Friday 24 August 2012

கதை போல ஒன்று - 41


”நீதான் பொம்பள பிள்ளையா பொறக்கனுமுன்னு ரொம்ப ஆசைபட்டேன்” என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்.

அது மாதிரியே பெண் எப்படி தன் அம்மாவிடம் அதிகம் பேசுவாளோ, அது மாதிரி பேசிக்கொண்டே இருப்பேன்.

பேச்சு பேச்சு பேச்சு.

அம்மாவும் சலிக்காமல் பேசுவார்.

தான், தன் மாமியாரிடமும் நாத்தனார்களிடம் பட்ட கஸ்டத்தை சுவாரஸ்யமாய் சொல்லுவார்.

தினமும் மூன்று கிலோ சப்பாத்தி மாவு பிசைந்து சப்பாத்தி போட்டதை,

மாம்பழம் சாப்பிட்டு , சாப்பிட்ட இடத்திலேயே போட்டு போய்விடும் நாத்தனார்களின் அறிவின்மையை பொறுத்து,தானே சுத்தம் செய்ததை,

அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து தண்ணீர் பிடித்து எல்லா டிரம்களையும் பாத்திரங்களையும் நிறைத்து விடிய, குடும்பம் மொத்தமும் அதை குளித்து முடிக்க, தனக்கு தண்ணி இல்லாததை,

தான் அதிகமான ரத்த போக்கோடு படுக்கையில் கிடக்கும் போது யாருமே சாப்பாடு கொடுக்காமல், பக்கத்து வீட்டு பெண் வந்து ஊட்டி விட்டு போனதை,

மண்ணென்னெய் ஸ்டவ் கூட இல்லாமல், விறகடுப்பையும் மரப்பொடி அடுப்பையும் ஊதி ஊதி இருமியதையும் சொல்வார்.

கோவம் வரும். அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று கத்துவேன்.

காலை ஆறு மணியிலிருந்து இரவு பதினோறு மணிவரை கடையில் இருந்து வரும் அப்பாவிடம் எல்லாத்தையும் சொன்னால் அவர் நிம்மதி போய்விடும் என்பார்.

அத்தை குழந்தை பேறுக்காக பிறந்த வீடு வந்த போது அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்தார். ஆனால் பிள்ளை பெற்று வீட்டுக்கு போகும் போது அந்த அத்தை, அம்மாவிடம் சொல்லாமலே போய்விட்டார். அதை சொல்லும் போது அம்மாவின் கண்கலங்கும்.

அம்மாவின் இன்னொரு முகம் இலக்கிய முகம் லக்க்ஷ்மி, கல்கி, ஜெயகாந்தன், அசோகமித்தரன் என்று பேசுவார், தான் வீட்டில் இருக்கும் போது மணியன் கதைகள்தான் பிடிக்கும் என்றும், அந்த வயதிற்கு மணியன் படிக்க நல்லாயிருக்கும் என்பார்.

கல்யாணத்துக்கு பிறகு படிப்பதே போய்விட்டது என்று வருத்தபடுவார். சிவாகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும் தினமும் வாசித்து கதை சொல்லுவார்.

அம்மாவின் தத்துவங்களிலேயே பிடித்தது “வாழ்க்கை என்பது அறுபது வருடம் பொழுதை போக்குவது. அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் , அதற்கு மேல் அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது”.

வியாபாரத்தில் நஸ்டம் வந்து, வீட்டில் ஏழ்மை எட்டி பார்த்து “ மே ஐ கம் இன் “ என்று சொல்லும் போதுதான் , அம்மா அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தான் டியூசன் எடுக்க போவதாகவும், அதை எப்போதும் போல யாரும் தடுக்க கூடாதென்றும் சொன்னார். வழக்கமாக இதை தடுத்து விடும் அப்பாவால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அம்மா டியூசன் எடுக்கிறேன் என்றதும் அந்த ஏரியாவின் எளிய மக்கள் ஒன்றிலிருந்து எட்டு வரை படிக்கும் தங்கள் பிள்ளைகளை அனுப்ப, வீடு களைகட்டியது.

அது டியூசனா அல்லது அறிவொளி இயக்கமா என்றூ நாங்கள் கிண்டல் செய்வோம். ஏனென்றால் யாருக்கும் அடிப்படையே தெரியாது. ரெண்டு தேங்காய் பத்து ரூபாய். அப்போ ஒரு தேங்காய் எவ்வளவு என்று தெரியாது.

அம்மா சலிக்கவில்லை சொல்லி கொடுத்தார். அந்த காலகட்டத்தில்தான் அம்மாவின் பொறுமையை பார்த்தேன்.

கடை வியாபாரம் மறுபடியும் ஒழுங்கானது.

ஆனாலும் அம்மா டீயூசன் எடுப்பதை விடவே இல்லை.

அந்த அரை ஆண்டு தேர்வில் தன்னிடம் படித்தவர்களில் பாதி பேர் பாஸாகும் படி செய்தார்.

அம்மாவிடம் படித்த, ’பாபு’ என்ற ஆறாம் வ்குப்பு பையன் வகுப்பில் எட்டாம் ரேங்க் எடுந்திருந்தான்.
அவன் அம்மா வந்து , திரும்ப திரும்ப அம்மாவுக்கு நன்றி சொல்லி ஒரு’ நாட்டு பப்பாளி பழமும், மரச்சீனி கிழங்கும் கொடுத்து போனார்.

மறுநாள் காலை அம்மா எனக்கு தோசை சுட்டு கொடுத்து கொண்டே சொன்னார் “ நான் பத்தாம் வகுப்புல நல்ல மார்க் வாங்கினப்போ என் அப்பா என்ன புகழ்ந்தாங்க. அன்னைக்கு சந்தோசத்துல நல்லா தூங்கினேன். அப்புறம் படிக்க முடியல. அப்புறம் கல்யாணம், அப்புறம் நீங்க எல்லாரும் பிறந்து, உங்கள வளத்து, வாழ்க்கை போனாலும், ரொம்ப வருசத்துக்கப்புறம் நேத்துதான் நல்லா சட்டமா, நிம்மதியா மனசார தூங்கினேன் விஜய்” என்றார்.

தோசைமாவை வட்டமாக்கி கொண்டிருந்த அம்மாவை பார்த்தேன்.

அவர் வாழ்க்கையில் அர்த்தம் வந்து சேர்ந்தது மாதிரிதான் தெரிந்தது.

No comments:

Post a Comment