Wednesday 17 April 2013

கதை போல ஒன்று - 85


இந்தியா டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது.அன்றைய நாள் மகிழ்வாய் போகும் என்று நம்பினேன்.

வீட்டில் யாரும் இல்லை.

முந்தின நாளே ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி வைத்துவிட்டேன்.எனக்கு பிடித்த ஜூஸ்களையெல்லாம் குளிர்பெட்டியில் திணித்தாயிற்று.

விடுமுறையில்,யாரும் இல்லாத சமயத்தில் சோபாவில் படுத்துகொண்டு நேந்திரம் பழம் சிப்ஸும்,ஜூஸும் சாப்பிட்டுக்கொண்டு கிடப்பது மகிழ்வான தருணம்தான்.

டிவியில் வெளிச்சம் அடிக்க, ஜன்னலை பூட்டுவதற்காக எழுந்தேன்.வெளியே “வாட்ச்மேன் பொண்டாட்டி” தன் சிறிய குடிசைமுன்னால் பாத்திரம் விளக்கி கொண்டிருந்தார்.

பெயர் எல்லாம் தெரியாது.அம்மா வாட்ச்மேன் பொண்டாட்டி என்பார்.நானும் அப்படியே கூப்பிடுவேன்.அவரை நேருக்கு நேர் விளிக்கும் போது “அக்கா”வென்றோ அல்லது மொட்டையாகவோ பேசிவிடுவது வழக்கம்.

ஜன்னல்முன் என் உருவம் தெரிய பாத்திரம் விளக்கியபடியே “சாப்டாச்சா” என்றார்.

“ஆ சாப்டாச்சு.நீங்க சாப்ட்சாச்சா.”

“இனிமதான்ப்பு காய்ச்சல் மாதிரி இருக்கு”

“யக்கா அதென்ன பக்கத்துல மீன்சட்டியில் சாள மீன் வைச்சிருக்கிய” என்றேன்.

“ஆமா நேத்து கிடைச்சது.உங்க வீட்டு ஃபிரிட்ஜிலதான் வெச்சி அம்மா காலையில கொடுத்தாங்க”

“நம்ம சாளன்னு சொல்றது மெட்ராஸ்ல கவள மீனுன்னு சொல்றாங்க கவனிச்சீங்களா”

வாட்ச்மேன் பொண்டாட்டி தன் சிரிப்பை பெரிதாக காட்டி, ஆம் நான் நீ சொல்வதை கவனிக்கிறேன் என்று அங்கீகரித்தார்.

வீட்டு ஒனர், எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டபிறகு, பணம் கொட்டிற்றோ என்னவோ இன்னும் இரண்டு வீடுகள் கட்ட ஆரம்பித்தார்.

வீட்டின் சிமெண்ட் ஜல்லி மணலை பாதுகாக்க இருந்த வாட்ச்மேனுக்கு,வீட்டின் இடது பக்கம் இருக்கும் சிறுதுண்டு நிலத்தில் குடிசை கட்டி கொடுத்தார்.

வாட்ச்மேன் எப்போதும் கண்களில் கலக்கமாய் பக்கத்தில் போனால் பழவாசனையாய் இருக்கும் ரகம்.அவர் குடுமத்தை அழைத்து வருவதற்கு முன்னால் யாருமே அவரிடம் பேசமாட்டோம்.

இரண்டு மாதம் முன்னால்தான் ஒல்லியான ரெண்டு மூக்கிலும் மூக்குத்திய,கறுத்த பெண்ணாய் வாட்ச்மேன் பொண்டாட்டி. தன் இரண்டு வயது குழந்தையுடன்,சொந்த ஊரான படுக்கபத்தில் இருந்து சென்னை வந்தார்.

வந்தவர் அம்மாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டார்.வாட்ச்மேன் பொண்டாடியுடன் பேசி பேசி சமயத்தில் வாட்ச்மேனை அதட்டும் அளவுக்கு அம்மா வந்துவிட்டாள்.

சில சமயம் வீடு கட்டும் வேலை நடக்கும் போது சித்தாள் வேலையும் செய்வார்.குழந்தை சும்மா பக்கத்தில் கல்லு மண்ணில் விளையாடிக்கொண்டிருக்கும்.

திருமணம் பற்றிய எல்லா கோட்பாடுகளை கிண்டல் செய்யும் நான் “இவல்லாம் ஏன் பிள்ள பெத்துக்கிறா” என்பது மாதிரி நினைப்பேன்.

