Friday, 3 August 2012

கதை போல ஒன்று - 34

வீர ராகவனின் அம்மா தவறிவிட்ட செய்தி கேட்டு காலேஜ் நட்புகள் எல்லோரும் போயிருந்தோம்.

திருவெல்லிகேணியில் வீடு சோகம் ததும்பி இருந்தது.

கிடத்தபட்ட அம்மாவின் உடலுக்கு 
மரியாதை செய்துவிட்டு, வீர ராகவனை பார்த்தேன்.

என்ன சொல்ல முடியும். அப்போது நாங்கள் சொல்லும் எந்த வார்த்தையும் சம்பிரதாயமாகவே முடியும். அவனை என்ன செய்யும் அது. ஆசுவாசபடுத்த முடியாதென்றே தீர்மானித்து அமைதியாகவே இருந
்தோம்.

வீர ராகவன் அழுத்தமாகவே இருந்தான்.நல்ல உயரம். உடற்கட்டும் அப்பட்டியே.அவன் ஜாதி நினைவுக்கு வந்தது.

வீரராகவனுக்கு ஒரு தம்பி மட்டும்தான்.

நல்லவேளை தம்பி மட்டும்தான். அக்கா தங்கை என்று பெண்கள் இல்லை. இருந்திருந்தால் அம்மா இல்லாமல் கஸ்டபட்டிருப்பார்களே என்று நினைத்தேன். ஏன் வீரராகவனும் அவன் தம்பியும் கஸ்டபடமாட்டாங்களா? ஏன் இப்படி யோசிக்கிறோம் என்று நினைத்தேன்.

காபி வந்தது. ம்தியம் இரண்டு மணிக்கு காபி குடிக்க முடியாதுதான்.இருந்தாலும் கவனத்தை வேறு ஏதாவதில் திருப்பினால் தேவலை போல இருந்தது. நண்பர்கள் எல்லோரும் காபியை குடித்தோம்.

வீட்டில் ஆங்காங்காங்கே டேபிள் பேன் வைத்திருந்தனர். அதில் ஒரு பேன் வேலை செய்யவில்லை.

பிரவீன் அதை சோதித்து அது வயர் பிரச்சனை என்று, பிளேடும் டேப்பும் வைத்து சரி செய்ட்து பேனை ஒடவைத்தான்.

வீரராகவனின் அப்பாவிடம் போய் “அங்கிள் வேறு என்ன உதவி வேண்டும் “ என்று எதாவது செய்து கொண்டே இருந்தான்.

நாங்கள் அமைதியாக இருந்தோம். உதவி தேவைப்படும்தானே உதவ முடியும். நம்முடைய ஆர்வத்திற்காக மட்டும் உதவி செய்ய முடியாதில்லவா?.

மயான பூமியில் எரியூட்ட பட ஆயுத்தமாய் இருந்தன ஏற்பாடுகள். எரித்ததை பார்த்ததே இல்லை.

எங்கள் சமூகத்தில் புதைக்க மட்டுமே செய்வார்கள்.

வீர ராகவன் , அவன் தம்பி , அப்பா எல்லோரும் சட்டையில்லாமல் இருந்தார்கள்.விறகும் வறட்டியும் சூழ்நிலையின் தீவிரத்தை சொல்லி கொண்டிருந்தன.

அங்கு காரியங்களை நடத்துபவர் சத்தமாக “ஐய்யிரு திங்கள் வயிற்றில் வைத்து “ என்றொரு தொகையறா சொல்ல, அடிவயிறில் துக்கமும் பீதியும் முதல் முறையாக படர்ந்தது.

வேடிக்கை பார்க்கும் தளத்திலிருந்து துக்கமாகும் தளத்துக்கு நகர்கிறேன்.

எவ்வளவு சுரணை இல்லாமல் இருக்கிறேன்.

அம்மாஆஹ்... அம்மா வருடா வருடம் பத்து நாள் கோயில் கொடைக்கு ஊருக்கு போனாலே எப்படி தவிக்கிறேன்.

வீரராகவனுக்கு இனி காலமெல்லாம் அம்மா இல்லையே. நிரப்பவே முடியாத வெற்றிடம் கொடுத்த துக்கம் என்னை ஆட்கொண்டது.

கடைசி முகத்தை பார்பதை தவிர்த்தேன்.
உடைந்துவிடுவோமோ என்று பயந்து.

எல்லாம முடிந்து திரும்பும் போது, வீரராகவன் எல்லோர் கைகளையும் பிடித்து. “சரி மச்சி. கிளம்புங்கடா. ரெண்டு நாள்ல காலேஜ்ல மீட் பண்ணலாம்” என்று சொல்லி அனுப்பி விட்டான்.

கண்கலங்கியிருந்தை மறைத்தே பேசினான். எனக்கும் என் வீட்டுக்கு போகும் ஆவல் இருந்ததால் அது பிடித்தே இருந்தது.

பிரவீண் சாதரணமாக பேசி கொண்டே வந்தான்.

திடீரென் இரண்டு மூன்று பேர்கள் பீச், பக்கம்தான் போய்விட்டு போகலாம் என்று சொல்ல எல்லோரும் கடற்கரை சென்றோம்.

அமைதியாய் உட்கார்ந்திருந்தோம்.

ஒரு இடத்தில் தனியே இருந்து யோசிக்கும் போதுதான் வீரராகவனின் துக்கம் புரிந்தது.பதினைந்து நிமிடம் யாரும் சரியாய் பேசவில்லை.

பிரவீண் எழுந்து குத்து மண்ணை எடுத்து விமல் சட்டையில் போட்டான். “மச்சி இப்படித்தான் நான் மியூசிக் காலேஜ் பொண்ணுங்க கூட பீச் வந்த போது மண்ணை எடுத்து போட்டேன் “ என்று சிரித்தான்.

ஒரிரு பேர்கள் சிரித்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் சூழ்நிலை ஜாலியானதாய் ஆனது.

எல்லோரும் கடற்கரையில் கால் நனைத்தோம். ஒடி பிடித்து விளையாடினோம்.

மூச்சிரைக்க கபடி விளையாடினோம்.

சுண்டலும் காப்பியும் குடித்தோம்.

“ஏ” ஜோக் பேசிக்கொண்டோம்.

மனசு லேசானது.

நண்பர்களிடம் விடை பெற்று கொண்டு 29 ஏ பஸ்ஸில் பெரம்பூர் வர ஏறி தனியாய் இருக்கும் போது குற்ற உணர்ச்சி வந்தது.

ஏன் இப்படி கீழ்தரமாக நடந்து கொள்கிறோம்.?

“ரோம் எரியும் போதுதானே பிடில் வாசிக்க கூடாது. எரிந்து முடித்து எல்லாம் முடிந்த பின்னர் வாசிக்கலாம் அல்லவா. எப்போதுமா எரிந்த ரோமை நினைப்பது” இது மாதிரி இலக்கிய மண்ணாங்கட்டியாய் ஒரு சிந்தனை வந்தது.

அப்போது என் மேலேயே எனக்கு சொல்ல முடியாத வெறுப்பும் எரிச்சலும் வந்தது.

இந்த அருவெருப்பான சுயநல வாழ்க்கையை இது மாதிரி முரண்பாடாய் வாழ்ந்துதான் சாக முடியும். வேறு என்னதான் செய்ய முடியும் என்று தோண்றிற்று.

பஸ் நகர்ந்தது.

No comments:

Post a Comment