Wednesday, 26 September 2012

அம்பேத்காரியமும் மிடில்கிளாஸ் மாதவ மாதவன்களும்...

ஆன்ந்த் பட்வர்த்தன் இயக்கிய ’ஜெய் பீம் தோழர்’ என்கிற ஆவண படத்தை பார்த்தேன்.

இதனை பற்றிய தகவலை தன் வலை தளத்தில் கொடுத்து, பலருக்கும் தெரிய செய்த
எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு நன்றி.

மும்பையை சேர்ந்த ரமாபாய் காலனியில் துப்பாக்கி சூட்டை நடத்துகிறது போலீஸ்.

அம்பேத்காரின் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்ததை எதிர்த்து போராடிய மக்களை கலைந்து போக நடத்தபட்ட சூடு என்கிறது போலீஸ்.

துப்பாக்கி சூட்டில் பத்து பேர் கொல்லபடுகிறார்கள்.

கொன்ற பிறகு போலீஸ் சொல்லும் காரணம், போராடியவர்கள் LPG டேங்கர் லாரியை எரிக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தினோம் என்பதுதான்.

விசாரனையில் இது எல்லாமே தவறை மறைக்க அரசு இயந்திரம் செய்யும் சதியாகவே தெரிய வருகிறது.

டேங்கர் லாரி எரிவதாய் காட்டும் இடமும் துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றும் தெரிகிறது.

போலீஸீன், ஜாதி இந்துக்களின், ஆதிக்க அரசுகளின் சதியாகவே இது பார்க்கபடுகிறது.

கோக்ரே என்கிற அம்பேத்காரிய கவிஞர், பாடகர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து தன்
எதிர்ப்பை காட்டுகிறார். அதன் மூலம் போராட்டத்தை மேலெடுத்து செல்ல பாதை அமைக்கிறார்.

ஆனால் கடைசிவரை துப்பாக்கி சூட்டை நடத்திய போலீஸ் அதிகாரி ”மனோகர் கதம்” மீது சட்டம் வீரியமாக பாயவே இல்லை.

இதுதான் டாக்குமெண்டிரிக்கு அவர்கள் எடுத்தாண்டிருக்கும் உண்மை சம்பவம். ஆனால் டாக்குமெண்டெரியின் சாரம் “இசையும் பாடல்களிலுமாக தலித் விழிப்புணர்வு” எவ்வாறு தூண்டபடுகிறது என்பதும், அம்பேத்காரின் கொள்கையை பின்பற்றுவது அம்பேத்காரை தொழுவதை விட சிறந்தது என்பதும்தான்.

விலாஸ் கோக்ரே முதலில் தீவிர இடதுசாரியாக இருக்கிறார். அம்பேத்காரியமும் அவரை ஈர்க்க தனது கவாலி பாடல் பாடும் திறமையை தலித் விழிப்புணர்வு பாடல் பாட உபயோகிக்கிறார்.

மும்பையில் தெருவில் கவாலி டைப் பாடல்களை படு ஆபாசமாகவும் பாடுகிறார்கள்.( நான் நேற்றிரவு கறுப்பு கத்திரிக்காயை உண்டேன் என்று ஒரு பெண் பாடகர் பாடுவதை டாக்குமெண்டெரியில் காட்டுகிறார்கள்). அது மாதிரியாக ஜனரஞ்சக பாடலை இளமையில் பாடும் விலாஸ் கோக்ரேவுக்கு ஒருவன் 2500 ரூபாய் பணம் கொடுக்கிறான். ஆனால் அன்றிரவே இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்தவன், சரியான உணவு வீட்டில் இல்லை என்பதால் தன் மனைவியை அடிப்பதையும் கோக்ரே பார்க்கிறார். அன்றிலிருந்து கவாலி பாடாமல் தன் திறமையை தலித் விழிப்புணர்வுக்காக அர்பணிக்கிறார்.

தலித் மக்களின் போராட்ட எழுச்சிக்காக தற்கொலை செய்து மறைந்தும் விடுகிறார்.

தலித்துகளின் துயரத்தை பார்ப்பவர்கள் நெஞ்சினுள் உறைய வைக்கிறார் ”ஆன்ந்த் பட்வர்த்தன்”.

மும்பையில் குப்பை அள்ளும் கிடங்கை காட்டுகிறார்கள்.

அதில் வேலை பார்க்கும் குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவர் பண்ணிரெண்டு வருடங்களாக வேலை பார்க்கிறார்.

பதிமூன்று மணிநேரம் அவர் உழைத்தால் கிடைக்கும் கூலி 73 ரூபாய்.

ஒருமுறை லாரியிலிருந்து குப்பையை கொட்டும் போது, கூர்மையான கம்பி அவர் கண்களை குருடாக்க, அதற்கு மும்பை மாநகராட்சி நயா பைசா கூட அவருக்கு உதவி செய்யவில்லை.

என்ன போராட்டத்தை நடத்திவிட முடியும். ஒற்றை கண்ணோடு பீ அள்ளுகிறார்.

குப்பை அள்ளூபவர்களுக்கு மாஸ்க் கிடையாது தொப்பி கிடையாது கழுவ குடிக்க தண்ணீர் கிடையாது. ஒருவர் சொல்கிறார்” எனக்கு குடிக்க தண்ணி கூட கிடைக்காது. பல தடவை குப்பை என் தலைவழி முகம் வழியே வழிந்து நாறும் தொப்பி கூட கிடையாது எங்களுக்கு. நாங்கள் சங்கம் அமைத்து அடிப்படை வசதி கேட்க கோர்ட் கொடுக்க உத்தரவு போட்டது. ஆனால் மும்பை மாநகராட்சி அதனை எடுக்காமல் பல ஆயிரம் கொடுத்து மேல் முறையீடு செய்தது. அந்த ஆயிரக்கணக்கான ரூபாயில் எங்களுக்கு தொப்பி வழங்கிவிடலாமே !

தலித்துகள்,இடஒதுக்கீடு பற்றி மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் டாக்குமெண்டெரியின் Black Humour.

--ஒரு பெண் சொல்கிறார் நான் உயர்ந்த ஜாதியில் பிறந்திருக்கிறேன். அதை கர்வமாக சொல்லி கொள்ள
எனக்கு உரிமை இருக்கிறத

-தலித்கள் நாற்றம் பிடித்தவர்கள் அவர்கள் நான்கு பேர் சேர்ந்தாலே அங்கே அசிங்கமும் குப்பையும் வரும்.

-என் great grand father அவர்களுடைய great grand father க்கு செய்த தப்புக்காக நான் ஏன் இட ஒதுக்கீட்டை ஏற்க வேண்டும்.

-தலித்துகளுக்கு திறமையும் இருந்தால் படித்து மெரிட்டில் எங்களுடம் போட்டி போட வேண்டியதுதானே.(இதை இப்போதும் நிறைய பேர் சொல்லி அதற்கு நான் பதில் சொல்லி சொல்லி அலுத்து விட்டது. நம்முடைய சிவிக்ஸ் பாடதிட்டத்தில் இடஒதுக்கீடை மக்களுக்கு புரிய வைக்கும் ஒரு முயற்சியும் கிடையாது.எனக்கு இடஒதுக்கீடு பத்தி அ.மார்கஸ் ஒரு டாக் க்ஷோவில் சொன்ன பிறகுதான் அதை பற்றின தெளிவு வந்தது. ஒரு சமுதாயத்தில் எக்ஸ் என்பவ்ர்கள் 98 சதவிகதிதமும் இசட் என்பவர்கள் 2 சதவிகதுமும் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அதே சதவிகிதம் ஒரு கிளாஸ் ரூமிலும் பிரதிபலிக்க வேண்டும். நம் நாட்டில் அந்த 2 சதவிகித்தினர் 99 ஸீட்களை பெற்று விடுவார்கள். அங்குதான் இடஒதுக்கீடு என்கிற கான்செப்ட் வருகிறது. அதனால் தனி மனிதர்கள் பாதிக்க படுகிறார்கள் என்றாலும், “பேர்ட்ஸ் ஐ” வியூவில் அது தவிர வேறு வழியில்லை. அறிவியல் பூர்வமாக நமக்கு அது தேவையானதாகவே இருக்கிறது)

-அவர்கள் மலம் அள்ளுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இது போன்ற முன்னேறியவர்கள் சொல்லும் அபத்தங்கள்.

பாய் சங்காரே மற்றும பல தலித் பேச்சாளர்கள் பேசும் பேச்சை டாக்குமெண்டரி முழுவதும் விரவி இருக்கிறார்கள்.

அட்டகாசம்.

பேச்சில் சிலது

-மக்களே! இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது போலீஸ் அல்லது மகாராஸ்டிர முதலைமைச்சர் என்றா நினைக்கிறீர்கள். இதன் விசம் இந்துக்களின் “மனுதர்ம” நூலில் இருந்தே வந்தது.

- ஜெய் பீம் என்பதை மந்திரமாக்கிவிட்டீர்கள். ஜெய் பீம் என்று சொல்லி குடிக்கிறார்கள். முடிந்தால் அம்பேத்காருக்கும் ஒரு கிளாஸ் கொடுப்பீர்கள் போல. அம்பேத்காரை தொழவே வேண்டாம். அவர் சொல்லிதந்த சமுத்துவத்தையும் போராட்டத்தையும் பின்பற்றுங்கள் போதும்.

-அம்பேத்கார் இரவு இரண்டு மணிவரை வேலை பார்ப்பதை அவரிடம் கேட்டதற்கு, காந்தியின் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள், ஜின்னாவின் மக்களும் அப்படியே. அதனால் அவர்கள் இருவரும் இரவு ஒன்பது மணிக்கு தூங்குகிறார்கள்.தலித் மக்கள் விழிப்பில்லாமல் தூங்குவதால் நான் விழிப்போடு முழித்திருக்கிறேன் என்று சொன்னாராம் அம்பேத்கார்.

-கோயிலுக்குள் எங்களுக்கு வேலை இல்லைதான். ஆனால் நுழைவது எங்கள் உரிமை.

இந்த பாய் சங்காரேயின் மரணமும் ,மர்மமானதாகவே அரங்கேற்றபடுகிறது.

சித்பவன் என்கிற ஆதிக்க சாதி பிராமணர்களுக்கான அமைப்பின் மதவாத குறிக்கோளை சொல்லும் விதம் அச்சமூட்டுகிறது.( ஆம் நாங்கள் பரசுராம் வழி வந்தவர்கள். எங்களுக்குத்தான் ஆளும் யோக்கியதை இருக்கிறது).

