Tuesday, 14 August 2012

கதை போல ஒன்று - 39

இரவு ஒன்பதரை மணி அளவில் கதவை வேகமாக தட்டும் ஒசை கேட்டது.

செவ்வாய்கிழமைதான் அப்பாவுக்கு கடை லீவு என்பதாலும், அன்று தான் இரவு ”ஏழரை டு எட்டரை” தூர்தர்சனில்,முழு நீள நாடகம் வரும் என்பதாலும் அந்த நாள் எனக்கும் அண்ணணுக்கும் இன்பமான நாள்.

நாடகம் முடிந்து, நாடகத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது , இரவு ஒன்பதரை மணி அளவில், கரண்ட் போன சமயத்தில்தான் கதவை வேகமாக தட்டும் ஒசையும் கேட்
டது.

அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் பயத்துடனே வாசல் கதவு பக்கம் வந்தனர். நானும் அண்ணனும் ஆர்வத்துடன்.

கதவை திறந்தால் அங்கே ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.

முகம் வேர்ந்திருந்தது.

கண்களில் நீர் நிறைய அப்பாவிடம் கையடுத்து கும்பிட்டபடி “யண்ணே வேல முடிஞ்சி இப்பத்தான் வரேன் பாத்துகிடுங்க, வந்தா பின்னாடியே எவனோ ஒருத்தன் வாரான் அண்ணாச்சி. கிட்ட வந்துட்டான். நான் ஒடன உங்க வீட்டுக்கு வந்துட்டேன். பயமா இருக்குண்ணே “ என்று முடிக்கும் போது குரலை உயர்த்து அழுதாள்.

அம்மா தண்ணீர் கொடுத்தாள்.

அப்பா இரண்டு டார்ச் லைட்டை எடுத்து கொண்டார்.

ஒன்றை எனக்கும் மற்றொன்றை அவரும் வைத்து கொண்டு, அம்மாவிடம் அண்ணனிடமும் கதவை பூட்டிகொள்ள சொல்லிவிட்டு. நடந்தார்.

நானும் அந்த பெண்ணும் அவரை பின் தொடர்ந்தோம்.

எதற்கு என்னையும் அழைத்து போகிறார் என்று தெரியவில்லை.

ஒருவேளை இளம்பெண்ணுடன் இரவு வேளையில் தனியே நடப்பது சமூகத்திற்கும் பிடிக்காமல் இருக்கலாம் என்று அப்பா நினைத்திருக்கலாம்.

“உன் வீடு எங்க இருக்குமா” அப்பா கேட்டார்.

“கார்மல் ஸ்கூல் பின் கேட் இருக்குல்லா அண்ணாச்சி .அங்க ஒரு கொல்லாவிளை (முந்திரிமரம் விளை) இருக்க. அங்குனதான் இருக்கோம்”

“ம்ம்ம். உன் பேரென்ன. எதுக்கு இந்த சமயத்துல வாரா நீ இந்த கசம் இருட்டுக்குள்ள”

“பேரு எவாஞ்சிலின் அண்ணே. நான் ஸ்விட்ச்போர்டு கம்பெனில வேல செய்றேன். இன்னைக்கு டபுள் டியூட்டி அண்ணே. அம்மாவ நாளைக்கு ஜெயசேகர் டாக்டர்கிட்ட கூட்டி போனோம் அதான்”

“என்னம்மா நீ ஒரு வயசுக்கு வந்த பொண்ணு. இந்த டைம்லயா வருவே. கொன்னு பொதர்ல வீசிருவான்”

அப்பா படபடப்பாய் பேசினார். எவாஞ்சிலின் பதில் பேசவில்லை.

நாகர்கோவிலின் பார்க் ரோடு இருட்டை இப்போது நினைத்தாலும் பயம் வரும்.

தெருவிளக்கே அனேகமாக இருக்காது.

எங்காவது ஒன்றிரண்டு. குகைக்குள் பயணித்தாற் போல பயணிக்க வேண்டும்.

எட்டாம் வகுப்பே படிக்கும் எனக்கு அந்த இருட்டில் நடப்பது கிலியாக இருந்தது.

அப்பாவும் வருகிறார்தான். இருந்தாலும் பயம்.

