்திருக்கிறார். டோக்லா வண்டிக்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வண்டி ஒட்ட வரமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் வண்டியை மட்டும் வாடகைக்கு வாங்கி, அவர்களில் அரைகுறையாக தெரிந்த ஒருவனை வண்டியோட்டியாக்கி ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள்.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை பார்சிக்களுக்கு மட்டுமல்ல டோக்லா வண்டிக்காரர்களுக்குக் கூட பிடிக்காது என்று அவர் புரிந்து கொண்டார்.
சம்பவம் 4
1934 யில் ஹைதிராபாத்தில் இருக்கும் தவலாபாத் கோட்டையைச் சுற்றிப் பார்க்க அம்பேத்கரும் அவர் இயக்க அங்கத்தினர்களும் போயிருக்கின்றனர்.அந்தக் கோட்டை முஸ்லிம்களால் பராமரிக்கப்படும் கோட்டை.
கோட்டையில் நுழைந்ததும் அம்பேத்கருடன் வந்தவர்கள் அங்கிருந்த குளத்தில் கால் கை கழுவியிருக்கிறார்கள்.
அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தெரிந்து கொண்ட அங்கிருந்த முஸ்லிம்கள் “ நீங்கள் தெத்கள் ( தாழ்த்தபட்டவர்கள்) எப்படி எங்கள் குளத்தைத் தொடலாம். அது தீட்டாகிவிட்டது” என்று அடிக்க வருகிறார்கள்.
உடனே அம்பேத்கர் “ இப்படித்தான் உங்கள் மதம் உங்களுக்கு சொல்கிறதா? இந்தக் கோட்டையை நாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கு அனுமதியுண்டா? கிடையாதா ? பளிச்சென்று சொல்லுங்கள் “ என்று உரத்து சொல்கிறார்.முஸ்லிம்கள் நெடுநேரம் யோசிக்கிறார்கள். போனால் போகிறதென்று அனுமதி கொடுக்கிறார்கள்.
ஆனால் குளத்தைத் தொடக்கூடாதென்று கூடவே ஒரு காவலாளியையும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை, பார்சிக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் பிடிக்காது என்று அவர் புரிந்து கொண்டார்.
சம்பவம் 5:
இது அம்பேத்கருக்கு நேர்ந்தது அல்ல.ஒரு பங்கி ஜாதியைச் சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்தது என்று அம்பேத்கர் சொல்கிறார். அவனுக்கு அரசு அலுவலராக வேலை கிடைக்கிறது.
ஆனால் அவன் அலுவலகத்தில் அவனுக்கு இருக்கை கொடுக்கவில்லை.அவனுக்கு குடிநீர் வேண்டுமானால் மொண்டு குடிக்க முடியாது.வேறு யாராவது நீரை அவன் கைகளில் ஊற்ற வேண்டும்.
ஒருநாள் அவன் தெரியாமல் உயர் ஜாதிகார அதிகாரி இருக்கையில் அமர்ந்துவிட, அவர் ஊரிலிருந்து ஆட்களை கூட்டி வந்து அவனை அவமானப்படுத்தி அடிக்க வருகிறார்.அவன் அந்த வேலையே வேண்டாம் என்று விட்டு ஒடிப்போகிறான்.
சம்பவம் 6 :
இது அம்பேத்கருக்கு நேர்ந்தது அல்ல. ஒரு தாழ்த்தப்பட்டவர் காந்தியின் ”யங் இந்தியா” இதழுக்கு எழுதிய கடிதம்.
அவருடைய குழந்தைக்கு உடல் சரியில்லை.
கடுஞ்ஜுரம்.
மருத்தவர் ஜாதியைக் காட்டி வரமறுக்கிறார்.இவர் பணம் கொடுக்கிறேன் என்கிறார்.அப்போதும் மருத்தவர் வரமறுக்கிறார்.
பல சிபாரிசுகளுக்குப் பிறகு இரண்டு நாள் கழித்து மருத்துவர் வருகிறார்.
குழந்தையை ஹரிஜனக்குடியிருப்பின் வெளியே எடுத்து ஒரு வீட்டில் வைக்கிறார்கள்.
தெர்மாமீட்டரை டாக்டர் ஒரு முஸ்லிமிடம் கொடுக்கிறார், முஸ்லிமிடமிருந்து இவருக்கு அது வருகிறது, பின் அதை மனைவிடம் கொடுத்து குழந்தைக்கு வைத்து காய்ச்சலை அளவெடுக்கிறார்கள்.
டாக்டர் மாத்திரை எழுதிக்கொடுத்துவிட்டு போய்விடுகிறார். ஆனால் குழந்தை ஒருநாளில் இறந்துவிடுகிறது.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை
பார்சிகளுக்கும்,
டோக்லா வண்டிக்காரனுக்கும்,
முஸ்லிம்களுக்கும்
அரசு அலுவலர்களுக்கும்
மருத்துவர்களுக்கும் கூட பிடிக்கவில்லை.
இந்தக் கட்டுரை அம்பேத்கர் தொகுப்பான புத்தகம் 25 யில் வருகிறது

1 comment:

  1. திண்டுக்கல் தனபாலன் நன்றி... காயத்ரி தேவிக்கும் நன்றி...

    ReplyDelete