Friday, 31 August 2012

கதை போல ஒன்று - 44

புர்க்கா போட்டு கொண்டு அவள் அங்கிருந்தாள்.

ஹைதிராபாத்தில் வேலைக்கு சேர்ந்திருந்த புதிது.

ஜே.என்.டி.யூ ஜங்சனில், ஆபீஸ் வேனில் இருந்து இறங்கவும் மழை பெய்த்தது.

சிவனின் தாண்டவத்தை போன்ற ஆவேசமான மழை.

தாவி ஒடி அந்த சூப்பர் மார்க்கட்டின் மேல் தளத்தில் உள்ள ஏ.டி.எம் செண்டர் பக்கத்தில் நின்றேன்.பலரும் மழைக்கு ஒதுங்கி நிற்க, எனக்கு நிற்க இடமே கிடைக்கவில்லை.

புர்க்கா போட்டு கொண்டு அவள் அங்கிருந்தாள். அவள் அருகே நின்று கொண்டேன்.

மழை விட்டபாடில்லை. மழையை பார்த்து, கூட்டத்தை பார்த்து அவளை பார்க்கிறேன். சிநேகமாக முகத்தை வைத்து “என்னிடம் தாராளாமாய் பேசலாம்” என்பது மாதிரியான சிக்னல் கொடுக்கிறேன்.

“நல்ல மழை இல்லை “என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

“ஆம் நல்ல மழை.நீங்கள் கல்லூரியா படிக்கிறீர்கள்” என்று ஆரம்பித்தேன். ஒரே மகிழ்ச்சி.

“இல்லை நான் படித்து முடித்து விட்டு வேலை தேடுகிறேன்” இப்போது முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிவிட்டு பேசினாள்.இராணிய முகம். அழகுதான். சரி போற வரைக்கும் போகட்டும் என்று பேசினேன்.

”என்ன படித்திருக்கிறீர்கள்”

”பி.எஸ்.சி சுவாலஜி. நான் வேலை தேடி கொண்டிருக்கிறேன். உங்களால் உதவி செய்ய முடியுமா”?

நான் திகைத்தேன். நல்லா பேசுவேன். ஆனால் பிராக்டிக்கலா உதவின்னு யாராவது கேட்டா என்னால் அந்த அளவுக்கு திறம்பட செய்ய முடியாது.

“என்னால் உதவ முடியும்” என்றேன்.

கூட்டம் எங்களையே பார்த்து கொண்டிருந்தது.

ஏன் இந்த கூட்டம் பெண்ணிடம் பேசினாலே இப்படி நினைக்கிறது என்று மனதிற்குள் அங்கலாய்த்தேன். நீயும் இந்த கூட்டத்தில் இருந்தால் இப்படித்தான் இருப்பாய் என்றும் நினைத்து கொண்டேன்.

பல சமயம் பெண்களிடம் பேசுவதையையே இப்படி பெருமையாய் நினைக்கிறேன். அக்கா தங்கைகளோடு பிறக்காததினால் பெண்கள் உலகமே தெரியாமல், பெண்ணை பார்த்தாலே “ பே” என்று வாய்பிளக்கும் மனபாவம் வந்து விட்டதோ.

இதோ இவளிடம் ஏன் பேசிகொண்டிருக்கிறாய்.இவளிடம் உனக்கு என்ன வேண்டும். காதலா? காமமா? அல்லது ஒன்றிரண்டு உரசல்களா? முத்தமா?

முட்டாளா நான்?

“நீங்கள் இதை பாருங்கள்” என்று ஒரு பைலை நீட்டினாள்.

அம்பதாயிரம் பாங்க் லோன் அப்பளை செய்த ஆவணங்கள். திரும்ப அவளிடம் கொடுத்தேன்.

“நீங்கள் எனக்கு பத்தாயிரம் ருபாய் கொடுக்க வேண்டும்.ஃப்ளீஸ்”

அதிர்ந்தேன். அவள் குரலே மாறியிருந்தது. பார்த்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை பத்தாயிரம் கேட்கிறாளே. மாட்டிகொண்டோமோ. பணம் பறிப்பவளா இவள். ஹைதிராபாத்துக்கு வந்த இரண்டாம் நாளே இப்படி ஆகிவிட்டதே. சபலத்தால் மாட்டி கொண்டேனே.

ஆனால் அவள் முகத்தை பார்க்க அப்பாவியாய்தான் இருந்தது.

கையை குவித்து கேட்க ஆரம்பித்து விட்டாள்..

கூட்டம் எங்களையே பார்க்க பயம் வந்தது. இவள் எதாவது சத்தம் போட்டால் தர்ம அடி குடுப்பான்கள் இந்த தெலுங்கன்கள்.

என்ன செய்ய. யோசித்தேன்.

இப்போது அவளே ஒரு டீலுக்கு வந்தாள்.

“சரி நூறு ரூபாயாவது கொடு”

நான் கொடுக்க முடியாது என்று தலையை அசைத்தேன். அந்த தலையசைப்பிலே பலவீனம் தெரிந்தது.

”ஃப்ளீஸ் கொடு கொடு “

நான் அம்பது ரூபாயை எடுத்து கொடுத்தேன்.

“நீ சாப்பிட்டு விட்டாயா? காபி குடிக்கலாமா? கிழே கடையில் பேல் பூரி, பானி பூரி, சமோசா சேட் சாபிடலாமா? காலையில் இருந்து நான் சாப்பிடவே இல்லை. வாங்கி தருகிறாயா என்றாள்.

அவள் முகத்தை பதட்டமாக பார்த்தேன்.

“இந்த அம்பது ரூபாய் அம்மாவுக்கும், தம்பிக்கும் சாப்பாடு வாங்கதான் சரியாய் இருக்கும். எனக்கு பசிக்கிறது” என்றாள்.

இவளிடம் இருந்து பிரச்சனை இல்லாமல் எப்படி தப்பிப்பது என்றே யோசித்தேன். எந்த நேரமும் சட்டென்று உடைந்து அழுபவள் போன்றிருந்தது அவள் குரல்.

“இங்கு கூட்டம் அதிகமாய் இருக்கிறது. ரோட்டை கிராஸ் செய்து அந்த பக்கம் போய் நில்லு.” நான் உனக்கு சாப்பிட பணம் தருகிறேன்.இங்கு கூட்டம் நம்மையே பார்க்கிறது” என்றேன்.

“இல்லை நீ ஏமாற்றி விடுவாய்”

“சத்தியமாக நான் ஏமாற்ற மாட்டேன் நீ போ”

“நீ ஏமாற்றி விடாதே. இந்த மழைக்கு தலையை சுத்தி கொண்டு வருகிறது. பணமாக கொடுக்க முடியவில்லை என்றால் காபியாவது வாங்கி கொடு” என்றாள்.

பக்கத்தில் இருந்த கோயிலை காண்பித்து. ”அந்த சாமி மேல பிராமிஸ் நான் உன்னை ஏமாத்த மாட்டேன்”
என்றேன்.

கடைசியில் அவள் சம்மதித்து குடையை விரித்து ரோட்டை கிராஸ் செய்ய ஆரம்பித்தாள். சட்டென்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று, மழையில் நனைந்தபடியெ, இடது பக்கம் ரோட்டை அடைந்து , ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வர “ஏன் மழையில் நனைந்து கொண்டு வருகிறீர்கள்” என்று ஹவுஸ் ஒனர் கேட்டார்.

வீட்டிற்கு வந்து, தலையை துவட்டி டீ போட்டு குடிக்கும் போதுதான் நிம்மதி வந்தது.

இனிமேல் புதிதாய் முன்பின் தெரியாத பெண்களிடம் ஹைதிராபாத்தில் .பேசும் போது கவனமாய் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

அன்றிரவு மூன்று மணியளவில் “நீ சாப்பிட்டு விட்டாயா? காபி குடிக்கலாமா? கிழே கடையில் பேல் பூரி, பானி பூரி, சமோசா சேட் சாபிடலாமா? காலையில் இருந்து நான் சாப்பிடவே இல்லை. வாங்கி தருகிறாயா ” என்று அவள் அப்பாவியாய் கேட்டது நினைவுக்கு வந்தது.

தூங்க முடியவில்லை.

Tuesday, 28 August 2012

கதை போல ஒன்று - 43


கதை போல ஒன்று - 43

”எனக்கு அம்மாவை விட சித்தியைதான் பிடிக்கும்” என்றான் எட்டே வயதான விஜய்.

பெருமை தாங்காமல் சித்தி  அணைத்து கொண்டாள்.

இரண்டாம் வகுப்பிலிருந்து இரண்டு வருடமாக ஏப்ரல் லீவுக்கு ஆச்சி வீட்டிற்கு வருகிறான்.

சித்தியின் பாசத்தில் இருக்கும் “பிரக்ஷ்னஸ்” அவனை ஈர்த்திருக்கலாம்.

அல்லது சித்தி கேட்கும் போதெல்லாம் உரலில் எள்ளும் கருப்பட்டியும் போட்டு இடித்து தரும் எள்ளுருண்டையின் ருசியினால் பிடித்திருக்கலாம்.

மாலையானால் சித்தி பாடும் சஸ்டி கவசத்தின் இனிமை பிடித்திருக்கலாம்.

அல்லது கட்டில் பின்னி கொண்டிருக்கும் போது விஜய் என்னதான் தொந்தரவு செய்தாலும் அவனை திட்டாத பொறுமை பிடித்திருக்கலாம்.

போன வருடம் விஜய் லீவு முடிந்து நாகர்கோவில் போகும் போது, சித்தி பதினெட்டு கலர் கொண்ட “ வாட்டர் கலர்” பாக்ஸ் கொடுத்தாள்.

இவன் பண்ணிரண்டு கலர் கொண்ட வாட்டர் கலர் பாக்ஸ்தான் பார்த்திருக்கிறான்.

பச்சை கலரிலேயே மூன்று கலர். மஞ்சளிலேயே மூன்று என்று பிரமிக்க வைக்கும் விசயங்கள் உள்ள வாட்டர் கலர் பாக்ஸ்.

பச்சை கலரை வெள்ளைதாளில் அடிக்கும் போதெல்லாம் சித்தி கேட்ட கேள்வி நினைவுக்கு வரும்.

பச்சை கலர் சேலையை கட்டி கொண்டு “ இதில சித்தி எப்படி இருக்கேண்டா “ என்பாள்.

“நீங்க ’பேரட்’ மாதிரி இருக்கீங்க”

”யாரு மாதிரி செல்லம்”

“பேரட்.அதான் கிளி மாதிரி அழகா இருக்கீங்க”

விரிந்த சிரிப்பு. அரவணைப்பு. எச்சில் படாத முத்தம். தாய்மை.

சித்திக்கு நல்ல வரனே அமையவில்லை என்று அம்மா கவலை பட்டு கொண்டே இருப்பாள்.

”அவளுக்கு என்ன இல்ல. கலரா வெள்ளையா காயல் பட்டிணத்துகாரி மாதிரிதான் இருக்கா. ஆனாலும் வரன் அமைய மாட்டேங்குதே “ என்று சலிப்பாள்.

விஜய்க்கு என்னவோ சித்தி இப்படியே இருந்தால் தேவலாம் என்று தோண்றியது.

தாத்தா எல்லாரையும் ராமேஸ்வரம் அழைத்து , இருப்பத்தி ஏழு கிணற்றின்  தீர்த்த நீரை சித்தி மீது தெளித்தார்.

சித்திக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்று விஜய் கண்களை இருக்க மூடி வேண்டிக்கொண்டான்.

இறுக்க மூடும்போது சிகப்பு தோண்றி, இன்னும் இறுக்க கறுப்பு தெரிந்தது.

கறுப்பு அபசகுனமாயிற்றே என்று இமையின் இறுக்கத்தை தளர்த்தி மறுபடியும் சிகப்பிற்கு கொண்டு வந்து ராமரை கும்பிட்டான்.

அடுத்த மூன்று மாதத்தில் சித்தி கல்யாணத்துக்கு ஊருக்கு கிளம்பி போனான்.

கல்யாண வீட்டில் ’சித்தி’ வேறு சித்தியாக தோண்றினாள். பட்டு புடவை, ஜதை அலங்காரமும், தங்க நகையுமாய் வேறு ஆள் மாதிரி இருந்தாள்.

இவனை கூப்பிட்டாள். இவன் போகவில்லை. பிரிந்து விடும் சித்தியை நினைத்து அழுகை வந்தது.

