Thursday 13 September 2012

கதை போல ஒன்று - 48

ஏன் இந்த விசயத்த திரும்ப திரும்ப கேக்குறீங்க?

இல்ல சும்மாத்தான். வேகமா தள்ளி விட்டாங்களா? இல்ல சும்மா லைட்டா நாசுக்காவா? நான் கேட்டேன்.

”முதல்ல கொஞ்சம் வேகமா. அப்புறம் உங்க வீட்டுக்கு போன்னு சொல்லி தள்ளி விட்டாங்க.”

துக்கம் மண்டியது. 

இது என்ன குரங்காட்டம் அலையுது மனசுன்னு எனக்குள்ளே கேள்வி வேறு.

மனைவி சின்ன வயசா இருக்கும் போது டீவி பார்க்க போன இடத்தில், டீவி வைத்திருக்கும் ஆண்டி
வெளியே போ என்று தள்ளி விட்டார்களாம்.

ஆனால் அதை என்னால் சாதரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை.

மனம் கலங்கிற்று.

சுயமரியாதையின் உச்சத்தை எதிர்பார்க்கும் மனைவியின் இப்போதைய நிலையையும், இவளையா அப்படி அவமானபடுத்தபட்டிருக்கிறாள் நினைத்து பார்த்தால் இன்னும் சோகமாக இருந்தது.

கற்பனை செய்து பார்க்கிறேன்.

வெளிர் நீல ஃபிராக் போட்டிருக்கும் எட்டு வயது குழ்ந்தையை, அப்பாவியாய் முகத்தை வைத்திருக்கும் பிள்ளையை, பெண் பிள்ளையை எப்படித்தான் தள்ளி விட்டாரோ அந்த பெண்.

எங்கள் வீட்டில் டீவி எண்பதுகளின் தொடக்கத்தில் வந்தது.

அப்பா ,அம்மாவின் பத்து பவுன் நகையை மீட்க வைத்திருந்த பணத்தில் அடையார் மெர்சி எலக்ட்டிரானிக்ஸில் ஆர்டர் செய்து நாகர்கோவிலுக்கு வரவழைத்தார்.

டீவி இருக்கும் வீடு என்று அந்த ஏரியாவில் அடையாளம் காணப்பட்டோம்.

அதில் எனக்கும் அண்ணனுக்கு கர்வம்.

கொஞ்சம் டீசண்டான பசங்கள் வந்தால் பத்து நிமிடம் பார்க்க அனுமதிப்போம்.

அழுக்கான ஏழையான தமிழ் மீடியம் படிக்கும் பையன்கள் வந்தால் துரத்தி அடிப்போம்.

அப்போது நாகர்கோவிலில் தமிழ் ஒளிபரப்பு சிலோன் ரூபாவாகினியை நம்பித்தான் இருந்தது.

அப்பா இருந்தால் தெரு பசங்களுக்கு கொண்டாட்டம்.

அப்படியே கதவை திறந்து வைத்து விடுவார். திபு திபுவென கூட்டம் உள்ளே நுழையும்.

இந்திராகாந்தி சுடப்பட்டு இறுதி சடங்கில் நிறைய பேர் எங்கெங்குலாமோ வந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள்.

யாரோ தடிமனான ஆள் உட்கார்ந்து பால் போனி நசுங்கி விட்டது என்று இப்போது பாட்டி புலம்புவார்.

வீட்டின் ஜன்ன்ல்களில் சின்ன பசங்கள் ஏறி டீவி பார்ப்பார்கள்.

நானும் அண்ணும் ஸ்கேலால் அவர்கள் கைகளை அடிப்போம்.

அவன்கள் கையை உதறி உதறி கெஞ்சுவான்களே தவிர வீட்டிற்கு போகமாட்டான்கள்.

தெரு முனையில் விட்டு வேலை செய்யும் சரஸ்வதி அக்காவின் மகனை, அப்படி அடித்ததில் அவன் கை மொளி வீங்கி விட்டது.

அவனால் அரைவருட பரிசட்சை எழுத முடியவில்லை.

சரஸ்வதி அக்கா வீட்டிற்கு வந்து அம்மாவிடம் அழுது விட்டு போனார். அம்மா “ நாய்களா, செத்த சனியன்களா! இதுக்கு கண்டிப்பா முருகர் தண்டனை கொடுப்பார்” என்று கத்தினார்.

நானும் அண்ணனும் நமுட்டு சிரிப்போடு அந்த இடத்தை விட்டு போனோம். ஏனென்றால் இருவருமே சாமி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

எக்ஸாம் சமயத்திலோ, கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்க வேண்டுமென்றோதான் சாமி பயலை கும்பிடுவோம்.

அதிலும் இந்த விநாயகர், முருகன் மாதிரி ஸாஃப்ட் சாமிக்ளை விட “நடுக்காட்டு இசக்கியம்மன்” போன்ற பவர்ஃபுல் சாமிகளைத்தான் கும்பிடுவோம்.

அந்த நடுக்காட்டு இசக்கியம்மன் பவரோ அல்லது அம்மாவின் சாபம் கொடுத்த பவரோ தெரியவில்லை. டிவீ பார்த்தல் விசயமாக மன உளைச்சல் அடைந்திருக்கிறேன்.

திரும்ப திரும்ப சிறுமியாய் இருக்கும் என் மனைவியை அந்த பெண் வெளியே தள்ளி கதவை பூட்டியது ஞாபகம் வந்தது.

இரவு தூங்கும் போது அதேதான். மன உளைச்சல் அதிகமாகி எழுந்து உட்கார்ந்தேன்.

ச்சே இது ஒரு பிரச்சனையா?

மனம்,வேறு துக்கம் இல்லை என்று நினைக்கும் போது பரணில் இருந்து ஏதாவது ஒரு துக்கத்தை அசை போடுகிறதோ.

எழுந்து தண்ணீர் குடித்தேன்.

மனைவியை பார்த்தேன்.

நல்ல தூக்கம்.

பக்கத்தில் நெருங்கி அணைத்து கொண்டேன்.

அவள் உடல் சூடு தெரிந்தது. தலைமுடியை தடவி கொடுத்தேன். முத்தம் கொடுத்தேன் நிறைய.

முழித்தாள். ”ஏன் என்னாச்சு” என்றாள்.

என்னால் இன்னைக்கு முடியாது என்றாள்.

”நீ உன்ன வெளிய தள்ளுனாங்க சின்ன வயசுலன்னு சொன்னது எனக்கு ஒருமாதிரி டிஸ்டெர்பண்ஸா இருக்கு” என்றேன்.

“லூஸு” என்று என் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

அந்த வெளிய தள்ளபட்ட சிறுமியை, அவள் துக்கத்தை, அவளின் அவமானத்தை எடுத்து விட வேண்டும் என்ற ஆவேசத்தில் அன்பை எல்லாம் குழைத்து முத்தம் கொடுத்தேன்.

இன்னும் என்னை இறுக்கி கொண்டாள்.

கொஞ்சம் மூச்சு திணறியது.

அந்த திணறலிலும் அண்ணனுக்கு இது மாதிரி எதாவது கஸ்டம் இதுவரை வந்திருக்கிறதா என்று போன் போட்டு கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

No comments:

Post a Comment