எப்படி இந்து மத அடிப்படைவாதத்தையும் இந்திய தேசப்பற்றையும் அழகாக கோர்க்கிறார்கள் என்பதையும் சொல்கிறார் ஆனந்த் பட்வர்த்தன

பி ஜே பி யின் மோடி வெற்றி பெற்ற பிறகு மும்பைக்கு கூட்டி வருகிறார்கள். அவர் கையில் சங்கையும், விரலில் சக்கரத்தையும் எடுத்து ஸ்டேஜுக்கு வருகிறார். பின்னால் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கிறது. இந்து தேசம் இந்தியா .

இப்படி இந்த டாக்குமெண்டரியை பார்த்தால் நியாத்தை தேடும்ஆவேசம் வருகிறது.

நாதுராம் கோட்சேவை ஞாயப்படுத்தும் இந்து இயக்கங்கள். வட இந்திய பிராமணர்கள். அதன் பின்னாடி இருக்கும் ஆபத்தான அடிப்படைவாதம்.

கண்டிப்பா பாருங்க பிரண்ட்ஸ் இந்த டாக்குமெண்டரிய. வேற என்ன சொல்றது. இது அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்.

இதில் வரும் அனைத்து பாடல்களுமே சிலிர்ப்பையும், தார்மீக ஆவேசத்தையும் எழுப்புவதுதான் இதன் பலம்.

ஆந்திர புகழ் கத்தார் வருகிறார். அருமையாக இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு பெரியாரும் அவருடைய சிந்தனைகளும் எவ்வளவு பெரிய கொடை என்பது எனக்கு இதை பார்த்ததும் புரிகிறது.

மேலோட்டமாகவே இருந்து, தீபாவளிக்கு புது துணி எடுத்து,வீக் எண்ட் சரக்கடித்து, சதூர்த்தி கொழுக்கட்டை சாப்பிட்டு, சத்யத்தில் படம் பார்த்து, நெய் விட்டு கேசரி கிண்டி சாப்பிட்டு “ எனக்கெல்லாம் இது பிடிக்காதுப்பா! இத தெரிஞ்சு என்ன பண்ண போறேன் நான் என்று சொல்லி சொல்லியே நல்லதொரு நாளில் செத்து விடலாம் என்று தோண்றினால் இதை பார்க்காதீர்கள்.

Monday, 24 September 2012

எனக்கு தெரிந்த அறிவியல் - 1

பூமி தோண்றும் போது என்ன இருந்துச்சு ?

கல்லும் மண்ணும் தண்ணியும் இருந்துச்சு.

அந்த கல்லும் மண்ணும் தண்ணியும் எங்க இருந்து வந்துச்சி?

அது அப்படியே இருந்துச்சிப்பா.

சரி.விடு.உலகம் பூரா உயிரில்லாத Inorganic பொருளா இருந்துச்சி இல்லையா?

ஆமா! உயிரில்லாமத்தான் இருந்துச்சி.

அப்போ எப்படி உயிரில்லாத பொருட்களில் இருந்து , உயிருள்ள உயிரினங்கள் தோண்றிச்சி. மாட்டுனியா மச்சி பதில் சொல்லு?

அதுக்கு ஒரு தியரி இருக்கு அது பேரு Urey Miller தியரி.

அடப்பாவி நீ என்ன இந்த போடு போடுற. மேல சொல்லு பார்ப்போம்.

அந்த மில்லர் என்ன செய்ஞ்சி புட்டாருன்னா, ஆதிகால பூமில Inorganic பொருட்கள் எல்லாம் எப்படி இருந்துச்சோ, அதே மாதிரியான ஒரு செட்டப்பை உருவாக்கினாரு அவரு லேபாரட்டரில.

எப்படி உருவாக்கினார்?

அது மாதிரியே கடல் தண்ணிய எடுத்துகிட்டார், அத அப்போ இருந்த Pressure Temperature க்கு கொண்டு போனார். அதுல மின்னல்ல எவ்வளவு சக்தி வாய்ந்த கரண்ட் இருக்குமோ அத பாய்ச்சினார். அப்புறம் அதனால அவருக்கு கிடைத்த பொருள ஆராய்ச்சி பண்ணினார்.

என்ன தெரிஞ்சது அந்த ஆராய்ச்சில?

அது ஒரு ஆச்சர்யம் பாரு மச்சி, உயிரில்லாத பொருள்கள் எல்லாம் சேர்ந்து ,உயிருள்ள பொருட்களின் முக்கியமான மூலப்பொருளான அமினோ ஆசிட்கள (Amino acid) கொடுத்துச்சாம்.

ஒகோ இஸ் இட். ஃபைனாலா என்னதான் சொல்றார் urey miller ?

பூமி தோண்றுன புதுசுல கடல் தண்ணியில மின்னல்கள் அதிகமா பாய்ஞ்சது மற்றும் அந்த சூழ்நிலையில உயிரில்லாத பொருள்களில் இருந்து முதலில் அமினோ ஆசிட்கள் தோண்றின. அமினோ ஆசிட்கள் ஒரு Organic பொருள். அதிலிருந்து முதலில் ஒரு செல் உருவாகியது. அந்த ஒரு செல்லிருந்து நாமெல்லோரும் உருவானோம்.

இப்படி உயிரில்லாத பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் உள்ள ஒற்றுமைய கண்டுபிடிச்ச சோதனை பேரு என்ன மச்சி ? இன்னொருதடவ சொல்லு ?

UREY MILLER EXPERIMENT. கூகிள் செய்ஞ்சு பாருடா. இது எட்டாங்கிளாஸ் சயின்ஸ்லே வரும்டா.

Sunday, 16 September 2012

கதை போல ஒன்று - 50

தூத்துகுடி சண்முகபுரம் ஏரியா பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க.

அந்த ஜங்சன்ல அன்னைக்கு டியூட்டிக்கு எதாவது ஒரு போலீஸ் காண்ஸ்டபிள் இருப்பார்.

அவரோட வேலை அங்க எதாவது கொலை, அடிதடி, ரத்த பீறிடல் நடந்தால் ஒடி போய் ஸ்டேசனில் இருந்து ஆள் கூட்டி வர்றதுத
ான்.( அப்ப மொபைல் இல்ல சார்/மேடம்).

ஜாதி சண்டை, மதச்சண்டை, பீடிக்கு சண்டை, குடும்ப சண்டைன்னு சண்டை,வெட்டு, குத்து மேல் பேக்ஷன் உள்ள ஏரியா.

சாக்கடை எப்போதும் தெருவில் தேங்கி நிற்கும்.

ஆண்களே அந்த ஏரியாவ பார்த்து பயப்படும் அங்க, தைரியமா கவுன்சிலரா போட்டி போட்டு ஜெயிச்சாங்க சண்முகக்கனி என்ற சண்முகக்கனி அம்மா.

வயசு அம்பது ஆறு.

ரெண்டு பசங்க.ஒருத்தர் ஸ்பிக்ல ஆபிஸர்.இன்னொருத்தர் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி ல எம். டெக் கெமிக்கல் டெக்னாலஜி படிச்சிட்டு பி.ஹச்.டி முடிச்சிட்டு பெங்களூர்ல வேலை பார்க்குறாரு.

சண்முகக்கனி அம்மாவின் கணவர் மத்தியதர ஜவுளிகடை முதலாளி.

சண்முகக்கனி அம்மா எல்லார் வீட்டிலும் நல்லா பழகுவார்.

சடங்கு,கல்யாண வீடு. துக்க வீடு, வளைகாப்பு, சின்ன சின்ன மத்தியஸ்த்தம் பண்றதுன்ன்னு இருப்பாங்க.

ஏரியா ரவுடி ”ஆட்டோ விஜயன்” ஜங்சன்ல, குடிச்சிட்டு சண்முககனி அம்மாவோட வீட்ல வேலை செய்ற செல்வமணி அக்காவோட புருசன அடிச்சிட்டு இருக்கும் போதுதான் அது நடந்தது.

ஆட்டோ விஜயன் கன்னத்துல ஒங்கி அடிச்ச சண்முகக்கனிஅம்மா, அவன் இடுப்பில் மிதித்து, பக்கத்தில் இருந்த செங்கலை எடுத்து நெஞ்சில் வீச “ஆட்டோ விஜயன்” பல நாட்கள் மருத்துவம் பார்த்து அடங்கிவிட்டான்.

ஒரே நாளில் சண்முகக்கனி அம்மா பெரிய ஆள் ஆகிவிட்டார்.

பல பேர் வற்புறுத்தலால் கவுன்சிலரும் ஆகி கம்பீரமாய் இருப்பார்.

” ஏல அவன் என்னல சவுண்டு போட்டுகிட்டு சலம்புதான்” என்று குரல் உயர்த்தினால் பயலுகள் நடுங்குவான்கள்.

வீட்டு வாசலில் இருந்து பத்திரிக்கை படித்து கொண்டிருப்பார்.

வெங்காயம் உரிப்பது, காய்கறிவெட்டுவது போன்றவற்றை அரிதாய் பார்க்கலாம்.

கொஞ்சம் கொஞ்சமாய் சண்முகக்கனி அம்மா பற்றின அவதார கதைகள் ஏரியாவை நிரப்பி ”தொழும் ஸ்தானத்துக்கு” உயர்ந்து விட்டார்.

பெங்களூரில் இருக்கு சண்முகக்கனி அம்மாவின் இரண்டாவது பையன் கொஞ்ச நாள் வேலைக்கு போகாமல் தூத்துகுடியிலேயே இருப்பது பற்றி சண்முகபுரம்வாசிகளுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை என்றாலும், பின்னர் விசயம் வெளியே வந்தது.

“பெங்களூரு தம்பிக்கு கொடல் அரிச்சிட்டாம்லா”

“ஆமா அவரு கெமிக்கல் என்ஜினயர்தானே. அதுலேயே பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காராம்ல. அந்த கெமிக்கல்தான் தம்பி கொடல அரிச்சிட்டாம்லா. ஏ.எம் ஹாஸ்பிட்டலுக்குதான் போறாராம்ல. ஆனா சண்முககனி அம்மா சாதாரண்மாத்தான பிள்ள இருக்காவ”

பெங்களூரு இரண்டாவது மகனுக்கு நோய் இருக்கிறது என்று எல்லோருக்கு தெரிந்தாலும், யாரும் அதுபற்றி சண்முககனி அம்மாவிடம் கேட்கவில்லை.