பிரிவு எண்ணத்தின் புள்ளியின் விட்டம் அதிகமாகி அவன் மனம் முழுவது இருட்டாய் இருந்தது.

கவலையோடு வெளியே சுற்றி விட்டு  வந்து மணமேடையின் எதிர்த்த சேரில் உட்கார்ந்தான்.

கூட்டம் அதிகமாய் இருந்தது.

அப்போதுதான் சித்தியை மணமேடையில் பார்த்தான்.

ஒரு வயதான தாத்தா மாதிரி இருக்கும் மனிதரின் பக்கத்தில் சித்தி இருந்தார். திக்கென்றிருந்தது. பதறியது மனது. ஒடினான்.

வெறியும் பயமும் வெறுப்பும் பதட்டமும் அவனுடையது.

அம்மா ஏதோ எடுக்க உள்ளறையில் இருந்தாள்.

“யம்மா யம்மா” குரல் வரவில்லை.

“என்னடா”

விஜய் நெஞ்சை பிடித்து கொண்டான்.இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன விபரீதம் நடக்க போகிறது என்று அவனுக்கு தெரிகிறது.

“ என்னடா சொல்லு” அம்மா பயந்து கத்தினாள்.

மற்ற உறவுகார பெண்களும் சேர்ந்து பயந்து கத்துகிறார்கள்.

இவன் அழுது கமறிகொண்டே “ யம்மா மா... மாப்பிள்ளை பாருங்க வயசானாவரா ஐயோ யம்மா சித்... சித்தி பாவம்மா . வேண்டாம்மா. வேண்ட்டாம். ரொம்ப வயசான கிழவரும்மா அவர்” விக்கி விக்கி அழுதான்.

அம்மா வெளியே வந்து பார்த்து “ எல அது தாய்மாமாடா. ஆச்சிக்கு கூட பிறந்த அண்ணன் தம்பி கிடையாதுல்லா? அது ஆச்சிக்கு சித்தி பையன். செங்குலி தாத்தாடா.
நீ இதுவரை செங்குலி தாத்தாவ பாத்தது கிடையாதோ? அது மாப்பிள்ளை இல்லடா”

அம்மா சிரிப்பாய் சிரித்தாள். அதோ என்று காட்டினாள்.

அங்கே ஆறடி உயரமும், செதுக்கிய மீசையும், பட்டு வேஸ்டியும் கையில் பூங்கொத்துமாய் மாப்பிள்ளை வந்து கொண்டிருந்தார்.

சித்தி, பச்சை கலர் பட்டு புடவையில் நாணித்து அமர்ந்திருந்தாள்.


Saturday, 25 August 2012

கதை போல ஒன்று - 42

ராமர் லட்சுமணர் சீதா எல்லோரும் “பிளாஸ்டர் ஆப் பேரிஸ்’ மாதிரியான வெள்ளை சிலைகளில் இருப்பது பிடிக்கவே இல்லை.

“ஏன் பாஸ் இப்படி சாமி இப்படி பளிங்கு மாதிரி இருக்குது பக்தி பீலிங்கே வர மாட்டேங்குது.”

“டேய் அடங்குடா “ சுந்தர்ராஜன் சிரித்தார்.

டெல்லியின் துணை நகரங்களில் ஒன்றான குர்காவூனில், சிறிய கோவிலில் இருவரும் நின்று கொண்டிருந்தோம்.

நேருக்கு நேராக கும்பிடாமல் சைட் வாக்கில் நின்ற படி கும்பிட்டார், கைகளை உயர்த்தி.

காரணம் கேட்டதற்கு “மனுசனத்தான் நேருக்கு நேர் கும்பிடனும். சாமிய அப்படி கும்பிட கூடாது.” என்றார்.

முந்தின நாள் இரவு அவர் ஜாதியை கேட்டதற்கு சொன்னார் “ அப்பா எஸ்.சி டா அம்மா எம்.பி.சி”

சுந்தர்ராஜன் நெய்வேலி பக்கத்தில் உள்ள கிராமத்தில் படிப்பறிவே இல்லாத குடும்பத்தில் பிறந்து, பிளஸ் டூவில் பெயிலாகி கஸ்டபட்டு பாஸாகி, மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தார்.

நெய்வேலி லிக்னைட் கார்பிரேசனிலேயே காண்ட்ராக்ட் வேலையாக நாள் ஒன்றுக்கு என்பது ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார்.

“பாய்லர்” மீது, படிக்கும் போதே ஒரு மோகம்.

எப்படியாவது பாய்லர் டிசைன் கற்று கொள்ள வேண்டும் என்று தீராத ஆசையினால் , அதிகாரியிடம் நச்சரிக்க, அவர் டீக்கடையில் சிகரட் அட்டையில் வரைந்து சொல்லி கொடுத்த, முதல் பாய்லர் வகுப்பு நோட்ஸ், ”சிகரட் அட்டையை” இப்போதும் வைத்திருப்பார்.

பி.ஹச்.எல் லில் ரெண்டே ரெண்டு டிசைன் அப்பரண்டீஸ்தான் எடுக்கிறார்கள் என்று தெரிந்து, அதில் ஒன்றை பெற்று டிசைன் துறைக்கு வந்த பிறகு ஏறுமுகம்தான்.

இப்போது டெக்னிக்கல் லீட் இன்ஜினயராக மாதம் எண்பதாயிரம் சம்பளத்திற்கு குர்காவூன் வந்திருக்கிறார்.

எனக்கு சீனியர் ஆகையாலும், நானும் அவரும் ஒரே அறையில் இருப்பதாலும் அவர் மீது மரியாதை உண்டு.

டெக்னிக்கலா நிறைய கேள்வி கேட்பார்.பயத்தை கொடுக்கும், அவருடைய ஆழமான அறிவு . எது சொன்னாலும் பேப்பரில் படம் போட்டே சொல்லி கொடுப்பார்.

இரவானால் பழைய நோட்டில், தான் எழுதியிருக்கும் சுமாரான கவிதைகளை சத்தமாய் படித்து, அதை நானும் ரசிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நேரம் தவிர, எல்லா நேரமும் அவரை எனக்கு பிடிக்கும்.

“மச்சி, என்னடா பார்த்துகிட்டெ இருக்க. பிஸ்கட் பாக்கெட்ட பிரிச்சி பைல கொட்டுடா”

சுந்தர்ராஜன் வாழ்க்கையிலேயே ஒ.டி எல்லாம் சேர்த்து லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியதால், கோயிலுக்கு வந்து எல்லோருக்கும் டைகர் பிஸ்கட் பாக்கெட்கள் கொடுக்க போகிறாராம்.

எனக்கு இது பிடிக்கவே இல்லை.வற்புறுத்தலுக்காக வந்தேன்.

டைகர் பிஸ்கட்களை எல்லாம் கொட்டியாயிற்று.

இரண்டு ராட்சச பைகள். ஆளுக்கொன்றாய் எடுத்து முதலில் பிச்சைகாரர்களுக்கு கொடுத்தோம்.

பிச்சைகாரர்கள் கைகள் மேல் பட்டு விடுமோ என்று அருவருப்புடன் கவனமாக கொடுத்தேன்.

பின் ஏழை சிறுவர்கள் மொய்த்து கொண்டனர்.
வேக வேகமாக கொடுத்தோம்.

பின் வாலிப பையன்கள் சுற்றி கொள்ளும் போதுதான் விபரீதம் புரிந்தது. பெரிய கும்பல் எங்களை சுற்றி இருந்தது. ரிக்சாகாரர்கள்களும் சேர்ந்து கொண்டனர்.

கையில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்க ஆரம்பித்தனர்.

அபிமன்யூ வியூகத்தில் மாட்டினாற் போல ஆயிற்று.

கொடுத்த வரைக்கும் போதும் என்று பைகளை போட்டு வெளியே ஒடிவந்தோம். கையெல்லாம் ரத்த கீறல்.

முதன் முறையாக சுந்தர்ராஜனை ஒருமையில் கெட்ட வார்த்தை போட்டு திட்டினேன். ஆவசமாய் இருந்தது.

சுந்தர்ராஜன் அசடு வழிந்தபடியே ஹாஸ்பிட்டல் கூட்டி போனார்.இருவரும் டிடி ஊசி போட்டு, சாப்பிடுவதற்காக ஹோட்டல் சென்றோம்.

நான் பேசவே இல்லை.

சுந்தர்ராஜன் பேசினார் “மச்சி ஃபீல் பண்ணாதடா. நான் மெட்ராஸ் வந்த புதுசல, வேலை தேடி அலைஞ்ச போது, கையில காசே இருக்காது. பசிக்கும். எப்போதும் பசி என் கூடவே வந்தது மாதிரியே இருக்கும். கே.எம். சி பக்கத்துல வரும் போது பசில மயங்கிருவேன் போல இருந்துச்சி. அங்க இளநீ கடைகார்கிட்ட என்கிட்ட இருந்த அஞ்சு ரூவாய கொடுத்து, மத்தவங்க குடிச்சிட்டு போட்ட இளநீய வெட்டி, அந்த வழுக்கைய சாப்பிட கொடுங்கன்னு கேட்டேன். அவர் அது ஆஸ்பித்திரி நோயாளிங்க குடிச்சதா கூட இருக்கலாம், தரமாட்டேன்ன்னார். நான் அழுதேன். பசில என்ன அருவருப்பு மச்சி. பிறகு அரை மனசா வெட்டி கொடுத்தார். பசின்னா அப்படித்தாண்டா விஜய்.
நீ வாழ்கையில என்னைக்காவது கவர்மெண்ட் ஸ்கூல் சத்துணவு சாப்பிட்டிருக்கியா. அப்பதான் உனக்கு புரியும்” என்றார்.

“அதுக்கு என் கையல்லாம் பிறாண்டுவானுங்க அந்த பரதேசிங்க, நான் சிரிக்கனுமா” கத்தினேன்.

“ஆமா அப்படித்தான் அவுங்க கையை பிறாண்டுவானுங்க, அடிச்சி கேப்பானுங்க. நாமதான் சாப்பாடு கொடுக்கனும்” என்று இறுக்கமாய் சொன்னார்.

தயிரை ஊற்றி, சாதத்தை பிசைந்து நசுக்குவதில் அவர் ஆவேசம் தெரிந்தது.

Friday, 24 August 2012

கதை போல ஒன்று - 41


”நீதான் பொம்பள பிள்ளையா பொறக்கனுமுன்னு ரொம்ப ஆசைபட்டேன்” என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்.

அது மாதிரியே பெண் எப்படி தன் அம்மாவிடம் அதிகம் பேசுவாளோ, அது மாதிரி பேசிக்கொண்டே இருப்பேன்.

பேச்சு பேச்சு பேச்சு.

அம்மாவும் சலிக்காமல் பேசுவார்.

தான், தன் மாமியாரிடமும் நாத்தனார்களிடம் பட்ட கஸ்டத்தை சுவாரஸ்யமாய் சொல்லுவார்.

தினமும் மூன்று கிலோ சப்பாத்தி மாவு பிசைந்து சப்பாத்தி போட்டதை,

மாம்பழம் சாப்பிட்டு , சாப்பிட்ட இடத்திலேயே போட்டு போய்விடும் நாத்தனார்களின் அறிவின்மையை பொறுத்து,தானே சுத்தம் செய்ததை,

அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து தண்ணீர் பிடித்து எல்லா டிரம்களையும் பாத்திரங்களையும் நிறைத்து விடிய, குடும்பம் மொத்தமும் அதை குளித்து முடிக்க, தனக்கு தண்ணி இல்லாததை,

தான் அதிகமான ரத்த போக்கோடு படுக்கையில் கிடக்கும் போது யாருமே சாப்பாடு கொடுக்காமல், பக்கத்து வீட்டு பெண் வந்து ஊட்டி விட்டு போனதை,

மண்ணென்னெய் ஸ்டவ் கூட இல்லாமல், விறகடுப்பையும் மரப்பொடி அடுப்பையும் ஊதி ஊதி இருமியதையும் சொல்வார்.

கோவம் வரும். அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று கத்துவேன்.

காலை ஆறு மணியிலிருந்து இரவு பதினோறு மணிவரை கடையில் இருந்து வரும் அப்பாவிடம் எல்லாத்தையும் சொன்னால் அவர் நிம்மதி போய்விடும் என்பார்.

அத்தை குழந்தை பேறுக்காக பிறந்த வீடு வந்த போது அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்தார். ஆனால் பிள்ளை பெற்று வீட்டுக்கு போகும் போது அந்த அத்தை, அம்மாவிடம் சொல்லாமலே போய்விட்டார். அதை சொல்லும் போது அம்மாவின் கண்கலங்கும்.

