Saturday, 25 August 2012

கதை போல ஒன்று - 42

ராமர் லட்சுமணர் சீதா எல்லோரும் “பிளாஸ்டர் ஆப் பேரிஸ்’ மாதிரியான வெள்ளை சிலைகளில் இருப்பது பிடிக்கவே இல்லை.

“ஏன் பாஸ் இப்படி சாமி இப்படி பளிங்கு மாதிரி இருக்குது பக்தி பீலிங்கே வர மாட்டேங்குது.”

“டேய் அடங்குடா “ சுந்தர்ராஜன் சிரித்தார்.

டெல்லியின் துணை நகரங்களில் ஒன்றான குர்காவூனில், சிறிய கோவிலில் இருவரும் நின்று கொண்டிருந்தோம்.

நேருக்கு நேராக கும்பிடாமல் சைட் வாக்கில் நின்ற படி கும்பிட்டார், கைகளை உயர்த்தி.

காரணம் கேட்டதற்கு “மனுசனத்தான் நேருக்கு நேர் கும்பிடனும். சாமிய அப்படி கும்பிட கூடாது.” என்றார்.

முந்தின நாள் இரவு அவர் ஜாதியை கேட்டதற்கு சொன்னார் “ அப்பா எஸ்.சி டா அம்மா எம்.பி.சி”

சுந்தர்ராஜன் நெய்வேலி பக்கத்தில் உள்ள கிராமத்தில் படிப்பறிவே இல்லாத குடும்பத்தில் பிறந்து, பிளஸ் டூவில் பெயிலாகி கஸ்டபட்டு பாஸாகி, மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தார்.

நெய்வேலி லிக்னைட் கார்பிரேசனிலேயே காண்ட்ராக்ட் வேலையாக நாள் ஒன்றுக்கு என்பது ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார்.

“பாய்லர்” மீது, படிக்கும் போதே ஒரு மோகம்.

எப்படியாவது பாய்லர் டிசைன் கற்று கொள்ள வேண்டும் என்று தீராத ஆசையினால் , அதிகாரியிடம் நச்சரிக்க, அவர் டீக்கடையில் சிகரட் அட்டையில் வரைந்து சொல்லி கொடுத்த, முதல் பாய்லர் வகுப்பு நோட்ஸ், ”சிகரட் அட்டையை” இப்போதும் வைத்திருப்பார்.

பி.ஹச்.எல் லில் ரெண்டே ரெண்டு டிசைன் அப்பரண்டீஸ்தான் எடுக்கிறார்கள் என்று தெரிந்து, அதில் ஒன்றை பெற்று டிசைன் துறைக்கு வந்த பிறகு ஏறுமுகம்தான்.

இப்போது டெக்னிக்கல் லீட் இன்ஜினயராக மாதம் எண்பதாயிரம் சம்பளத்திற்கு குர்காவூன் வந்திருக்கிறார்.

எனக்கு சீனியர் ஆகையாலும், நானும் அவரும் ஒரே அறையில் இருப்பதாலும் அவர் மீது மரியாதை உண்டு.

டெக்னிக்கலா நிறைய கேள்வி கேட்பார்.பயத்தை கொடுக்கும், அவருடைய ஆழமான அறிவு . எது சொன்னாலும் பேப்பரில் படம் போட்டே சொல்லி கொடுப்பார்.

இரவானால் பழைய நோட்டில், தான் எழுதியிருக்கும் சுமாரான கவிதைகளை சத்தமாய் படித்து, அதை நானும் ரசிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நேரம் தவிர, எல்லா நேரமும் அவரை எனக்கு பிடிக்கும்.

“மச்சி, என்னடா பார்த்துகிட்டெ இருக்க. பிஸ்கட் பாக்கெட்ட பிரிச்சி பைல கொட்டுடா”

சுந்தர்ராஜன் வாழ்க்கையிலேயே ஒ.டி எல்லாம் சேர்த்து லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியதால், கோயிலுக்கு வந்து எல்லோருக்கும் டைகர் பிஸ்கட் பாக்கெட்கள் கொடுக்க போகிறாராம்.

எனக்கு இது பிடிக்கவே இல்லை.வற்புறுத்தலுக்காக வந்தேன்.

