Monday, 26 January 2015

மனித உரிமை போராளிகளின் பயம்...

நேற்று புத்தகக் கண்காட்சியில் கீரனுர் ஜாகிர்ராஜா (குட்டிச்சுவர் கலைஞன் - நாவல் ) புத்தக வெளியீட்டு நிகழ்வில் கோம்பை எஸ்.அன்வரைப் பார்த்தேன்.
அவர் தமிழக் முஸ்லிம்கள் என்பவர்கள் தமிழர்களே என்றக் கருத்தை வலியுறுத்தி எடுத்த ஆவணப்படமான “யாதும்” பற்றி பேசினேன்.
”அடுத்து எப்ப செகண்ட் பார்ட் வருது” என்றேன்.
“முதல் எடுக்குறதுக்குள்ளே அதிக செலவாயிடுச்சி” என்று சிரித்தார்.
“உங்கள் ஆவணப்படத்தை கண்டும்காணாமல் இருப்பது போன்ற புறக்கணிப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்” என்று கேட்டேன்.
“இதுல பல உள் அரசியல் இருக்கு.பல இஸ்லாமிய அமைப்புகளே இந்த ஆவணப்படத்தை ரசிக்கவில்லை” என்றார்.
அதைக் கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது.
“ஏன் எதாவது எதிர்ப்பு வந்ததா?” என்றேன்.
“எதிர்ப்பு வரவில்லை.எதிர்க்குமளவுக்கு என் ஆவணப்படத்தில் எதுவுமில்லை. தமிழர்கள்தாம் தமிழ் முஸ்லிம்கள் என்பதை நிருபித்திருப்பேன்.அதைத்தவிர நான் எதுவும் செய்யவில்லை.ஆனால் ஏன் இஸ்லாமிய அமைப்புகள் ரசிக்கவில்லை என்று நினைக்கிறேன் என்றால், ஏதோ ஒருவகையில் நான் இந்த தமிழ் உணர்வையும் இஸ்லாமியர்களையும் இணைப்பது அவர்களை எரிச்சலூட்டி இருக்க வேண்டும்.”
“தமிழ் உணர்வையும் இஸ்லாமியர்களையும் இணப்பது ஏன் அவர்களை எரிச்சலூட்ட வேண்டும்? “
“இஸ்லாமியர்கள் இஸ்லாமிய உணர்வைமட்டும் தான் கொண்டிருக்க வேண்டும் என்பது இங்குள்ள இயக்கங்களின் மறைமுக விருப்பமாக இருக்கலாம்.ஒருவேளை அவர்களுக்கு வேறு இன உணர்வும் (தமிழன் என்ற உணர்வு) ஊட்டப்பட்டால் ஒரு மதத்து மக்களை ஒன்று திரட்டுவதற்கு வசதியில்லாமல் போகக் கூடும் என்று அவர்கள் நினைக்கலாம்.” என்றார்.
“அப்படியானால் சீறாப்புராணம் போன்ற இலக்கியங்கள் எப்படி பிறந்தன இஸ்லாமியர்களின் தமிழ் உணர்வால்தானே.முதல் தமிழ் புத்தகம் கூட அப்படித்தானே பிறந்தது? “ இது நான்.
“நான் இஸ்லாமிய பொதுமக்களை சொல்லவில்லை.ஆனால் அமைப்புகளைச் சொல்கிறேன்.எல்லா மதத்திலும் அமைப்புகளே பொதுமக்களின் சிந்தனையை ஏதோ வகையில் வடிவமைக்கின்றன.
என் ஆவணப்படத்தைப் பார்க்க கூட மறுக்கும் பல அமைப்புத்தலைவர்களின் கவனத்தை ஆராய்ந்தப் பின் இதை சொல்ல வேண்டியதிருக்கிறது.இன்னொன்றும் சொல்கிறேன்.
