Sunday, 16 September 2012

கதை போல ஒன்று - 50

தூத்துகுடி சண்முகபுரம் ஏரியா பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க.

அந்த ஜங்சன்ல அன்னைக்கு டியூட்டிக்கு எதாவது ஒரு போலீஸ் காண்ஸ்டபிள் இருப்பார்.

அவரோட வேலை அங்க எதாவது கொலை, அடிதடி, ரத்த பீறிடல் நடந்தால் ஒடி போய் ஸ்டேசனில் இருந்து ஆள் கூட்டி வர்றதுத
ான்.( அப்ப மொபைல் இல்ல சார்/மேடம்).

ஜாதி சண்டை, மதச்சண்டை, பீடிக்கு சண்டை, குடும்ப சண்டைன்னு சண்டை,வெட்டு, குத்து மேல் பேக்ஷன் உள்ள ஏரியா.

சாக்கடை எப்போதும் தெருவில் தேங்கி நிற்கும்.

ஆண்களே அந்த ஏரியாவ பார்த்து பயப்படும் அங்க, தைரியமா கவுன்சிலரா போட்டி போட்டு ஜெயிச்சாங்க சண்முகக்கனி என்ற சண்முகக்கனி அம்மா.

வயசு அம்பது ஆறு.

ரெண்டு பசங்க.ஒருத்தர் ஸ்பிக்ல ஆபிஸர்.இன்னொருத்தர் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி ல எம். டெக் கெமிக்கல் டெக்னாலஜி படிச்சிட்டு பி.ஹச்.டி முடிச்சிட்டு பெங்களூர்ல வேலை பார்க்குறாரு.

சண்முகக்கனி அம்மாவின் கணவர் மத்தியதர ஜவுளிகடை முதலாளி.

சண்முகக்கனி அம்மா எல்லார் வீட்டிலும் நல்லா பழகுவார்.

சடங்கு,கல்யாண வீடு. துக்க வீடு, வளைகாப்பு, சின்ன சின்ன மத்தியஸ்த்தம் பண்றதுன்ன்னு இருப்பாங்க.

ஏரியா ரவுடி ”ஆட்டோ விஜயன்” ஜங்சன்ல, குடிச்சிட்டு சண்முககனி அம்மாவோட வீட்ல வேலை செய்ற செல்வமணி அக்காவோட புருசன அடிச்சிட்டு இருக்கும் போதுதான் அது நடந்தது.

ஆட்டோ விஜயன் கன்னத்துல ஒங்கி அடிச்ச சண்முகக்கனிஅம்மா, அவன் இடுப்பில் மிதித்து, பக்கத்தில் இருந்த செங்கலை எடுத்து நெஞ்சில் வீச “ஆட்டோ விஜயன்” பல நாட்கள் மருத்துவம் பார்த்து அடங்கிவிட்டான்.

ஒரே நாளில் சண்முகக்கனி அம்மா பெரிய ஆள் ஆகிவிட்டார்.

பல பேர் வற்புறுத்தலால் கவுன்சிலரும் ஆகி கம்பீரமாய் இருப்பார்.

” ஏல அவன் என்னல சவுண்டு போட்டுகிட்டு சலம்புதான்” என்று குரல் உயர்த்தினால் பயலுகள் நடுங்குவான்கள்.

வீட்டு வாசலில் இருந்து பத்திரிக்கை படித்து கொண்டிருப்பார்.

வெங்காயம் உரிப்பது, காய்கறிவெட்டுவது போன்றவற்றை அரிதாய் பார்க்கலாம்.

கொஞ்சம் கொஞ்சமாய் சண்முகக்கனி அம்மா பற்றின அவதார கதைகள் ஏரியாவை நிரப்பி ”தொழும் ஸ்தானத்துக்கு” உயர்ந்து விட்டார்.

பெங்களூரில் இருக்கு சண்முகக்கனி அம்மாவின் இரண்டாவது பையன் கொஞ்ச நாள் வேலைக்கு போகாமல் தூத்துகுடியிலேயே இருப்பது பற்றி சண்முகபுரம்வாசிகளுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை என்றாலும், பின்னர் விசயம் வெளியே வந்தது.

“பெங்களூரு தம்பிக்கு கொடல் அரிச்சிட்டாம்லா”

“ஆமா அவரு கெமிக்கல் என்ஜினயர்தானே. அதுலேயே பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காராம்ல. அந்த கெமிக்கல்தான் தம்பி கொடல அரிச்சிட்டாம்லா. ஏ.எம் ஹாஸ்பிட்டலுக்குதான் போறாராம்ல. ஆனா சண்முககனி அம்மா சாதாரண்மாத்தான பிள்ள இருக்காவ”

பெங்களூரு இரண்டாவது மகனுக்கு நோய் இருக்கிறது என்று எல்லோருக்கு தெரிந்தாலும், யாரும் அதுபற்றி சண்முககனி அம்மாவிடம் கேட்கவில்லை.