அம்மாவின் இன்னொரு முகம் இலக்கிய முகம் லக்க்ஷ்மி, கல்கி, ஜெயகாந்தன், அசோகமித்தரன் என்று பேசுவார், தான் வீட்டில் இருக்கும் போது மணியன் கதைகள்தான் பிடிக்கும் என்றும், அந்த வயதிற்கு மணியன் படிக்க நல்லாயிருக்கும் என்பார்.

கல்யாணத்துக்கு பிறகு படிப்பதே போய்விட்டது என்று வருத்தபடுவார். சிவாகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும் தினமும் வாசித்து கதை சொல்லுவார்.

அம்மாவின் தத்துவங்களிலேயே பிடித்தது “வாழ்க்கை என்பது அறுபது வருடம் பொழுதை போக்குவது. அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் , அதற்கு மேல் அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது”.

வியாபாரத்தில் நஸ்டம் வந்து, வீட்டில் ஏழ்மை எட்டி பார்த்து “ மே ஐ கம் இன் “ என்று சொல்லும் போதுதான் , அம்மா அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தான் டியூசன் எடுக்க போவதாகவும், அதை எப்போதும் போல யாரும் தடுக்க கூடாதென்றும் சொன்னார். வழக்கமாக இதை தடுத்து விடும் அப்பாவால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அம்மா டியூசன் எடுக்கிறேன் என்றதும் அந்த ஏரியாவின் எளிய மக்கள் ஒன்றிலிருந்து எட்டு வரை படிக்கும் தங்கள் பிள்ளைகளை அனுப்ப, வீடு களைகட்டியது.

அது டியூசனா அல்லது அறிவொளி இயக்கமா என்றூ நாங்கள் கிண்டல் செய்வோம். ஏனென்றால் யாருக்கும் அடிப்படையே தெரியாது. ரெண்டு தேங்காய் பத்து ரூபாய். அப்போ ஒரு தேங்காய் எவ்வளவு என்று தெரியாது.

அம்மா சலிக்கவில்லை சொல்லி கொடுத்தார். அந்த காலகட்டத்தில்தான் அம்மாவின் பொறுமையை பார்த்தேன்.

கடை வியாபாரம் மறுபடியும் ஒழுங்கானது.

ஆனாலும் அம்மா டீயூசன் எடுப்பதை விடவே இல்லை.

அந்த அரை ஆண்டு தேர்வில் தன்னிடம் படித்தவர்களில் பாதி பேர் பாஸாகும் படி செய்தார்.

அம்மாவிடம் படித்த, ’பாபு’ என்ற ஆறாம் வ்குப்பு பையன் வகுப்பில் எட்டாம் ரேங்க் எடுந்திருந்தான்.
அவன் அம்மா வந்து , திரும்ப திரும்ப அம்மாவுக்கு நன்றி சொல்லி ஒரு’ நாட்டு பப்பாளி பழமும், மரச்சீனி கிழங்கும் கொடுத்து போனார்.

மறுநாள் காலை அம்மா எனக்கு தோசை சுட்டு கொடுத்து கொண்டே சொன்னார் “ நான் பத்தாம் வகுப்புல நல்ல மார்க் வாங்கினப்போ என் அப்பா என்ன புகழ்ந்தாங்க. அன்னைக்கு சந்தோசத்துல நல்லா தூங்கினேன். அப்புறம் படிக்க முடியல. அப்புறம் கல்யாணம், அப்புறம் நீங்க எல்லாரும் பிறந்து, உங்கள வளத்து, வாழ்க்கை போனாலும், ரொம்ப வருசத்துக்கப்புறம் நேத்துதான் நல்லா சட்டமா, நிம்மதியா மனசார தூங்கினேன் விஜய்” என்றார்.

தோசைமாவை வட்டமாக்கி கொண்டிருந்த அம்மாவை பார்த்தேன்.

அவர் வாழ்க்கையில் அர்த்தம் வந்து சேர்ந்தது மாதிரிதான் தெரிந்தது.

Wednesday, 22 August 2012

கனகாம்பரம் பூவை இப்படியா தொடுப்பீர்கள் !

சிறுவயதில் ( எத்தனை பத்திதான் சிறுவயதில்ன்னு எழுதுவேனோ தெரியாது :) ) திருசெந்தூருக்கு போனால், மாலை வேளைகளில் தலையில் வைப்பதற்காக மல்லிகையும் கனகாம்பரமும் தொடுப்பார்கள் என் சித்திகள்.

அவர்களே தொடுத்து அவர்களே தலையில் வைத்தால்தான் அவர்களுக்கு திருப்தி. 

அதில் மல்லிகை பூவை ஒற்றையாக தொடுப்பார்கள்.

ஆனால் கனகாம்பரம் பூ இருக்கிறதே, அதை ஜோடி ஜோடியாகத்தான் தொடுப்பார்கள்.

கனகாம்பரத்தை ஜோடி ஜோடியாக எடுத்
து வைக்கும் வேலை எனக்கு மிகப்பிடித்தமான வேளை.

கனகாம்பரக்காம்பின் வளவளப்பு பிடிக்கும்.( ஆனால் பவள மல்லியே எனக்கு பிடித்தத்திலும் பிடித்தமான பூ என்பது தனிகதை).

அப்படி ஜோடி ஜோடியாக எடுத்து வைக்கும் போது, பூ முடிய போகும் போது ஒரு பரபரப்பு வரும்.

அது என்னவென்றால் எல்லா பூவுக்கும் ஜோடி இருக்கிறதா? இல்லை ஏதாவது பூ ஜோடி இல்லாமல் இருக்கிறதா என்கிற ஆர்வம்தான்.

அப்படி எல்லா பூவுக்கும் ஜோடி இருந்தால் சொல்ல முடியாத நிம்மதி வரும்.

அப்படி ஜோடி இல்லாமல் ஒரு பூ இருந்தால், அந்த தனி பூவை கசக்கி சுவடில்லாமல் எறிந்து விடுவேன்.

சினிமாவில் வாழாவெட்டி அக்காவோ, கால் இல்லாத தம்பியோ, தங்கையோ, வயதான சுருக்கம் விழுந்த அம்மாவோ கிளைமேக்ஸில் சாகடிக்கபட்டால் ஒரு இனம் தெரியாத திருப்தி வருமல்லவா?

அது போல ஒரு சைக்காலஜி போலும்.

ஜோடி இல்லாமல் இருப்பதற்கு மண்டையை போட்லாம் என்பது மாதிரியான நல்ல எண்ணம்.

சோடி மூக்கியம்ப்பா ! :))

Monday, 20 August 2012

கதை போல ஒன்று - 40


மவுன ராகம்’ மாதிரி ’மவுன தாகம்’ என்றொரு பி கிரேடு படம் ரிலீசாகியிருந்தது.

எனக்கும் நண்பனுக்கும் பி கிரேடு படங்கள் என்றால்,எல்லா பதின் வயது பையன்கள் மாதிரியே பிடிக்கும்.

புரசைவாக்கத்தில் இருக்கும் ‘யோகா’ , மினி யோகா’ தியேட்டர்கள் பி கிரேடு படங்களுக்கு ஸ்பலிஸ்ட் தியேட்டர்கள்.

”மச்சி! இன்னைக்கு படம் பார்த்தே ஆகவேண்டும்” என்றான் நந்தகுமார்.

கிளாஸை கட் அடித்து விட்டு 23 சி பிடித்து ’யோகா’ தியேட்டருக்கு வந்தோம்.

வரும் போதே படம் யோகாவில் போட்டிருக்க வேண்டும் என்று இருவருமே பிரார்த்தனை செய்து வந்தோம். ஏனென்றால் யோகாவில் ஸ்கிரீன் பெரிது. ஏஸியும் நல்லாயிருக்கும்.

மினி யோகாவில் அப்படி இல்லை ஸ்கிரீன் சிறிது. அது யோகாவுக்கு மேல் சும்மா ஒப்புக்கு சப்பாணி மாதிரி இருக்கும் தீயேட்டர்.

கடவுள் எங்களை கைவிடவில்லை.
படம் யோகாவிலே போட்டிருந்தான்.

ஒரு பிரபல நடிகை தன் கொள்கைகளை தளர்த்தி நடித்திருக்கும் பிகிரேடு படம் என்பதால் நல்ல கூட்டம்.

படத்தின் போஸ்டர் அட்டகாசமாய் இருந்தது.

போஸ்டரில் இருந்தே கதையை சொல்லி விட்டேன்.

“மச்சி இவ டீச்சர். நல்லா வாளிப்பா இருப்பா. ஊர்ல பல பேருக்கு இவ மேல கண்ணு. அது மாதிரி இந்த சின்ன பையனும் டீச்சர தப்பா பார்க்குறான். குறிப்பிட்ட சமயத்துல டீச்சருக்கும் இவனுக்கும் பத்திக்கரா மாதிரி காட்டுவானுங்க, ஆனா அது பையன் காண்ற கனவாயிருக்கும்.

கடைசில பக்கம பக்கமா இந்த மாதிரி படத்துல டாக்டரா பெரிய மனுசனா நடிப்பானே அவர் டயலாக் பேசுவார்” என்றேன்.

“அப்ப ஏன் பாக்க வ்ர. போ வேற எதாவது படம் பார்க்கலாம்”

நான் வழிந்தேன் “ மச்சி சும்மா சொன்னேண்டா. சாதரண ஆள் நடிச்சிருந்தா அசால்ட்டா இருக்கலாம். ஆனா இவ நடிக்கும் போது கண்டிப்பா பாக்கனும்டா. இவ ஹிரோயினா நடிக்கும் போது ஸீனே காட்டமாட்ட தெரியுமா? பத்தினி மாதிரி இழுத்து போத்திகிட்டு ஒவர் ஆக்ட் கொடுப்பா “ என்றேன்.

நல்ல கூட்டம். கீயூவில் அடித்து பிடித்து டிக்கட் வாங்கி தியேட்டருள் நுழைந்தோம்.

சீட்டில் உட்காருவத்ற்கு முன்னாடி ஸீட்டை கூர்ந்து பார்த்து ,கர்சீப்பால் மெல்ல துடைத்து உட்காரச்சொன்னான் நண்பன்.

“ஏண்டா இப்படி சோதனை போடுற “ என்றேன்.

“லூசு !ஒருவாட்டி நான் தனியா வரும் போது , சீட்ல எவனோ மோண்டு வைச்சிருந்தான். இன்னும் என்னலாம்மோ தேய்ச்சி வைப்பானுங்கடா. நாமதான் கவனமா இருக்கனும்.

எனக்கு சிரிப்ப அடக்க முடியல. “ நீ அடுத்தவன் மோளுல உட்கார்ந்துட்டியா. அப்புறம் என்ன செஞ்ச?

“அப்புறம் படம் முடியிர வரைக்கும் பாத்ரூம்ல டிரஸ்ஸ கழுவிகிட்டே இருந்தேண்டா “

சிரிப்பு அள்ளிற்று எனக்கு.

அப்போதுதான் அவரை பார்க்கிறேன்.முன் சீட்டில் வ்லது பக்கமாய் இருந்தார்.

அறுபது வயதிருக்குமா? இல்லை கண்டிப்பாக அறுபத்தி ஐந்து இருக்கும்.

வெள்ளை வேஸ்டியும் வெள்ளை சட்டையுமாய் ஒல்லியாய் கமபீரமாக இருக்கிறார். சில பேர் “ஏ” படம் பார்க்க வந்து வீட்டு “ பார் நான் யாருக்கும் பயப்படவில்லை வெட்கபடவில்லை “ என்பதை காட்டும் விதமாக திணிக்கபட்ட தன்னம்பிக்கையோடு இருப்பார்கள்.

ஆனால் இவர் அப்படி இல்லை. தெளிவாக இருந்தார்.

நிர்வாணமாக, நண்பரோடு எந்த அலட்டலும் இல்லாத விதமாய் உணவு சாப்பிட்ட ஏ.கே ராமானுஜத்தை போல இயல்பாக இருந்தார்.

படம் போட்டார்கள். நலலாவே இல்லை. டீச்சராக வந்த பிரபல நடிகை கவர்ச்சி காட்டவில்லை. அவர் வீட்டில் வேலை செய்யும் சமையல் செய்யும் பெண்தான் கவர்ச்சி காட்டினார்.

