Thursday, 4 April 2013

கதை போல ஒன்று - 82



நாங்கள் எல்லோரும் டீச்சரின் வீட்டில்தான் கிரிக்கட் விளையாடுவோம்.

டீச்சர் வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் சிறிய நீள புளிய விளை விளையாட தோதுவாய் இருந்தது.

விரல் நீள கம்பளி பூச்சிகள் தொல்லைகளை தவிர வேறு எல்லாமும் எங்களுக்கு கிரிக்கட் விளையாட தோதான தன்மைகளையே கொண்டிருந்தன.

டீச்சரின் மகன் பிண்டோ அண்ணனும் எங்களுக்கு சப்போர்ட் என்பதால் யாரும் எங்களை கேட்க முடியாது.காலை ஆறுமணிக்கெல்லாம் கூட விளையாடியிருக்கிறோம்.

தக்கலை ஸ்கூலில் வேலை செய்யும் டீச்சருக்கு இரண்டு அழகான மகள்களும் உண்டு.

பிங்கலா அக்காவும் பிரிஜூலா அக்காவும்.

எனக்கு இளைய பிரிஜூலா அக்காவை பிடிககாது.அவர்கள் வீட்டிற்கு ஆசையாக கலர் டீவி பார்க்கப்போனால் நாய் மாதிரி எரிந்து விழுவாள்.விரட்டிவிடுவாள்.

ஆனால் மூத்த  பிங்கலா அக்கா அப்படியில்லை.

பேசுவதே இனிமையாயிருக்கும்.” தம்பி மீன் வளக்கியா.அக்கா ஒனக்கு அழகாயிட்டு கலர் மீன் தாரேன்.யல கோல்டு பிஸ்ஸுல.
எப்படி வண்ணமாயிட்டு இருக்குவு பாரு” என்று தான் வளர்க்கு மீன் தொட்டியை காட்டுவாள்.

ஒரு அடி நீளமும் அரை அடி அகலமும் உடைய சின்ன மீன் தொட்டிதான்.ஆனால் அதை அவள் வைத்திருக்கும் நேர்த்தியும் மீன்கள் மீது காட்டும் பாசமும் பார்க்க இனிமையானது.

மீனவ சமூகத்தில் பிறந்திருந்தாலும் மீன் சாப்பிட மாட்டாள்.”யக்கா சாள மீனு கூட சாப்பிட மாட்டியளாக்கா” என்று கேட்டால் தன்னுடைய தலையை மெல்ல ஆனால் தீர்க்கமாக ஆட்டி கண்ணடிப்பாள்.

ரிப்பளிக் டே லீவில் எல்லோரும் இந்திய ராணுவத்தின் அணிவகுப்பை பார்த்து தேச உணர்ச்சியால் பூரித்து கிறங்கிக்கிடக்கும் போது டீச்சர் வீட்டிலிருந்து சத்தம் கேட்டது.

யாரோ பிங்கலா அக்காவை அடிப்பதும் பிங்கலா அக்கா அழுவதும் கேட்டது.

திடீரென்று டீச்சரும் அவர் கணவரும் பிங்கலா அக்காவை பிடித்து வீட்டை விட்டு போ போ என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதும்,”யம்மா நா எங்கன போவேன்.,செத்துதான் போவேன்” என்று பிங்கலா அக்கா அழுததையும் பார்த்து அம்மாவிடம் போய் சொன்னேன்.

அம்மா மெல்ல எட்டிப்பார்த்தவள் “அது அவுங்க குடும்ப பிரச்சனை.நீ வந்துரு” என்று என்னை அழைத்து போகும் போது பிங்கலா அக்காவின் பின் இடுப்பில் பிரம்பு தளும்புகளை பார்த்தேன்.

இரண்டு நாள் கழித்து டீச்சர் இரவு ஒன்பது மணிக்கு அம்மாவை அழைத்தார்.அம்மா என்னவென்று வீட்டிற்கு போக நானும் அண்ணனும் ஒட்டிக்கொண்டோம்.

டீச்சர் வீட்டில் பிங்கலா அக்கா அழாமல் ஆவேசமாக மூச்சிரைத்த படி நின்றிருந்தாள்.

அவள் நின்ற தீர்க்கத்தை பார்க்க பயமாயிருந்தது.சீக்கிரம் அந்த இடத்தை விட்டு ஒடிப்போய் என்னுடைய குட்டித்தலையணையை கால்களுக்கு இடையே வைத்து நிம்மதியாக தூங்க வேண்டும்போல் இருந்தது.

அப்போதுதான் அவரை நான் கவனித்தேன்.