திடீரென்று எல்லோரும் சென்னைக்கு போய்வந்தார்கள்.

வந்ததும் பெங்களூரு பையன் கொஞ்சம் தெம்பானது மாதிரி இருந்தார்.

திருச்செஞ்தூர் முருகனுக்கு தங்கத்தேர் இழுத்து வந்தார்கள்.

அதிலிருந்து நான்காம் நாள் திடீரென்று 'பெங்களூரு பையன்' நடுஇரவில் ரத்தமாய் வாந்தியடுத்து செத்து போனார் தன் மனைவி குழந்தைகளை விட்டு, பாசத்துகுரிய சண்முகக்கனிஅம்மாவை விட்டு.

சண்முகபுரம் ஏரியாவே துக்கித்து. அழுதது.

சண்முகக்கனி பெரிதாய் அழுது புரளவில்லை.

அலட்டாமல் கண்ணீர்விட்டார்.

மூத்த பையனுக்கு கூட அம்மா மேல் எரிச்சல் வந்து “எங்கம்மாவுக்கு உணர்ச்சியேயில்ல. அவுங்க கம்பீரம்தான் முக்கியம்ன்னு” பேச ஆரம்பித்துவிட்டார்.

அடக்கம் முடிந்த அன்னைகே “அவன் விதி போய்ட்டான் “ என்று சொன்ன சண்முககனி அம்மாவை பார்த்து மனுக்ஷியா இவுங்க என்று சிலர் சொல்ல, பலர் கம்பீரம் கம்பீரம் என்று சிலிர்த்தார்கள்.

துக்கம் மூன்றே நாளில் சகஜமாகி விட்டது சண்முகபுரத்தில்.

அந்த சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு அளவில் சண்முககனி அம்மா வீட்டில் இருந்து உச்சமான அலறல் கேட்டது.

தெருவில் சிலர் வீட்டிற்குள் போய் பார்த்தால், அவர் வீட்டில் மட்டும் கரண்ட் இல்லை.

சண்முகக்கனி அம்மா கிழே நிற்க படிக்கட்டு மேல் ஏறி சுவற்றில் உள்ள கரண்ட் ஃபீஸ்கேரியரை கையில் வைத்தபடி அவரின் மூத்த மகன் உறைந்து நிற்கிறார்.

“யய்யா அத மட்டும் உள்ள போடாத”

“யம்மா கரண்ட் போயிடுச்சும்மா.ஃபீஸ் வயர் எரிஞ்சி போய்ட்டு. கழத்தி புது வயரு போட்டா கரண்ட் வந்துரும்மா” என்று சொருக போனார்.

“எல நாயே அந்த கரண்டு வயரா சொருகாதல. என் மேல சத்தியம் சொருகாத. நீ செத்துருவப்பா. என்ன விட்டு போய்ருவ” என்று சண்முககனி அம்மா தன் இரண்டு கையாலும் நெஞ்சில் அடித்து அடித்து அழுதார்.

தலைமுடியை ஆய்ந்து கலைத்து போட்டார்.

வாயில் அடித்தார்.

ஏங்கி ஏங்கி அழுதார். மூத்த பையனை கையெடுத்து கும்பிட்டார்.

“யய்யா கீழ இறங்கி வந்துருய்யா. நீ மட்டும்தான் எனக்கிருக்க. நீயும் அம்மா விட்டுட்டு போய்ராதப்பா.

சாமி உன் கால்ல வுழுரேன். ஃபீஸ் போடாத என்று மருகினார்.

அவர் ஆவேசம் முன் எதுவும் செய்ய முடியவில்லை.

கண நேரத்துல் ஃபீஸ் கேரியரை சொருகி விடலாம்தான்.

ஆனால் அந்த கணநேர அதிர்ச்சியில் சண்முகக்கனி அம்மா செத்துவிடும் பயத்தில் இருந்தார்.

தெருக்காரர் எடுத்து சொல்ல சொல்ல அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சொன்னதையே சொல்லி தரையில் உருண்டு அழுதார்.

யாருமே எதுவுமே சொல்ல முடியவில்லை. ஃபீஸ் கேரியரை சொருகாமலே வீடு இருட்டாய் இருந்தது.

சண்முகக்கனி அம்மா அழுது அழுது இரவு ரெண்டு மணியளவில் தூங்கிய பிறகு, அந்த வீட்டில் கரண்ட் வரவழைக்கபட்டது.

தெரு அதிர்ச்சியை உள்வாங்கி அமைதியாய் தூங்கிகொண்டிருந்தது.

No comments:

Post a Comment