எனக்கு சுத்தமா பிடிக்கல. பாதி பேர் எழுந்து ஆப்பேரட்டர் ரூமை பார்த்து கெட்ட வார்த்தைகளை சொல்லி போய்விட்டனர்.

இடைவேளை பாப்கார்னும் டீயுமாய் முடிந்தது.

இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கவே இல்லை. அரை மணி நேரம் ஆயிற்று படம் போடவில்லை.

அப்புறம்தான் தெரிந்தது. யோகா தியேட்டரில் டெக்னிக்கல் ஃபால்டாம். அதனால் மினி யோகாவில் அந்த தியேட்டரில் ஒடும் படம் முடிந்ததும். யோகா தியேட்டர் படத்தின் மிச்ச காட்சியை போடுவார்களாம்.

நிறைய பேர் கடுப்பில் போய்விட நானும் நண்பனும் படி ஏறினோம். மூச்சி இளைத்தது.

பின்னால் திரும்பி பார்த்தேன் அந்த பெரியவரும் மெல்ல மெல்ல படி ஏறினார். ஏறி வந்து கொண்டிர்ந்தார்.

முட்டி வலி போல. நின்று நின்று பொறுமையாக வந்து கொண்டிர்ந்தார் பிரபல நடிகை கவர்ச்சி காட்டுவாள் என்ற நம்பிக்கையோடு.

அவருக்கான வெளி அவருக்கே.

அவருக்கான வாழ்க்கையை அவரே வாழ்ந்து கொண்டிருந்தார்.

இரண்டு வாரம் கழித்து , கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக யோகா தியான வகுப்புகளில் சேர்ந்தோம்.

அங்கேயும் அதே பெரியவர் கம்பீரமாக தியானித்து கொண்டிர்ந்தார்.

அவருக்கான வெளி அவருக்கே.

அவர் ஒரு கயிற்றை சுற்றி கொண்டிருக்கிறார். யாரையும் துன்புறுத்தாமல், கஸ்டபடுத்தாமல்.அதன் உள்ளே போனால் மட்டும் அடி நிச்சயம் என்று தோண்றிற்று எனக்கு.

என்னை காப்பாற்றியது இதுதான்...

இன்று முதலாம் மாடியில் உள்ள ஒரு கடையில் மொபைல் ரீசார்ஜ் செய்ய போனேன். 

கடைக்காரர் ஏதோ மருந்து விற்பவர் போல, உடல் நலம் பற்றி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.

அவர் கம்பெனி டானிக் குடியுங்கள் என்றார்.

தன்னுடன் ஞாயிற்றுகிழமை மீட்டிங் வருமாறு சொன்னார். 

நரம்புகள் எப்படி செயல்படும் என்று சொன்னார்.

நான் இளைஞன் ஆனதால் தாம்பத்ய உறவு சரியாய் இருக்கிறதா ? இல்லையென்றால் இந்த டானிக் குடியுங்கள் என்றார்.

நான் அதிலெல்லாம் பிரச்சனை இல்லை என்று பதட்டமாக பதறி மறுத்தேன்.

அப்புறம் என் தொப்பையை பார்த்தார்.

உடலை இந்த டானிக் குறைக்கும் என்றார்.

அவர் பேசிய விதம் முகத்தை முறித்து பேச முடியாமல் செய்தது.

பேசினார் பேசினார் பேசிகொண்டே இருந்தார்.

எப்படி இவரிடம் இருந்து தப்பிக்க என்று யோசிக்க கூட விடாமல் பேசினார்.

அப்போது அது நடந்தது, அவர் ஒங்கி பேசும் போது அவர் நாவில் இருந்து ஒரே ஒரு சிறிய அழகிய உருண்டையான எச்சில் துளி பறந்து என் கூரிய மூக்கில் பட்டது.

பப்பூன் சிகப்பு மூக்கு மாதிரி என் மூக்கு எச்சில் மூக்கானது அழகிலும் அழகு.

இருவரும் அதிர்ந்து நிற்கிறோம்.

எனக்கு அந்த எச்சிலை அவர் முன்னால் துடைத்தால் அவர் மனது கஸ்ட்டபடுமோ என்ற கவலை. ( நல்லவன் நான்) .

அவருக்கோ தர்ம சங்கடம்.

பேச்சை முடித்து என்னை அனுப்பி வைத்தார்.

அவரிடம் என்னை காப்பாற்றிய அவர் எச்சிலுக்கு நன்றி சொல்லி வெளியே வந்தேன்.

அனிச்சையாக கையை மூக்கில் வைத்தேன்.

எச்சில் காய்ந்து போயிருந்தது.

அது எச்சில்தானே ! சல்ஃபூரிக் ஆசிட் இல்லையே என்று நினைத்து நிம்மதியானேன். :))

உருண்டையான நான்

பின்னால் சீட்டை இழுத்து விட்டிருக்கும் க்ஷேர் ஆட்டோவில்,அதே பின்னுக்கு இழுத்து விட்டிருக்கும் சீட்டில். என்னை உட்கார டிரைவர் கோரிக்கை வைத்தார்.

உட்கார்ந்தால் முன்னால் உட்கார்ந்திருக்கும் தாத்தாவின் பின் பக்கத்தின் மேல் பாதம் இடிக்ககூடாதல்லவா! உடலை குறுக்குறேன்.

நான் Human engineering ஐ ஒரு பாடமா படித்து இருக்கிறேன்.

அதில் ஒருவர் சீட்டில் உட்காரும் போது தரைக்கும் கால் முட்டிற்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு அடிதூரமாவது இருக்க வேண்டும்.

ஆனால் அதில் ஒரு சாணுக்கும் கிழேயே இருப்பதால் காலைதூக்கி , கால் முட்டுகள் காது அளவுக்கு வந்து , தொப்பை நசுங்கி வினோதமான யோகசனா செய்யும் பாவனை வந்தது. 

அம்மாவின் கர்ப்பபையில் கூட இப்படி அடங்கி ஒடுங்கி சுருண்டு இருந்திருப்பேனா என்ற சந்தேகம் இருந்தது பாத்துக்கோங்க... :))

மந்திரமா ? தந்திரமா ?

என் ஐந்தாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புவரையான காலத்தில் பாஸ்டர் ஜான் பிரகாக்ஷ் எழுதிய இந்த புத்தகங்களை படித்தேன்.

- மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் 

- மந்திரமா ? தந்திரமா ?

-பேயா ? நோயா ?

இவை எல்லாம் பிளாக் மாஜிக், பில்லி சூனியம், < ஏ.ஆர் ரஹ்மான் சொன்னாரே தன் வீட்டிருந்து கொத்து கொத்தாக கறுப்பு முடி எடுத்தனர் என்று.> மாதிரி காமெடிகளின் பின்னால் உள்ள தந்திரத்தை எடுத்து சொல்வது.


மனம் தான் எல்லாத்தையும் இயக்குவது. மத்தது எல்லாம் பொய் என்று அடித்து சொல்வது.

மாஸ் ஹிஸ்டீரியா என்ற வார்த்தையை முதன் முதலில் புரிந்து அதிசயித்தேன் இவர் மூலமாக.

அற்புதமான செம்பதிப்பாக வரவேண்டிய புத்தகங்கள்.

ஆனால் இப்போது கிடைப்பதில்லை.

அதுவரை பேய் என்றால் பயம்.
ஏனென்றால் எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் சுடுகாடு நல்லா தெரியும். ( சத்தியமாங்க).

ஆனால் இவரின் இந்த புத்தகங்களை படித்த பிறகு தெளிவானேன்.

அப்புறம் முருகர் கூடவே பேசுவேன். அதாவது எனக்கும் முருகருக்கும் தொடர்ச்சியான விவாதம் நடக்கும் சிறுவயதில்.

அதுவும் மனநோய் என்று தெரிந்து நிறுத்தி விட்டேன்.

சில புத்தகங்கள் நம் சிந்தனை போக்கையே தெளிவாக்கிவிடும்.

நான் நாஸ்திகத்தை தேடி தேடி படித்து ரசிக்க ஆரம்பித்தேன்.

மணிபர்ஸும் அட்டகத்தி படமும்

ஏங்க எனக்கு அட்டகத்தி படம் பிடிச்சிருக்குங்க. 

பொதுவா மதுரை கிராமம், தஞ்சாவூர் கிராமம், திருநெல்வேலி கிராமம், கோயமுத்தூர் கிராமம் பத்தியே தமிழ் சினிமால எடுப்பாங்க.( அய்யனார் சிலையும், கள்ளி செடியும் கன்பர்ம் எண்டிட்டி )

இதுல சென்னை கிராமத்த அழகா சொல்லி இருக்கிறார் டைரக்டர்.

இயக்குனரின் நுண்ணுனர்வு பல ஸீன்ல தெரியுது. 

மொத்தமா படம் நல்லாவே இருக்கு என்னளவில். 
கிழக்கு வாசல்ல என்ன பேசிக்கிறாங்க ? 
படம் நல்லா இருக்கா நல்லா இல்லையா ?

அப்புறம் படம் பார்க்கும் போது. என் பகக்த்தில் அறுவயது அப்பா தன் மகளையும், மருமகளையும் படம் கூட்டி வந்ததால் அமர்ந்திருந்தார்.

அந்த ஸீட்டில் காத்து வரலன்னு, குடும்பம் மொத்தமும் பின்னாடி போனார்கள்.

படம் ரசித்தோம்.

தற்செயலாக பக்கத்து காலி ஸீட்டை பார்த்தால் அதில் ஒரு குண்டு பர்ஸ் கிடந்தது.

பின்னால் அந்த பெண்ணிடம் சொன்னேன்.

வயதானவர் அப்பெண்ணிடம் ஈவ் டீஸிங் பண்ணுவதாக நினைத்தாரோ என்னவோ தேவைக்கு அதிகமான முறைப்புடன் என்னிடம் மேட்டர் கேட்க, நான் சொல்ல, அந்த பெண் பரபரப்பா பர்ஸை எடுத்து கொண்டார்.

அப்புறம் வயதானவர் மொபைலில் டார்ச் அடிக்க பர்ஸ்ஸை சுத்தமாக சோதனை செய்கின்றனர்.

எனக்கோ பயமாய் இருக்கிறது.

தவறுதலாக எதாவது காணாமல் போனால் கூட என்னை திட்டுவார்களோ, அடிப்பார்களோ என்று பயம். ( அப்புறம் ஜனகராஜ் சொல்வது மாதிரி கவுண்டரே! உங்க மேல சத்தியமா நான் வண்டி மாடு கட்லீங்க” என்று சத்தியம் செய்ய வேண்டியது வரலாம்) .

அனால் என் தேவன் கிருபையினால் பர்ஸ் செக்கிங் சீக்கிரம் முடிந்து.

பிரச்சனை இல்லை.

ஆனால் நாந்தான் அந்த டென்சனில் “ ஆடி போனா ஆவணி “ பாட்டை சரியா பார்க்கவில்லை :))

Tuesday, 14 August 2012

கதை போல ஒன்று - 39

இரவு ஒன்பதரை மணி அளவில் கதவை வேகமாக தட்டும் ஒசை கேட்டது.

செவ்வாய்கிழமைதான் அப்பாவுக்கு கடை லீவு என்பதாலும், அன்று தான் இரவு ”ஏழரை டு எட்டரை” தூர்தர்சனில்,முழு நீள நாடகம் வரும் என்பதாலும் அந்த நாள் எனக்கும் அண்ணணுக்கும் இன்பமான நாள்.

நாடகம் முடிந்து, நாடகத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது , இரவு ஒன்பதரை மணி அளவில், கரண்ட் போன சமயத்தில்தான் கதவை வேகமாக தட்டும் ஒசையும் கேட்
டது.

அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் பயத்துடனே வாசல் கதவு பக்கம் வந்தனர். நானும் அண்ணனும் ஆர்வத்துடன்.

கதவை திறந்தால் அங்கே ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.

முகம் வேர்ந்திருந்தது.

கண்களில் நீர் நிறைய அப்பாவிடம் கையடுத்து கும்பிட்டபடி “யண்ணே வேல முடிஞ்சி இப்பத்தான் வரேன் பாத்துகிடுங்க, வந்தா பின்னாடியே எவனோ ஒருத்தன் வாரான் அண்ணாச்சி. கிட்ட வந்துட்டான். நான் ஒடன உங்க வீட்டுக்கு வந்துட்டேன். பயமா இருக்குண்ணே “ என்று முடிக்கும் போது குரலை உயர்த்து அழுதாள்.

