Monday, 6 August 2012

கதை போல ஒன்று - 36


பஞ்ச பாண்டவர்கள் வழியில் வந்த ஜனமேஜய மகாராஜாவுக்கு வந்த சந்தேகம் ஞாயமான ஒன்றுதான்.

ஜனமேஜய மகாராஜா தன் ராஜகுருவிடம் கேட்கிறார்.

“ குருவே! பீக்ஷ்மர் இருந்திருக்கிறார்.கிருக்ஷ்ணன் இருந்திருக்கிறார், துரோணர் இருந்திருக்கிறார், நீதி உரைத்த விதுரர் இருந்திருக்கிறார். பிறகு ஏன் மிகப்பெரிய அழிவான குருசேத்திர போர் நடந்தது? அவர்களால் த்டுக்க முடியவில்லையா? என்றார்.

”விதி ஜனமேஜெயனே” 
ராஜகுரு பதிலளித்தார்.

ஜனமேஜய மகாராஜாவின் உதட்டு சுழிப்பில் அவநம்பிக்கை. ராஜகுரு கவலையானார்.

முடிவாக,சொல்ல வேண்டாம் என்று நினைத்த விக்ஷயத்தை சொல்லி விடுவது என்று முடிவு செய்தார்.

”ஒ ஜனமேஜய மகாராஜனே! சொல்கிறேன் கூர்ந்து கேள். மனதை நிறுத்தி நிதானமாய் கேள்.இன்னும் பத்து நாட்களுக்குள், பிராமணனை கொன்ற ’பிரம்மஹத்தி தோசத்துக்கு ஆளாவாய் என்று உன் விதி சொல்கிறது.முடிந்தால் தப்பித்து கொள் “

ஜனமேஜய மகாராஜாவுக்கு அதிர்ச்சி.ராஜகுரு வார்த்தை உலுக்கிற்று. சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று நினைத்தார்.

பிரம்ம ஹத்தி தோசத்துக்கு பரிகாரமான யாகத்தை ஐந்து நாட்கள் செய்து முடித்தால், எப்படி அந்த பாவத்து ஆளாவோம் என்று நினைத்தான். பாவம் செய்யும் முன்னரே பரிகார யாகம் செய்யும் வழி இருப்பதாக வேத பண்டிதர்கள் சொல்ல, யாகம் அறிவித்தார்.

தன் ஆஸ்த்தான பிராமணர்களை அழைக்க, அவர்களோ ஐந்து நாட்கள் கண்முழித்து யாகம் செய்ய தங்களால் முடியாதென்றும் ஒருநாள் தூங்கிவிட்டால் கூட பலன் கிடைக்காதென்றும் ஒதுங்க, யாகம் நடத்தி கொடுப்பவர்களுக்கு வெகுமதி கொடுப்பதாக அறிவித்தார்.

வறுமை முத்தமிட்ட ஐந்து பிராமணர்கள் தாங்கள் அதை நடத்தி கொடுப்பதாக சொல்ல யாகம் தொடங்கிற்று.

பிராமண்டமான யாக குண்டம் அருகே ஐந்து பிராமணர்களும் அமர்ந்திருக்க, ஜனமேஜய ம்காராஜாவும் அவர்கள் சொல்லும் மந்திரத்தை அவர்களோடு உச்சரிக்க வேண்டும்.

உக்கிரமாய் ஆயிற்று யாகம்.

நெய், பட்டு, பால்,தங்கம், வெள்ளி, வெண்ணெய் என்று எல்லாவற்றையும் யாக குண்டத்திலிட்டு நான்கு நாட்கள் கண் தூங்காமல் யாகம் நடந்தது.

இன்னும் ஒருநாள் முடிந்தால் பிரம்மஹத்தி தோச பரிகாரம் கிடைத்து விடும்.

ஐந்தாம் நாள் ஜனமேஜய மகாராஜா பக்கத்தில் அமர்ந்த பிராமணரால் தூக்கத்தை அடக்க முடியவில்லை.

அவரை அறியாமல் தூங்க ஆரம்பித்தார்.

தூக்கத்தில் கனவு.

கனவில் அவர் அடர் காட்டுக்குள் கனி தேடி போக, அழகான பூக்களை பார்க்கிறான், வர்ண பறவைகள் ரம்மியாமாய் ஆடுகின்றன. திடீரென்று புதரிலிர்ந்து புலி ஒன்று பாய்ந்து வந்து அவரை துரத்துகிறது.

ஒடுகிறார்.

புலியின் பாய்ச்சல் முன்னால் அவரால் ஒட முடியவில்லை. இருப்பினும் உயிராயிற்றே ! ஒடுகிறார்.

தனக்கும் புலிக்கும் இடையேயான தூரம் குறைவதை அவரால் உணர முடிகிறது.

இதோ பக்கத்தில் வந்து விட்டது. இதோ புலி தன் கால் நகத்தால் அவர் முதுகை கீற போகிறது.

தன் பக்கத்தில் உள்ள பிராமணர் தூங்கி வழிவதை பார்த்த ஜனமேஜய மகாராஜா, பிராமணர் ”புலி கனவு “ காண்கிறார் என்பதை அறியாதவராய், அவரை எழுப்ப தன் கையிலுள்ள தர்ப்பை புல்லால் பிராமணரின் முதுகை சுரண்ட, புலிதான் தன் கால் நகத்தால் தன் முதுகை கிழிக்கிறது என்ற நினைத்த பிராமணர், ஒவென்று அலறி யாக குண்டத்தில் தவறி விழுந்து தன் உயிரை விட்டார்.

யாக பலனும் இல்லாமல் , பிராமணனை கொல்ல வைத்து, பிரம்மஹத்தி தோசத்துக்கும் ஆளாக்கின ”விதி” ஜனமேஜய மகாராஜனை பார்த்து பெரிதாய் சிரித்தது.

No comments:

Post a Comment