திடீரென்று எல்லோரும் சென்னைக்கு போய்வந்தார்கள்.

வந்ததும் பெங்களூரு பையன் கொஞ்சம் தெம்பானது மாதிரி இருந்தார்.

திருச்செஞ்தூர் முருகனுக்கு தங்கத்தேர் இழுத்து வந்தார்கள்.

அதிலிருந்து நான்காம் நாள் திடீரென்று 'பெங்களூரு பையன்' நடுஇரவில் ரத்தமாய் வாந்தியடுத்து செத்து போனார் தன் மனைவி குழந்தைகளை விட்டு, பாசத்துகுரிய சண்முகக்கனிஅம்மாவை விட்டு.

சண்முகபுரம் ஏரியாவே துக்கித்து. அழுதது.

சண்முகக்கனி பெரிதாய் அழுது புரளவில்லை.

அலட்டாமல் கண்ணீர்விட்டார்.

மூத்த பையனுக்கு கூட அம்மா மேல் எரிச்சல் வந்து “எங்கம்மாவுக்கு உணர்ச்சியேயில்ல. அவுங்க கம்பீரம்தான் முக்கியம்ன்னு” பேச ஆரம்பித்துவிட்டார்.

அடக்கம் முடிந்த அன்னைகே “அவன் விதி போய்ட்டான் “ என்று சொன்ன சண்முககனி அம்மாவை பார்த்து மனுக்ஷியா இவுங்க என்று சிலர் சொல்ல, பலர் கம்பீரம் கம்பீரம் என்று சிலிர்த்தார்கள்.

துக்கம் மூன்றே நாளில் சகஜமாகி விட்டது சண்முகபுரத்தில்.

அந்த சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு அளவில் சண்முககனி அம்மா வீட்டில் இருந்து உச்சமான அலறல் கேட்டது.

தெருவில் சிலர் வீட்டிற்குள் போய் பார்த்தால், அவர் வீட்டில் மட்டும் கரண்ட் இல்லை.

சண்முகக்கனி அம்மா கிழே நிற்க படிக்கட்டு மேல் ஏறி சுவற்றில் உள்ள கரண்ட் ஃபீஸ்கேரியரை கையில் வைத்தபடி அவரின் மூத்த மகன் உறைந்து நிற்கிறார்.

“யய்யா அத மட்டும் உள்ள போடாத”

“யம்மா கரண்ட் போயிடுச்சும்மா.ஃபீஸ் வயர் எரிஞ்சி போய்ட்டு. கழத்தி புது வயரு போட்டா கரண்ட் வந்துரும்மா” என்று சொருக போனார்.

“எல நாயே அந்த கரண்டு வயரா சொருகாதல. என் மேல சத்தியம் சொருகாத. நீ செத்துருவப்பா. என்ன விட்டு போய்ருவ” என்று சண்முககனி அம்மா தன் இரண்டு கையாலும் நெஞ்சில் அடித்து அடித்து அழுதார்.

தலைமுடியை ஆய்ந்து கலைத்து போட்டார்.

வாயில் அடித்தார்.

ஏங்கி ஏங்கி அழுதார். மூத்த பையனை கையெடுத்து கும்பிட்டார்.

“யய்யா கீழ இறங்கி வந்துருய்யா. நீ மட்டும்தான் எனக்கிருக்க. நீயும் அம்மா விட்டுட்டு போய்ராதப்பா.

சாமி உன் கால்ல வுழுரேன். ஃபீஸ் போடாத என்று மருகினார்.

அவர் ஆவேசம் முன் எதுவும் செய்ய முடியவில்லை.

கண நேரத்துல் ஃபீஸ் கேரியரை சொருகி விடலாம்தான்.

ஆனால் அந்த கணநேர அதிர்ச்சியில் சண்முகக்கனி அம்மா செத்துவிடும் பயத்தில் இருந்தார்.

தெருக்காரர் எடுத்து சொல்ல சொல்ல அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சொன்னதையே சொல்லி தரையில் உருண்டு அழுதார்.

யாருமே எதுவுமே சொல்ல முடியவில்லை. ஃபீஸ் கேரியரை சொருகாமலே வீடு இருட்டாய் இருந்தது.

சண்முகக்கனி அம்மா அழுது அழுது இரவு ரெண்டு மணியளவில் தூங்கிய பிறகு, அந்த வீட்டில் கரண்ட் வரவழைக்கபட்டது.

தெரு அதிர்ச்சியை உள்வாங்கி அமைதியாய் தூங்கிகொண்டிருந்தது.

Friday, 14 September 2012

கதை போல ஒன்று - 49

”அந்த புக்கு என்னதுண்ணே” கையை நீட்டி கேட்டேன்.

”அது ராணி புக்குப்போ”

பின்னால் உமர் பாருக் படபடப்போடு கையை உதறி உதறி நின்றான்.

பதட்டத்திற்கு காரணம் கடையின் முன்னால், வாழ்க்கையில் முதன் முதலில் 
இருவரும் செக்ஸ் புக் வாங்க நிற்கிறோம்.

அப்போது ஒன்பதாம் வகுப்புதான் படித்து கொண்டிருந்தோம்.

பெர்ட்ரண்ட் ரசல் Period of Latency என்பார்.

அதாவது பத்து முதல் பதிமூன்று வயது வரை ஆண் பாலுணர்வுகளை வெளியே பகிர்ந்து கொள்ள மாட்டான்.

நெருங்கி நண்பர்களிடம் கூட. தனக்கு அப்படி ஒன்றே இல்லை என்பது போல் நடிப்பான்.

நான் உமர் பாரூக் இரண்டு பேருமே அந்த பீரியட் ஆஃப் லேட்டென்ஸியை அப்போதுதான் கடந்து பகிரங்கமாக காமத்தை பேச ஆரம்பித்திருந்தோம்.

இருவருமே வயதுக்கு வந்து விட்டோம் என்பதை உறுதி செய்து கொண்டோம்.

ஒரு சொட்டு விந்து அறுபது சொட்டு ரத்தமா ? என்ற கேள்வி இருவருக்குமே இருந்தது.

உமர் கொஞ்சம் கட்டுபாடாக வளர்ந்தவன்.

நான் எப்போதுமே சுதந்திரத்தில் திளைப்பவன்.

அதனால் அவன் என்னை குருவாக ஏற்று கொண்டான்.

அவன் முழுவருட படிப்புக்கு கீழக்கரைக்கு தன் தாத்தா வீட்டுக்கு போகும் போது, தோட்டத்தில் மரம் ஏறி விளையாடியிருக்கிறான். மரம் உச்சியில் ஏறும் போது பெண்கள் குளிப்பதை முதன் முதலில் பொறுமையாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த காட்சியின் எழுச்சியால் வயதிற்கு வந்து விட்டான்.

நான் பக்கத்து வீட்டு அண்ணன் தன் மெத்தைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த செக்ஸ் புத்தங்களை படித்து ஏற்பட்ட எழுச்சியால் வயதுக்கு வந்தேன்.

என்ன சொல்ல அந்த வயதின் உணர்ச்சிகளை.

எப்போதும் அது மட்டுமே தோண்றும்.

எல்லாப் பெண்கள் மீதும் தோண்றும்.

வயது வித்தியாசமில்லாமல், உறவு வித்தியாசமில்லாமல்,நாடு வித்தியாசமில்லாமல் தோண்றும்.

பஸ்ஸில் பெண்கள் ஏறும் போது மின்னல் வெட்டாய் தெரியும் கெண்டை கால் அழகை கூட பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது பார்க்க தோண்றும்.

ஒன்றே நினைப்பு. சயிண்ஸ் டீச்சரை பார்த்தாலும், கடைக்கு வரும் பெண்களை பார்த்தாலும்.

ஆனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இப்போது உமர் பாரூக் ஒரு ஆறுதல்.

அவனிடம் பேசும் போது உணர்வின் வீரியம் மட்டுபட்டாற் போல தோண்ற பேசினோம் . நிறைய பேசினோம்.

“மக்கா நான் செக்ஸ் புக்கே படிச்சதில்லடே”

”சூப்பரா இருக்கும் என்றேன்” நான்

“வாங்குவோமா. எனக்கு பயமாயிருக்கு “ என்றான் உமர்.

“காசு வைச்சிருக்கியா”

“தாள் இருக்கு.வாங்கத்தான் பயமா இருக்கு”

“நீ எதுக்குல பயப்படுத.வா போலாம்”

என்று அவனை அழைத்து அவரவர் சைக்கிளில் ஜெயகுமாரி ஸ்டேர்ஸ் இறக்கம் தாண்டி ஒரு கடை முன்னால் நின்றுதான் முதல் பத்தியில் படித்தீர்களே அந்த நிலமைக்கு வந்து நின்றோம்.

எனக்கும் பயம்தான்.

மறுபடி கேட்டேன்.

”இது என்ன புக்கு அண்ணே.”

”அது கல்கண்டு புக்கு பிள்ளோ”

திணறினேன். எப்படி கேட்பது. செக்ஸ் புக் வேண்டும் என்று எப்படி கேட்பது?

”இந்த புக்கு என்ன வெலன்னே.”

”இது இந்தியா டுடே எட்டு ரூபாய்.”

நான் முழிப்பதை பார்த்து கடைக்காரர்.

”தம்பிகளுக்கு என்ன புக்கு வேணும்”

நாங்கள் பேய் முழி, திருட்டு முழி, மலச்சிக்கல் முழி எல்லாம் கலந்து முழித்தோம்.

நான் ஆரம்பித்தேன்.

“இந்த கொஞ்சம் கிளாமரா இருக்கும்லாம்ணே, மேட்டர் புக் மாதிரி” என்று இழுத்தேன்.

கடைக்காரர் வாழ்க்கையில் பல கஸ்டத்தை பார்த்து, சமீபத்தில்தான் மதம் மாறி, நியாத்தீர்ப்பு நாளில் கர்த்தரின் நல்ல தீர்ப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நல்லவராய் ஆனவர் போல.

கத்த ஆரம்பித்தது எட்டூருக்கு கேட்டது.