அம்மா தண்ணீர் கொடுத்தாள்.

அப்பா இரண்டு டார்ச் லைட்டை எடுத்து கொண்டார்.

ஒன்றை எனக்கும் மற்றொன்றை அவரும் வைத்து கொண்டு, அம்மாவிடம் அண்ணனிடமும் கதவை பூட்டிகொள்ள சொல்லிவிட்டு. நடந்தார்.

நானும் அந்த பெண்ணும் அவரை பின் தொடர்ந்தோம்.

எதற்கு என்னையும் அழைத்து போகிறார் என்று தெரியவில்லை.

ஒருவேளை இளம்பெண்ணுடன் இரவு வேளையில் தனியே நடப்பது சமூகத்திற்கும் பிடிக்காமல் இருக்கலாம் என்று அப்பா நினைத்திருக்கலாம்.

“உன் வீடு எங்க இருக்குமா” அப்பா கேட்டார்.

“கார்மல் ஸ்கூல் பின் கேட் இருக்குல்லா அண்ணாச்சி .அங்க ஒரு கொல்லாவிளை (முந்திரிமரம் விளை) இருக்க. அங்குனதான் இருக்கோம்”

“ம்ம்ம். உன் பேரென்ன. எதுக்கு இந்த சமயத்துல வாரா நீ இந்த கசம் இருட்டுக்குள்ள”

“பேரு எவாஞ்சிலின் அண்ணே. நான் ஸ்விட்ச்போர்டு கம்பெனில வேல செய்றேன். இன்னைக்கு டபுள் டியூட்டி அண்ணே. அம்மாவ நாளைக்கு ஜெயசேகர் டாக்டர்கிட்ட கூட்டி போனோம் அதான்”

“என்னம்மா நீ ஒரு வயசுக்கு வந்த பொண்ணு. இந்த டைம்லயா வருவே. கொன்னு பொதர்ல வீசிருவான்”

அப்பா படபடப்பாய் பேசினார். எவாஞ்சிலின் பதில் பேசவில்லை.

நாகர்கோவிலின் பார்க் ரோடு இருட்டை இப்போது நினைத்தாலும் பயம் வரும்.

தெருவிளக்கே அனேகமாக இருக்காது.

எங்காவது ஒன்றிரண்டு. குகைக்குள் பயணித்தாற் போல பயணிக்க வேண்டும்.

எட்டாம் வகுப்பே படிக்கும் எனக்கு அந்த இருட்டில் நடப்பது கிலியாக இருந்தது.

அப்பாவும் வருகிறார்தான். இருந்தாலும் பயம்.

எவாஞ்சிலின் பயத்தோடு அங்கும் இங்கும் பார்த்து கொண்டு வேகமாக நடக்கிறாள்.

இருட்டில் “தம்பி அக்கா கைய பிடிச்சிக்கோ பிள்ளோ “ என்று என் கையை எடுத்து அவள் கையை பிடிக்க வைக்கிறார்.

அந்த உணர்வு பிடித்தே இருக்கிறது எனக்கு. அவள் கைகள் சுரசுரப்பாக இருப்பினும் அதுவும் சுகமாய்த்தான் இருக்கிறது.

எவாஞ்சிலின் உயரமானவள் என்பாதால், நான் அவள் இடுப்பு உயரமே இருக்கிறேன்.

அம்மன் கோவிலை கடக்கும் போது , வெளிச்சத்தில் எவாஞ்சிலினை பார்க்கிறேன்.

முப்பது வயது இருக்கும்.

அழகாய்த்தான் இருக்கிறாள்.கடைந்தெடுத்த வனப்பைத்தான் பெற்றிருக்கிறாள்.அதிரசத்திற்குபிசைந்து வைத்த பாகு மாவாய் வயிறு என் கண்முன்னே பளபளத்தது.

ரோட்டை தாண்டி செம்மண் விளைகளுக்குள் போகிறோம். அப்பா டார்ச்ச சரியா புடி! சரியா புடி! என்று சொல்லி கொண்டே வருகிறார்.

அந்த கொல்லாம்விளையின் நடுவே குடிசையில் சிறிய மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருக்க, அதுதான் தன் வீடென்று எவாஞ்சிலின் சொல்ல, விட்டை அடைந்தோம்.

வீடு வந்ததும் எவாஞ்சலினுக்கு உற்சாகம் வந்தது.

சுறுசுறுபாய் உள்ளே கூப்பிட்டாள்.

அப்பா மறுக்க , ”தம்பி நான் கூப்பிடுறேன்ல உள்ள வாடே பிள்ளே”என்னை செல்லமாக உள்ளே இழுத்தாள்.

எவாஞ்சிலின் அப்பா “மாம்பட்டை “ குடித்து விட்டு வீட்டினுள்ளே வாந்தியும் எடுத்து விட்டு மலந்து தூங்கி கொண்டிருந்தார்.

அவரை சுற்றி வாந்தியிலுள்ள சோற்று பருக்கைகள் குளுகுளுப்பாய் பரவி இருந்தன.

அதன் பக்கத்தில் சட்டியில் சோறும் பழைய மீன்குழம்பும்.

மேலே கட கட என்று சத்தமாய் ஒடும் பழுப்பு நிற பேன்.

கொத்த வேலைக்கான கடப்பாரை மண்வெட்டி பிக்காஸு பாண்டை எல்லாம் ஒரு இடத்தில் இரும்பின் மணத்தை கொடுத்தபடி.

காலில் பெரிய கட்டோடு , கால் முறிந்த அம்மா.

அந்த கால் கட்டில் இருந்து வீசிய, வேர்வையோடு கலந்த தைல நாத்தம்.

எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கும் ”இயேசப்பா”

”அண்ணே டீ குடிக்கிறியளா. தம்பி டேய் டீ குடிக்கிறியா”

அப்பாவும் நானும் மறுத்து விட்டு திரும்பும் போது எவாஞ்சலினை நினைத்து பாவமாய் இருந்தது.

அம்பது அடி நடக்கும் போது டார்ச் லைட்டை எவாஞ்சலின் வீட்டில் விட்டு விட்டதை நினைத்து அப்பாவிடம் சொல்லி ஒடி போய் எடுக்க போனேன்.

எவாஞ்சலின் , விந்து துளிகள் மூலம் தன்னை உருவாக்கிய அவள் குடிகார அப்பாவின் வாந்தியை கையால் வழித்து ஒரு தேங்காய் சிரட்டையில் இட்டு கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வர வர , சீக்கிரம் படித்து பெரிய ஆளாகி , எவாஞ்சிலினை கல்யாணம் செய்து அந்த கொல்லாம்விளையிருந்து கூட்டி வந்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டே வந்தேன்.

Sunday, 12 August 2012

தேன் வியாபாரி...

ஊரின் ஒரே தேன் வியாபாரி
மூட்டை மூட்டையாய் 
வெல்லம் வாங்குகிறார்.
ஏன் என்று கேட்க முடியவில்லை.
அவரே ஊரின் ஒரே தேன் வியாபாரி.
தேன் போன்ற ஒன்றையோ 
அல்லது 
தேனையோ,
அவராலேயே கொண்டு வர முடிகிறது.

Saturday, 11 August 2012

கதை போல் ஒன்று - 38



”பிரேஸ்லட்” வாங்கலாம் என்று பல குழப்பங்களுக்களிடையே முடிவு செய்து விட்டேன்.

கல்யாணமாகி முதல் வருடம் கல்யாண நாளை கொண்டாட போகிறோம்.. அசத்திடனும் என்கிற வெறியாய் இந்த முடிவை எடுத்தேன்.

தங்கத்தை பத்தி எதுவுமே தெரியாமல் அந்த பிரபலமான தி.நகர் தங்க மாளிகைக்குள் நுழைந்தேன்.

”என்ன சார் வேணும்”

“லேடீஸ் போடுறா மாதிரி ஒரு நல்ல பிரேஸ்லட். ஒரு பவுன் ரேஞ்சில கொடுங்க”

“இத பாருங்க. இது ஆர்டினரி மாடல். இது கேரளா மாடல், இது பேசன் ஜுவல்லரி டைப்ல “

பார்த்தேன் .

இந்த பங்கார நகைகள் எல்லாமே அழகாய் இருக்கிறதே. எதை எடுக்க. ஒவ்வொன்றாய் கையில் வைத்து பார்த்தேன்.

விற்பனை செய்த பெண், தன் கைகளிலும் வைத்து காட்டினாள்.அவள் அழகான கைகளை வேக்சிங் செய்தால் இன்னும் அழகாய் இருப்பாள் என்று தோண்றிற்று.

இவளை மடக்க வேண்டுமென்றால் காசை காட்ட வேண்டுமா இல்லை செண்டிமெண்டால் அடிக்க வேண்டுமா ?

இவளுக்கு சம்பளம் எவ்வளவு இருக்கும். இதே பிரேஸ்லட்டை இவளுக்கே பரிசாய் கொடுத்தால் என்ன வேண்டாம் என்றா சொல்லி விடுவாள்! இப்படி போன சிந்தனையை கலைத்து கடைசியாய் சேதாரம் அதிகமானாலும் பரவாயில்லை , கேரளா மாடல் பிரேஸ்லட்டே வாங்கிவிடுவோம் என்று முடிவு செய்தேன்.

எஸ்டிமேசனில் செய்கூலி இருநூற்றம்பது போட்டிருந்தார்கள்.தோழி என்னிடம் முதலிலேயே சொல்லி இருந்தாள் செய்கூலி எல்லாம் கிடையாது. அடித்து பேசு என்று.

நானும் “செய்கூலியெல்லாம் ஏன் போடுறீங்க அதெல்லாம் இப்ப யார் போடுறாங்க “ என்று கூற சூப்பர்வைசர் வந்தார்.

அவரை பார்த்துமே தவறாமல் சஸ்டி விரதம் இருந்து , பால் பழம் சாப்பிட்டு, பிச்சைகாரகளை கண்டு அருவருத்து செல்லும் மிடில் கிளாஸ் கனவான் போலத்தான் இருந்தார்.

“சரி சார். செய்கூலிய இல்லாம பண்ணிருரேன்”

நகை வாங்கியாகிவிட்டது. அதை பேக் செய்து பத்திரமாக பையில் வைத்தேன். மனைவியடம் சொல்ல வில்லை.

இரவு பண்ணிரெண்டு மணி அடித்தது. என்னளுக்கு வாழ்த்து சொன்னேன்.

ரோஜா இதழில் முத்தம் கொடுப்பது போல் மென்மையாக கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். அப்போது அந்த சேல்ஸ் அம்மாயியின் கன்னம் ஏனோ நினைவுக்கு வந்தது.

தலையை உதறி. பிரேஸ்டலட்டை பரிசளிக்கும் போது , விளம்பரத்தில் வருவது போல் விழியை அகல விரிக்காதது கொஞ்சம் கடுப்புதான்.

ஆசையாய் வாங்கி கையில் வைத்தி பிரேஸ்லட்டின் கண்ணியை கொக்கி போட்டாள் பாருங்கள்.

கண்ணி பூட்டாய் பிய்ந்து விட்டது.

அதிர்ச்சி.உற்று பார்க்கிறேன். அது பிய்ந்து விட்டது என்பதை கிரகிக்கவே நேரம் ஆனது.

என் பதட்டம் பார்த்து வைஃப் சமாதானபடுத்த, இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.

மறுநாள் காலை ஏழுமணி அளவில் பிறந்தநாள் அர்ச்சனை செய்ய மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.

மகிழ்ச்சியாய் இருக்க முடியவில்லை.

எப்படா காலை பத்து மணியாகும். பிரேஸ்லட்டை மாற்ற போகிறோம் என்று காத்திருந்தேன்.

ஆட்டோ பிடித்து கடை வாசலில் இறங்கும் போது கோவம் அதிகமாகியது.அடக்கி வைத்த சிறுநீர் வீடு வந்த பிறகு அடக்கமுடியாமல் முட்டுவது போல

உள்ளே போய் அதே சூப்பர்வைஸரிடம் நகையின் ஆக்கத்தை சொன்னேன். கத்தினேன்.

அவர் பிரேஸ்ட்டை வாங்கி சோதித்தார்.

”நீங்கள் எதாவது அந்த பிரேஸ்லட் கண்ணியை அதிகமாக இழுத்தீங்களா ?” என்று நக்கல் தொனியில் கேட்டார்.

