காய்ச்சலோடு ஜலதோசத்தோடு புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்தேன்.
இன்று விலைப்பட்டியல் வாங்கும் நாள் என்பதால் வேண்டுமென்றே அதிகப் பணம் கொண்டு செல்லவில்லை.
வழக்கம் போல நிறைய பதிப்பகங்களில் வழக்கம் போல விலைப்பட்டியல் இல்லை.
காரணம் கேட்டேன்.”அது இன்னைக்கு புஸ்தகம் அடுக்குறது அது இதுன்னு பிஸியா இருப்போம்.அதான் விலைப்பட்டியல் கட்ட பிரிக்க நேரம் இருக்காது” என்றார்கள்.நானும் “ஆமா ஆமா அது சரி” என்று சொல்லி வைத்தேன்.
தற்செயலாக நியூ செஞ்வரி புக் ஹவுஸ் அம்பேத்கர் புத்தகங்களுக்கென்றே வைத்திருக்கும் ஸ்டாலைப் பார்த்தேன்.
கிட்டத்தட்ட 23 மூன்று புத்தகங்கள் செட்டாக கிடைத்தன. 37 புத்தகங்களில் ஏற்கனவே 3 வாங்கிவிட்டேன்.
இப்போது இந்த 23 யையும் வாங்கலாம் என்று நினைத்து கணகிட்டால் 1100 ருபாய் சில்லறை வந்தது.என்னிடம் இருப்பது 900 ரூபாய் சொச்சம்.
100 ரூபாய் சில்லறை ஆட்டோவுக்கு என்று வைத்தாலும் 800 ரூபாய்தான் இருந்தது.கார்டு கொடுக்கலாம் என்றாலும் இன்று அந்த வசதியில்லையாம்.
என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தேன்.இரண்டு நிமிடத்தில் திரும்பிப் பார்த்தால் நம்ம பரிசல் சிவ செந்தில்நாதன் தற்செயலாக வந்தார்.
அவர் உடனே “நம்ம ஸ்டால் நம்பர் 460 அங்க இனியன் இருப்பாரு அவருகிட்ட 500 வாங்கிங்க” என்று பாலை வார்த்தார்.இரண்டு பெரிய கட்டுகள்.அதில் ஒரு கட்டைப் பிரித்து என் தோள்பையில் போட்டேன்.
அந்தப் பை கமலி பன்னீர்செல்வம் எனக்கு பரிசாகக் கொடுத்தது.
பை கொள்ளவில்லை.புத்தகங்களை இறுக்கி அடைத்து,கடையில் இருக்கும் இன்னொரு நபர் இன்னொரு புத்தகக்கட்டை பரிசல் ஸ்டால் வரை தூக்கிக் கொண்டு வந்தார்.
அங்கே இனியன் நின்றிருந்தார் பணம் கொடுத்தார்.அந்த இரண்டுக் கட்டுக்களையும் வைத்துக் கொண்டு எப்படி புத்தகக் கண்காட்சி வாசல் வரை போவது என்று யோசித்தேன்.
தூக்கினால் செம வெயிட்டு. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று அங்கே பாரவி கடையில் பேசிக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன்.
”தளம்” பாரவியைப் பார்க்க ஒரு ராயல் லுக் இருக்கும். அந்த லுக்கை ரசிப்பேன்.ஆனால் அவரிடம் பேசியதில்லை
அப்படியே இந்தப் பக்கம் திரும்பினால் துறையூர் சரவணன் நின்று கொண்டிருந்தார்.
“ஆஹா தல” என்றேன்.
அப்புறம் இருவரும் பேசிக்கொண்டோம்.
என் பிரச்சனையை நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டார். வெளியே வந்து காபி குடித்தோம்.
நான் பையை சுமக்க.இன்னொரு கட்டை சரவணன் சுமந்து கண்காட்சி வாசல்வரை வந்து ஆட்டோ ஏற்றி விட்டார்.
பரிசல் செந்தில்நாதன், துறையூர் சரவணன் இருவருமே எனக்கு பிடித்தவர்கள்.வெவ்வேறு விதமாய் எனக்கு திருப்புமுனையாக இருந்தவர்கள்.
அந்த இருவரின் உதவி தற்செயலாக கிடைத்த நெகிழ்ச்சியோடு என் ”முதல்நாள்” புத்தகக் கண்காட்சி தொடங்கியது
No comments:
Post a Comment