“தம்பிகளா! இந்த ஸெக்ஸு புக்கு வியாபாரமெல்லாம் இந்த கடையில கிடையாது. அதுக்கு வேற கடைய பாரு பாத்துக்க. நான் கர்த்தருக்காக சாட்சி சொல்றவன் கேட்டியா”

பக்கத்து கடைக்காரர்களும், ரோட்டில் நடப்பவர்களும் எங்களையே பார்க்கிறார்கள்.

நாங்கள் போட்டிருந்த காக்கி பேண்டும் வெள்ளை சட்டையும் ஸ்கூல் படிக்கும் மாணவர்கள் என்பதை காட்ட, பக்கத்து டீ கடைக்காரர் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்.

கடைக்காரர் கத்தியதோடு சும்மா நிற்க வில்லை. உமர் பாருக் கையை கெட்டியாக பிடித்து.

“உன் வீடு எதுல சொல்லு. நான் உன் அப்பா கிட்ட பேசுறேன். முளைக்கவே இல்ல அதுக்குள்ள செக்ஸ் புக்கு கேட்கிறயளோ”

அதுவரை பொறுமையா இருந்த நான் வெறியானேன்.

அந்த கடைக்காரர கையை உமரின் கையில் இருந்து வேகமாக தட்டி விட்டேன்.

“யண்ணே சும்மா மிரட்டாதீங்க. எங்க கடை செட்டிகுளத்துலதான் இருக்கு. அப்பா கடையிலதான் இப்ப இருப்பார். நான் இங்கணயே நிக்குதேன். போய் சொல்லும். கடை பேரு பாபு ஸ்டோர். போங்கண்ணே போ சொல்லுங்க. கடையில புக்கு இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க. மத்ததெல்லாம் வேண்டாம். நீ வால நாம வேற கடைக்கு போவோம்” என்று சொல்லி உமர் பாரூக்கை கூட்டி போனேன். சைக்கிளை மிதித்தோம்.

சைக்கிளில் வர வர கடைக்காரர் போய் அப்பாவிடம் சொல்லிவிட்டால் என்ற பயம் வந்தது.

அப்புறம் அப்பாதானே பேசிகிடலாம். அப்பாவும் இந்த வயச கிராஸ் பண்ணிதானே வந்திருப்பார்.

அப்பா கண்டிப்பா புரிந்து கொள்வார்.

அப்படி புரிஞ்சிகிலன்னா அவரையும் திட்டனும் என்று அடுத்த கடையை தேட ஆரம்பித்தோம்.

Thursday, 13 September 2012

கதை போல ஒன்று - 48

ஏன் இந்த விசயத்த திரும்ப திரும்ப கேக்குறீங்க?

இல்ல சும்மாத்தான். வேகமா தள்ளி விட்டாங்களா? இல்ல சும்மா லைட்டா நாசுக்காவா? நான் கேட்டேன்.

”முதல்ல கொஞ்சம் வேகமா. அப்புறம் உங்க வீட்டுக்கு போன்னு சொல்லி தள்ளி விட்டாங்க.”

துக்கம் மண்டியது. 

இது என்ன குரங்காட்டம் அலையுது மனசுன்னு எனக்குள்ளே கேள்வி வேறு.

மனைவி சின்ன வயசா இருக்கும் போது டீவி பார்க்க போன இடத்தில், டீவி வைத்திருக்கும் ஆண்டி
வெளியே போ என்று தள்ளி விட்டார்களாம்.

ஆனால் அதை என்னால் சாதரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை.

மனம் கலங்கிற்று.

சுயமரியாதையின் உச்சத்தை எதிர்பார்க்கும் மனைவியின் இப்போதைய நிலையையும், இவளையா அப்படி அவமானபடுத்தபட்டிருக்கிறாள் நினைத்து பார்த்தால் இன்னும் சோகமாக இருந்தது.

கற்பனை செய்து பார்க்கிறேன்.

வெளிர் நீல ஃபிராக் போட்டிருக்கும் எட்டு வயது குழ்ந்தையை, அப்பாவியாய் முகத்தை வைத்திருக்கும் பிள்ளையை, பெண் பிள்ளையை எப்படித்தான் தள்ளி விட்டாரோ அந்த பெண்.

எங்கள் வீட்டில் டீவி எண்பதுகளின் தொடக்கத்தில் வந்தது.

அப்பா ,அம்மாவின் பத்து பவுன் நகையை மீட்க வைத்திருந்த பணத்தில் அடையார் மெர்சி எலக்ட்டிரானிக்ஸில் ஆர்டர் செய்து நாகர்கோவிலுக்கு வரவழைத்தார்.

டீவி இருக்கும் வீடு என்று அந்த ஏரியாவில் அடையாளம் காணப்பட்டோம்.

அதில் எனக்கும் அண்ணனுக்கு கர்வம்.

கொஞ்சம் டீசண்டான பசங்கள் வந்தால் பத்து நிமிடம் பார்க்க அனுமதிப்போம்.

அழுக்கான ஏழையான தமிழ் மீடியம் படிக்கும் பையன்கள் வந்தால் துரத்தி அடிப்போம்.

அப்போது நாகர்கோவிலில் தமிழ் ஒளிபரப்பு சிலோன் ரூபாவாகினியை நம்பித்தான் இருந்தது.

அப்பா இருந்தால் தெரு பசங்களுக்கு கொண்டாட்டம்.

அப்படியே கதவை திறந்து வைத்து விடுவார். திபு திபுவென கூட்டம் உள்ளே நுழையும்.

இந்திராகாந்தி சுடப்பட்டு இறுதி சடங்கில் நிறைய பேர் எங்கெங்குலாமோ வந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள்.

யாரோ தடிமனான ஆள் உட்கார்ந்து பால் போனி நசுங்கி விட்டது என்று இப்போது பாட்டி புலம்புவார்.

வீட்டின் ஜன்ன்ல்களில் சின்ன பசங்கள் ஏறி டீவி பார்ப்பார்கள்.

நானும் அண்ணும் ஸ்கேலால் அவர்கள் கைகளை அடிப்போம்.

அவன்கள் கையை உதறி உதறி கெஞ்சுவான்களே தவிர வீட்டிற்கு போகமாட்டான்கள்.

தெரு முனையில் விட்டு வேலை செய்யும் சரஸ்வதி அக்காவின் மகனை, அப்படி அடித்ததில் அவன் கை மொளி வீங்கி விட்டது.

அவனால் அரைவருட பரிசட்சை எழுத முடியவில்லை.

சரஸ்வதி அக்கா வீட்டிற்கு வந்து அம்மாவிடம் அழுது விட்டு போனார். அம்மா “ நாய்களா, செத்த சனியன்களா! இதுக்கு கண்டிப்பா முருகர் தண்டனை கொடுப்பார்” என்று கத்தினார்.

நானும் அண்ணனும் நமுட்டு சிரிப்போடு அந்த இடத்தை விட்டு போனோம். ஏனென்றால் இருவருமே சாமி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

எக்ஸாம் சமயத்திலோ, கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்க வேண்டுமென்றோதான் சாமி பயலை கும்பிடுவோம்.

அதிலும் இந்த விநாயகர், முருகன் மாதிரி ஸாஃப்ட் சாமிக்ளை விட “நடுக்காட்டு இசக்கியம்மன்” போன்ற பவர்ஃபுல் சாமிகளைத்தான் கும்பிடுவோம்.

அந்த நடுக்காட்டு இசக்கியம்மன் பவரோ அல்லது அம்மாவின் சாபம் கொடுத்த பவரோ தெரியவில்லை. டிவீ பார்த்தல் விசயமாக மன உளைச்சல் அடைந்திருக்கிறேன்.

திரும்ப திரும்ப சிறுமியாய் இருக்கும் என் மனைவியை அந்த பெண் வெளியே தள்ளி கதவை பூட்டியது ஞாபகம் வந்தது.

இரவு தூங்கும் போது அதேதான். மன உளைச்சல் அதிகமாகி எழுந்து உட்கார்ந்தேன்.

ச்சே இது ஒரு பிரச்சனையா?

மனம்,வேறு துக்கம் இல்லை என்று நினைக்கும் போது பரணில் இருந்து ஏதாவது ஒரு துக்கத்தை அசை போடுகிறதோ.

எழுந்து தண்ணீர் குடித்தேன்.

மனைவியை பார்த்தேன்.

நல்ல தூக்கம்.

பக்கத்தில் நெருங்கி அணைத்து கொண்டேன்.

அவள் உடல் சூடு தெரிந்தது. தலைமுடியை தடவி கொடுத்தேன். முத்தம் கொடுத்தேன் நிறைய.

முழித்தாள். ”ஏன் என்னாச்சு” என்றாள்.

என்னால் இன்னைக்கு முடியாது என்றாள்.

”நீ உன்ன வெளிய தள்ளுனாங்க சின்ன வயசுலன்னு சொன்னது எனக்கு ஒருமாதிரி டிஸ்டெர்பண்ஸா இருக்கு” என்றேன்.

“லூஸு” என்று என் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

அந்த வெளிய தள்ளபட்ட சிறுமியை, அவள் துக்கத்தை, அவளின் அவமானத்தை எடுத்து விட வேண்டும் என்ற ஆவேசத்தில் அன்பை எல்லாம் குழைத்து முத்தம் கொடுத்தேன்.

இன்னும் என்னை இறுக்கி கொண்டாள்.

கொஞ்சம் மூச்சு திணறியது.

அந்த திணறலிலும் அண்ணனுக்கு இது மாதிரி எதாவது கஸ்டம் இதுவரை வந்திருக்கிறதா என்று போன் போட்டு கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

Friday, 7 September 2012

மியாபூரில் எக்ஸிபிசன்

ஹைதிராபாத் மியாபூரில் சிறிய எக்ஸிபிசன் போட்டிருந்தான். 

ஹைதர் நகரில் இருந்து ஆட்டோ பிடித்து போனால், மீராவுக்கு ஒரே கொண்டாட்டம்.

உள்ளே போனதும் படம் போட்ட ரைம்ஸ் புக்கை எடுத்து வைத்து கொண்டாள்.

அப்புறம் வளையல், துணி, பொம்மைகள் என்று வாங்கினோம். 

அங்கே ஜெயண்ட் வீல், பிரேக் டான்ஸ் ரைட் மாதிரி பல விளையாட்டுகள் இருந்தன.

நான் இது மாதிரி விசயத்தில் ஆகச்சொங்கி.