டைகர் பிஸ்கட்களை எல்லாம் கொட்டியாயிற்று.

இரண்டு ராட்சச பைகள். ஆளுக்கொன்றாய் எடுத்து முதலில் பிச்சைகாரர்களுக்கு கொடுத்தோம்.

பிச்சைகாரர்கள் கைகள் மேல் பட்டு விடுமோ என்று அருவருப்புடன் கவனமாக கொடுத்தேன்.

பின் ஏழை சிறுவர்கள் மொய்த்து கொண்டனர்.
வேக வேகமாக கொடுத்தோம்.

பின் வாலிப பையன்கள் சுற்றி கொள்ளும் போதுதான் விபரீதம் புரிந்தது. பெரிய கும்பல் எங்களை சுற்றி இருந்தது. ரிக்சாகாரர்கள்களும் சேர்ந்து கொண்டனர்.

கையில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்க ஆரம்பித்தனர்.

அபிமன்யூ வியூகத்தில் மாட்டினாற் போல ஆயிற்று.

கொடுத்த வரைக்கும் போதும் என்று பைகளை போட்டு வெளியே ஒடிவந்தோம். கையெல்லாம் ரத்த கீறல்.

முதன் முறையாக சுந்தர்ராஜனை ஒருமையில் கெட்ட வார்த்தை போட்டு திட்டினேன். ஆவசமாய் இருந்தது.

சுந்தர்ராஜன் அசடு வழிந்தபடியே ஹாஸ்பிட்டல் கூட்டி போனார்.இருவரும் டிடி ஊசி போட்டு, சாப்பிடுவதற்காக ஹோட்டல் சென்றோம்.

நான் பேசவே இல்லை.

சுந்தர்ராஜன் பேசினார் “மச்சி ஃபீல் பண்ணாதடா. நான் மெட்ராஸ் வந்த புதுசல, வேலை தேடி அலைஞ்ச போது, கையில காசே இருக்காது. பசிக்கும். எப்போதும் பசி என் கூடவே வந்தது மாதிரியே இருக்கும். கே.எம். சி பக்கத்துல வரும் போது பசில மயங்கிருவேன் போல இருந்துச்சி. அங்க இளநீ கடைகார்கிட்ட என்கிட்ட இருந்த அஞ்சு ரூவாய கொடுத்து, மத்தவங்க குடிச்சிட்டு போட்ட இளநீய வெட்டி, அந்த வழுக்கைய சாப்பிட கொடுங்கன்னு கேட்டேன். அவர் அது ஆஸ்பித்திரி நோயாளிங்க குடிச்சதா கூட இருக்கலாம், தரமாட்டேன்ன்னார். நான் அழுதேன். பசில என்ன அருவருப்பு மச்சி. பிறகு அரை மனசா வெட்டி கொடுத்தார். பசின்னா அப்படித்தாண்டா விஜய்.
நீ வாழ்கையில என்னைக்காவது கவர்மெண்ட் ஸ்கூல் சத்துணவு சாப்பிட்டிருக்கியா. அப்பதான் உனக்கு புரியும்” என்றார்.

“அதுக்கு என் கையல்லாம் பிறாண்டுவானுங்க அந்த பரதேசிங்க, நான் சிரிக்கனுமா” கத்தினேன்.

“ஆமா அப்படித்தான் அவுங்க கையை பிறாண்டுவானுங்க, அடிச்சி கேப்பானுங்க. நாமதான் சாப்பாடு கொடுக்கனும்” என்று இறுக்கமாய் சொன்னார்.

தயிரை ஊற்றி, சாதத்தை பிசைந்து நசுக்குவதில் அவர் ஆவேசம் தெரிந்தது.

2 comments:

  1. நான் மீண்டும் மீண்டும் அதையேதான் சொல்கிறேன் . தயவுசெய்து இன்னும் விரிவாக எழுதுங்கள். இந்த கதையில் இன்னும் விவரித்து எழுதுவதற்கு நிறைய இடமிருந்தது....கொஞ்சம் கவனிங்க பாஸ்.......

    ReplyDelete
  2. கணேசன் சொல்வது உண்மை. கொஞ்சம் கூடுதலாக டைம் எடுத்து எழுதுங்களேன். மற்றபடி சுவாரஸ்யமான பதிவு..

    ReplyDelete