Thursday, 6 September 2012

கதை போல ஒன்று - 45


ரெட்டேரி எவ்வளவு?

ஆட்டோகாரர் அமைதியாய் இருந்தார். சரியான கொழுப்பெடுத்தவன் என்று நினைத்து கொண்டேன் அந்த க்ஷேர் ஆட்டோ டிரைவரை  பார்த்து.

வேறு வழியில்லை.

இரவு ஏழு மணிக்கு எல்லா ஆட்டோக்களிலும் கூட்டம். மழை வேறு சிலு சிலு என்று தொடர்ச்சியாக நிதானமாக காட்டி கொண்டிருந்தது. ஏறி உட்கார்ந்தேன்.

பெண்கள் அதிகமாய் ஏற,என்னை முன்னுக்கு அழைத்து தன் பக்கத்தில் வைத்து கொண்டார்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆட்டோவை வாசிம் அக்ரம் பவுலிங் போல ஸ்விங் செய்து ஒட்டி கொண்டிருந்தார்.

பயமாயிருந்தது. பயமாயிருந்தால் பயமாயிருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்கிற என் கொள்கைபடி , அவரிடம் நிதானமாக சொன்னேன்.

“அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் அண்ணா. நீங்க ஒட்டுறத பார்த்தா பயமா இருக்கு” என்றேன்.

இறுக்கம் தளர்ந்து சிரித்தவர் அதே ஆட்டோகாரர்தான்.

நாம்தான் கற்பனை செய்து விடுகிறோம். இவர் சிடு சிடுப்பானவர். இவர் கோபக்காரர் என்று. பக்கத்தில் போய் பார்த்தால் உண்டு கழித்து உறங்கி எழும் சாத்ரணம்தான் எல்லோரும் என்று நினைத்தேன்.

“சரி தம்பி மெல்ல ஒட்டுறேன். பதினைஞ்சு இருபது வருசமா ஒட்டுறனா. அதான்”

”நீங்க படிக்கலையா” என்றேன்.

“பிளஸ் டூ படித்திருக்கிறேன்” என்றார்.

’புடுங்கி பிளஸ் டூ படிச்சிட்டு என்னடா பெரிய இவனாட்டம் பிளஸ் டூ படித்திருக்கிறேன் என்று பெருமைவேறு’ என்று ஒரு சாத்தான் என் மனதில் கூவினான். சாத்தானை சிறிது ரசித்து பின் கஸ்டபட்டு கொன்றுவிட்டு

“நீங்க இருக்கிறது சொந்த வீடா வாடகை வீடா “என்றேன்.

”வாடகைதாம்பா. இப்ப என் அப்பா வேற என் கூட இருக்கிறாரா வீட்ல ஒரே எட வசதியே இல்லை. அண்ணன்ங்க எல்லாம் வசதியா இருக்கிறான்கள் ஆனா அப்பாவ வெச்சி பாக்க இண்டிரஸ்ட் இல்ல. நான்தான் கோவத்துல அப்பாவ என் கூட வைச்சிகிட்டேன். அவருக்கு நெஞ்சு வலி வயித்த வலி வேற அப்பப்ப வரும்”

ஆட்டோ திருமங்கலத்தை தாண்டி அண்ணாநகர் டிப்போவைதாண்டி போகும் போது லூகாஸ் சிக்னலில் பெரிய வாகன நெரிசல்.

பொதுவாக ,பாலம் கட்டுவதற்கு முன்னர் லூகாஸ் சிக்னலில் ஒரு வண்டி சராசரியாக பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும்.

அவ்வளவு நெருக்கடியான் ஜங்சன் அது.

அன்று ,கல்யாணமே செய்யாமல் ஒடுக்கபட்ட மக்களுக்கு சேவை செய்து அந்தஸ்தையும் அதிகாரத்தையும் கைப்பற்றிய இனத்தலைவர் தன் கட்சி தொண்டர் கல்யாணத்துக்கு வருகிறாராம்.

அதனால் அப்படி ஒரு நெருக்கடி.

வாகன கூட்டம் அண்ணாநகர் வரை நீண்டது.ஆட்டோகாரரும் நானும் பேசிகொண்டிருக்கையில்,  ஆம்புலன்ஸ் ஒன்று பக்கத்தில் பிரேக் அடித்து நின்றது.

