Wednesday, 17 April 2013

கதை போல ஒன்று - 86

நல்லத்தூக்கம் அவரை நினைவுபடுத்துகிறது.இந்த வயதிலும் அப்படித்தான்.

இன்னும் எண்பது வயதும் கூட ஆகி செத்தாலும் நல்லத்தூக்கம் அவரைத்தான் நினைவுபடுத்துமோ என்னவோ?

திருநெல்வேலியில் வைத்து முடிவெடுக்க கடினமான கேள்வியை கேட்டது மாமாவேதான்.

உனக்கு குருசிக்ஷ்யன் படம் பாக்கனுமா?இல்ல சர்க்கஸ் போகனுமா? என்ற கேள்விதான் அது.

சொல்லுங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்துவயது சிறுவன் என்னதான் முடிவெடுக்க முடியும்.

சர்க்கஸே போகலாம் என்று சொன்னேன்.

மாமவோ உன்னை இரண்டுமே கூட்டிப்போகிறேன் என்று சொன்னார்.

காலையிலே திருச்செந்தூரில் இருந்து கிளம்பிவிட்டோம்.அய்யனார் டிம்பர் டிப்போவில் மாமா தன் கடைக்கு ,மொத்த கொள்முதலுக்கு வந்த வேலையை பத்துமணிக்கெல்லாம் முடித்துவிட்டார்.

கடையில் முதலாளியில்லை.அவர் பையன் இருந்திருந்தான்.காலேஜ் படித்து கொண்டிருக்கும் அண்ணன்.

என்னைப்பார்த்து சிநேகமாக புன்னகைத்து “என்னல்லாம் விளையாட்டு விளையாடுவ “என்றார்.

நான் “கிரிக்கெட்,கபடி விளையாடுவேன் என்றேன்.

கையில் வைத்திருந்த க்ஷட்டில் பேட்டை எடுத்து காண்பித்து “க்ஷட்டில் விளையாட மாட்டியா” என்றார்.

மாட்டேன் என்று தலையை அசைத்தேன்.

”வா விளையாடலாம்”

மாமவைப்பார்த்தேன்.

“போல போய் விளையாடு.சின்ன மொதலாளியே கூப்பிடுறாரு போகாம இருக்க முடியுமா?

“யண்ணே சும்மா இருங்கண்ணே நீங்க வேற” என்று மாமாவிடம் சிரிப்பாய் அதட்டி, அந்த அண்ணன் என்னை கடையின் பின்பக்கமாக கூட்டிச்சென்றார்.

ஆயினி,வெந்தேக்கு,படாக்கு, என்று ஒவ்வொரு மரமாய் காட்டித்தந்தார்.இது அந்தமான்ல இருந்து வருது,இது பிலிப்பைன்ஸ்.இது இந்தோனிசியா என்று சொல்லிக்கொண்டே போனார்.

பெரிய பெரிய மரங்கள் எல்லாம் தங்கள் உடலை காட்டிக்கொண்டு பே என்று செத்துக்கிடந்தன.இதை எல்லாம் அறுத்து ஒரே வீட்டிற்கோ அல்லது பல வீட்டிற்கோ கொண்டு செல்வார்கள்.மிச்சமிருக்கும் மரத்துண்டுகள் விறகாகப்போகும்.

கொஞ்சம் தள்ளியது விஸ்தாரமான சமதளம் கிடந்தது.

இதப்பாரு க்ஷட்டில் பேட்ட இப்படிப்பிடிக்கனும்.உன் பெருவிரல் வந்து கரெக்டா க்ஷட்டில் பேட் பின் பக்கம் அழுத்தனும்.க்ஷட்டில் காக் பேட்ல படும் போது ரொம்ப வேகமா வீசக்கூடாது.லைட்டா சின்னதா ஒரு ஜெர்க் கொடுக்கனும்.

கொஞ்ச நேரத்தில் விளையாட்டை பிடித்துக்கொண்டேன்.

