Friday, 12 April 2013

கதை போல ஒன்று - 84

நான் குத்துவிளக்கை பொருத்த தீக்க்குச்சியை உரச,தம்பி “பூஊம் “என்று ஊதி அணைத்தான்.திரும்பி முறைத்தேன்.

“இப்ப எதுக்குல ஊதுனா” கத்தினேன்.

“இன்னைக்கு என் டர்ன்.நான் சாமிக்கு விளக்கு பொருத்துவேன்” தம்பி தன் கையில் இருந்த தீக்குச்சியை உரசி விளக்கை ஏற்றப்போனான்.

இப்போது நான் எச்சில் தெறிக்க “பூஊம்” என்று ஊதினேன்.

போட்டோ பிரேம்களில் மாலைகளோடு இருந்த சகல தெய்வங்களும் “தம்பிகளா சண்டை போடாதீங்கடா! யாராவது ஒருத்தர் விளக்க பொருத்துங்கடா” என்று எங்களிடம் மவுனமாக கேட்டுக்கொண்டிருக்கும் போது நானும் தம்பியும் அடித்து பிடித்து தரையில் உருண்டு கிடந்தோம்.

நான் ஏழாம் வகுப்பு.தம்பி ஐந்தாம் வகுப்பு.அடுத்தடுத்து பிறந்த அண்ணன் ம்பிகள்.சண்டை,அடிதடி,பொறாமை இருக்கம் என்பதை எழுதியும் காட்ட வேண்டுமா?

ஒரு மனிதனின் சக்தியை உறிஞ்சுவதில், அவனது ஒருமுகப்படுத்தப்பட்ட தன்மையை கலைப்பதில் ,பெரும் பங்கு வகிப்பது காமம்.

காமம் வந்தால் அது மட்டுமே உலகாய் இருக்கும்.அதை கடக்கத் தெரியாமல் முழிக்கும் மனிதர்கள் தங்களுடைய எல்லா நன்மைகளின் சாயல்களையும் இழக்க தயாராகிவிடுகிறார்கள்.

அந்தக் காமத்தை விட கொடூரமானதாய் மனிதனின் மனதை சிதைப்பது பொறாமை.காமத்தை கழித்து விட பூட்டிய நான்கு சுவருல்ல அறை போதும்.பத்து நிமிடம் போதும்.ஆனால் பொறாமையை கடந்து போதல் யாராலும் இயலாது.

ஆபேலின் படையலை ஏற்ற கடவுள்,கெயினின் படையலை மறுக்கிறார்.உலகின் முதல் கொலை பொறாமையினாலே விளைந்து விடுகிறது.

நானும் தம்பியும் அதே பொறாமையினால்தான் சிறுவயதில் கட்டுண்டு இருந்தோம்.ஹைட்ரஜன் எப்போதும் இரு அணுக்கள் இணைந்த நிலையிலே இருக்கும் எனப்து போல தம்பியுடன் பொறாமையினால் எப்போது சேர்ந்தே இருந்தேன்.

“யம்மா அவனுக்கு எடுத்த ஆம்லட் பெரிசா இருக்கு பாருங்க.நான் என்ன இளிச்சவாயா”

“எல கழுத நல்லா பாரு சரியாத்தான் எடுத்துருக்கேன்”

“அப்ப எனக்கு அதுல கொஞ்சம்” சட்டென்று தம்பி தட்டில் இருந்து ஆம்லெட்டை பிய்து என் தட்டில் போடுவேன்.

தம்பி அடிப்பான்.அடிதடி உருளல்.அடிதடி அதிகமாக கடைசியில் அம்மாவின் வெறி பிடித்த அடி இருவருக்கும் விழும்.

அழுது கொண்டே போய்விடுவோம்.

செவ்வாய்கிழமை கடைக்கு லீவு.ஆனால் இரவு பரோட்டா ஸ்டால்களுக்கு தேவையான பொருட்களை கொடுக்க அப்பா ஒரு மணிநேரம் கடைக்கு போவார்.

அவருடன் அன்று கடைக்கு போக எனக்கும் தம்பிக்கும் போட்டிவரும்.

காரணம் கடைக்கு எதிர்தாற்போல் இருக்கு தியேட்டர்.அப்பாவிடம் கொஞ்சம் நைச்சியம் பேசினால் செகண்ட் ஷோ படத்துக்கு கூட்டிச்செல்வார்.இருவரும் அப்பாவுடம் போக முடியாது.யாராவது ஒருத்தர்தான் என்பார்.