தவறியும் மூக்கொழுகும் அந்தக்குழந்தையை கொஞ்சினதில்லை.அம்மாவுக்கு அதெல்லாம் இல்லை.சில சமயம் அம்மா இடுப்பில் அந்தகுழந்தை ஏறியிருக்கும்.

சில மதிய வேளையில் வாட்ச்மேன் பொண்டாட்டி நடுஹாலில் குழந்தையை வைத்துகொண்டு படுத்திருப்பார்.

முதன் முதலாய் இதைப்பார்க்கும் போது அம்மாவிடம் காட்டுகத்து கத்தினேன்.”அதிலென்ன இருக்கு.நீங்க யாரும் இல்லாத சமயத்துல அது நம்ம வீட்ல கொஞ்சம் ஆத்தலா ஃபேனுக்கு அடியில படுத்திருக்கா.அப்படி படுத்தா என்ன தர தேய்ஞ்சிருமா? நீதான் இன்னும் மெச்சூரிட்டியா இருக்கனும்” என்ற பதிலே கிடைக்கும்.

குடிசையை பார்க்கும் போது வரும் மற்றொரு சந்தேகம் இந்த வீட்டில் பாத்ரூம் லெட்ரின் கிடையாதா?

அப்படியில்லைன்றால் காட்டுப்பக்கமா போகிறார்கள்.சென்னையில் எங்கே காட்டுப்பக்கமெல்லாம் இருக்கிறது என்ற குழப்பம் வந்தது.

இதை அம்மாவிடம் கேட்கும் போது “அவுங்க எப்படியோ சமாளிக்கிறாங்க,உனக்கு எல்லாமும் தெரியனுமோ” பதில்தான் கிடைக்கும்.

இந்திய பேட்ஸ்மன்கள் பிட்சுக்கு வந்தார்கள்.சோபா என்னை உள்ளிழுத்து கொண்டது கிரிக்கட்டை பருக.

ரிமோட்டில் சவுண்ட்டை அதிகப்படுத்தினேன்.
அரைமணி நேரத்தில் சேவாக் முப்பத்தியைந்து ரன் அடித்திருந்தார்.

காலிங் பெல் அடித்தது.யாராவது சொந்தக்காரங்களா இருக்குமோ என்று பயந்தபடியே கதவை திறந்தேன்.அழகான முப்பது வயதொத்த பெண் நின்று கொண்டிருந்தார்.

சிரித்தார்.

“சாரி எனக்கு தமிழ் தெரியாது.ஆங்கிலம்தான் தெரியும்.பக்கத்து விட்டிற்கு வாடகைக்கு வரப்போகிறேன் அடுத்த வாரம்.வீட்டுச்சாவி வேண்டும்.”

அம்மா சொல்லிவிட்டு போனதகவல்தான்.சாவியை எடுத்து கொடுத்தேன்.

”நீங்களும் அந்த வீட்டிற்கு வரமுடியுமா”

நான் லுங்கியுடனே அசிரத்தையாக போனேன்.

அந்த பெண் அடிக்கடி கனிவோடு என்னை நோக்கி சிரித்தார்.விசாகபட்டிணம் சொந்த ஊராம்.தெலுகு ஹிந்தி ஆங்கிலம்தான் தெரியுமாம்.

வீட்டைப்பார்த்தவர்.

”கிச்சன் மேடைதான் கொஞ்சம் அழுக்காக இருக்கிறது.இங்கு யாரோ வாட்ச்மேன் வைஃப் ஒருத்தர் இருக்காராமே.அவர் கழுவி விடுவார் என்று ஹவுஸ் ஒனர் சொன்னார்.”

ஆம் என்று வாட்ச்மேன் பொண்டாட்டியை அழைத்தேன்.

வந்தவர் சேலையை தூக்கிக்கட்டி தன் கருத்த கால்களை காட்டி கிச்சன் மேடை மற்று கிச்சனை பதினைந்து நிமிடத்தில் கழுவி சுத்தம் செய்தார்.

“நன்றி என்னையும் வாட்ச்மேன் பொண்டாட்டியையும் பார்த்து பொதுவாய் சொன்னவர். பின் வாட்ச்மேன் பொண்டாட்டியை பார்த்து
“நீங்கள் போகலாம் “ என்றார்.

நான் அதை மொழிபெயர்த்து சொல்லவில்லை வாட்ச்மேன் பொண்டாட்டியிடம்.

வாட்ச்மேன் பொண்டாட்டி போகாமல் தயங்கி தயங்கி ஏதோ சொல்ல காத்திருந்தார்.

பின் அந்த பெண்ணிடம் போய் பாத்ரூமை கைகாட்டினார்.

