Sunday, 11 January 2015

காட்டுவாந்தி கோஷ்டிகள்...

நம்மிடம் இருக்கும் மோசமான பழக்கம் ”சபையில் கும்பலாய் ஒருவனுக்கு தொடர்ச்சியாக விடாமல் ஆலோசனை” சொல்வது, ஒருவன் திணறலைப் பார்த்து சிரித்து வைப்பது.
ஒருமுறை எங்கள் கம்பெனிக்கு மேனேஜ்மெண்ட் வகுப்பெடுக்க ஒருவர் வந்தார்.இரண்டு நாள் பயிற்சி.
பெரிய ஸ்கிரீனில் அனைவரின் கண்கள் பார்க்க எக்ஸெல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
அவருக்கோ Ms Excel அந்த அளவுக்குத் தெரியாது.தெரிந்த வரைக்கும் பொறுமையாக செய்து கொண்டிருந்தார்.அதாவது வேலை நிற்கவில்லை. கொஞ்சம் பொறுமையாக செய்து கொண்டிருந்தார்.
நம் “கூட்ட ஆலோசகர்கள்” விடுவார்களா? தொடங்கினார்கள்.
“சார் அந்த பார்டருக்கு டாப் ரைட்ல இருந்து நாலாவது ஐக்கான்.ஆங் அங்கப் போங்க. அங்க இல்ல. இல்ல இல்ல இல்ல அங்க இல்ல. சார் அது இல்ல சார். இருங்க நா வர்ரேன்” என்று இரைந்து கத்துவார்.
இதற்கிடையில் ஒருவர் “சார் ’கண்ட்ரோல் 1’ பட்டன அமுக்குங்க” என்பார்.
இதற்கிடையில் இன்னும் நாலைந்து குரல்கள்.
“அது இது அப்படி இப்படி” என்று பொதுவாக கத்தும் குரல்கள்.
வகுப்பெடுக்க வந்தவர் கொஞ்சம் விவேகமான ஆள்.
“தம்பிகளா இப்படி ஆள் ஆளுக்கு சொன்னா எனக்கு ஒண்ணும் ஒடாது.அமைதியா இருந்தா பத்து நிமிசத்துல வேலைய முடிச்சிருவேன்” என்று கூட்டத்தின் வாயை அடக்கினார்.
சபையில் ஒருவன் எங்கே தவறு செய்வான் என்று காத்துக் கொண்டிருப்பது.அந்தத் தவறை உடனே சுட்டிக் காட்டி சிரிப்பது.
அல்லது அதைத் திருத்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையாக குரல் கொடுப்பது.நன்மை செய்வதாக நினைத்துஎவ்வளவு அநாகரிகமான காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம்.
இது மாதிரி ஒருவர் திணறினால் கூட்டம் அமைதியாக இருக்க வேண்டும்.அவரே அதை சரி செய்ய அனுமதிக்க வேண்டும்.நான் பல கூட்டங்களில் பார்த்திருகிறேன்
கூட்டத்தில் ஒரு ”காட்டுவாந்தி” கோஷ்டி எப்போதும் இருக்கும். இந்தக் ”காட்டுவாந்திகள்” தவறு நடந்தால் சீற்றம் கொண்டு கல கலவென ”சத்தவாந்திகளை காட்டுத்தனமாக” அந்த இடத்திலேயே எடுக்க ஆரம்பிக்கும்.
ஒருவர் முக்கியமான அரசியல் தத்துவத்தைப் பேசிக்கொண்டிருக்கும் போது தெரியாமல் ஒரு நாடு சுதந்திரம் பெற்ற தேதியை தவறாகக் குறிப்பிட்டால் (பேச்சுக்கு) அதில் என்ன பிரச்சனை.அந்த தவறை கண்டுகொள்லாமல் போய்விடுவதுதான் சபை நாகரிகம்.
அதைவிட அந்த பேச்சாளரின் பார்வைதான் முக்கியம், ஒன்றிரண்டு தகவல் பிழைகளை பெரிது படுத்தி பேச்சில் குறுக்கிடுவது அபத்தம்.அப்படி குறுக்கிடுவதை பொழுது போக்காக செய்யும் இந்த காட்டுவாந்தி கோஷ்டிகள்.
சாருவின் புதிய எக்ஸைல் வெளியிட்டு விழாவில் இது போன்ற “காட்டுவாந்தி” கோஷ்ட்டியைப் பார்த்தேன்.
தருண் தேஜ்பால் உரையை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல மேடையில் கருந்தேள் என்று சொல்லப்படும் ராஜேஷ் வந்திருந்தார்.
ராஜேஷ் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தார்.அவர் முன்னே பல முக்கிய எழுத்தாளர்கள் இருக்கும் போது பதட்டமாகத்தான் இருக்கும்.
