Saturday, 11 August 2012

கதை போல் ஒன்று - 38”பிரேஸ்லட்” வாங்கலாம் என்று பல குழப்பங்களுக்களிடையே முடிவு செய்து விட்டேன்.

கல்யாணமாகி முதல் வருடம் கல்யாண நாளை கொண்டாட போகிறோம்.. அசத்திடனும் என்கிற வெறியாய் இந்த முடிவை எடுத்தேன்.

தங்கத்தை பத்தி எதுவுமே தெரியாமல் அந்த பிரபலமான தி.நகர் தங்க மாளிகைக்குள் நுழைந்தேன்.

”என்ன சார் வேணும்”

“லேடீஸ் போடுறா மாதிரி ஒரு நல்ல பிரேஸ்லட். ஒரு பவுன் ரேஞ்சில கொடுங்க”

“இத பாருங்க. இது ஆர்டினரி மாடல். இது கேரளா மாடல், இது பேசன் ஜுவல்லரி டைப்ல “

பார்த்தேன் .

இந்த பங்கார நகைகள் எல்லாமே அழகாய் இருக்கிறதே. எதை எடுக்க. ஒவ்வொன்றாய் கையில் வைத்து பார்த்தேன்.

விற்பனை செய்த பெண், தன் கைகளிலும் வைத்து காட்டினாள்.அவள் அழகான கைகளை வேக்சிங் செய்தால் இன்னும் அழகாய் இருப்பாள் என்று தோண்றிற்று.

இவளை மடக்க வேண்டுமென்றால் காசை காட்ட வேண்டுமா இல்லை செண்டிமெண்டால் அடிக்க வேண்டுமா ?

இவளுக்கு சம்பளம் எவ்வளவு இருக்கும். இதே பிரேஸ்லட்டை இவளுக்கே பரிசாய் கொடுத்தால் என்ன வேண்டாம் என்றா சொல்லி விடுவாள்! இப்படி போன சிந்தனையை கலைத்து கடைசியாய் சேதாரம் அதிகமானாலும் பரவாயில்லை , கேரளா மாடல் பிரேஸ்லட்டே வாங்கிவிடுவோம் என்று முடிவு செய்தேன்.

எஸ்டிமேசனில் செய்கூலி இருநூற்றம்பது போட்டிருந்தார்கள்.தோழி என்னிடம் முதலிலேயே சொல்லி இருந்தாள் செய்கூலி எல்லாம் கிடையாது. அடித்து பேசு என்று.

நானும் “செய்கூலியெல்லாம் ஏன் போடுறீங்க அதெல்லாம் இப்ப யார் போடுறாங்க “ என்று கூற சூப்பர்வைசர் வந்தார்.

அவரை பார்த்துமே தவறாமல் சஸ்டி விரதம் இருந்து , பால் பழம் சாப்பிட்டு, பிச்சைகாரகளை கண்டு அருவருத்து செல்லும் மிடில் கிளாஸ் கனவான் போலத்தான் இருந்தார்.

“சரி சார். செய்கூலிய இல்லாம பண்ணிருரேன்”

நகை வாங்கியாகிவிட்டது. அதை பேக் செய்து பத்திரமாக பையில் வைத்தேன். மனைவியடம் சொல்ல வில்லை.

இரவு பண்ணிரெண்டு மணி அடித்தது. என்னளுக்கு வாழ்த்து சொன்னேன்.

ரோஜா இதழில் முத்தம் கொடுப்பது போல் மென்மையாக கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். அப்போது அந்த சேல்ஸ் அம்மாயியின் கன்னம் ஏனோ நினைவுக்கு வந்தது.

தலையை உதறி. பிரேஸ்டலட்டை பரிசளிக்கும் போது , விளம்பரத்தில் வருவது போல் விழியை அகல விரிக்காதது கொஞ்சம் கடுப்புதான்.

ஆசையாய் வாங்கி கையில் வைத்தி பிரேஸ்லட்டின் கண்ணியை கொக்கி போட்டாள் பாருங்கள்.