 ஒரு விஞ்ஞானி இரண்டு பெரிய கிண்ண்ங்களை சேர்த்து அதிலுள்ள காற்றை உறிந்து , இந்த பக்கம் எட்டு குதிரைகளையும் , அந்த பக்கம் எட்டு குதிரைகளையும் விட்டு இழுக்க வைத்தாராமே, அது மாதிரி பிரேஸ்லட்டை குதிரை கட்டியா இழுத்தேன் என்று நினைத்து கொண்டேன்.

கடையே அதிரும்படியாக கத்தினதும் இன்னொரு பெரியவர் வந்து, என்ன விசயம் என்று கேட்டு என்னிடம் சள்ளென்று விழுந்தார்.

“ஏங்க இப்படி ஆவியா போறீங்க. என்ன பெரிய தப்பு நடந்துச்சு. கண்ணி அறுந்து போறது பெரிய விசயமா ? வேற நகை மாத்திக்கோங்க. அவ்வளவுதான. அதுக்கு இப்படியா கத்துவீங்க டீசன்சி இல்லாம. போங்க வேற டிசைன் பாருங்க. ஏம்மா இவருக்கு  டிசைன் காட்டுமா ? “ என்றார்.

அசந்து நின்றேன்.

குறைந்த பட்சம் “ஸாரி” கூட கேட்கவில்லை யாரும். என்ன திமிர் இவர்களுக்கு. என்ன செய்ய முடியும்.

அவர்களை பொறுத்தவரை நான் ,ஆயிரக்கணக்கான இலைகளில் ஒரு இலை. கோடிக்கணக்கான் நீர் துளிகளில் ஓர் துளி.

நேற்று பார்த்த அதே சேல்ஸ் பெண் கனிவாக பல டிசைன் காட்டினாள்.

இன்று என் கல்யாண நாள் என்று தெரிந்து கொண்டவள், வாழ்த்து சொன்னாள்.

”நடந்தது நடந்து போச்சு. இதபாருங்க சார் இந்த டிசைன்ல கண்ணியும் நல்லா இருக்கு, மாடலும் நல்லா இருக்கு. டென்சன் ஆகாதீங்க சார்.தண்ணி குடிங்க சார். உங்களுக்கு கொஞ்சம் பெரிய பேக் தரசொல்றேன் சார். என்னால அது மட்டும்தான் செய்யமுடியும் ”என்றாள்.

ஆறுதலாய் பேசிய அவளை பார்க்கும் போது , நேற்று பார்த்த பெண் மாதிரி கண்களுக்கு தெரியவில்லை.

Thursday, 9 August 2012

கதை போல ஒன்று - 37

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் புக்கில் கறுப்பு வெள்ளை படமாக எங்களையே பார்த்து கொண்டிருந்தார்.

குமார லிங்கேஸ்வரந்தான் ஆரம்பித்தான்.

“வீரபாண்டிய கட்டபொம்மன் நம்ம ஜாதியாடே”

நான் அமைதியாய் இருந்தேன்.

“நம்ம ஜாதிலே ஏ, பி , சி, , டி ன்னு பிரிவு இருக்கு தெரியுமா? என்றான்.

“அப்படியாடே. என்னது அது”

“இந்த சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர் பக்கம் உள்ளவங்க எல்லாம் ’ஏ’ கிளாஸாம்.”

அவன் சொன்ன கணக்குபடி சாத்தான்குளத்துகாரணான நான் ‘சி’ கிளாஸில் வந்தேன்.நல்லவேளை “டி”
கிளாஸ் இல்ல என்று மனம் நிம்மதியா இருந்தது.

நான் ஆரம்பித்தேன் “ ஆனா வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் ஜாதின்னு நினைக்கிறேன்” என்றேன்.

அது குமார லிங்கேஸ்வருன்னுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்று அவன் முக பாவனையிலேயே தெரிந்தது.

நானும் குமார லிங்கேஸ்வரனும் அந்த ஏழாம் வகுப்பு ஃபிரீ பிரியடை எப்படி ஆக்க பூர்வமாக கலை இலக்கியத்துக்கு அர்பணிக்க போறோம் என்கிற போதுதான், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை வரைந்து மறுநாள் டிராயிங் பிரியடில் டிராயிங் சாருக்கு காட்டலாம் என்று ஐடியா சொன்னேன்.

எனக்கு லிங்கேஸ்வரனை விட நன்றாய் படம் வரைய வரும் என்பதும் ஒரு காரணம்.

ஆளுக்கொரு வெள்ளை பேப்பரை எடுத்தோம்.

லிங்கேஸ் கட்டபொம்மனின் கண்களை வரைந்தான்.

அது கோணலாகி விட்டது.

நமுட்டு சிரிப்பு சிரித்தேன்.

நானோ, தமிழ் பாட புக்கில் உள்ள கட்டபொம்மன் படத்தில் ஒரு பெரிய கட்டம் வரைந்து, அதை சிறு சிறு கட்டமாக்கினேன்.

நெடுக்குவாக்கில் நம்பரும். படுத்த வாக்கில் ஏ பி சி டியும் எழுதினேன்.

அதே கட்டத்தை வெள்ளை பேப்பரிலும் போட்டேன்.

இப்போ ஏ8 இல் படத்தில் என்ன இருக்கிறது.சிறு அரைவட்டம் இருக்கிறது? அதே ஏ8 வெள்ளைதாளிலும் அதே அரைவட்டத்தை வரைய வேண்டும்.

இப்படி கட்டம் கட்டமாக வரைந்தால் வீரபாண்டி கட்டபொம்மனை எளிதாக வெள்ளை பேப்பரில் கொண்டு வந்து விடலாம்தானே.

லிங்கேஸ் கண்களை முடித்திருந்தான்.

பேப்பரில் அழுத்தமாக வரைந்திருந்தான். அது கோணலாக இருந்தாலும் தான் வரைந்தது சரி என்பது போன்ற தன்ன்மபிக்கையொடு வரைந்திருந்தான்.

நான் மெல்ல கோடுகளை போட்டு, அழித்து பக்காவா வரனும்கிறத்துக்காக போராடி கொண்டிருந்தேன்.

சாப்பாடை தட்டில் போட்டு ரொம்ப நேரம் முன்னாடியே இருந்தால் வரும் எரிச்சல் வந்தது.

பேப்பரை பையில் வைத்து வீட்டில் போய் வரைந்து கொள்ளலாம் . என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

குமார லிங்கேஸ் மூக்கை முடித்து மீசைக்கு வந்துவிட்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் பெல் அடிக்கும் போது வீரபாண்டிய கட்டபொம்மனை வரைந்து முடித்திருந்தான்.

அவன் தாளில், அவன் மனதை குவியவைத்து, அவனை மட்டுமே நம்பி , என் பேப்பரை , நான் என்ன வரைகிறேன் என்பதை சற்றும் சட்டை செய்யாமல் வரைந்து முடித்தே விட்டான்.

தனி தனியே பார்க்கும் போது அதில் நிறைய விமர்சனம் இருந்தாலும் மொத்தமாய் பார்க்க நன்றாகவே இருக்கிறது என்று டிராயிங் சார் அதை புகழ, என் பேப்பரை எடுத்து பார்த்தேன்.

அதில் கட்டங்கள் மட்டுமே இருந்தன. அதை வரைந்து முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

அதை சுக்கு நூறாக கிழித்து வீசி, நாளை இதைவிட நல்ல படத்தை வரைவேன் என்று எனக்குள்ளே சொல்லி கொள்கிறேன்.

பிற்காலத்தில் ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தை படிக்கும் போது “ வேலையை செய்ய ஆரம்பியுங்கள். அது சுமாராக வந்தாலும் பரவாயில்லை. வேலையை முடியுங்கள்.நன்கு திட்டமிடுறேன் என்று வேலை செய்யாமல் இருப்பதற்கு,தெரிந்ததை வைத்து வேலையை ஆரம்பித்து முடியுங்கள். அது கொடுக்கும் தன்னபிக்கை அலாதியானது” என்ற வாசகத்தை படிக்கும் போது குமார லிங்கேஸ்வரன் நினைவுக்கு வந்தான்.வீரபாண்டிய கட்டபொம்மனும்தான்.

Monday, 6 August 2012

கதை போல ஒன்று - 36


பஞ்ச பாண்டவர்கள் வழியில் வந்த ஜனமேஜய மகாராஜாவுக்கு வந்த சந்தேகம் ஞாயமான ஒன்றுதான்.

ஜனமேஜய மகாராஜா தன் ராஜகுருவிடம் கேட்கிறார்.

“ குருவே! பீக்ஷ்மர் இருந்திருக்கிறார்.கிருக்ஷ்ணன் இருந்திருக்கிறார், துரோணர் இருந்திருக்கிறார், நீதி உரைத்த விதுரர் இருந்திருக்கிறார். பிறகு ஏன் மிகப்பெரிய அழிவான குருசேத்திர போர் நடந்தது? அவர்களால் த்டுக்க முடியவில்லையா? என்றார்.

”விதி ஜனமேஜெயனே” 
ராஜகுரு பதிலளித்தார்.

ஜனமேஜய மகாராஜாவின் உதட்டு சுழிப்பில் அவநம்பிக்கை. ராஜகுரு கவலையானார்.

முடிவாக,சொல்ல வேண்டாம் என்று நினைத்த விக்ஷயத்தை சொல்லி விடுவது என்று முடிவு செய்தார்.

”ஒ ஜனமேஜய மகாராஜனே! சொல்கிறேன் கூர்ந்து கேள். மனதை நிறுத்தி நிதானமாய் கேள்.இன்னும் பத்து நாட்களுக்குள், பிராமணனை கொன்ற ’பிரம்மஹத்தி தோசத்துக்கு ஆளாவாய் என்று உன் விதி சொல்கிறது.முடிந்தால் தப்பித்து கொள் “

ஜனமேஜய மகாராஜாவுக்கு அதிர்ச்சி.ராஜகுரு வார்த்தை உலுக்கிற்று. சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று நினைத்தார்.

பிரம்ம ஹத்தி தோசத்துக்கு பரிகாரமான யாகத்தை ஐந்து நாட்கள் செய்து முடித்தால், எப்படி அந்த பாவத்து ஆளாவோம் என்று நினைத்தான். பாவம் செய்யும் முன்னரே பரிகார யாகம் செய்யும் வழி இருப்பதாக வேத பண்டிதர்கள் சொல்ல, யாகம் அறிவித்தார்.

தன் ஆஸ்த்தான பிராமணர்களை அழைக்க, அவர்களோ ஐந்து நாட்கள் கண்முழித்து யாகம் செய்ய தங்களால் முடியாதென்றும் ஒருநாள் தூங்கிவிட்டால் கூட பலன் கிடைக்காதென்றும் ஒதுங்க, யாகம் நடத்தி கொடுப்பவர்களுக்கு வெகுமதி கொடுப்பதாக அறிவித்தார்.

வறுமை முத்தமிட்ட ஐந்து பிராமணர்கள் தாங்கள் அதை நடத்தி கொடுப்பதாக சொல்ல யாகம் தொடங்கிற்று.

பிராமண்டமான யாக குண்டம் அருகே ஐந்து பிராமணர்களும் அமர்ந்திருக்க, ஜனமேஜய ம்காராஜாவும் அவர்கள் சொல்லும் மந்திரத்தை அவர்களோடு உச்சரிக்க வேண்டும்.

உக்கிரமாய் ஆயிற்று யாகம்.

நெய், பட்டு, பால்,தங்கம், வெள்ளி, வெண்ணெய் என்று எல்லாவற்றையும் யாக குண்டத்திலிட்டு நான்கு நாட்கள் கண் தூங்காமல் யாகம் நடந்தது.

இன்னும் ஒருநாள் முடிந்தால் பிரம்மஹத்தி தோச பரிகாரம் கிடைத்து விடும்.

ஐந்தாம் நாள் ஜனமேஜய மகாராஜா பக்கத்தில் அமர்ந்த பிராமணரால் தூக்கத்தை அடக்க முடியவில்லை.

அவரை அறியாமல் தூங்க ஆரம்பித்தார்.

தூக்கத்தில் கனவு.

கனவில் அவர் அடர் காட்டுக்குள் கனி தேடி போக, அழகான பூக்களை பார்க்கிறான், வர்ண பறவைகள் ரம்மியாமாய் ஆடுகின்றன. திடீரென்று புதரிலிர்ந்து புலி ஒன்று பாய்ந்து வந்து அவரை துரத்துகிறது.

ஒடுகிறார்.