சுத்தமா இண்டிரஸ்டே கிடையாது.

சிறிய, சுத்தும் ரயிலில் குழந்தைகள் ரைடு போகவே. இரண்டரை வயதுள்ள மீராவையும் ஏற்றினோம்.

ரயில் மூன்று ரவுண்ட் சுத்தியது. முதலில் உற்சாகமாய் வெளியே நின்றிருந்த, எனக்கும் மனைவிக்கும் கைகாட்டினாள்.

அப்புறம் போரடித்து விட்டது போலும். தன் கையிலிருந்த ரைம்ஸ் புக்கை சின்சியராக படிக்க ஆரம்பித்து விட்டாள்.

மிச்ச ஏழு ரவுண்டுகளிலும் புத்தகம்தான்.

சுத்தி இருந்து இதை பார்த்த ஜனங்கள்.” அய்யோ அந்த பிள்ளைய பாரு. இப்போ கூட புக்கு படிக்குது “ என்று தெலுகில் சொல்கிறார்கள்.

எனக்கோ பெருமை தாங்கவில்லை.

அந்த பெருமையை வார்த்தையால் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் மீரா எக்செண்டிரிக்காக பிஹேவ் செய்துவிட்டாளோ என்ற பயமும் மனதில் இருக்கத்தான் செய்தது.

"அவளுக்கு பிடிச்சத அவ செய்றா" என்று நினைத்து வெளியே வந்தேன்.

ஆனந்தாடி அப்படி சொன்னான்

நேற்று என் எதிர்த்தாற் போல அமர்ந்திருந்த அழகு பெண், முகத்தை உம்மென்று வைத்திருந்தார்.

வயது இருபத்தி மூன்று இருக்கலாம்.

இறுக்கமென்றால் அப்படி ஒரு இறுக்கம்.

போன் வந்தது.பேசி சிரித்தாள். “ ஆனந்தாடி அப்படி சொன்னான். ஆனந்தா அப்படி சொன்னான். நம்ம ஆனந்தாடி அப்படி சொன்னான்.எவ்ளோ கொழுப்பு பாரு அவனுக்கு” என்று உரக்க கலகலவென்று சிரித்தாள்.

அந்த முகம் தெரியாத “ஆனந்த்” மேல செம கடுப்பு வந்தது.

சம்பள தேதி

இன்று முதல் மாத சம்பளம் ( சென்னையில்) வாங்கினேன். போன மாதத்தின் ஏழு நாள் சம்பளமும் சேர்த்து அக்கவுண்டில் போடப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வர ஒரே மகிழ்ச்சிதான். 

அதன் பிறகு வேலை செய்பவர்கள் எல்லோரும் அன்பாக பேசிக்கொள்கிறார்கள். 

இந்த குழந்தைகள் எல்லாம் வெள்ளிகிழமை மாலைகளில், சனி ஞாயிறு லீவை நினைத்து அன்பை பொழிந்து கொள்வது போல. 

பெண்கள் முகத்தை நன்றாக கழுவி, பவுடரிட்டு புது பொட்டு வைத்து காலையில் எப்படி 
”பிரக்ஷ்” ஆக வந்தார்களோ அது மாதிரியே கிளம்பி போகிறார்கள்.

நானும் உற்சாகமாய் முகம் கழுவினேன்.(வழக்கமாக ஆபீஸில் முகம் கழுவமாட்டேன்).

”ஒரு வார தாடி” என் அழகை கெடுப்பதாக பட்டது.கம்பெனியை விட்டு வெளியே வந்ததும் பக்கத்தில் உள்ள சலூனில் க்ஷேவ் செய்தேன்.

தொழிலை சுத்தமாக திருப்திகரமாக கடைக்காரர் செய்தார்.

இவருக்கு இந்த தொழில் தெரிகிறது. நமக்கு இது மாதிரி எதாவது தொழில் இப்படி அட்சர சுத்தமாக, திறமையாக செய்ய தெரியுமா ? என்ற கேள்வியை அவசரமாக தவிர்த்து, பஸ்ஸில் ஏறினேன்.

என் பளிச் முகத்தை எதாவது பெண் ஆர்வமாக பார்க்கிறாளா என்று ஆர்வித்தேன். இல்லை.

எல்லோரும் தத்தம் தோழர்களோடு மொபலில் கதைத்து கொண்டிருந்தனர்.

பையில் இருந்து “சித்ரா பானர்ஜி” எழுதிய இந்திய உணவு பற்றிய புத்தகத்தை கொஞ்ச நேரம் படித்தேன்.

அடையார் பேக்கரியில் பைன ஆப்பிள் கேக்கும் , சாக்லெட் கேக்கும் வாங்கினேன்.

அப்புறம் காரம் வேண்டுமில்லையா? அதுக்கு பொட்டட்டோ சிப்ஸ் வாங்கினேன்.

மினிட்மெய்ட்டின் “பல்பி ஆரஞ்” ஒரு பெரிய பாட்டில்.(அது எனக்கு பிடிக்கும்).

மீராவுக்கு ஏதாவது “டாய்ஸ்” வாங்கலாமா என்று யோசித்தேன். இல்லை அவளே அவளுடை டாய்ஸை செலக்ட் செய்தால்தான் அவளுக்கு பிடிக்கும்.

அப்புறம் பஸ் ஸ்டாப்பில் இருந்து வீட்டிற்கு போகும் போது கமலி பன்னீர்செல்வத்துக்கு போன் போடலாமா என்று யோசித்தேன்.

பிறகு அவரை ஏன் டிஸ்டர்ப் செய்ய வேண்டும். அவர் வீட்டில் அடை தோசையோ, அல்லது கும்பகோணம் காபியோ செய்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன்.(சில சமயம் உடையார் நாவல் கூட படித்து கொண்டிருக்கலாம்)

ஆவின் பாலகத்தில் ஒரு பாக்கெட் கூல் பால் வாங்கி குடித்தேன்.

அடையார் பக்கம் நல்ல அழகான நார்த் இந்தியன் பெண்கள் நடமாடுவதை என் கண்கள் என் அனுமதி இல்லாமலே பார்பதை நொந்து கொண்டேன்.

நாளைக்கும் நாளன்னிக்கும் லீவு. ஜாலி.

வழியில் பல பிச்சைகாரர்களையும்,தெரு நாய்களையும் பார்த்தேன்.

’இவனுங்க எல்லாம் ஏன் உலகத்துல இருக்கானுங்க ? ‘ என்ற அறத்துகெதிரான சிந்தனையை என்ன செய்வது என்று அதையும் பையுக்குள் போட்டு,கையில் தூக்கியபடியே வீடு நோக்கி நடந்தேன்.

ஒடும் பஸ்ஸில் புத்தகம்...

பொதுவாக பஸ்ஸில் ஆட்டோவில் டிரைனில் போகும் போது புத்தகம் படிப்பது எனக்கு பிடிக்கும். 

ஆனால் கண் கெட்டு விடும் என்று எல்லோரும் பயமுறுத்துவார்கள். 

ஒரு விதமான குற்ற உணர்வோடே வாசிப்பேன்.

ஒருதடவை ( எத்தன ‘ஒரு’ போடுவப்பா) ஒரு காதலன் காதலி பஸ்ஸில் ஏறினார்கள்.காதலி பெண்கள் சீட்டில் அமர, காதலன் என்னருகே அமர்ந்தான். 

அன்றுதான் அவன் காதலி அவன் காதலை ஏற்று கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரே உற்ச
ாகம்.

என்னை பார்த்து பஸ்ஸில் படிக்க வேண்டாம் என்றும் கண் இரண்டும் கரைந்து போய்விடும் என்றும் பெரிய அட்வைஸ்கள்.

அவன் வாய் நிறைய ‘ஹான்ஸ்’ இருந்தது.பற்கள் எல்லாம் கறை.அம்பது வயதில் கன்னங்களில் கண்டிப்பா அரிப்பு வரும்.

உள்ளுக்குள் கவுண்டமணி ஸ்டைலில் அவனை திட்டினாலும் வெளியே புத்தன் புன்முறுவலை பூத்த படி கேட்டேன்.

சரி சரி மேட்டருக்கு வரேன்.

கண் டாக்டரிடம் நேரில் போய் ஆலோசனை கேட்டேன்.

இதை கேட்பதற்காகவா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வந்திருக்கிறீர்கள் என்று ஆச்சர்யபட்டார்.

நான், எனக்கு சமரசம் இல்லாத உண்மை வேண்டும் என்று சொன்னேன்.

உங்களுக்கு ஆடும் எழுத்துக்களை படிக்கும் போது கண்வலி, தலைவலி ,வாமிட் ஃபீலிங் எதாவது வருகிறதா ? என்று கேட்டார்.

இல்லை என்றேன்.

அப்புறம் ஜெனரல் செக்அப் செய்தார்.

ஒரு பிரச்சனையும் இல்லை நீங்கள் தாராளாமாக ஒடும் பஸ்ஸில் படிக்கலாம் என்றார்.

கண்களை அதிகம் உபயோகிப்பதால் கண்கள் கெட்டு போகாது என்றும் சொன்னார்.

அன்று இரவு நிம்மதியாக தூங்கினேன்.

காமம் என்றால் இதுவா ?

அன்று எங்கள் ஏரியாவில் கட்சி மீட்டிங் முன்னர் போடும் டான்ஸ் போட்டு கொண்டிருந்தார்கள். 

நான் ஆர்வத்தோடு பார்த்து கொண்டிருந்தேன்.”புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க” பாட்டுக்கு ஆணும் பெண்ணும் ஆடினார்கள். 

பெண் பாவாடை சட்டை போட்டு உள்ளே ஒரு லெகின்ஸ் போட்டிருந்தாள். 

சுத்தி சுத்தி ஆடினாள். 

ஒவ்வொருமுறை அவள் பாவாடை சுத்தும் போதும், அவள் உள்ளே போட்டிருக்கும் ’லெக் இன்ஸ்’ தெரிந்தது.

உண்மையில் பார்த்தால் அதில் எந்த ஆபாசமும் கவர்ச்சியும் இல்லை.

ஆனாலும் ஆண்கள் கூட்டம்( என்னையும் சேர்த்துதான்) பாவாடை சுத்தும் போது ஆர்வத்தோடு பார்க்கிறது.