முதலில் தருண் தேஜ்பால் பேசினார். ராஜேஷ் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார்.பெரும்பாலும் நன்றாகவே மொழிபெயர்த்தார் ராஜேஷ்.ஆனால் ஒன்றிரண்டு இடத்தில் கொஞம் விட்டு விட்டார்.அதுவும் பதட்டம் காரணமாகவே விட்டார் என்பது என் அனுமானம்.
அவரை யாரும் எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் ஒரு நிமிடத்தில் சரளமாகியிருப்பார்.ஆனால் நம் காட்டுவாந்தி கோஷ்டி சும்மாயிருப்பார்களா? அவர்கள் அப்படியில்லை.அது தப்பு இது தப்பு என்று சத்தமாக சலசலத்தார்கள்.
ராஜேஷ் மேலும் பதட்டமாக ஆரம்பித்தார்.அடுத்து ஒரு நிமிடத்தில் ராஜேஷின் இன்னொரு சிறிய தவறுக்காக காட்டுவாந்தி கோஷ்டி கலகம் செய்ய ஆரம்பித்தது.
உடனே விழா அமைப்பாளார் அந்த காட்டுவாந்தி கோஷ்டியை சமாளிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி “ இவ்வளவு தப்பு கண்டுபிடிக்கிறீங்க. உங்கள்ல்ல யாராவது மேடைக்கு வந்து மொழிபெயர்க்க முடியுமா” என்றொரு கேள்வியை எழுப்பினார்.
உடனே காட்டுவாந்திக் கோஷ்ட்டியில் பரபரப்பு. அதில் ஒருவர் வந்தார்.மேடையில் நின்று கொண்டார். ( அதாவது குறை சொன்னவர்)
தருண் தேஜ்பால் Fundamentalism என்று சொன்னதை இந்தக் காட்டுவாந்தி “இனச்சிக்கல்” என்றார். அதன் பெயர் “அடிப்படைவாதம்” அது எப்படி இனச்சிக்கலாகும்.
இந்த மொழிபெயர்ப்பு ராஜேஷின் மொழிபெயர்ப்பை விட மிக மிக சுமாராயிருந்தது.இப்படியாக குழப்பம் வந்து, யாரும் மொழிபெயர்க்க வேண்டாம் தருணின் ஆங்கிலம் புரிகிறது நேரடியாக பேசட்டும் என்று தருணைப் பேசவிட்டார்கள்.
இப்படி கூட்டமாய் ஆலோசனை சொல்லி எத்தனை பேரை அவமானப்படுத்தியிருப்போம். கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.கூட்டத்தில் ஒருவர் திணறினால் ஒருவரை பேசவிட்டு மற்றவர்கள் அமைதியாக இருப்பது ஒரு பண்பாடு.மொத்தமாய் ஆலோசனை வழங்கினால் பதட்டமானவன் இன்னும் பதட்டமே ஆவான்.
ராஜேஷ் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.அதை சகஜமாக எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு ரொம்ப டிஸ்டர்ப் ஆகியது. ப்ரியமுடன் துரோகியிடம் புலம்பிக் கொண்டிருந்தேன்.” என்னப் பாஸ் இப்படியெல்லாம் கூட இருக்காங்க. அவருக்கு ஹர்ட்டா இருக்காதா” என்று புலம்பினேன்.
எனக்கு பல நேரங்களில் இந்த சமுதாயம், சமுதாயத்தின் பொதுமனிதர்கள் அனைவரையும் செவுளில் அறைய வேண்டும் போல் இருக்கும்.அதிலும் இது போன்ற ”காட்டுவாந்தி கோஷ்டிகளை” பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி முகத்தை அழுந்தி முக்கி முக்கி எடுக்க வேண்டுமென்ற கோபம் வரும்.
அதையெல்லாம் பொதுவில் வெளிப்படுத்த முடியாமல் நான் அமர்ந்திருக்கும் சேரின் கைப்பிடியை முடிந்த மட்டும் அழுத்தமாகப் பிடித்துக் கொள்வேன்.
இதுபோன்ற So called சமுதாயத்தில்தான் நான் மிச்ச சொச்ச காலமும் வாழ்ந்து மறையவேண்டுமா என்ற சலிப்பும் துக்கமும் அப்போது எனக்கு வரும்.

No comments:

Post a Comment