பேச்சு திறமையாலும் பெரியவன் என்பதாலும் அடிக்கடி நானே அப்போவோடு போவேன்.

இரவு நானும் அப்பாவும் படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வரும்போதே மகிழ்ச்சியாக இருக்கும்.

தம்பி தூங்காமல் அழுதுகொண்டே இருப்பான்.அப்பாவிடம் சண்டை போடுவான்.

அவன் தோல்வியை நிதானமாக ரசிக்கலாம்.ஆறுதல் சொல்லலாம்.அவனுக்கு ஆறுதல் சொல்ல அவன் முதுகில் செல்லமாய் தட்டும் போது, அவன் கோபத்தில் அந்த கையை எடுத்து விடும்போது உலகிலேயே பக்குவமானவான காட்டிக்கொள்ளலாம்.

அன்று அப்படித்தான் படம் பார்த்து விட்டு வந்தேன்.தம்பி குமுறினான்.

மறுநாள் காலை டிபன் ஆப்பமும் தேங்காய்பாலும்.

தேங்காய்ப்பால் எனக்கு பிடிக்கும் என்பதால் அதிகமாக எடுத்து வைத்துவிடுவது அம்மாவின் வழக்கம்.பதினோரு மணி வாக்கில் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, தொட்டுக்கொள்ள மசாலா கடலையை சாப்பிட்டு சுவைத்து குடிப்பது என் பழக்கம்.

தம்பிக்கு தேங்காய்ப்பால் பிடிக்காது.அவன் குடிக்கவே மாட்டான்.ஆனால் முந்தின நாள் அப்போவோடு சினிமா பார்த்த துரோகத்தை மனதில் வைத்து கேட்டான்.

“எனக்கும் தேங்காய்பால் வேணும்”அம்மாவிடம் கேட்டான்.

“நீ குடிக்க மாட்டலாம்மா.அண்ணன் தான குடிப்பான்”

“அதெல்லாம் தெரியாது.என் பங்கு எனக்கு வேணும்”
வேறு வழியில்லாமல் அம்மா தேங்காய்ப்பாலை இரண்டு கப்களாக பிரித்து ஊற்றிக்கொடுத்தாள்.

நான் குடித்தேன்.தம்பி அவன் பங்கை எடுத்து பூனைக்கு ஊற்றினான்.அவேசமானேன்.

“நீ எப்படில பூனைக்கு ஊத்தலாம்.”

“அது என் பங்கு டிரிங்க்.அத நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” தம்பியிடம் இருந்து தீர்க்கமாக பதில் வந்தது.

அன்று முழுவதும் அதை நினைத்தே மருகினேன்.
என்னுடன் விளையாட வந்த தம்பியை மறுதலித்தேன்.

யாரிடமும் பேசவில்லை.

பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது.பொறாமை ஒரு மதுபோல மனதை ஏதோ செய்து கொண்டிருந்தது.

எனக்குள்ளவே நிறைய பேசிக்கொண்டிருந்தேன்.அம்மா அப்பா யாரிடமும் சரியாய் பேசவில்லை.

தம்பி கூட அவன் பங்கு கேக்கையெல்லாம் எனக்கு கொடுத்து சமாதானப்படுத்த பார்த்தான்.சமாதானம் ஆகவில்லை.

ஏதோ ஒன்று என்னுள் இருட்டாய் அழுத்திக்கொண்டிருந்தது.இரவெல்லாம் முழித்தபடியே கிடந்தேன்.

பொறாமையினால் தூங்க முடியவில்லை.

மறுநாள் காலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன்.

அம்மா தம்பி யாரிடமும் பேசாமல் போய் பல்விளக்கி கொண்டிருந்தேன்.

வழக்கமாக ஒரு நிமிடத்தில் பல்விளக்குபவன் அன்று பத்து நிமிடம் விளக்கிகொண்டிருந்தேன்.

தொட்டில் இருக்கும் மக்கில் நீர் மொண்டு வாய் கொப்பளித்தேன்.பிரக்ஷ்க்ஷை கழுவினேன்.

உள்ளே அம்மாவும் தம்பியும் பேசும் சத்தம் கேட்டது.

அம்மா தேங்காயை உடைத்து கொண்டிருந்தாள்.

