நேற்றைய புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் இமையம் சிற்றரங்கத்தில் பேசியதின் சுருக்கம் வருமாறு :
சமுதாயத்தை பிரதிபலிப்பவர்கள் எழுத்தாளர்கள்தாம் என்பதை நம்புகிறேன்.
திருவள்ளுவர்,கம்பர்,தொல்காப்பியர் என்ற எழுத்தாளர்களைத்தான் தமிழ் சமூகத்தின் அடையாளமாக சொல்கிறோம்.
சமுதாயத்தை அடையாளப்படுத்தும் பணியை செய்பவர்கள் ஆதலால் அவர்களுக்கு மற்றவர்களை விட கூடுதல் பொறுப்பு உண்டு என்பதை உணர்ந்து எழுத வேண்டும்.
ஆனால் கடந்த பத்து வருடங்களாக பலர் சொற்களை விரையம் செய்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது. நான் யாரையும் குறை சொல்லவரவில்லை.சொல்வதன் நோக்கம் திறன் மேம்படுத்துதல் பற்றிய அக்கறைதான்.
நூறு ரூபாய் கையில் கிடைத்தால் அதை வீணாக செலவழிப்பீர்களா? மாட்டீர்கள் அல்லவா?
அப்படித்தான் சொற்களையும் வீணாக்குதல் கூடாது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். ஆயிரக்கணக்கான வார்த்தைகளை சிந்தி சிதறடிக்கிறோம். ஃபேஸ்புக்கில் லைக்ஸ் அதிகம் கிடைக்கும் கிளுகிளுப்பில் இருந்து எழுத்தாளன் விடுபட வேண்டும்.
தேவையில்லாமல் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை கொட்டி இறைக்கும் போது அவர்களிடமிருந்த சொற்கள் தீர்ந்து போகின்றன. பின் எதை வைத்து அவன் இலக்கியம் படைப்பான்.
நல்ல சரியான வாக்கியம் அமைத்தல் பற்றி கூட தெளிவில்லாமல் பலர் இருக்கின்றனர்.”மொழியை வளப்படுத்துவதன் இலக்கியம்” என்ற முக்கியமான கோட்பாட்டுக்கு எதிரானது இது.
இதற்கு உழைப்பும் அக்கறையும் கவனமும் வேண்டும்.சொல்லை ரசிக்க வேண்டும். வாக்கியத்தை ரசிக்க வேண்டும்.
என் ஆசிரியர் எனக்குச் சொன்ன கதையை சொல்கிறேன். ஆண்டன் செகாவ் கதை எழுதி பதிப்பாளரிடம் கொடுத்தாராம்.
பதிப்பாளர் வெளியிடாமல் ”திரும்ப எழுதி வா” என்றாராம்.
செகாவ் எழுதி வர மறுபடியும் ”திரும்ப எழுதி வா” என்றாராம்.
இப்படி ஏழு தடவை நடந்து எட்டாவது முறை எழுதி வரும் போது செகாவ் பதிப்பாளரிடம் இப்படி சொன்னாராம் “ ஐயா இனிமேல் இந்தக் கதையில் எழுத எதுவுமில்லை.இதற்கு மேல் திருத்தி எழுத முடியாது” என்று சொல்ல, ”அப்படியானால் நிச்சயம் இது நல்ல கதைதான்.வெளியிடுகிறேன்” என்றாராம்.
இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்.அவசரப்படாதீர்கள். இன்றே எழுதி இன்றே பாரட்டப்பட வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
எப்போது மில்லாத அளவு இப்போதைய காலகட்டத்தில் இலக்கியத்தில் வெற்றுப் புகழ்ச்சி அதிகமாக இருக்கிறது.
பரஸ்பரம் சொறிந்து கொடுத்தால் மட்டுமெ இலக்கியத்தில் அடையாளத்தை அடைய முடியும் என்பதை நம்பாதீர்கள்.
இலக்கியம் என்பதே விமர்சிக்கும், சல்லடை போட்டு அலசும் தன்மையில்தான் இருக்கிறது.
இன்றே எழுதி, அதை ஒரு பதிப்பாளர் புத்தகமாக போட வேண்டும். புத்தகம் போட சம்மதித்தவர்கள் நல்லவரகள். நான் அவர்கள் அணி.சம்மதிக்காதவர்கள்,என் படைப்பை புகழாதவர்கள் என் எதிர் அணி போன்ற சக்கரத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
அவையெல்லாம் பிற்காலத்தில் நிலைப்பது கடினம்.
நினைவில் கொள்ளுங்கள் !
ஒரு வாக்கியத்தை எழுதி கூட இரண்டாயிரம் வருடம் ஒருவன் நிலைத்து இருக்கிறான். பேசப்பட்டுக் கொண்டிருக்கிறான்.அந்த வாக்கியம்
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
மவுனி,லா.ச.ரா,நகுலன் போன்றவர்கள் தமிழ் இலக்கணத்தை மீறி படைப்பை ஏற்றினாரகளே என்பதை நாம் செய்யும் வாக்கிய இலக்கிய தவறுகளுக்காக சமாதானப்படுத்தும் உதாரணமாக கொடுக்கக் கூடாது.
அவர்கள் தங்கள் படைப்பை மிகுந்த அக்கறையோடு செதுக்கி கொடுத்தாரக்ள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி
நன்றி. நல்ல பதிவு.
ReplyDelete