இதுதான் ஆண்களின் மன உலக தத்துவம். இதை எல்லா பெண்களும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அது பற்றி சிந்தித்து கொண்டே இருந்தேன்.

ஆண் இனத்தின் மீதே ஒரு வாஞ்சை வந்தது. ”பாவம்டா நீங்கள்” இது மாதிரி இயற்கை உங்களை படைத்து விட்டதே என்று.

எங்கு போனாலும் இதனால் கெட்ட பெயர் கிடைத்து விடுகிறதே உங்களுக்கு.

மரப்பசு நாவலில் வீட்டு வேலை செய்யும் கறுப்பு நிற கட்டுமஸ்தான பெண்ணை பார்க்கும் போது ‘கோபாலிக்கு’( கதை நாயகன்) உதறல் எடுக்கும்.

அவள் குறுக்கும் நெடுக்குமாய் அலையும் போது வேர்த்து கொட்டும். பதறுவார்.

அந்த வேலைக்காரி அம்மணி ( கதை நாயகி) யிடம் சொல்வாள்” அம்மா. நான் ஒழுக்கமா இருந்துப்பேன். ஆனா ஐயா உதறும் போது ரொம்ப பாவமா இருக்குமா. என்னைக்காவது பாவப்பட்டு கொடுத்திருவனோன்னு பயமா இருக்கும்மா “ என்பாள்.

ஜானகிராமன் தெய்வப்பிறவிதான்.

எப்படி எழுதியிருக்கிறார் ஆணையும் பெண்ணையும்.

”புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க” பாட்டு முடிந்தது.
அடுத்தது என்ன பாட்டு என்று எல்லோரும் ஆர்வமாய் இருக்கிறோம்.

மனைவிடம் மேட்டரை சொல்லி வர நேரமாகும் என்று சொல்லி அடுத்த பாட்டுக்கு காத்திருக்கிறேன்.

கூட்டத்தோடு சேர்ந்து காத்திருக்கிறோம்.

அடுத்து எம்.ஜி.ஆர் மட்டும்தான் வந்தார். “நான் ஆணைஇட்டால அது நடந்து விட்டால்” என்று.

வெறும் ஆம்பிளை மட்டும் வந்தால் எப்படி.

கூட்டம் கலைந்து டீ குடிக்க சென்றது, நான் கடுப்பில் வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

ஆனால் கூட்டம் டீ குடித்து விட்டு கண்டிப்பா அடுத்த ஜோடி பாட்டுக்கு திரும்ப வரும்.

அவர்களுடைய ஒரே வேண்டுதல் அடுத்த பாட்டில் ஆடும் பெண்ணாவது பாவாடையை இன்னும் Higher Elevation இல் பறக்க விட வேண்டும்.

கொஞ்சம் இடுப்பும் தெரிந்தால் அது மருந்தீஸ்வரர் அருள்தான். :))

காமெடி பீஸ் என்றால் அது நாம்தான்

இப்ப அதிகாரிகளும் அரசும் எலி நாய்கள் பிடிப்பதை பார்க்கும் போதும், 

பள்ளி பஸ்களை செக் செய்வதை பார்க்கும் போதும்,

குழந்தைகள் நீச்சல் குளத்தை சோதனை செய்யும் அக்கறையை பார்க்கும் போதும்,

இரண்டு வருடம் முன்னர் தெருவோரகடையில் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் இறந்து போன மாணவன் கொடுத்த எஃபெக்ட்டினால் அக்கறையோடு எல்லா பிரியாணி சட்டிகளையும் கவிழ்த்து தரையில் வீசி, தோசை மாவை தெருவில் கொட்டின அக்கறை மாதிரிதான் தெரியுது.

இப்ப எல்லாம் நல்ல உணவா விற்கிறார்கள் தெருவோர கடைகளில்? 

காமெடி பீஸ் என்றால் அது நாம்தான். 
நாம் என்றால் அது காமெடி பீஸ்தான்.

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் மற்றும் பஸ் டிரைவர்கள்

இரண்டு 29 சிக்கள் ஒட்டேரி பிரிக்கிளின் ரோட்டில் எதிர் எதிரே வரும் போது,

இரண்டு பஸ்டிரைவர்களும்,

அவர்கள் பின்னால் பெரும் வாகனக்கூட்டம் இருப்பதை சுரணை இல்லாமல்,

கவனிக்காமல் பஸ்ஸை நிறுத்தி, 

கெட்ட வார்த்தைகளால் அன்போடு பேசுவதும்,

செல்லமாய் கொஞ்சி கொள்வதும்,கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் பிறந்த தமிழகத்தில் பார்க்க ஒரு அழகுதான் போங்கள்

அஞ்சு மருந்து தூள்

அக்கரா சித்தரத்தை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சுக்கு மிளகு திப்பிலி எல்லாத்தையும் காயவைத்து, நன்றாக அரைத்து பட்டுகண் அரிப்பிலோ நல்ல சுத்தமான வெள்ளை துணியிலோ அரித்து எடுத்தால் அதை நாங்க “அஞ்சு மருந்து தூள்” என்போம்.

ஜலதோசம், தொண்டை கரகரப்பு என்று வந்தால் தேனில் குழப்பி ஆள்காட்டி விரலால் வழித்து வழித்து நக்குவோம். 

தொண்டைக்கு இதமாகவும், உடம்புக்கு நல்லதாகவும் அமையும். 

இப்ப அந்த பழக்கம்
 ஏன் நின்னு போச்சுன்னு அம்மாவிடம் கேட்டேன். அம்மா ”ஆமா ஏன் நின்னு போச்சுன்னு தெரியல” என்று சொல்லி வருத்தபட்டார்.

அது மாதிரி தூதுவளை எல்லார் வீட்டிலும் நாகர்கோவிலில் இருக்கும்.

அதன் கசாயம் நல்ல ஆண்டிபயாட்டிக் மாதிரி கேட்கும் “கொர் கொர் இருமலுக்கு.

இப்போ அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

நான் டிரான்ஸ்போர்டில் வேலை பார்க்கும் போது பிரான்ஞ் மேனேஜர் என்னை தூதுவளை மிட்டாய் வாங்கிவர சொல்லி ஊரல்லாம் அலையவிட்டார்.

நான் எங்கள் வீட்டில் தூதுவளை செடியே இருக்கிறது எடுத்து கொடுக்கிறேன் என்றேன்.

அவர் தூதுவளை மிட்டாய்தான் தன் இருமலை போக்கும் என்றார்.( இது சும்மா பேராவ பெருசாக்குறதுக்கு).

இப்போ எனக்கு ரன்னிங் நோஸ் வந்தா உடன ‘சிட்ரசின்” போடுறேன்.

அப்புறம் மூணுவேளையும் குரோசின் போடுறேன்.

ஒரே நாளில் ஆண்டிபயாட்டிக் ஆரம்பித்து விடுகிறேன்.

மறக்காமல் ஆபிஸுக்கு லீவ் சொல்லி விடுகிறேன்.

மூக்கு கண்ணாடி கீழே இறங்கினால் என்ன செய்வோம்

மூக்கு கண்ணாடி கீழே இறங்கினால் என்ன செய்வோம். ஒற்றை ஆள்காட்டி விரலால் கண்ணாடியின் நடு பிரேமை மேலே தள்ளி விடுவோம்.

அல்லது இரண்டு கைகளால் கண்ணாடியின் சைடு பிரேமை தள்ளி விடுவோம். 

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது மாமாவுடன் உடன்குடியில் உள்ள பிரபல மரக்கடைக்கு சென்றேன். 

கடையின் கணக்கு பிள்ளை தன் மூக்கு கண்ணாடியை தன் சொந்த மூக்காலும், கன்ன சதையினாலுமே மேலே மேலே தள்ளினார்.

செம டிஃபெரண்டா இருந்தத
ு அது.

அட இவரு என்னமா பண்ராருன்னு நானும் செய்து பார்த்தேன்.

அவ்ளோதான் அந்த பழக்கம் என்னிடம் ஒட்டி கொண்டது.

அதை அடிக்கடி செய்ய ஆரம்பித்தேன்.

அப்படி செய்யாவிட்டால் ஏதோ எரிச்சலாய் ஃபீல் செய்தேன்.

அது பார்க்க நல்லாயில்லை என்று சொன்னாலும் செய்ய ஆரம்பித்தேன்.

கடைசியா ரொம்ப டிரை பண்ணி வெளியே வந்தேன்.

இன்னைக்கு பஸ்ஸில் ஒரு ஸ்கூல் பையன் அது மாதிரி கண்ணாடியை மூக்கால் தள்ளி கொண்டு வந்தான்.

உடன்குடி மரக்கடைகாரர் கணக்கு பிள்ளை நினைவுக்கு வந்தார்.

மிஸ்டர் எக்ஸ் ஏணி வாங்கிய கதையும் நான் கற்பூரம் வாங்கிய கதையும்.

ஆனந்த விகடனில் ”மிஸ்டர் எக்ஸ்” 1980 கடைசிகளில் வரும். யாருக்காகவாவது ஞாபகம் இருக்கா. மிஸ்டர் எக்ஸ் என்பர் “சர்தார்ஜி” மாதிரி” மிஸ்டர் பீன்” மாதிரி ஒரு கற்பனை கதாப்பாத்திரம்.

ஒருநாள் மிஸ்டர் எக்ஸ் லண்டனுக்கு போவார்.

அவருக்கு சரியா ஆங்கிலம் தெரியாது.

அவசரமாக ஏணி வாங்க வேண்டும். 

ஏணியின் ஆங்கில பெயர் தெரியாது மிஸ்டர் எக்ஸுக்கு.

ஆனால் அதன் கட்டுபொருளான மூங்கிலின் ஆங்கில பெயர் “பேம்பு” என்று தெரியும்.

கடைக்கு போன அப்பாவியான மிஸ்டர் எக்ஸ்.

கடைக்காரரிடம் “பேம்பு பேம்பு என்று ஏணியின் நீண்ட மூங்கில்களை வெர்டிக்கலாகவும்,

அப்புறம் பேம்பு பேம்பு பேம்பு பேம்பு என்று சிறிய மூங்கில்களை ஹாரிசாண்டலாகவும் காற்றில் வரைந்து காட்டினாராம். :))

நான் ஹைதிராபாத்தில் முதன் முதலில் தமிழ் புத்தாண்டு கொண்டாட ”சூடகம்” வாங்க ஒரு கடையில் நின்று ‘சூடகம் உண்டா” என்றேன்.