சமீபத்தில் குழந்தைகளுக்கான சீறாப்புராணம் ஒப்புவித்தல் போட்டி ஒன்று நடந்தது.அதில் வெற்றிபெற்றவர்கள் ஒருவர் கூட முஸ்லிம் அல்ல. முஸ்லிம் அல்லாதவர்கள்தாம் சீறாபுராணம் ஒப்புவித்தல் போட்டியில் ஜெயித்தவர்கள்.”
“ம்ம்ம். இது மாதிரி புறக்கணிப்புகள் உண்மையில் வேதனைதான்”
“இயக்கங்களின் புறக்கணிப்பை விடுங்கள் மனித உரிமைக்காக போராடும் அந்த நபரே என் ஆவணப்படத்தை பார்க்க தயக்கம் காட்டுகிறார்.நான் கேட்கும் போதெல்லாம் இப்ப பாக்குறேன் அப்ப பாக்குறேன் என்று காலம் கடத்துகிறார்”
“அவரா அந்த மனித உரிமை ஆர்வலர் மேல் எனக்கு மதிப்பு இருக்கிறதே” என்றேன்.
“எனக்கு இருக்கிறது. ஆனால் ஏன் அவர் என் ஆவணப்படத்தைப் பார்க்காமல் தவிர்க்கிறார் என்று தெரியவில்லை.”
“ஒருவேளை பார்த்தால் கருத்துச் சொல்ல வேண்டும். கருத்துச் சொன்னால் அவருடைய இமேஜ் போய்விடும் என்று நினைக்கிறாரோ என்னவோ” என்றேன்.
“இருக்கலாம்” என்று சிரித்தார்.
“சரி பாஸிட்டிவ் தன்மை சொல்லுங்கள்”
“நிறைய பேர் பாராட்டவும் செய்கிறார்கள்.குறிப்பாக இஸ்மாலிய தனிமனித மக்கள். வந்து பாராட்டிவிட்டுப் போகிறார்கள். தமிழ்மண்ணின் தமிழ்கலாச்சாரத்தின் வேர்களாய் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள்,பெருமையாக இருக்கிறது” என்று அவர்கள் சொல்வதுதான் கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.என்றார்.
”எனக்கு உங்கள் ஆவணப்படம் கொடுக்கும் உணர்வு அபாரமானது” என்றேன்.
“ம்ம்ம்”
“இந்தியனாக இரு. அனைத்து மதத்தினரையும் மதி, நேசி என்று சிறுவயதில் படித்திருக்கிறேன்.
இருந்தாலும் ஒரு முஸ்லிம் கல்யாணத்தில் முஸ்லிம்களோடு உணவு உண்ணும் போது ஏதோ ஒரு அடிஆழ மனநிலையாக “இவர்கள் வேறு” என்ற எண்ணம் எனக்கிருந்தது.
அதாவது கருத்தளவில் அப்படியில்லையென்றாலும் ஆழ்மன அளவில் அப்படியிருந்தது.
உங்கள் ஆவணப்படத்தைப் பார்த்ததும் அது வெகுவாக குறைந்தது.அல்லது காணாமல் போனது.
அந்த ஃபீல்தான் முக்கியமானது. அந்த சகோதரனாக உணரும் உணர்வைக் கொண்டுவரத்தான் இந்திய சுதந்தர காலத்தில் பல தலைவர்கள் உழைத்திருக்கின்றனர்.
நீங்களும் உங்கள் ஆவணப்படத்தின் மூல்மாக அதையே செய்திருக்கிறீர்கள்.
இன்னும் இரண்டாம் பாகமும் எடுங்கள்.
எங்களைப் போன்று பலர் உங்களுள் படைப்பை ரசிக்க சிந்திக்க காத்திருக்கிறோம்” என்று சொல்லி கைகொடுத்து விடைபெற்றேன்.
இந்தப் புத்தகக் கண்காட்சியின் நிறைவான் உரையாடலாக திருப்தியாக உணர்ந்தேன்

No comments:

Post a Comment