Monday, 26 January 2015

கோல மாட்டுக்கு என்ன கொடுப்பது....

மாட்டுப் பொங்கல் கோலமாக ஒவ்வொருவரும் தெருவை நிறைத்து கோலம் போட்டார்கள்.
என் வீட்டுக் குட்டிப்பெண் நானும் கோலத்துக்கு கலர் போடுவேன் என்றாள். அவளை யாரும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளவில்லை.
இன்று காலை எழுந்ததும் என் அப்பாவிடம் கம்ப்ளைண்ட் “ தாத்தா என்ன கோலம் போடவே விடல.கலர் கொடுக்க எனக்கு ஆசையாயிருக்கு” என்றாள்.
உடனே அப்பா “ அப்படியா யாரு உன்ன கலர் போட விடாம தடுத்தது.இங்க வா தாத்தா நா ஒரு கோலம் போடுறேன். நீ கலர் கொடு” என்றார்.
தாத்தாவும் பேத்தியும் உற்சாகமாக வாசலுக்கு சென்றார்கள்.அப்பா சாக்பீஸை எடுத்துக் கொண்டார். வேகமாக ஒரு மாடு படம் வரைந்தார்.
“ம்ம்ம் இதுக்கு கலர் கொடு” என்றார்.
பேத்தி பல்விளக்காமல் சூரிய ஒளி முதுகில் பட கலர் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.அவளுக்கு எப்போது கலர் கொடுப்பது பிடிக்கும். முடிந்த அளவு கச்சிதமாக கொடுத்து அழகாக்கினாள்.
அங்கே என் அம்மா பேத்தியை நோக்கி “ யம்மா நீ கொஞ்சம் டீ குடிக்கிறியா. கொஞ்சம் பால் குடிக்கிறியா” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். அதை அவள் சட்டை செய்யவே இல்லை.
நான் வந்து “சொல்றத கேக்க மாட்டியா” என்று அதட்டினேன். அதையும் கண்டுகொள்ளாமல் “கோட்டு சித்திர மாட்டை” “வர்ண மாடாக்கினாள்”. அழகாகவே இருந்தது.
அப்புறம் பல்விளக்கும் போது கோலத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.நாங்கள் கலரிங்க ஆஹா ஒஹோ என்று புகழ்ந்து கொண்டே இருந்தோம்.
பல் தேய்த்து முடித்ததும் கோலம் பக்கம் வந்தாள்.பக்கத்தில் இருக்கும் செடிகளின் இலைகளை பிய்த்தாள்.அதை கையால் சிறுதுண்டாக்கினாள்.
துண்டாக்கிய இலையை வர்ண கோல மாட்டின் வாயெருகே வைத்தாள்.
அப்பா கேட்டார் “ அட இது என்ன வைக்கிற” என்று செல்லமான
நக்கலாக
“மாடு சாப்பிடுறதுக்கு புல் வைக்கிறேன். உங்களுக்கென்ன”
என்றாள்.
வள்ளலார் கேட்டிருக்க வேண்டும் இதை..

No comments:

Post a Comment