இருபத்தியைந்து முப்பது வ்யதுள்ள ஒரு அண்ணனும் நின்று கொண்டிருந்தார்கள்.

நல்ல டிஸ்கோ கட்டிங்கும்,கம்ப்ளி மீசையும் வைத்து பேண்ட சர்ட்டில் நாகரீகத்தை வைத்து கெத்தாக நின்று கொண்டிருந்தார்.

பிங்கலா அக்கா தன்னுடைய நகைகள் எல்லாத்தையும் கழட்டி டீச்சரிடம் கொடுத்தாள்.டீச்சர் வாங்கவில்லை.

அம்மாவிடம் கொடுத்தார்.அம்மா வாங்கியபடி “அப்பாகிட்ட சொல்லிட்டு போம்மா.இப்படி பிடிச்சவன்கிட்ட யாரு துணையும் இல்லாம நைட்ல போறது நல்லாவா இருக்கு” .

அக்காவும் அவரும் எதுவும் பேசவில்லை.வெளியே காத்திருந்த அம்பாசிடர் காரில் ஏறிப்போய் விட்டார்கள்.

 “இன்னைக்கு நைட் எங்க வீட்லயே இருங்க.இல்லன்னா நா தூக்குல தொங்கிருவேன்” என்று டீச்சர் கதற அவர் வீட்டு ஹாலிலே நாங்கள் எல்லோரும் படுத்து தூங்க நான் அணைந்திருந்த கலர் டீவியையே பார்த்து கிடந்தேன்.

ஆறுமாதம் கழித்து நாங்களும் பிண்டோ அண்ணனும் டீச்சர் வீட்டில் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்த போது, டீச்சர் வீட்டிற்குள் இருந்து புதிதாக ஒருவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

கொஞ்சம் யோசித்து கூர்ந்து பார்த்ததில் அவர்தான் அன்று பிங்கலா அக்காவை இரவோடு இரவாக கூட்டிப்போனவர்.

”அப்போ பிங்கலா அக்கா எங்க” .நான் கேட்கவில்லை.ஆனால் மனசு தேடிற்று.

டீச்சர் சமாதானமாகி விட்டார்களா இந்த அண்ணனோடும் பிங்கலா அக்காவோடும் இது மாதிரி பல கேள்விகள் கிரிக்கட் ஆட ஆட வந்தது.

அந்த அண்ணன் எளிமையாய் பேசி நல்லாவே பழகினார்.ஐந்தே நிமிடத்தில் மிக நெருக்கமானதொரு உணர்வை வெளிப்படுத்தினார்.

அவர் பேட்டிங் பிடிக்க நான் பவுலிங் போட்டுக்கொண்டிருந்தேன்.

ஹால்ஃப் ஸ்டெம்புக்கு வெளியே போட்ட பாலை வேகமாக அடித்தார்.

அவர் அடித்த அடியில் ரப்பர் பந்து , வலது பக்க சுவற்றில் வேகமாக பட்டு, அங்கிருந்து இடது பக்கம் நோக்கி போய் சமயலறைக்கு வெளியே உலை வடித்து கொண்டிருந்த டீச்சரின் கைகளில், ஒரு பைஃப் டியூபில் பட்டு ஏறி தாக்கிற்று.

பந்து பட்ட வேகத்தில் டீச்சர் பானையை விட்டுவிட்டார்.

கையில் கொஞ்சம் கொதிசோறு கொட்டிவிட்டது.

பானையை விட்டதால் சோறு கீழே கொட்டிற்று.

இத்தனை நாள் கிரிக்கட் விளையாடி இருக்கிறோம்.

இப்படி நடப்பது இதுதான் முதல் தடவை.

சூட்டின் எரிச்சலில் டீச்சர் எங்களை நோக்கி கத்தினார் “யல மென்டல்பயலுவளா.போங்கல இனிமே இங்கன வெளாண்டா சமுட்டிப்புடுவேன்.”.

இப்போது அவர் மருமகனைப் பார்த்து திரும்பினார்.அண்ணன் கொஞ்சம் அசடு சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார்.

டீச்சர் கோபத்துடன் உள்ளே போனார்.

கொஞ்ச நேரத்தில் பிங்கலா அக்கா வந்தார்.மெலிந்து சிறுத்து பழைய புடவையோடு.என்னையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை

“நீங்க ஏன் சின்ன பிள்ளைங்க கிட்ட வெளாடுறீங்க வீட்டுக்குள்ள வாங்க”.

ஆனால் அண்ணன் சிரித்தபடியே பேட்டை வைத்து கொண்டே இருந்தார்.