தெலுகில் சூடகத்திற்கு என்ன பெயர் என்று தெரியாது.

அப்புறம் ஆங்கிலத்தில் “ கேம்பஹர்” உண்டா ? என்றேன்

அதுவும் கடைக்காரருக்கு புரியவில்லை.

அப்புறம் சாமிக்கு சூடகம் காட்டுவது போல கையை சுத்தி சுத்தி காற்றில் காட்டினேன்.

கடைக்காரர் “கற்பூரம்” அண்ணா என்று எடுத்து கொடுத்தார்.

அப்புறம்தான் தெரிந்தது கற்பூரம் என்ற பேரை மறந்து விட்டோமே என்று.

என்னுடைய காற்று பூஜை நடனத்தை நினைத்து வெட்கி வீடு வந்த்தேன்...

“ல” “ள” “ழ”

இன்று பஸ்ஸில் வரும்போது ஒரு பிளக்ஸ் போர்டை பார்த்தேன்.

ஒரு ஆணும் தன் கர்ப்பஸ்திரி மனைவியும் போர்டில் பெரிதாக சிரித்தபடி போஸ் குடுக்க
“வலைகாப்பு விழா” என்று பிரிண்ட் செய்திருந்தது. 

முதலில் சட்டென்று குழம்பி,
அடப்பாவிகளா! அது ‘வளைகாப்பு” விழா தானே. இப்படி ஒரு எழுத்துபிழையை கூச்சமில்லாமல் அடித்து
பெரிய எழுத்தில் போட்டிருக்கார்களே என்று நினைத்தேன். 

பெரம்பூர் பெரியார் நகரில் ஒரு அயர்ன் வண்டியில்
“தல்லு வண்டி” என்று பிழையாய் எழுதிருப்பதை பார்த்த அதிர்ச்சி வந்தது.

மற்ற எழுத்து பிழைகளை விட இந்த “ல” “ள” “ழ” எழுத்து பிழை கொஞ்சம் படிக்க கடுப்பாய் இருக்கும்.

ஆனால் இந்த மூன்று லகரங்கள்தான் தமிழின் சொத்தும் கூட

அச்சம் என்பது மடைமையடா...

அதாவது எனக்கு பாட்டு பாடுறது பத்தியெல்லாம் ரொம்ப தெரியாது. ஆனா லாஜிக் தெரியும்.

எங்க ஊர் கச்சேரியில் ஒருத்தர் பாடினார். 

என்ன பாட்டு பாடினார் என்றால் தமிழகத்திலே சேகுவாரா போல், லெனின் போல் பெரும் புரட்சியை ஏற்படுத்தின புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் ”அச்சம் என்பது மடமையடா. அஞ்சாமை திராவிடர் உடைமையடா” என்ற பாட்டு.

அந்த பாடகர் புதிது பாருங்கள்.

ஃபிளீட் வைத்து மெரூன் கலர் பேண்ட் போட்டு, செங்கல் கலர் 
சட்டையும் போட்டு பாடினார்.

“அச்சம் என்பது மடைமையடா” முழு பலத்துடன் மேக்சிமம் கட்டையில் (?) பாடி விட்டார்.

அப்புறம் எங்கே “அஞ்சாமை திராவிடர் உடமையடாவை அதை விட அதிக ஸ்தாயில் பாட.

வேற வழியே இல்லாமல் இறக்கி பாடினார்.

ஹலோ புரியுதா?இல்லையா?

“அச்சம் எனபதை என்ன ஸ்தாயில் பாடுறோமோ ,அதை விட இரண்டு மடங்கு அதிக வாய்ஸ்ல “அஞ்சாமை திராவிடர் உடமையடா” பாடனும்.

முதல்லேயே புல் பலத்தோடு பாடினதால பாட்ட சொதப்பிட்டார்.

பக்கத்தில் இருந்த நாரோவில்( நாகர்கோவில்) பெரியவர்கள் எல்லாம் “ சோப்ளாங்கி பய. பாட்டால பாடுதான். செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்தாப்புலலா இருக்கான்”

பரிகாசம் செய்து வெத்தலை போட்டு மிச்ச சுண்ணாம்பை மறக்காமல் பக்கத்தில் இருந்த போஸ்ட் கம்பத்தில் தடவினர். :))

சூப்பர் பழம் கொய்யா பழம்

இன்று கோவை பழமுதிர்சோலை கடையில் கொய்யா பழம் ஒன்று பார்த்தேன். 

பெரிய தேங்காய் அளவிற்கு பச்சையாய் இருக்கிறது. 

ஒரு தெர்மாக்கோல் டிரேயில் ஒவ்வொரு கொய்யாபழத்தையும் பக்குவமாக பொதிந்து வைத்திருக்கிறார்கள்.

நான் கவுண்டரில் இருக்கும் பெண்ணிடம், இது என்ன பழம் என்று கேட்டேன.

“பெங்களூர் கொய்யாபழம்” என்றார்.

“கிலோ என்ன ரேட்டு”

“முன்னூற்றி அம்பது ரூபாய்” 

”இது எப்படி இருக்கும் நல்லா டேஸ்டா இருக்குமா”
என் கேள்வி மொக்கையாய் இருக்க. பதில் சொல்லாமல் இருந்தார்.

மறுபடி கேட்டேன்.

”நான் சாப்பிட்டதில்லை ஆனா நல்லாத்தான் இருக்கும் “ என்றார்.

இரவு எட்டு மணிக்கு கண்ணாடி போட்டுகிட்டு ஒரு குச்சி முடி தலையன் வந்து இப்படி அறுவை கேள்வி கேட்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். 

அவருக்கு வீட்டுக்கு போகும் கவலை இருக்கத்தானே செய்யும்.

ஒரே ஒரு கொய்யா பழம் வாங்கினேன்.

நூத்தி இருபத்தியாறு ரூபாய் வந்தது. 

சாதரண கொய்யாபழம் நிறைய வாங்கலாம்தான். 
இருந்தாலும் புதுசா ஒரு பழம் எப்படி இருக்குன்னு பார்க்கிற ஆர்வம்.

வீடு வந்த உடன் பத்திரமாக வைத்து விட்டேன்.

மீரா என்னது என்னது என்று கேட்க “சூப்பர் பழம் கொய்யா ப்ழம் “ என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

இனி சோறு சாப்பிட்டுவிட்டு , நான் என் பெண்ஜாதி பொம்பள பிள்ள மூவரும் வட்டமாக உட்கார்ந்து நறுக்கி நறுக்கி தின்னலாம் என்றிருக்கிறோம் பெங்களூர் கொய்யாவை. 

நாங்கள் அப்படி சாப்பிடும் போது அந்த சேல்ஸ் கேர்ள் வீட்டிற்க்கு தலைவலியோடு போய் கொண்டிருப்பாள், கூட்ட நெரிசலான பஸ்ஸில்.

கதை போல ஒன்று - 47

விஜய் புளியம்பூவையும் கொழுந்துகளையும் சேர்ந்து அதில் மிளகாய் பொடி போட்டு சாப்பிட்டிருக்கிறான்.

மாங்காய் பறித்து அதை மிளகாய் பொடியை தொட்டு காரமாய் சாப்பிட்டிருக்கிறான்.

ஆனால் நேரடியாக ஒரு குத்து மிளகாய் பொடியை சாப்பிட்டதற்கு அவன் அத்தைதான் காரணம்.

பத்து வயதில் என்ன தெரியும்? 

சேட்டை நையாண்டி எல்லாம் உள்ள வயதுதானே.

அதற்குதான் அத்தை மிளகாய் பொடியை தின்ன கொடுத்தாள்.

வத்தல்( காய்ந்த மிளகாய்) மூட்டை எடுத்து மிசினில் அரைத்து வீட்டில் போட்டு விடுவார் அப்பா.

கல்யாணமாகாத அப்பாவின் தங்கை அதை எல்லாம் நூறு கிராம் இருநூறு கிராம் பாக்கெட்களாக போட்டு, பாக்கெட்டுக்கு இவ்வளவு காசு என்று கறாராக அப்பாவிடம் வாங்கி விடுவாள்.

அம்மாவுக்கு வீட்டு வேலை சரியாக இருப்பதால் இதில் ஈடுபட நேரமே இருக்காது.

அத்தை அம்மாவிடம் பேச மாட்டாள்.

ஆனால் அம்மா செய்த சாப்பாட்டில் இருந்து பிடித்து வைத்த தண்ணீர் முதலாய் எல்லா சர்வீஸ்களையும் ஏற்று கொள்வாள்.

விஜய் ஓடி ஆடி விளையாடி கொண்டிருந்த போது முதலிலேயே அத்தை எச்சரித்தாள்.

“யல விளையாடாத வத்தல் (மிளகாய்) பொடில கால் பட்டுற போது”

அலட்சியபடுத்தி விட்டு விளையாடும்போது, கால் பட்டு இருநூறு கிராம் எடை போட பட்டு ஒட்டுவதற்காக ரெடியாக உள்ள வாய் பிளந்த பாக்கெட்கள் சிதறி விழ, வத்தல் பொடி பறந்தது.

சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த அத்தை வெறியோடு ஒடி வர தாவி வெளியே ஒடினான்.

”உங்களால என்ன பிடிக்க முடியாதே” என்று அழவம் காட்டினான்.

“செத்த சவமே! கையில மாட்டாமலா போவ. அப்ப வா”

விஜய் கண்டு கொள்ளாமல் திரும்ப திரும்ப ரூமிற்குள் போவதும், அத்தை அடிக்க வரும் போது வெளியே ஒடுவதுமாய் விளையாடி கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் அது போரடிக்க, பின் பக்கம் தொட்டிக்கு வந்தான்.

அந்த தொட்டி அப்பாவே கட்டியது.

உபயோகமில்லாதசதுர கிணற்றின் சுவரையும் பாத்ரூம் சுவற்றின் சுவரையும் தொட்டியின் நீள் பக்கங்களாய் வைத்து, அகல பக்கங்களை செங்கலை வைத்து கட்டியது.

முனிசிபாலிட்டி தண்ணி வரவில்லையாதலால்.தொட்டியில் நீர் விரலளவே இருக்க, கொசு முட்டையிட்டு கூத்தாடி புழுக்கள் கூத்தாடி கொண்டிருந்ததை ரசிக்கும் போதுதான் பின்னாடி உருவம் நிற்பது போல் இருந்தது.

