Tuesday, 28 August 2012

கதை போல ஒன்று - 43


கதை போல ஒன்று - 43

”எனக்கு அம்மாவை விட சித்தியைதான் பிடிக்கும்” என்றான் எட்டே வயதான விஜய்.

பெருமை தாங்காமல் சித்தி  அணைத்து கொண்டாள்.

இரண்டாம் வகுப்பிலிருந்து இரண்டு வருடமாக ஏப்ரல் லீவுக்கு ஆச்சி வீட்டிற்கு வருகிறான்.

சித்தியின் பாசத்தில் இருக்கும் “பிரக்ஷ்னஸ்” அவனை ஈர்த்திருக்கலாம்.

அல்லது சித்தி கேட்கும் போதெல்லாம் உரலில் எள்ளும் கருப்பட்டியும் போட்டு இடித்து தரும் எள்ளுருண்டையின் ருசியினால் பிடித்திருக்கலாம்.

மாலையானால் சித்தி பாடும் சஸ்டி கவசத்தின் இனிமை பிடித்திருக்கலாம்.

அல்லது கட்டில் பின்னி கொண்டிருக்கும் போது விஜய் என்னதான் தொந்தரவு செய்தாலும் அவனை திட்டாத பொறுமை பிடித்திருக்கலாம்.

போன வருடம் விஜய் லீவு முடிந்து நாகர்கோவில் போகும் போது, சித்தி பதினெட்டு கலர் கொண்ட “ வாட்டர் கலர்” பாக்ஸ் கொடுத்தாள்.

இவன் பண்ணிரண்டு கலர் கொண்ட வாட்டர் கலர் பாக்ஸ்தான் பார்த்திருக்கிறான்.

பச்சை கலரிலேயே மூன்று கலர். மஞ்சளிலேயே மூன்று என்று பிரமிக்க வைக்கும் விசயங்கள் உள்ள வாட்டர் கலர் பாக்ஸ்.

பச்சை கலரை வெள்ளைதாளில் அடிக்கும் போதெல்லாம் சித்தி கேட்ட கேள்வி நினைவுக்கு வரும்.

பச்சை கலர் சேலையை கட்டி கொண்டு “ இதில சித்தி எப்படி இருக்கேண்டா “ என்பாள்.

“நீங்க ’பேரட்’ மாதிரி இருக்கீங்க”

”யாரு மாதிரி செல்லம்”

“பேரட்.அதான் கிளி மாதிரி அழகா இருக்கீங்க”

விரிந்த சிரிப்பு. அரவணைப்பு. எச்சில் படாத முத்தம். தாய்மை.

சித்திக்கு நல்ல வரனே அமையவில்லை என்று அம்மா கவலை பட்டு கொண்டே இருப்பாள்.

”அவளுக்கு என்ன இல்ல. கலரா வெள்ளையா காயல் பட்டிணத்துகாரி மாதிரிதான் இருக்கா. ஆனாலும் வரன் அமைய மாட்டேங்குதே “ என்று சலிப்பாள்.

விஜய்க்கு என்னவோ சித்தி இப்படியே இருந்தால் தேவலாம் என்று தோண்றியது.

தாத்தா எல்லாரையும் ராமேஸ்வரம் அழைத்து , இருப்பத்தி ஏழு கிணற்றின்  தீர்த்த நீரை சித்தி மீது தெளித்தார்.

சித்திக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்று விஜய் கண்களை இருக்க மூடி வேண்டிக்கொண்டான்.

இறுக்க மூடும்போது சிகப்பு தோண்றி, இன்னும் இறுக்க கறுப்பு தெரிந்தது.

கறுப்பு அபசகுனமாயிற்றே என்று இமையின் இறுக்கத்தை தளர்த்தி மறுபடியும் சிகப்பிற்கு கொண்டு வந்து ராமரை கும்பிட்டான்.

அடுத்த மூன்று மாதத்தில் சித்தி கல்யாணத்துக்கு ஊருக்கு கிளம்பி போனான்.

கல்யாண வீட்டில் ’சித்தி’ வேறு சித்தியாக தோண்றினாள். பட்டு புடவை, ஜதை அலங்காரமும், தங்க நகையுமாய் வேறு ஆள் மாதிரி இருந்தாள்.

இவனை கூப்பிட்டாள். இவன் போகவில்லை. பிரிந்து விடும் சித்தியை நினைத்து அழுகை வந்தது.

பிரிவு எண்ணத்தின் புள்ளியின் விட்டம் அதிகமாகி அவன் மனம் முழுவது இருட்டாய் இருந்தது.

கவலையோடு வெளியே சுற்றி விட்டு  வந்து மணமேடையின் எதிர்த்த சேரில் உட்கார்ந்தான்.

கூட்டம் அதிகமாய் இருந்தது.

அப்போதுதான் சித்தியை மணமேடையில் பார்த்தான்.

ஒரு வயதான தாத்தா மாதிரி இருக்கும் மனிதரின் பக்கத்தில் சித்தி இருந்தார். திக்கென்றிருந்தது. பதறியது மனது. ஒடினான்.

வெறியும் பயமும் வெறுப்பும் பதட்டமும் அவனுடையது.

அம்மா ஏதோ எடுக்க உள்ளறையில் இருந்தாள்.

“யம்மா யம்மா” குரல் வரவில்லை.

“என்னடா”

விஜய் நெஞ்சை பிடித்து கொண்டான்.இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன விபரீதம் நடக்க போகிறது என்று அவனுக்கு தெரிகிறது.

“ என்னடா சொல்லு” அம்மா பயந்து கத்தினாள்.

மற்ற உறவுகார பெண்களும் சேர்ந்து பயந்து கத்துகிறார்கள்.

இவன் அழுது கமறிகொண்டே “ யம்மா மா... மாப்பிள்ளை பாருங்க வயசானாவரா ஐயோ யம்மா சித்... சித்தி பாவம்மா . வேண்டாம்மா. வேண்ட்டாம். ரொம்ப வயசான கிழவரும்மா அவர்” விக்கி விக்கி அழுதான்.

அம்மா வெளியே வந்து பார்த்து “ எல அது தாய்மாமாடா. ஆச்சிக்கு கூட பிறந்த அண்ணன் தம்பி கிடையாதுல்லா? அது ஆச்சிக்கு சித்தி பையன். செங்குலி தாத்தாடா.
நீ இதுவரை செங்குலி தாத்தாவ பாத்தது கிடையாதோ? அது மாப்பிள்ளை இல்லடா”

அம்மா சிரிப்பாய் சிரித்தாள். அதோ என்று காட்டினாள்.

அங்கே ஆறடி உயரமும், செதுக்கிய மீசையும், பட்டு வேஸ்டியும் கையில் பூங்கொத்துமாய் மாப்பிள்ளை வந்து கொண்டிருந்தார்.

சித்தி, பச்சை கலர் பட்டு புடவையில் நாணித்து அமர்ந்திருந்தாள்.


No comments:

Post a Comment