Monday 26 January 2015

மாதொருபாகனில் ஒரு பகுதி...

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலில் இப்படி ஒரு சம்பவம் வருகிறது.( நான் சுருக்கமாக சொல்கிறேன்)
காளி வளர்க்கும் கோழிக்குஞ்சுகள் மட்டும் காக்கைகள் கையில் சிக்காமல்,கழுகின் அலகால் சிதையாமல் தப்பித்து வளர்ந்து விடுகின்றன.
காளியின் நண்பன் “எப்படி” என்று வியக்கிறான்.அது எப்படி என்று காளி சொல்கிறான்.(இதையும் நான் சுருங்க எழுதுகிறேன்)
அந்த விளையில் இருக்கும் நெருக்கமான பனைமரங்களில் சிலதின் ஒலைகளை வெட்டாமல் விடுகிறான்.பனை ஒலைகள் சிலுப்பிக் கொண்டு நிற்கின்றன.அங்கே கரிக்குருவிகள் கூடுகட்டுவதற்காக மோப்பம் பிடித்து அலைகின்றன.காளி அதை கவனமாக கவனிப்பான்.கரிக்குருவிகள் கூடு கட்டத்தொடங்கும் போது, தன் கோழி அடைக்காத்து குஞ்சு பொரிப்பது போல திட்டமிடுகிறான்.
கரிக்குருவிகள் (ஆணும் பெண்ணும்) தன் முட்டையை அடைகாக்கும் போதும் சரி, குஞ்சுகளை வளர்க்கும் போதும் சரி வேறு எந்த பறவையையும் அந்த இடத்தில் அண்டவிடாதாம்.
காக்கை,கழுகு என்று எதுவந்தாலும் ஆக்கிரோஷமாக விரட்டிவிடுமாம்.
ஆக பனைஒலையை வெட்டாமல்,கரிக்குருவிகளை வரவழைத்து, அதன் தாய்மை தந்தை ஆக்கிரோஷத்தை உபயோகித்து காளி தன் கோழிக்குஞ்சுகளை வித்தியாசமாக பாதுகாக்கிறான்.
எவ்வளவு அழகான விஷயம் இது.பெருமாள் முருகன் சொன்னது சரியா? இல்லையா என்று சோதித்துப் பார்க்க வேண்டுமல்லவா?
அது பற்றி தேடிப்படித்தேன்.கரிக்குருவிகள் என்பதின் பயலாஜிக்கல் பெயர் Black Drongo Dicrurus macrocercus
இதை கரிக்குருவிகள் என்று இரட்டைவால் குருவிகள் என்றும் சொல்வார்கள்.ஆம் இதற்கு mobbing என்றொரு குணம் இருக்கிறது.
பறவைகள் விலங்கினங்கள் அகராதியில் Mobbing என்றால், குஞ்சு குட்டிகளை வளர்க்கும் போது,தாய் தந்தை காட்டும் வெறித்தனமான உடல்மொழியைச் சுட்டும்.
பூனை நாய்கள் எல்லாம் குட்டி போட்டதும் யாரும் தன் குட்டிகளை தொடாமல் இருக்கும் போது கூட சும்மாவேனும் ஒரு சவுண்ட் விடும்.
கோபம் காட்டும்.
மற்ற எதிரிகள் அது பார்த்து பயந்து அந்தப் பக்கம் வராது.
அந்த குணம் கரிக்குருவிகளிடம் அதிகம் இருக்குமாம்.
ஆக பெருமாள் முருகன் எழுதியது மிகச்சரியான தகவல்.
வெறும் தகவலை எழுதிவிட்டால் அவன் எழுத்தாளனா? அல்லது அதை அழகியலாக எழுதிவிட்டால் அவன் எழுத்தாளனா?
காளி இப்படியாக கோழிகுஞ்சுகளை திறம்பட வளர்ப்பதைப் பார்த்து பொன்னாத்தா சொல்கிறாள்
“கோழிக்குஞ்செல்லாம் கருத்தா வளக்கற உங்கையில ஒரு கொழந்தயக் குடுக்க முடியலியே”
இங்குதான் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளன் மிளிர்கிறார்.
எதையும் எதையும் எப்படி பொருத்துகிறார் பாருங்கள்.
ஒருவேளை அறிவயையும் மனித உணர்ச்சியையும் ஒரே நேரத்தில் தூண்டும் சக்தி இலக்கியத்தின் முக்கிய கூறாக இருக்கும் பட்சத்தில் பெருமாள்முருகன் எப்பேர்பட்ட திறமைசாலியாக இருக்கிறார்.
போகிறபோக்கில் நாவலைப் படிக்காமலேயே பல எழுத்தாளர்கள் “மொக்கை நாவல்” என்று சொல்லிவருகிறார்கள்.இதையெல்லாம் நம்பாதீர்கள்.
வாசகர்களாகிய நமுக்கு அறிவிருக்கிறது.
நமக்கு சரிபார்க்கும் வசதி இருக்கிறது.
தகவல்களை எளிதாகப் பெறமுடிகிறது.
நாமே இறங்கிப் படிப்போம். நாமே உண்மையை உணர்ந்து கொள்வோம்.
எழுத்தாளர்களின் சீக்குப் பிடித்த அரசியல் சண்டையில் நாம் ”மாதொருபாகன்” மாதிரி நல்ல இலக்கியத்தை மிஸ் பண்ணிவிடக்கூடாது.

No comments:

Post a Comment