அத்தை.

வலது கையில் குத்து வத்தல் பொடியோடு நின்றாL இடது கையால் இவன் சட்டையை கொத்தாய் பற்றியபடி.

இவன் திமிற திமிற வத்தல் பொடியை முகத்திலும் வாயிலும் அப்பி விட்டு போய்விட்டாள்.

காரம் காரம் காரம். உறைப்பு. எரிப்பு.

என்ன செய்வதென்று தெரியவில்லை.

தொட்டிக்குள் விழுந்தான்.

கூத்தாடி புழுக்களோடு உள்ள தண்ணீரை எடுத்து வாயை கொப்பளித்தான்.

முகத்தில் அறைந்து கழுவினான். இதை செய்யும் போது மிருகம் மாதிரி அவனை அறியாமலே குரல் எழுப்பினான்.

சரி. அம்மா நல்லவேளை இந்த காட்சியை பார்க்க வில்லை என்று தொட்டியை விட்டு வெளியே வரும் போது அம்மா அவனை பார்த்து அழுது கொண்டே இருந்தாள்.

அப்பா வந்தார்.

விசயம் கேள்விபட்டு அத்தையை மெலிதாக திட்டினார்.

அத்தை ஒடிப்போய் ரூமை பூட்டி கொண்டு தான் சாகப்போவதாய் சொன்னாள்.

அத்தை செத்தால் ,தானே எல்லா மிளகாய் பொடி பாக்கெட்களையும் ஒட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

அம்மா அப்பாவிடம் ஆவேசமாக பேசும்போது “ரத்த சம்மந்தத்தையெல்லாம் டக்குன்னு வெட்டி விட முடியாதுடா” என்றார்.

அந்த மிளகாய் பொடி சம்பவத்தில் இருந்து, அப்பா அத்தையிடம் பேசுவார் ஆனால் பேச மட்டும் செய்வார்.

சுவாரஸ்யபகுதிகள் எதையும் பேச மாட்டார்.

பின் அத்தையை கோயமுத்தூரில் கல்யாணம் செய்து கொடுத்து, பெரிய பணக்காரியாகி விஜய்யின் கல்யாணத்துக்கு வந்தாள் குடும்பமாக.

அம்மா “வா கவிதா என்று வரவேற்று கைகளை பிடித்து ரொம்ப நேரம் பேசினாள்”

அத்தை தன் கையாலே விஜய்க்கு ஜாங்கிரி ஊட்டிவிட்டாள்.விஜய் ஜாங்கிரியை சாப்பிட முடியாமல் ”ஹோவ் ஹோவ்” என்று அத்தையிடம் பாசமாக கூவினான்.

அபபாவிடம் ,அத்தை யண்ணா! யண்ணா! என்று நிறைய பேசினார்.

அத்தை தான் உடுமலைபேட்டையில் எப்படியெல்லாம் அந்தஸ்த்தாய் இருக்கிறேன் என்பதையும். தன் மகள் அரங்கேற்றத்துக்கு மூன்றரை லட்ச ரூபாய் செலவழித்து செய்த பெருமையையும் சொல்லி கொண்டிருதாள்.

அப்பாவும் பேசினார்.

கூர்ந்து கேட்டால் அப்பவும் அப்பா பேசினார். ஆனால் சுவாரஸ்யபகுதிகள் எதுவும் பேசவில்லைதான்.

வெறுமே பேசினார்.

பேச மட்டும் செய்தார்.

தன் வைராக்கியத்தை வைரம் மாதிரி பாதுகாப்பாக, என்னிடம் வைரம் இருக்கிறது என்று அலட்டாமல் , ஆனால் வைரத்தை மறக்காமல் அணித்து கொள்ளும் அப்பாவை பார்த்து அவனுக்கு கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது.

கதை போல ஒன்று - 46

”அண்ணே இவ இங்க இருக்கட்டும் நான் பக்கத்துல வேலையா போய்ட்டு அரை மணி நேரத்துல வரேன்”

பாவாடை தாவணி மல்லிகைப்பூ.

பிளஸ் ஒன் படிக்கும் மகளை, கடையில் விட்டு போனார் கணேசன் அண்ணன்.

பத்தாம் வகுப்பில் முழுவது ஆண்டோரஜன் சுரப்பிகளே என்னுள் பொங்கி இருந்ததால் அக்கணமே அவளை காதலிக்க ஆரம்பித்தேன்.

கடையில் தேமே என்று நின்று கொண்டிருந்தாள்.

’நீ எந்த கிளாஸ்மா. எந்த ஸ்கூல்”

“அங்கிள்! நா டதி ஸ்கூல்ல பிளஸ்டூ படிக்கிறேன்”

”சரிம்மா. ஏன் நிக்குற போய் உட்காரு” என்று அப்பா சிறிய ஸ்டூலை காட்ட, அவள் போய் கல்லா பட்டறை சேரில் உட்கார்ந்து கொண்டாள்”

அப்பா சிரித்து ”சரி சரி உட்கார்ந்துக்க” என்று சொல்லி வியாபாரம் பார்த்தார்.

நான் மறுபடியும் அவளை பார்த்தேன்.

தலை முடியை விரித்து இரண்டு பக்கமும் இழை எடுத்து கட்டியிருந்தாள்.

நெற்றியில் சந்தனம்.

கன்னம் ரெண்டும் கொழுக் மொழுக் என்று இருந்தது.காலையிலேயே நாகாராஜா கோவிலுக்கு போய் வந்திருக்கிருகிறாள் என்று யூகித்தேன்.

“கன்னகதுப்பில் செழிப்படக்கி
வண்ணக்குரலில் பாசுரம் பாடி

என சொந்த வரிகள் திரும்ப திரும்ப வந்தது.

கணேசன் அரை மணி நேரம் கழித்து பெண்ணை கூட்டி போனார்.

அவள் நினைவாகவே வந்தேன்.

அப்பா வீட்டிற்க்கு வந்த உடன் அம்மாவை பார்த்து சொன்னார்.

“டேய் கீதா. இன்னை கடையில ஒண்ணு நடந்தது பாத்துக்க.கணேசன் இருக்காருல்லா. அவரு பொண்ண கூட்டி கடையில பாத்துக்க சொல்லி விட்டு போனாரு. நான் உட்காருன்னு சொன்னேனா. அது டக்குன்னு பட்டறை சேர்ல உட்கார்ந்துகிட்டு.
பாவம் அப்பாவி பொண்ணு.”

”அப்படியா “ அம்மா ரசித்தாள்.

“ஆமா.நமக்கு ஒரு பொண்ணு பிறந்தா எப்படி இருக்குமோ அது மாதிரி இருந்துச்சு. நமக்குதான் பொம்பள பிள்ளையே இல்லையே’ .

அப்பா சலித்து கொண்டார்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெண் குழந்தை மேல் உள்ள ஆர்வத்தை துல்லியமாக கண்டுபிடித்தது நான்தான்.

அப்பா அம்மாவுக்கு அழகான பெண் குழந்தை பொம்மை வாங்கி கொடுத்திருப்பார்.

அதை மட்டும் அம்மா தரவே மாட்டாள்.

அந்த குழந்தை அம்மாவின் சூட்கேஸில் தன் கோல்டன் முடியுடனும், பூனை கண்களுடனும் தூங்கி கொண்டே இருப்பாள்.

இப்போது நான் சைட் அடித்த பெண்ணையே அப்பா என் ச்கோதரியாக்கி விட்டாரே.

இது என்ன பாலசந்தர் படக்கதை போல சிக்கலாய் இருக்கிறதே என்று நினைத்து உள்ளுக்குள் சிரிப்பு.

பின் அவள் சகோதரியாகத்தான் இருக்கட்டுமே என்றும் தோண்றியது.

அவள் என் அக்காவாக இருந்தால் எப்படியெல்லாம் சண்டை போடுவேன் என்று கற்பனைத்து மகிழ ஆரம்பித்தேன்.

அதற்கப்புறமும் கணேசன் அண்ணன் நிறைய தடவை கடைக்கு வந்தார். ஆனால் தனியாக. அப்பா கூட ஆர்வத்தில் அவர் பெண்ணை விசாரிப்பார்.

பத்தில் இருந்து பதினொன்றாம் வகுப்பு போகும் போது கணிதம் ஒண்ணுமே புரியவில்லை.

காலாண்டு தேர்வில் ஃபெயிலாகி போனேன்.

வீட்டில் கையெழுத்து வாங்கினால் அம்மா திட்டுவாள்.

அப்பா திட்டுவதில்லை என்பதால் கடைக்கு போய் வாங்கி கொள்ளலாம என்று சைக்கிளை கடைக்கு விட்டேன்.

அப்பா பிராகரஸ் ரிப்போர்ட் பார்த்து முகத்தை சிறிது சுருக்கி அமைதியாக கையெழுத்து போட்டு முடிக்கவும். பால்துரை அண்ணாச்சி வந்தார்.

“ஏ நடராஜா விசயம் தெரியுமா. நம்ம பத்தி வியாபாரம் செய்வான்லா கணேசன் “

“ஆமா ஆமா விசயத்த சொல்லுங்க”

“அவன் பொண்ணு தலையில மண்ணெனெய் ஊத்தி தீ வைச்சிகிட்டாம் பாத்துக்க. ஸ்பாட்லயே ஆள் குளோஸ். கணேசன் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கான். என்னால அங்க நிக்க முடியல”

அப்பா பதறி கடையை கடை பையன்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னை ஸ்கூலுக்கு போகும்படி சொல்லிவிட்டு, சைக்கிளை எடுத்து கணேசன் அண்ணன் வீட்டுக்கு போகத்தயாரானார்.

நான் என் சைக்கிளை எடுத்து போகவும்.

”விஜய் விஜய் இங்க வாப்பா “ ஏற்கனவே அதிர்ச்சியில் தலைசுற்றி கிடந்த நான் பொம்மை மாதிரி அப்பா பக்கத்தில் போனேன்.

“என்னப்பா சொல்லுங்க” என்றேன்.

“இது, வந்து எக்காரணத்த கொண்டும் இந்த விசயத்த அம்மாகிட்ட சொல்லியிராத என்ன. சொல்லிரவே சொல்லிராத”

என்று சொல்லி சைக்கிளை எடுத்து வேகமாக கணேசன் அண்ணன் வீட்டை நோக்கி போனார்.