’ஆம்புலன்ஸ் டிரைவர்’ மூச்சிரைத்தபடியே ”அண்ணா லூகாஸ் சிக்னலில் ரொம்ப நேரம் நிக்கனுமா. வேற வழியே இல்லையா நான் கொளத்தூர் போகனும்” என்றார்.

ஆட்டோடிரைவர் பரபரப்பாகிவிட்டார்.

”இருக்கு தம்பி இந்த லெஃப்ட் எடுத்து மறுபடி ரைட் திரும்பினால் பிரேக்ஸ் இந்தியா முன்னால வந்து அப்படியே லூகாஸ் சிக்னல கடந்திரலாம்” என்றார்.

ஆம்புலன்ஸ் டிரைவர் அப்பாவிபோலும், ஆட்டோடிரைவர் சொன்னது புரியவில்லை.

“நானே வரேன் என்று ஆட்டோடிரைவர் ஆட்டோவை இடது பக்கம் திருப்பினார். ஆம்புலன்ஸ் பின் தொடர்ந்தது.

ஆட்டோடிரைவர் ”ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ்” என்றார்.”என் அப்பாவ ஒருதடவ ஆம்புலன்ஸ்ல கொண்டுபோயிருக்கேன். எவ்வளவு பயமா இருக்கும் தெரியுமா” என்றார்.

நாங்கள் போன சிறுரோடு,மெயின் ரோட்டில் இணையும் போதுதான் தெரிந்தது அந்த பெரிய வாகனங்களை தடுக்கும் தலைகீழ் “ப” வடிவ இரும்பு சட்டங்கள்.

ஆம்புலன்ஸ் உயரத்துக்கு கண்டிப்பாய் போக முடியாது.

ஆட்டோடிரைவரும் நானும் திகைத்தோம்.

அவசரசத்திற்கு ஆம்புலன்ஸுக்கு உதவி செய்ய போக போய் இப்போது பெரிய தப்பி செய்து விட்டோம் என்ற குற்ற உண்ர்ச்சியில் ஆட்டோ டிரைவர் உளறி குழறி பேசினார்.

ஆம்புலன்ஸ் டிரவைர் இறங்கி பார்த்தான்.

ஆட்டோடிரைவர் சுத்தமாக நிதானம் இழந்தார்.

”ஐயப்பா! தப்பு பண்ணிட்டேனே” என்று புலம்புகிறார். ஆட்டோடிரைவரின் குற்ற உணர்ச்சியின் வீரியம் அதிகாமாய்தான் வெளிப்பட்டது.

ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் பதறவில்லை.

இரும்பு சட்டங்களின் பக்கவாட்டில் இருக்கும் சிறு இடைவளி மூலமாக ஆம்புலன்ஸை ஒட்டி கஸ்டபட்டு வெளியே வந்தார்.

ஆம்புலன்ஸை ஓட்டி சென்றார்.

எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

யெஸ்! யெஸ்! என்று கைகளை நெறித்தேன்.

ஆட்டோடிரைவர்  உணர்ச்சிமிகுதியால் தன் நெஞ்சை ஒங்கி வெறித்தனமாக குத்தி “ இனி தப்பு பண்ணாத “ என்று அவரே அவரை சொல்லி கொண்டார்.

போகும் வழியில் உருக்கமாக பேசி கொண்டே போனோம்.

சட்டென்று தோண்றியது.

“அண்ணா. அந்த ஆம்புலன்ஸில சிகப்பு விளக்கே எரியலையே. அது அவசரத்துக்குதான் போகுதுன்னு நமக்கு எப்படி தெரியும். யோசிச்சு பார்த்தா டிரைவர் கூட சாதரணமாகத்தான் இருந்தா மாதிரி இருந்தது. அவர் எங்க பதறினார். நாமத்தான் டென்சனானோம் “ என்றேன்.

எங்கள் பதட்டம் எல்லாம் போய் சிரிக்க ஆரம்பித்தோம்.

”ஆமாப்பா இன்னைக்கு சனிக்கிழமை வேற கண்டிப்பா செந்தில் நகர் டாஸ்மாக் தான் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் போயிருப்பான்.அப்படியே சைடுல பாரு எங்கயாவது நிக்குறானான்னு “என்றார்.

அப்புறம் அவரே ”சரி விடு ! நல்லவனா இருந்துதான ஏமாந்தேன். தப்பில்லை “ என்றார் அந்த ஐயப்பன்.

No comments:

Post a Comment