“இவர் என்ன சொல்கிறார்” என்று அந்த பெண் என்னைக்காட்டினார்.
“உங்கள் வீட்டு பாத்ரூமை அவசரமாக உபயோகிக்க வேண்டுமாம்.அனுமதி கேட்கிறார்.”

அந்த விசாகப்பட்டிணத்து பெண்ணின் முகம் சிவந்தது.

“என்ன?”

இப்போது வாட்ச்மேன் பொண்டாட்டி குறுக்கிட்டு “ரொம்ப அவசரம் இன்னைக்கு ஒருநாள்தான் அப்புறம் போகமாட்டேன்.நல்லா கழுவி கொடுத்திர்றேன்”

நான் அதை அவளிடம் மொழிபெயர்த்தேன்.வீடு கட்டும் போது கட்டிட வேலை செய்பவர்கள் இது மாதிரி செய்வது சகஜம்.இதில் பெரிய தவறொன்றுமில்லை என்று சொன்னேன்.

அந்த விசாகப்பட்டினத்து பெண் வாட்ச்மேன் பொண்டாட்டியிடம் திரும்பி “நோ நோ” என்று கையை வைத்து அழுத்தமாக ஒரு செய்கை செய்தார்.

வாட்ச்மேன் பொண்டாட்டி விடவில்லை.” இது மாதப்பிரச்சனைக்கு முன்னாடி வயிறக்கலக்கும் அதுமாதிரி” என்று தமிழில் அந்த விசாகப்பட்டினத்து பெண்ணிடம் குரலை தாழ்த்தி சொன்னார்.

புரியவில்லை அவர் சொன்னது இவருக்கு.
நான் மொழிபெயர்க்க முயற்சித்தை கண்டுகொள்ளவில்லை.

வீட்டைப்பூட்டிவிட்டு வெளியே வந்தார்.சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு தன் ஸ்கூட்டியில் ஏறிப்பறந்தார்.

வாட்ச்மேன் பொண்டாட்டியின் முகத்தைப்பார்த்தேன்.

உடலின் அவஸ்த்தைகள் அவர் முகத்தில் குடியிருந்தன.மனதின் பிரச்சனை என்னவாயினும் இருக்கலாம்.உடலின் கழிவுகள் வெளியேற காத்திருக்கும் போது அதை நிம்மதியாக செய்ய ஒரு இடம் இல்லாத தன்மை என்னை இளகசெய்தது.

சாவியை நீட்டினேன் “யக்கா அவுங்க போயிட்டாங்க நீங்க போங்க”

வாட்ச்மேன் பொண்டாட்டி அந்த அவஸ்த்தையிலும் அதை வாங்கவில்லை.என்னவோ போல் இருந்தது.
மறுபடியும் சொன்னேன் “யக்கா நீங்க என் வீட்டு பாத்ரூமுக்கு போங்க”

அவரின் முக அவஸ்த்தை கூடிக்கொண்டே போனது.

”எங்க வீட்டு பாத்ரூமுக்கு போங்க.நான் வீட்டுக்கு வெளியவே நிக்குறேன்.”

“அம்ம இல்லாம தனியா இருக்கும் போது எப்படி வரது “என்று உணர்ச்சியே இல்லாத சிரிப்பை சிரித்தவர்.

“உள்ளப்போய் எனக்கொரு பிளாஸ்டிக் கவர் எடுத்துட்டுவாப்போ.அத மட்டும் செய்”

ஒடிச்சென்று பெரிய பாலத்தீன் கவரை எடுத்துக்கொடுத்தேன்.

வாட்ச்மேன் பொண்டாட்டி எடுத்து ஒடினார்.

ஹாலுக்கு சென்று ஜன்னல் கதவை திறந்துப்பார்த்தேன்.

அந்தப்பாலத்தீன் கவரில் சாளமீன்களையெல்லாம் எடுத்துப்போட்டவர்,அந்தக்கவரை வெளி ஆணியில் போட்டவர்,மண் சட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு குடிசை கதவை சாத்திவிட்டார்.

அன்றைய நாளிற்காக கற்பனை செய்து வைத்திருந்த மகிழ்ச்சியெல்லாம் கரைந்து போனது.

சிந்தித்து சிந்தித்து சிந்தித்து சோபாவில் பொத்தென்று விழுந்தேன்.

1 comment:

  1. பெண்களின் உடலும் மனதும் ஒருசேர வலியுறும் இப்பிரச்னையை நான் இந்த அளவு நுணுக்கமாக நினைத்துப் பார்த்ததில்லை… hats off vijay…!

    ReplyDelete