ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளுங்கள் என்றொரு புத்தகத்தில் ஏதேட்சையாக படித்த குட்டிக் கதையைப் (கண்காட்சியில் படித்தேன்) பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.
கதை வருமாறு
குடியானவன் ஒருவன் உழைத்துக் கொண்டே இருப்பான்.விவசாயம் செய்வது, தூங்குவது இரண்டும் தவிர எதுவும் தெரியாமல் இருந்தான்.
ஒருநாள் வண்ணத்துப்பூச்சிகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் அழகான இளம்பெண்ணை பார்க்கிறான்.அவள் அழகில் மயங்கி,அவள் சம்மதம் பெற்று,அவளை திருமணம் செய்து கொள்கிறான்.
அன்போடும் முத்தங்களோடும் அவர்கள் வாழ்க்கை இனிப்புப் பண்டமாய் இனிக்கிறது.அவன் தன் தொழிலான விவசாயத்தை மறந்து வீட்டிலேயே மனைவியின் திருந்திய அழகான முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.அதை பார்க்க பார்க்க ஆர்வம் அதிகமாகிறதன்றி சலிக்கவில்லை.
கணவனின் இந்தப் போக்கை மாற்ற மனைவி, தன் முகத்தை அழகிய ஒவியமாக வரைந்து கொள்கிறாள்.அதை கணவனிடம் கொடுத்து “போய் நிலத்தில் வேலை செய்யுங்கள் என் முகத்தை பார்க்க வேண்டுமென்று தோன்றினால் இந்த ஒவியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல கணவன் அந்த ஒவியத்தை எடுத்துக் கொண்டு போகிறான்.
மறுபடியும் கடுமையாக உழைக்க ஆரம்பிக்கிறான்.ஒவியத்தை மறந்து விடுகிறான்.
ஒவியம் காற்றில் பறந்து விடுகிறது.தூரமாக போய்க்கொண்டிருக்கிறது.அந்த ஊரின் அதிகாரமிக்க செல்வந்தன் கையில் கிடைக்கிறது.அவனுடைய பணத்தால் அதிகாரத்தால் யாரையும் அடிமை செய்யும் நம்பிக்கை உடையவன். இந்த அழகான ஒவியத்தைப் மயங்கி ”உடனே அந்தப் பெண்ணை கொண்டுவாருங்கள்” என்று சொல்கிறான்.
அவன் வேலைக்காரர்கள் பெண் வீட்டுக்கு சென்று விஷயத்தை சொல்கிறார்கள்.மறுத்தாலும் தூக்கிப் போகப் போவதாக சொல்கிறார்கள்.வாடிய முகத்தோடு செல்கிறாள்.போகும் போது கொஞ்சம் “பீச்” பழவிதைகளை விட்டுச் செல்கிறாள்.
வீடு திரும்பிய குடியானவன், மனைவியை காணாது திகைக்கிறான்.அழுகிறான்.உண்ணாமல் கதறுகிறான்.
மனைவி விட்டுச் சென்ற பீச் பழ விதைகளைப் பார்க்கிறான்.அதை முளைக்கப் போடுகிறான்.உரம் போட்டு,மருந்து அடித்து கவனமாக வளர்க்கிறான்.
பீச் பழங்கள் விளைகின்றன.அதை எடுத்து வேண்டிய மட்டும் ருசிக்கிறான்.இன்னும் நிறைய மிஞ்சுகிறது.அதை விற்கலாம் என்று கூடையில் எடுத்துச் சென்று விற்கிறான்.
தெருத்தெருவாய் போகும் போது அதிகாரமிக்க பணக்காரன் வீட்டின் முன்னாலும் நின்று கூவுகிறான்.
அங்கே சிறையில் இருக்கும் மனைவி கணவனின் குரல் கேட்டு மகிழ்ச்சியுடன் வெளியே ஒடிவருகிறாள். அவனை உள்ளே அழைத்துச் செல்கிறாள்.
அதிகாரமிக்க பணக்காரன் பீச் பழங்களை வாங்குகிறான்.
பீச் பழங்கள் விற்கும் குடியானவனிடம் சொல்கிறான் “நான் இவளை கவர்ந்து வந்து பட்டு உடை கொடுத்தேன்.அப்போதும் சோகமாயிருந்தாள்.தங்கம் கொடுத்தேன்.அப்போதும் இறுக்கம்.நல்ல சுவையான உணவு கொடுத்தேன்.அப்போதும் இறுக்கம்.சிரிப்பாளில்லை.பஞ்சு மெத்தையும் வாசனையும் கொடுத்தேன். சிரிக்கவில்லை.ஆனால் பீச் பழங்கள் விற்பவனே ! இன்று உன் குரல் கேட்டு சிரிக்கிறாள். பெண்ணின் உடலை கைகொண்ட அளவுக்கு மனதை கைக்கொள்ளத் தெரியாத அறியாமைக்காரனாக இருந்திருக்கிறேன். நீ எப்படி இந்த அழகிய பெண்ணின் மனதை ஈர்த்தாய்”
குடியானவன் சொன்னான் “ நான் பீச் பழங்கள் விற்றேன்”
“என்ன”
“நான் பீச் பழங்கள் விற்றேன்”
“நானும் பீச் பழங்கள் விற்றால் அன்பான மனிதாக மாறிவிடுவேனா? உன்னைப் பார்த்து இவள் சிரித்தது மாதிரி,என் அன்பையும் பார்த்து வேறு ஒரு பெண் மகிழ்ச்சியோடு சிரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது அல்லவா?
“இருக்கிறது”
“நானும் பீச் பழங்கள் விற்கட்டுமா? உன் பீச் பழங்களையும் கூடையையும் எனக்குக் கொடுக்கிறாயா?
“சரி” என்றான் குடியானவன்.
அதிகாரப் பணக்காரன் பீச் பழங்கள் நிரம்பிய கூடையை எடுத்துச் சென்று கூவி விற்க ஆரம்பித்தான்.
மாளிகையை விட்டுச் சென்றதும், ”அதிகாரமிக்க பணக்காரன்” சாதரண மனிதனாக மாறினான்.
குடியானவன் அந்த மாளிகையின் செல்வங்களை,தன் காதல் மனைவியோடு மகிழ்ச்சியாக அனுபவித்து வாழத்தொடங்கினான்.
No comments:
Post a Comment