கண்ணி பூட்டாய் பிய்ந்து விட்டது.

அதிர்ச்சி.உற்று பார்க்கிறேன். அது பிய்ந்து விட்டது என்பதை கிரகிக்கவே நேரம் ஆனது.

என் பதட்டம் பார்த்து வைஃப் சமாதானபடுத்த, இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.

மறுநாள் காலை ஏழுமணி அளவில் பிறந்தநாள் அர்ச்சனை செய்ய மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.

மகிழ்ச்சியாய் இருக்க முடியவில்லை.

எப்படா காலை பத்து மணியாகும். பிரேஸ்லட்டை மாற்ற போகிறோம் என்று காத்திருந்தேன்.

ஆட்டோ பிடித்து கடை வாசலில் இறங்கும் போது கோவம் அதிகமாகியது.அடக்கி வைத்த சிறுநீர் வீடு வந்த பிறகு அடக்கமுடியாமல் முட்டுவது போல

உள்ளே போய் அதே சூப்பர்வைஸரிடம் நகையின் ஆக்கத்தை சொன்னேன். கத்தினேன்.

அவர் பிரேஸ்ட்டை வாங்கி சோதித்தார்.

”நீங்கள் எதாவது அந்த பிரேஸ்லட் கண்ணியை அதிகமாக இழுத்தீங்களா ?” என்று நக்கல் தொனியில் கேட்டார்.

 ஒரு விஞ்ஞானி இரண்டு பெரிய கிண்ண்ங்களை சேர்த்து அதிலுள்ள காற்றை உறிந்து , இந்த பக்கம் எட்டு குதிரைகளையும் , அந்த பக்கம் எட்டு குதிரைகளையும் விட்டு இழுக்க வைத்தாராமே, அது மாதிரி பிரேஸ்லட்டை குதிரை கட்டியா இழுத்தேன் என்று நினைத்து கொண்டேன்.

கடையே அதிரும்படியாக கத்தினதும் இன்னொரு பெரியவர் வந்து, என்ன விசயம் என்று கேட்டு என்னிடம் சள்ளென்று விழுந்தார்.

“ஏங்க இப்படி ஆவியா போறீங்க. என்ன பெரிய தப்பு நடந்துச்சு. கண்ணி அறுந்து போறது பெரிய விசயமா ? வேற நகை மாத்திக்கோங்க. அவ்வளவுதான. அதுக்கு இப்படியா கத்துவீங்க டீசன்சி இல்லாம. போங்க வேற டிசைன் பாருங்க. ஏம்மா இவருக்கு  டிசைன் காட்டுமா ? “ என்றார்.

அசந்து நின்றேன்.

குறைந்த பட்சம் “ஸாரி” கூட கேட்கவில்லை யாரும். என்ன திமிர் இவர்களுக்கு. என்ன செய்ய முடியும்.

அவர்களை பொறுத்தவரை நான் ,ஆயிரக்கணக்கான இலைகளில் ஒரு இலை. கோடிக்கணக்கான் நீர் துளிகளில் ஓர் துளி.

நேற்று பார்த்த அதே சேல்ஸ் பெண் கனிவாக பல டிசைன் காட்டினாள்.

இன்று என் கல்யாண நாள் என்று தெரிந்து கொண்டவள், வாழ்த்து சொன்னாள்.

”நடந்தது நடந்து போச்சு. இதபாருங்க சார் இந்த டிசைன்ல கண்ணியும் நல்லா இருக்கு, மாடலும் நல்லா இருக்கு. டென்சன் ஆகாதீங்க சார்.தண்ணி குடிங்க சார். உங்களுக்கு கொஞ்சம் பெரிய பேக் தரசொல்றேன் சார். என்னால அது மட்டும்தான் செய்யமுடியும் ”என்றாள்.

ஆறுதலாய் பேசிய அவளை பார்க்கும் போது , நேற்று பார்த்த பெண் மாதிரி கண்களுக்கு தெரியவில்லை.

No comments:

Post a Comment