புலியின் பாய்ச்சல் முன்னால் அவரால் ஒட முடியவில்லை. இருப்பினும் உயிராயிற்றே ! ஒடுகிறார்.

தனக்கும் புலிக்கும் இடையேயான தூரம் குறைவதை அவரால் உணர முடிகிறது.

இதோ பக்கத்தில் வந்து விட்டது. இதோ புலி தன் கால் நகத்தால் அவர் முதுகை கீற போகிறது.

தன் பக்கத்தில் உள்ள பிராமணர் தூங்கி வழிவதை பார்த்த ஜனமேஜய மகாராஜா, பிராமணர் ”புலி கனவு “ காண்கிறார் என்பதை அறியாதவராய், அவரை எழுப்ப தன் கையிலுள்ள தர்ப்பை புல்லால் பிராமணரின் முதுகை சுரண்ட, புலிதான் தன் கால் நகத்தால் தன் முதுகை கிழிக்கிறது என்ற நினைத்த பிராமணர், ஒவென்று அலறி யாக குண்டத்தில் தவறி விழுந்து தன் உயிரை விட்டார்.

யாக பலனும் இல்லாமல் , பிராமணனை கொல்ல வைத்து, பிரம்மஹத்தி தோசத்துக்கும் ஆளாக்கின ”விதி” ஜனமேஜய மகாராஜனை பார்த்து பெரிதாய் சிரித்தது.

Sunday, 5 August 2012

கதை போல ஒன்று - 35

ஏங்க உங்க துணியல்லாம் பேக் பண்ணிட்டீங்களா?

ஆமா. என் ஜீன்ஸ்ஸ வைச்சிட்டேன். அப்புறம் சர்ட் மூணையும் வைச்சுட்டேன். பனிய... 

”ஏங்க வச்சிட்டேனான்னு கேட்டா. வச்சிசிட்டேன்னு சொன்னா போதும். சும்மா தொன தொனன்னு நீங்க எப்படி பேக் பண்ணுனீங்கன்னு விளக்கி போரடிக்க வேண்டாம்”

மனைவி சட்டென்று சொன்ன போது அவமானபட்டேன். அவள் முகத்தை பார்த்தேன். குறும்பாகத்தான் சொல்லி இருக்கிறாள். ஆனாலும் வலித
்தது.

சார்மினார் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க கால் டாக்சியில் ஏறி செகந்திராபாத் ரெயில்வே ஸ்டேசனை நோக்கி போகிறோம்.

மீரா சேட்டை செய்து கொண்டே வர, மனைவி ஆர்வமாக பல விசயங்களை பேச, எனக்கோ அடிபட்ட விக்ஷம் உள்ளேயே கிடக்கிறது.

“வர வர இவளக்கு தன்னம்பிக்கை ஓவரா இருக்கு.” எனபது மாதிரி யோசித்து கொண்டே இருந்தேன்.

அது தெரியாமல் தன் தோழி பத்மா பத்தி பேசி கொண்டே வந்தாள்.

பத்மா ரொம்பவும் அழகாக இருப்பாள். அவளை பற்றி நானே அடிக்கடி விசாரிப்பேன். ஏனென்றால் பத்மா கருணை மிகுந்தவளும் கூட.

எங்களுக்கு ஹைதிராபாத்தில் மாரல் சப்போர்ட்டாக உள்ள ஒரே ஜீவன். மேலும் சான்ஸ் கிடைக்கிறது என்பதற்காக என்னை அண்ணா என்று கூப்பிடாமல் இருப்பதும் எனக்கு பிடித்திருந்தது.

ஆனால் அன்று அவளை ப்த்தி பேசியும் கூட மனது, வீட்டுக்காரி என்னை திட்டியதையே சுத்தி சுத்தி வந்தது.

வ்ரிசையாக மூன்று வருடம் குடும்பம் நடத்தியதில், அவள் செய்த நெகட்டிவ் பாயிண்ட்ஸ் எல்லாத்தையும் நினைத்து பார்த்தேன்.

”என் தம்பிய கிண்டல் பண்ணாதீங்க, நீங்க மட்டும் என்னத்த சம்பாதிசிட்டு இருக்கீங்க” என்று என் அம்மா முன் என்னை திட்டியது.

“யம்மா ! அவங்க லூசும்மா. அப்படித்தான் பேசுவாங்க “ என்று அவள் வீட்டார் முன் என்னை பேசியது”

“அட இவுங்க வேஸ்ட்டு பிரபு. லேண்ட் வாங்கிறதுலல்லாம் இண்டிரஸ்ட்டே கிடையாது. சும்மா புக்க படிச்சிட்டு ஸீன் போடுவாங்க” என்று தன் தோழனிடம் என்னை அவமானபடுத்தியது. என்று எல்லாம் ஞாபகம் வந்தது.

நான் என்ன யோசிக்கிறேன் என்று தெரியாமல் அப்பாவியாய் மனைவி தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தாள்.

விக்ஷம் இறங்கவே இல்லை.

எனக்கு தினமும் உபசரணை செய்வதையோ, டயர்டாய் இருக்கிறது என்று சொல்லும் போதெல்லாம் கால் அமுக்கி விடுவதையோ, இன்னும் பல பாஸிட்டிவ் பாயிண்டுகளையும் மறந்தே போய்விட்டேன்.

என்னை எப்படி தொண தொணவென்று பேசுவதாக சொல்லலாம்.

செகந்திராபாத் ஸ்டேசன் பரபரப்பாய் இருந்தது.

வழக்கமாய் பிளாட்பார்ம் ஒன்றில் நிற்கும் சார்மினார் அன்று, பிளாட்பார்ம் பத்தில் நிற்க, போர்ட்டரிடம் விசாரித்தால், நூற்றி அம்பது ரூபாய் கேட்க் எரிச்சலானேன்.

டிராலி சூட்கேசின் மேல் ,இன்னொரு பையை வைத்து, இடது கையில் இன்னொரு பையை தூக்கி, முதுகில் கனத்த லேப்டாபோடு நடக்க, மீராவை தூக்கி கொண்டு மனைவி பின் தொடர்கிறாள்.

மீரா வேறு அழுது கொண்டே இருக்கிறாள்.

பத்தாவது பிளாட்பார்ம் வ்ரும்போது சோர்வின் உச்சத்துக்கு போனேன்.

கோச் நம்பர் எஸ் 12. உடம்பெல்லாம் வலித்தது.

மீரா அழுகையை கூட்டியிருந்தாள். எரிச்சலாய் வந்தது.

”ஏம்பிள இவ இப்படி கத்துறா ” என்று கத்தினேன்.

“தெரியலையேங்க ‘

“சாப்பிட்டாளா”

“ஆமா காலையில் ரஸ்க் சாப்பிட்டா. அப்புறம் காம்பிளான் குடிச்சா. மத்தியானம் சோறு... “

இடைமறித்தேன்.

“அட லூசு சாப்பிட்டாளா இல்லையான்னு கேட்டா. ஆமா வயித்துக்கு சாப்பிட்டா. இல்லன்னா. இல்ல சாப்பிடல. அப்படி சொல்லனும். சும்மா தொண தொணன்னு ஒண்ணு ஒண்ணா சொன்னா.எனக்கு வேற வேலையில்லையா. நீ சொல்ற எல்லாத்தையும் கேட்கனுமா.என்ன மண்டைக்கு வழியில்லதவன்னு நினைச்சுகிட்டியா.உன் மூஞ்சி பாத்தாலே கடுப்பா இருக்கு ”

என்று உச்சஸ்தாயில், குரலை உயர்த்தி, வெறி பிடித்தவன் போல் கத்துவதை மொத்த பிளாட்பார்ம் நம்பர் பத்தும் பார்க்க, மனைவி கண்களில் கண்ணீர் வடிய, மீராவும் அழுகையை நிறுத்தி பயத்தோடு என்னை பார்த்தாள்.

Saturday, 4 August 2012

சுயதம்பட்டமும் ஒரு செய்யுளும்...


இது கொஞ்சம் உருப்படியான பதிவு.

முதலில் கொஞ்சம் சுய தம்பட்டம் இருந்தாலும் கடைசியில் மேட்டர் இருக்கும்.

பொறுமையாக படிக்கம்வும் :)

நாங்கள் “ஆனந்தம்” படத்தில் வருவது மாதிரி நான்கு அண்ணந்தம்பிகள்.

அதில் வரும் அப்பாஸ் (மூன்றாவது பேரழகன்) நான்.

இதில் முதல் அண்ணன் விஞ்ஞானியாய் இருக்கிறார்.

இரண்டாவது அண்ணன் டாக்டராய் (எம்.டி. ஜெனரல் மெடிசின்) இருக்கிறார்.

தம்பி சாஃப்ட்வேர் இன்ஜினராய் இருக்கிறார்.

நான் மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினராக இருக்கிறேன்.( எவ்வளவு பந்தாவா இருக்கு இத எழுதும் போது )

இரண்டாவது டாக்டர் அண்ணனிடம் இன்று பேசினேன். அதுவருமாரு.

“நாந்தான் விஜய் பேசுறேன்”

“தெரியுது”

“வந்து எனக்கு சென்னைல வேலை கிடைச்சுருக்கு பாத்துக்க.வந்து இரண்டுவாராம் ஆகுது பாத்துக்க.சாரி உங்கிட்ட லேட்டா சொல்றேன்”

“உன் அண்ணி என்ன கிண்டல் பண்றா.நீ வேலை கிடைச்சத சொல்லல. பெரியண்ணன் கார் வாங்கினத என்கிட்ட சொல்லனுன்னு”

“அப்ப நீ மட்டும் ஹைதிரபாத்ல இருக்கும் போது என் பிறந்த நாள் வாழ்த்து சொன்னியா? என் பொண்டாட்டி என்ன கடிச்சி கொதறிட்டா “ என்றேன்.

“சரி விடு விடு யானைக்கும் பானைக்கும் சரியா போச்சு. லூசுல விடு “ என்று அண்ணன் சிரித்தான்.

நான் கேட்டேன்.

“நீ ஒரு செய்யுள் சொல்வே இல்ல பிரதர். “கோடொரு சினையில்” ன்னு அது எனக்கு வேணும்.

“உனக்கு எதுக்குல விஜய் அது வேணும்”

“ஹி ஹி பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறேன். ஒரு வெரைட்டி வேணும் அதான்”

“சரி சொல்றேன் எழுதிக்க” என்றான் அண்ணன்.

அண்ணனின் ஞாபக சக்தி அதிசயிக்க வைக்கும்.

பார்மக்காலாஜி என்றொரு பேப்பரை கண்டு எல்லோரும் மெடிசினில் கொஞ்சம் பயப்படுவார்கள். ஏனென்றால் நிறைய மருந்து பேரை ஞாபகம் வைக்க வேண்டும். அண்ணன் அதில் அசால்டு ஆறுமுகமாக பாஸானார் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.( அப்படி புகழ வேண்டியதுதான். நீங்க என்ன செக் பண்ணவா போறீங்க டியர்ஸ் :) )

சரி இப்போ செய்யுள்.இத எழுதினது யாருன்னு சரியா ஞாபகம் இல்ல.

....................................................

கோடொரு சினையில் காகம்

கூடுவைத்து அனேக காலம்

பேடொடு கூடி வாழும்

பெருமர பொந்தில் வந்தே

ஆடியல் கரும்பாம்பொன்று

அதனிடும் முட்டையெல்லாம்

நாடியே குடித்து போக

நலிந்துளம் மெலிந்து வாடி

தன்னுயிர் பாங்கனான

சாம்புகன் அருகில் போய்



இங்கு என்ன செய்குவன் நான் என



நீ போய் மன்னவன் தேவியாடும்

மஞ்சன சாலை குக்கு

பொன்னணி கொண்டு வந்து

போடுக பொந்தில் என



காகம் அப்படியே செய்ய



காவலன் ஏவலாளர் ஏகி

மாமரப் பொந்தை ஈந்தனர்

ஈரும் போதில்

நாகம் அங்கிருந்து சீற

நறுக்கினர் இரு துண்டுகளாக

ஆகையால்

உபாயத்தாலிலாதிலை

உரைத்தல நன்றே.

....................................................


ரைட்டு... இப்போ இதற்கு விளக்கம் கிழே

ஊர் கோடியில் மரத்தின் கிளையில் காகம்
பல காலமாய் கூட்டை கட்டி
மனைவியோடு கூடி வாழ்ந்தது.
அந்த மரத்தின் பொந்தில் உள்ள
ஆடும் கரும் பாம்பு ஒன்று வந்து.
காகம் இடும் முட்டையெல்லாம்
விரும்பி குடித்து விட
காகம் மனம் வாடி

தன் உயிர் நண்பனான
நரியிடம் முறையிட்டு
என்ன பண்ணுவேன் என்றது.