கால் மணி நேரம் கழித்து “சரி சரி எல்லாரும் சமாதானாமாயிட்டாவ. நீ பந்த போடு பில்லேய்” என்று என்னைப் பார்த்து சொல்ல நான் இரண்டு பாலை போட்டேன்.

விளையாடத்தொடங்கி ஐந்தாவது நிமிடம் பிங்கலா அக்கா வெளியே வந்தாள்.

அவள் கையில் அவளுடைய ஆசை மீன் தொட்டி மீன்களுடன் இருந்தது.அதை ஒங்கி தரையில் போட்டாள்.

தொட்டி சிமண்டு தரையிலும் மண்ணிலும் தெரித்து மீன்கள் தரையில் நெளிந்து செத்து கொண்டிருந்தன.

”உனக்கு என்ன சொன்னாலும் புரியாத தொட்டி நாய.நீ என் புருசனால.கஞ்சிக்கு வழியில்லனுதானல தாயிக்க வீட்டுக்க வந்து பிச்ச சோறு சாப்பிடுறோம்.அங்கனையும் வந்து வெளாட்டு அது இதுன்னு பிரச்சனைபண்றியள.இவன்கிட்ட போய் மாட்டிவிட்டியே இயேசுவ .சாவுல நீ.நா தாலியில்லாம வாழ்ந்துகிடுவேன்” என்று தலையெல்லாம் கலைத்து அழுதாள்.

நாங்கள் பயந்து எங்கள் வீட்டிற்குள் நின்று பார்த்து கொண்டிருந்தோம்.

பிரச்சனையின் போது காணமல் போகிற மனித நாசுக்கும் நளினமும் எப்போதும் நடக்கும் ஒன்றுதான் போல.

அந்த அண்ணன் எதுவுமே பேசவில்லை.அப்படியே நின்றுதிருந்தார்.

மதியம் மூன்று மணிக்கு எல்லோரும் அடங்கின பிறகு டீச்சர் வீட்டு காம்பவுண்டில் என்னுடைய ஸ்டம்புகளை எடுக்க போகும் போது அண்ணன்  மீன் தொட்டி உடைந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்.

உடைந்த மீன் தொட்டியின் கண்ணாடியை வைத்து மண் தரையில் கோடுகள் போட்டுகொண்டே இருந்தார்.

“சாப்பிட்டீங்களா” என்று கேட்டேன்.

பதில் சொல்லவே இல்லை.வேறு பேசினார்.

“இந்த மீனக எல்லாம் ஒனக்கு பிடிக்குமாடே”

“ம்ம்ம்...பிடிக்கும்ண்ணே”

“உனக்கு பிடிக்கும்ன்னு பிங்கலா அடிக்கடி சொல்லுவா.இந்த மீனுகள அவளுக்கு நாந்தான் வாங்கிக்கொடுத்தேன் பாத்துக்க.அவ டதியில படிச்சா.நான் ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ்ல படிச்சேன்.ஹிந்துவா போயிட்டேன்.அப்புறம் அவிய மதம் மாறிட்டேன்தான்.என்ன மதத்துல இருந்தாலும் சம்பாதிக்கனும்ல.காசில்லனாலே பிரச்சனைதான் கேட்டியா” என்று என்னை நோக்கி வெற்றுச்சிரிப்பு சிரித்தார்.

பாவமாய் இருந்தது.

அன்றிரவு ஏழு மணி வாக்கில் டீச்சர் வீட்டின் ஜன்னல் கொஞ்சம் திறந்து கிடந்ததில் “அந்த அண்ணன்” சாப்பிட்டுக்கொண்டிருக்க பிங்கலா அக்கா பரிமாறும் காட்சியை பார்த்தேன்.

மதியம் பார்த்ததை விட , வெள்ளந்தியாக சாப்பிடும் போது,அண்ணனின் முகத்தை பார்த்ததால் மனதின் அழுத்தமும் துக்கமும் கூடிற்று.

இன்றியிலிருந்து எத்தனையாவது நாள் பிங்கலா அக்காவும் அந்த அண்ணனும் சமாதானமாவார்கள் என்று யோசித்து கொண்டே ரொம்ப நேரம் தூங்காமல் புரண்டு கிடந்தேன் அந்தச்சின்ன வயதிலேயே...

1 comment:

  1. சிறுவயதில் காதலும் புரிவதில்லை: வெறுப்பும் புரிவதில்லை: சண்டைகள் மட்டும் சம்மணம் போட்டு மனசுக்குள் உட்கார்ந்து கொள்கின்றன…!

    ReplyDelete