எவாஞ்சிலின் பயத்தோடு அங்கும் இங்கும் பார்த்து கொண்டு வேகமாக நடக்கிறாள்.

இருட்டில் “தம்பி அக்கா கைய பிடிச்சிக்கோ பிள்ளோ “ என்று என் கையை எடுத்து அவள் கையை பிடிக்க வைக்கிறார்.

அந்த உணர்வு பிடித்தே இருக்கிறது எனக்கு. அவள் கைகள் சுரசுரப்பாக இருப்பினும் அதுவும் சுகமாய்த்தான் இருக்கிறது.

எவாஞ்சிலின் உயரமானவள் என்பாதால், நான் அவள் இடுப்பு உயரமே இருக்கிறேன்.

அம்மன் கோவிலை கடக்கும் போது , வெளிச்சத்தில் எவாஞ்சிலினை பார்க்கிறேன்.

முப்பது வயது இருக்கும்.

அழகாய்த்தான் இருக்கிறாள்.கடைந்தெடுத்த வனப்பைத்தான் பெற்றிருக்கிறாள்.அதிரசத்திற்குபிசைந்து வைத்த பாகு மாவாய் வயிறு என் கண்முன்னே பளபளத்தது.

ரோட்டை தாண்டி செம்மண் விளைகளுக்குள் போகிறோம். அப்பா டார்ச்ச சரியா புடி! சரியா புடி! என்று சொல்லி கொண்டே வருகிறார்.

அந்த கொல்லாம்விளையின் நடுவே குடிசையில் சிறிய மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருக்க, அதுதான் தன் வீடென்று எவாஞ்சிலின் சொல்ல, விட்டை அடைந்தோம்.

வீடு வந்ததும் எவாஞ்சலினுக்கு உற்சாகம் வந்தது.

சுறுசுறுபாய் உள்ளே கூப்பிட்டாள்.

அப்பா மறுக்க , ”தம்பி நான் கூப்பிடுறேன்ல உள்ள வாடே பிள்ளே”என்னை செல்லமாக உள்ளே இழுத்தாள்.

எவாஞ்சிலின் அப்பா “மாம்பட்டை “ குடித்து விட்டு வீட்டினுள்ளே வாந்தியும் எடுத்து விட்டு மலந்து தூங்கி கொண்டிருந்தார்.

அவரை சுற்றி வாந்தியிலுள்ள சோற்று பருக்கைகள் குளுகுளுப்பாய் பரவி இருந்தன.

அதன் பக்கத்தில் சட்டியில் சோறும் பழைய மீன்குழம்பும்.

மேலே கட கட என்று சத்தமாய் ஒடும் பழுப்பு நிற பேன்.

கொத்த வேலைக்கான கடப்பாரை மண்வெட்டி பிக்காஸு பாண்டை எல்லாம் ஒரு இடத்தில் இரும்பின் மணத்தை கொடுத்தபடி.

காலில் பெரிய கட்டோடு , கால் முறிந்த அம்மா.

அந்த கால் கட்டில் இருந்து வீசிய, வேர்வையோடு கலந்த தைல நாத்தம்.

எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கும் ”இயேசப்பா”

”அண்ணே டீ குடிக்கிறியளா. தம்பி டேய் டீ குடிக்கிறியா”

அப்பாவும் நானும் மறுத்து விட்டு திரும்பும் போது எவாஞ்சலினை நினைத்து பாவமாய் இருந்தது.

அம்பது அடி நடக்கும் போது டார்ச் லைட்டை எவாஞ்சலின் வீட்டில் விட்டு விட்டதை நினைத்து அப்பாவிடம் சொல்லி ஒடி போய் எடுக்க போனேன்.

எவாஞ்சலின் , விந்து துளிகள் மூலம் தன்னை உருவாக்கிய அவள் குடிகார அப்பாவின் வாந்தியை கையால் வழித்து ஒரு தேங்காய் சிரட்டையில் இட்டு கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வர வர , சீக்கிரம் படித்து பெரிய ஆளாகி , எவாஞ்சிலினை கல்யாணம் செய்து அந்த கொல்லாம்விளையிருந்து கூட்டி வந்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டே வந்தேன்.

No comments:

Post a Comment