நீ போய் மன்னனின் மனைவியான ராணி
குளத்தில் குளிக்கும் போது
அவள் பொன் நகைகளை கொண்டு வந்து
பாம்பின் பொந்தில் போடு என்றது நரி.

காகம் நரி சொன்னபடியே செய்ய

மன்னரின் படைவீரர்களை ஏவி
மாமரப் பொந்தை சோதித்தனர்.
சோதிக்கும் போது
பாம்பு அங்கிருந்து சீற
பாம்பை நறுக்கினர் இரு துண்டுகளாக
அதனால் தந்திரத்தால் சாதிக்க முடியாத காரியம் இல்லை.
என்று உரைத்தல் நல்லதே.

இந்த செய்யுளை சொன்ன அண்ணணுக்கு நன்றி.

இதை ஞாபகம் வைத்து அண்ணனிடம் கேட்டு எழுதிய என்னையும் பாராட்டி விடுங்கள்...

ஐ லைக் பப்ளிசிட்டி ... :))

Friday, 3 August 2012

கதை போல ஒன்று - 34

வீர ராகவனின் அம்மா தவறிவிட்ட செய்தி கேட்டு காலேஜ் நட்புகள் எல்லோரும் போயிருந்தோம்.

திருவெல்லிகேணியில் வீடு சோகம் ததும்பி இருந்தது.

கிடத்தபட்ட அம்மாவின் உடலுக்கு 
மரியாதை செய்துவிட்டு, வீர ராகவனை பார்த்தேன்.

என்ன சொல்ல முடியும். அப்போது நாங்கள் சொல்லும் எந்த வார்த்தையும் சம்பிரதாயமாகவே முடியும். அவனை என்ன செய்யும் அது. ஆசுவாசபடுத்த முடியாதென்றே தீர்மானித்து அமைதியாகவே இருந
்தோம்.

வீர ராகவன் அழுத்தமாகவே இருந்தான்.நல்ல உயரம். உடற்கட்டும் அப்பட்டியே.அவன் ஜாதி நினைவுக்கு வந்தது.

வீரராகவனுக்கு ஒரு தம்பி மட்டும்தான்.

நல்லவேளை தம்பி மட்டும்தான். அக்கா தங்கை என்று பெண்கள் இல்லை. இருந்திருந்தால் அம்மா இல்லாமல் கஸ்டபட்டிருப்பார்களே என்று நினைத்தேன். ஏன் வீரராகவனும் அவன் தம்பியும் கஸ்டபடமாட்டாங்களா? ஏன் இப்படி யோசிக்கிறோம் என்று நினைத்தேன்.

காபி வந்தது. ம்தியம் இரண்டு மணிக்கு காபி குடிக்க முடியாதுதான்.இருந்தாலும் கவனத்தை வேறு ஏதாவதில் திருப்பினால் தேவலை போல இருந்தது. நண்பர்கள் எல்லோரும் காபியை குடித்தோம்.

வீட்டில் ஆங்காங்காங்கே டேபிள் பேன் வைத்திருந்தனர். அதில் ஒரு பேன் வேலை செய்யவில்லை.

பிரவீன் அதை சோதித்து அது வயர் பிரச்சனை என்று, பிளேடும் டேப்பும் வைத்து சரி செய்ட்து பேனை ஒடவைத்தான்.

வீரராகவனின் அப்பாவிடம் போய் “அங்கிள் வேறு என்ன உதவி வேண்டும் “ என்று எதாவது செய்து கொண்டே இருந்தான்.

நாங்கள் அமைதியாக இருந்தோம். உதவி தேவைப்படும்தானே உதவ முடியும். நம்முடைய ஆர்வத்திற்காக மட்டும் உதவி செய்ய முடியாதில்லவா?.

மயான பூமியில் எரியூட்ட பட ஆயுத்தமாய் இருந்தன ஏற்பாடுகள். எரித்ததை பார்த்ததே இல்லை.

எங்கள் சமூகத்தில் புதைக்க மட்டுமே செய்வார்கள்.

வீர ராகவன் , அவன் தம்பி , அப்பா எல்லோரும் சட்டையில்லாமல் இருந்தார்கள்.விறகும் வறட்டியும் சூழ்நிலையின் தீவிரத்தை சொல்லி கொண்டிருந்தன.

அங்கு காரியங்களை நடத்துபவர் சத்தமாக “ஐய்யிரு திங்கள் வயிற்றில் வைத்து “ என்றொரு தொகையறா சொல்ல, அடிவயிறில் துக்கமும் பீதியும் முதல் முறையாக படர்ந்தது.

வேடிக்கை பார்க்கும் தளத்திலிருந்து துக்கமாகும் தளத்துக்கு நகர்கிறேன்.

எவ்வளவு சுரணை இல்லாமல் இருக்கிறேன்.

அம்மாஆஹ்... அம்மா வருடா வருடம் பத்து நாள் கோயில் கொடைக்கு ஊருக்கு போனாலே எப்படி தவிக்கிறேன்.

வீரராகவனுக்கு இனி காலமெல்லாம் அம்மா இல்லையே. நிரப்பவே முடியாத வெற்றிடம் கொடுத்த துக்கம் என்னை ஆட்கொண்டது.

கடைசி முகத்தை பார்பதை தவிர்த்தேன்.
உடைந்துவிடுவோமோ என்று பயந்து.

எல்லாம முடிந்து திரும்பும் போது, வீரராகவன் எல்லோர் கைகளையும் பிடித்து. “சரி மச்சி. கிளம்புங்கடா. ரெண்டு நாள்ல காலேஜ்ல மீட் பண்ணலாம்” என்று சொல்லி அனுப்பி விட்டான்.

கண்கலங்கியிருந்தை மறைத்தே பேசினான். எனக்கும் என் வீட்டுக்கு போகும் ஆவல் இருந்ததால் அது பிடித்தே இருந்தது.

பிரவீண் சாதரணமாக பேசி கொண்டே வந்தான்.

திடீரென் இரண்டு மூன்று பேர்கள் பீச், பக்கம்தான் போய்விட்டு போகலாம் என்று சொல்ல எல்லோரும் கடற்கரை சென்றோம்.

அமைதியாய் உட்கார்ந்திருந்தோம்.

ஒரு இடத்தில் தனியே இருந்து யோசிக்கும் போதுதான் வீரராகவனின் துக்கம் புரிந்தது.பதினைந்து நிமிடம் யாரும் சரியாய் பேசவில்லை.

பிரவீண் எழுந்து குத்து மண்ணை எடுத்து விமல் சட்டையில் போட்டான். “மச்சி இப்படித்தான் நான் மியூசிக் காலேஜ் பொண்ணுங்க கூட பீச் வந்த போது மண்ணை எடுத்து போட்டேன் “ என்று சிரித்தான்.

ஒரிரு பேர்கள் சிரித்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் சூழ்நிலை ஜாலியானதாய் ஆனது.

எல்லோரும் கடற்கரையில் கால் நனைத்தோம். ஒடி பிடித்து விளையாடினோம்.

மூச்சிரைக்க கபடி விளையாடினோம்.

சுண்டலும் காப்பியும் குடித்தோம்.

“ஏ” ஜோக் பேசிக்கொண்டோம்.

மனசு லேசானது.

நண்பர்களிடம் விடை பெற்று கொண்டு 29 ஏ பஸ்ஸில் பெரம்பூர் வர ஏறி தனியாய் இருக்கும் போது குற்ற உணர்ச்சி வந்தது.

ஏன் இப்படி கீழ்தரமாக நடந்து கொள்கிறோம்.?

“ரோம் எரியும் போதுதானே பிடில் வாசிக்க கூடாது. எரிந்து முடித்து எல்லாம் முடிந்த பின்னர் வாசிக்கலாம் அல்லவா. எப்போதுமா எரிந்த ரோமை நினைப்பது” இது மாதிரி இலக்கிய மண்ணாங்கட்டியாய் ஒரு சிந்தனை வந்தது.

அப்போது என் மேலேயே எனக்கு சொல்ல முடியாத வெறுப்பும் எரிச்சலும் வந்தது.

இந்த அருவெருப்பான சுயநல வாழ்க்கையை இது மாதிரி முரண்பாடாய் வாழ்ந்துதான் சாக முடியும். வேறு என்னதான் செய்ய முடியும் என்று தோண்றிற்று.

பஸ் நகர்ந்தது.

Thursday, 2 August 2012

நச் கேள்வி ஐந்து - குரு சிக்ஷ்யன்

1.... 

குருவே! 

மாம்பழத்தை நறுக்கும் போது தோலை ஏன் இவ்வளவு கவனமாக நறுக்குகிறீர்கள், அதில் எவ்வளவு பழத்தை மிச்சம் பிடித்து விடபோகிறீர்கள், அரைத்துண்டு மாம்பழம் கிடைக்குமா? ஒரு அடுக்கு ஆழமாகத்தான் எடுத்தால் என்ன ?

மெலிதாக அறுப்பது, பழத்தை மிச்சபடுத்துவதற்கு மட்டுமல்ல, வெடடும் போது பழம் குளுகுளுப்பாகாமல்,சிதையாமல் தடுக்கவும்தான் சிக்ஷ்யா!

2...

குருவே !

கன்னிகாபுரம் ஆடுதொட்டி பக்கம் போகும் போது ஒரு காட்சியை பார்த்தேன். சிகப்பு நிற சதை மாமிசங்கள் மீன் பாடி வண்டியில் போக, அதை காக்கைகள் கொத்தி கொத்தி தின்கின்றன. அதை பார்த்ததும் அருவருப்பு தாங்க முடியவில்லை.மற்றவர்கள் சாப்பிடும் உணவின் மேல் ஏன் இப்படி தோண்றுகிறது.?

நீ அந்த மீன்பாடி வண்டி பின்னாலே போனால் அது கோயம்பேடு மார்க்கட் பக்கத்தில் உள்ள பிரியாணிகடைக்கு போகும். அந்த மலிவான விலை கறியில் செய்யும் உணவை தின்றுதான், செரித்துதான் காலை ரெண்டு மணிக்கு லாரியில் ஏறி ஒற்றை ஆளாய் எண்பது கிலோ கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, பல்லாரி மூடைகளை கீழே இறக்குகிறான், விழுப்புரம் திருவண்ணாமலை பக்கத்தில் இருந்து வரும் கூலி தொழிலாளி.
அந்த காய்கறிகள்தான் வைதீக கோயில்களில் கிச்சடி சாதமாக ருசிக்கிறது என்று நினை, உனக்கு அருவருப்பு வராது சிக்ஷ்யா!

3...

குருவே!

என் நண்பன் அடிக்கடி தன் அந்தரங்கத்தையெல்லாம் சொல்லிவிட்டதாக சொல்கிறான். அதை எப்படி எடுத்து கொள்வது ?

எவன் ஒருவன் தன் அந்தரங்கத்தையெல்லாம் சொல்லிவிட்டதாக சொல்கிறானோ, அவன் அதையும் விட அந்தரங்கத்தை சொல்லாமல் வைத்திருக்கிறான் என்பதுதான் உண்மை. எதை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் இருக்கிறதோ அதுவே அந்தரங்கம் சிக்ஷ்யா !

4...

குருவே!

ஒருவன் பதட்டத்தோடு யோசித்து கொண்டிருக்கும் மனநிலையில் இருக்கிறான் என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?

அவன் சாதரணமாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, அவன் கால்விரல்களை பார் !. அது மடங்கி தரையில் அழுத்தி இருந்தால் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று அர்த்தம் சிக்ஷ்யா !

5...

குருவே!

ரோட்டில் போகும் போது எப்படி வழிகேட்க வேண்டும் ?

எப்படி வேண்டுமானாலும் கேள். ஆனால் வழி சொல்பவர், வழி சொல்லும் போது அதை மட்டும் கூர்ந்து கேள். அது புரியாது என்று முதலிலேயே நினைத்து சும்மா தலையாட்டாதே.
உன் தலையாட்டல் அவருக்கு தேவையே இல்லை. வழி கேட்க்கும் போது இவருக்கு எப்படி நன்றி சொல்லப்போகிறோம் என்றும் யோசிக்காதே.வழி புரியாது சிக்ஷ்யா.