Thursday, 9 August 2012

கதை போல ஒன்று - 37

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் புக்கில் கறுப்பு வெள்ளை படமாக எங்களையே பார்த்து கொண்டிருந்தார்.

குமார லிங்கேஸ்வரந்தான் ஆரம்பித்தான்.

“வீரபாண்டிய கட்டபொம்மன் நம்ம ஜாதியாடே”

நான் அமைதியாய் இருந்தேன்.

“நம்ம ஜாதிலே ஏ, பி , சி, , டி ன்னு பிரிவு இருக்கு தெரியுமா? என்றான்.

“அப்படியாடே. என்னது அது”

“இந்த சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர் பக்கம் உள்ளவங்க எல்லாம் ’ஏ’ கிளாஸாம்.”

அவன் சொன்ன கணக்குபடி சாத்தான்குளத்துகாரணான நான் ‘சி’ கிளாஸில் வந்தேன்.நல்லவேளை “டி”
கிளாஸ் இல்ல என்று மனம் நிம்மதியா இருந்தது.

நான் ஆரம்பித்தேன் “ ஆனா வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் ஜாதின்னு நினைக்கிறேன்” என்றேன்.

அது குமார லிங்கேஸ்வருன்னுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்று அவன் முக பாவனையிலேயே தெரிந்தது.

நானும் குமார லிங்கேஸ்வரனும் அந்த ஏழாம் வகுப்பு ஃபிரீ பிரியடை எப்படி ஆக்க பூர்வமாக கலை இலக்கியத்துக்கு அர்பணிக்க போறோம் என்கிற போதுதான், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை வரைந்து மறுநாள் டிராயிங் பிரியடில் டிராயிங் சாருக்கு காட்டலாம் என்று ஐடியா சொன்னேன்.

எனக்கு லிங்கேஸ்வரனை விட நன்றாய் படம் வரைய வரும் என்பதும் ஒரு காரணம்.

ஆளுக்கொரு வெள்ளை பேப்பரை எடுத்தோம்.

லிங்கேஸ் கட்டபொம்மனின் கண்களை வரைந்தான்.

அது கோணலாகி விட்டது.

நமுட்டு சிரிப்பு சிரித்தேன்.

நானோ, தமிழ் பாட புக்கில் உள்ள கட்டபொம்மன் படத்தில் ஒரு பெரிய கட்டம் வரைந்து, அதை சிறு சிறு கட்டமாக்கினேன்.

நெடுக்குவாக்கில் நம்பரும். படுத்த வாக்கில் ஏ பி சி டியும் எழுதினேன்.

அதே கட்டத்தை வெள்ளை பேப்பரிலும் போட்டேன்.

இப்போ ஏ8 இல் படத்தில் என்ன இருக்கிறது.சிறு அரைவட்டம் இருக்கிறது? அதே ஏ8 வெள்ளைதாளிலும் அதே அரைவட்டத்தை வரைய வேண்டும்.

இப்படி கட்டம் கட்டமாக வரைந்தால் வீரபாண்டி கட்டபொம்மனை எளிதாக வெள்ளை பேப்பரில் கொண்டு வந்து விடலாம்தானே.

லிங்கேஸ் கண்களை முடித்திருந்தான்.

பேப்பரில் அழுத்தமாக வரைந்திருந்தான். அது கோணலாக இருந்தாலும் தான் வரைந்தது சரி என்பது போன்ற தன்ன்மபிக்கையொடு வரைந்திருந்தான்.

நான் மெல்ல கோடுகளை போட்டு, அழித்து பக்காவா வரனும்கிறத்துக்காக போராடி கொண்டிருந்தேன்.

சாப்பாடை தட்டில் போட்டு ரொம்ப நேரம் முன்னாடியே இருந்தால் வரும் எரிச்சல் வந்தது.

பேப்பரை பையில் வைத்து வீட்டில் போய் வரைந்து கொள்ளலாம் . என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

குமார லிங்கேஸ் மூக்கை முடித்து மீசைக்கு வந்துவிட்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் பெல் அடிக்கும் போது வீரபாண்டிய கட்டபொம்மனை வரைந்து முடித்திருந்தான்.

அவன் தாளில், அவன் மனதை குவியவைத்து, அவனை மட்டுமே நம்பி , என் பேப்பரை , நான் என்ன வரைகிறேன் என்பதை சற்றும் சட்டை செய்யாமல் வரைந்து முடித்தே விட்டான்.

தனி தனியே பார்க்கும் போது அதில் நிறைய விமர்சனம் இருந்தாலும் மொத்தமாய் பார்க்க நன்றாகவே இருக்கிறது என்று டிராயிங் சார் அதை புகழ, என் பேப்பரை எடுத்து பார்த்தேன்.

அதில் கட்டங்கள் மட்டுமே இருந்தன. அதை வரைந்து முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

அதை சுக்கு நூறாக கிழித்து வீசி, நாளை இதைவிட நல்ல படத்தை வரைவேன் என்று எனக்குள்ளே சொல்லி கொள்கிறேன்.

பிற்காலத்தில் ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தை படிக்கும் போது “ வேலையை செய்ய ஆரம்பியுங்கள். அது சுமாராக வந்தாலும் பரவாயில்லை. வேலையை முடியுங்கள்.நன்கு திட்டமிடுறேன் என்று வேலை செய்யாமல் இருப்பதற்கு,தெரிந்ததை வைத்து வேலையை ஆரம்பித்து முடியுங்கள். அது கொடுக்கும் தன்னபிக்கை அலாதியானது” என்ற வாசகத்தை படிக்கும் போது குமார லிங்கேஸ்வரன் நினைவுக்கு வந்தான்.வீரபாண்டிய கட்டபொம்மனும்தான்.

2 comments:

  1. கடைசி பாரா அருமை. நச்சு .
    //.நன்கு திட்டமிடுறேன் என்று வேலை செய்யாமல் இருப்பதற்கு,தெரிந்ததை வைத்து வேலையை ஆரம்பித்து முடியுங்கள். அது கொடுக்கும் தன்னபிக்கை அலாதியானது”
    உண்மை தான் :)

    ReplyDelete