தம்பி குட்டிச் சொம்பை கையில் வைத்திருந்தான்.

”யம்மா இன்னைக்கு தேங்காய்த்தண்ணி எனக்குதான்” என்றான்.

எனக்கு திக்கென்றிருந்தது.இன்னைக்கும் தேங்காய்த்தண்ணி அவனுக்குத்தானா?.

அம்மா தேங்காய் உடைக்கும் போது யார் முதலில் செம்பை எடுத்து வருகிறார்களோ அவர்களுக்குத்தான் தேங்காய்த்தண்ணி எனபது எனபது எழுதப்படாத விதி.

இன்று அந்த போட்டியிலும் தம்பி ஜெயிக்க போகிறான்.

தண்ணீர் முகத்தில் சொட்டிபடி இருக்க எதையும் கவனிக்காமல் சமைலைறை கடக்க முயன்றேன்.

தம்பி கூப்பிட்டான் “விஜய் இதோப்பாரு இன்னைக்கு என்க்குத்தான் தேங்காய்த்தண்ணி செம்பை இப்படியும் அப்படியும் ஆட்டினான்.

அம்மா என்னைப்பார்த்து “என்ன மிஸ்டர் கோவம் போயிடுச்சா” சிரித்தாள்.

நான் சிரிக்கவில்லை.

அம்மா தேங்காயை உடைத்து, தேங்காய பிளக்கபடும் போது தம்பியை பார்த்து “செம்பை ஒழுங்கா புடி” என்றாள்.

தம்பி கீழே செம்பை பிடிக்க ,அம்மா அரிவாளால் லாவகமாக தென்னினாள்.தேங்காய் தண்ணி அருவி மாதிரி கொட்டிற்று.

தம்பி வெற்றிக்களிப்புடன் என்னைப்பார்த்தான்.

நான் செம்பை நீட்டும் தருணங்களில் எல்லாம் கொஞ்சமே வரும் தேங்காய்த்தண்ணி அன்று கலகலவென கொட்டிற்று.இயற்கை முதற் கொண்டு எல்லோரும் என்னை சபிக்கிறார்கள் என்று அழுகையாக வந்தது.

சட்டென்று அதை செய்தேன்.

என் கையில் ஈரமான நீரோடு இருக்கும் பல் விளக்கும் பிரக்ஷ்க்ஷை உதறினேன்.அந்த பிரக்ஷ்க்ஷில் இருந்து தெறித்த பல துளிகள் தம்பி கையில் இருக்கும் செம்பில் இருக்கு தேங்காய் நீர் மேல் விழுந்தது.

அது விழுந்து கரைந்து உள்ளே போனதை அனைவரும் பார்த்தோம்.

எனக்கே அதிர்ச்சி ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று.

“உன் கேடுகெட்ட புத்தியை மாத்திக்க விஜய்.மனசார சொல்றேன்” என்று குரல் நடுங்க அம்மா கத்தினாள்.அழுவது மாதிரி ஆகிவிட்டாள்.

தம்பி அழுதுகொண்டே அந்த தேங்காய்த்தண்ணியை ஸின்கில் கொட்டினான்.

ஒன்றும் சொல்லாமல் கிச்சனில் இருந்து நடையை கட்டினேன்.

தம்பி கோவத்தில் செம்பை எடுத்து என் முதுகில் எறிந்தான்.நொங்கென்று அது என் முதுகெலும்பை தாக்கியது வலிக்கவே இல்லை.

பொறாமை பொறாமைதானே.அதற்கு வேறு எதாவது வடிகால் இருக்கிறதா?

சொல்ல முடியாத மனத்திருப்தி என்னை ஆட்கொண்டிருந்தது.

1 comment:

  1. ஹலோ விஜய்,காலங்கார்த்தால ஊத்த வாயால முகத்துல ஊதுறது,பிடிச்ச புத்தகங்களை கிழிச்சி ஓசைப்படாம இருந்த இடத்துல வச்சிடறது,மார்க் குறைவா எடுத்தா அப்பாகிட்ட போட்டுக் கொடுக்கிறது, நீங்க சொல்ற தேங்கா தண்ணி,விளக்கு பொருத்துறது எல்லாமே எங்க குடும்பத்துல சின்ன வயசுல நடந்தது… அதனால காப்பிரைட் எங்களுக்கும் வேணும்பா…!

    ReplyDelete