Monday 26 January 2015

சிறுநீர்...

பொதுவாக எனக்கு பலர் முன் சிறுநீர் கழிக்க கூச்சமாயிருக்கும்.
பக்கத்தில் ஒருவர் நின்று கழித்துக் கொண்டிருக்கும்போது என் இடம் மறைவாக இருக்கவேண்டும்.
ஆண்கள் மறைவு இல்லாமல் வரிசையாக நின்று அடிப்பார்கள்.அப்படி மறைவு இல்லாமல் இருந்தால் சிறுநீர் வராது.
அது மாதிரி நம் இந்திய மக்கள்,தியேட்டரில் ஒரு ஜான் மட்டும் இடைவெளிவிட்டு பின்னால் நிற்பார்கள் .அப்போதும் வராது.
நாகர்கோவில் எஸ்.எல்.பி ஸ்கூல் படிக்கும் போது அங்கே டாய்லட் கட்டிடம் என்பது ஒரு காம்பவுண்ட் மட்டும்தான்.அந்த சதுர காம்பவுண்டில் சிறுநீர் போக குழியாக வெட்டி பூசி விட்டிருப்பார்கள்.
வரிசையாக பையன்கள் அதில் நின்று அடிப்பார்கள்.(அப்படி அடிக்கும் போது இவன் நீர் அவன் காலிலும் அவன் நீர் இவன் காலிலும் தெறிக்கும்)
நான் ஒன்றிரண்டுமுறை அந்த வரிசையில் நின்று அடிக்க முயற்சி செய்திருக்கிறேன்.ஆனால் ஏதோ பதட்டத்தில் வராது.
வரவில்லையே என்ற பதட்டத்தில் இன்னும் வராது.
வரவில்லையே என்ற பதட்டத்தை மற்றவன்கள் பார்க்கிறான்களோ என்ற பதட்டத்தில் இன்னும் வராது.முடிவில் கவலையும் முட்டும் சிறுநீரும் மட்டுமே எஞ்சும்.
ஆனால் எனக்கும் ஒரு வழியைக் கடவுள் கொடுத்தார்.
அதே காம்பவுண்டில் ஒரு லெட்ரின் இருக்கும்.அது பாழடைந்த லெட்ரின்.உள்ளே அசிங்கமாயிருக்கும்.ஆனால் உலர்ந்திருக்கும்.கதவுகள் கிடையாது.
நான் அதன் வாசலில் நின்று ஒண்ணுக்கடிப்பேன்.பள்ளி படிப்பை முடிக்கும் வரைக்கும் அந்த லெட்ரின் உதவி செய்ததை மறக்கவே முடியாது.
சில சமயம் காரில் குடும்பமாக வெளியூர் செல்வோம்.அங்கு ஒண்ணுக்கடிக்க வேண்டியதிருந்தால் காரை நிறுத்தி ஆண்கள் அனைவரும் காமா சோமாவென்று போவார்கள்.
என்னால் அது முடியாது. நான் அப்படியே வேகமாக நடந்து முள்காட்டுக்குள் ரொம்ப ரிஸ்கான இடத்துக்குச் செல்வேன்.யாரும் என்னைப் பார்க்கக் கூடாது.பார்க்கவில்லை என்று தெரிந்தால் மட்டுமே ஒண்ணுக்கடிப்பேன்.
பஸ் மோட்டலில் நிற்கும் போது வரிசையாக சிறுநீர் கழிக்கும் போதும் இதேப் பிரச்சனைதான்.இருட்டாயிருந்தாலும் கூட கூச்சமாயிருக்கும்.திணறுவேன்.
ஒருமுறை மோட்டல் வெளியே நானும் அப்பாவும் சிறுநீர் கழித்து வரும் போது அப்பாவிடம் இது பற்றி டிஸ்கஸ் செய்து வந்தேன்.
நான் சொல்வதை கவனமாக கேட்டவர் “அப்படியா ஒருவயசுல அப்படி இருக்கும். கல்யாணம் ஆனா அந்தக் கூச்சம் சரியாப்போயிரும்” என்றார்.
அப்பா சீரியஸாக சொன்னாரா அல்லது காமெடியா சொன்னாரா என்று தெரியவில்லை, உண்மையில் கல்யாணம் ஆன பிறகு இந்த சிறுநீர் கூச்சம் வெகுவாக குறைந்திருந்தது.
பொது இடத்தில் ஒண்ணுக்கு வர ஐந்து நிமிடம் ஆனாலும், பின்னால் ஆள் இருந்தாலும் “என்ன இப்போ” என்று அலெட்சியமாக இருக்க முடிந்தது.
ஒருவேளை இது மாதிரி கூச்சப் பிரச்சனை எதாவது இளைஞர்களுக்கு இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
ஒருமுறை கிண்டி தொழிற்பேட்டை பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்தேன்(திருமணத்துக்கு முன்) .அவசரமான உணர்வு முட்டிற்று. சும்மா ரோட்டிலும் அடிக்க முடியாது.
போய் கட்டணக் கழிப்பறையில் கேட்டேன்.வாசலில் ஒரு பெண் நின்றிருந்தார்.உள்ளே சுத்தம் செய்கிறார்கள் பதினைந்து நிமிடம் ஆகும் என்றார்.
நான் ”எனக்கு அவசரம் இப்படி சொல்லிவிட்டீர்களே” என்றேன்.என் கணகளின் தவிப்பைப் பார்த்த அவர், பெண்களின் கழிப்பறை ஒன்றை திறந்து விடுவதாக சொல்லி கொத்துச் சாவியை(?) எடுத்தார்.
நான் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தேன்.அதற்கு அவர் சத்தமாக என்னைத் திருத்தி அட்வைஸ் செய்தார்.
சத்தம என்றால் அதிக சத்தம்.
இந்த மணல்கயிறு படத்தில் ”தெரு பார்க்க” , எஸ்.வி சேகர் “மாப்ள மாப்ள்” என்று கத்துவாரே அதுமாதிரி,
அந்தப் பெண் “கூச்சப்படாத தம்பி” என்று கத்தினார்.
பலர் என்னைத் திரும்பிப் பார்த்த உணர்வு. வேலையை முடித்து வெளியே வந்தேன்.
பஸ்ஸில் ஏறி கொளத்தூர் வர வர ஏதோ ஒரு அவமானமாக இருந்தது.
சுந்தரராமசாமிதான் (?) சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
”சுதந்திரம் அடைந்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது.இந்தியனுக்கு இன்னும் மானமாக ஒண்ணுக்கு போக வழியில்லை”

No comments:

Post a Comment