பத்து மணியில் இருந்து பண்ணிரண்டு மணி வரை ஏப்ரல் மாத திருநெல்வேலி வெயிலில் விளையாடினேன்.நடுவில் அந்த அண்ணன் வேலையாள்களிடம் சொல்லி வாங்கித்தந்த “கோல்டு ஸ்பாட்” ,அப்பா வாங்கித்தராமல் நான் குடித்த முதல் கோல்டு ஸ்பாட்.

விளையாடி விளையாடி காலெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தது.

மதியச்சாப்பாடு பிரியாணி வந்தது.

அதற்கிடையில் முதலாளிவந்து விட அவர் இன்னும் உபசரித்தார்.ஒரு மணிக்கெல்லாம் கடையை விட்டு வெளியே வந்தோம்.

அப்போதுதான் மாமா சினிமா சர்க்கஸ் இரண்டையும் கூட்டிப்போகிறேன் என்ற வாக்குறுதியை தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

படம் முடிந்து வெளியே வரும் போதே உடல் அயர்ச்சியை உணர்ந்திருந்தது.முதுகெல்லாம் வலித்தது.

வெளியே வந்து காபியும் பஜ்ஜியும் சாப்பிட்டு,உடனே ஆட்டோ பிடித்து சர்க்கஸுக்கு போனோம்.

கொண்டைகிளிகள் ஆட,கூண்டிற்குள் சிங்கள் உறும, யானை தன் சிறு சைக்கிளை பெரு உடலால் ஒட்டிக்காட்டியது.
வலைவித்தைகள்,பார்வித்தைகள்,ஆகாய வித்தைகள் எல்லாம் வாய்பிளந்து பார்த்தேன்.எட்டரை மணிக்கெல்லாம் சர்க்கஸ் முடிந்ததும்.காத்தாட சிறுநீர் கழித்து, கொஞ்சம் தள்ளியிருந்த பரோட்டா கடையில், பரோட்டாவும் சால்னாவும் சிக்கன் பொரியலும் வாங்கித்தந்தார் மாமா.வயிறு முட்ட சாப்பிட்டேன்.

மாமா சொன்னார்.”விஜய் இன்னைக்கு சர்க்கஸ்,ரஜினிப்படம் ரிலீஸாயிருக்கு,ஞாயித்து கிழமை வேற,திருச்செந்தூர் பஸ்ஸெல்லாம் செம கூட்டமா வரும்.வந்ததும் ஒடிப்போய் ஏறிக்க.நான் பின்னால வரேன்” என்றார்.

கூட்டத்தில் இரண்டு பஸ்களை தவறவிட்டு, மூன்றாவது பஸ்ஸில் தொத்தி ஏறினேன்.

நடுப்பக்கம் சீட்காலியாய் இருக்க இடம் பிடித்து உட்கார்ந்தேன்.என்னருகே இருந்தது நாற்பது வயது ஆள்.என் பரபரப்பை பார்த்து சிரித்தார்.

நான் சிரிக்கவில்லை.மாமா ஏறிவிட்டாரா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.மாமா ஏறினார் ஆனால் சீட் கிடைக்கவில்லை.என்னிடம் கையைக்காட்டிக்கொண்டு பின்னாலயே நின்று கொண்டிருந்தார்.

பஸ்ஸை எடுத்து பத்து நிமிடத்தில் தூக்கம் வந்தது.

காலையில் பஸ்ஸில் வந்தது,அதன் பிறகான இரண்டு மணிநேர விளையாட்டு,தொடர்ந்த சினிமா,தொடர்ந்த சர்க்கஸ்,தொடர்ந்த பஸ்ஸுக்கான காத்திருப்பு.

தூக்கம் வந்தது.தூங்கி தூங்கி பகக்த்தில் இருந்தவர் தோளின் கீழே இருக்கும் புஜங்களில் விழுந்தேன்.

கொஞ்சம் நேரம் பிறகு நிம்மதியாக எப்படி உறங்க முடியும் என்று சட்டென்று விழித்துப்பார்த்தால் அவர் தோளில் தூங்குவது தெரியவர உடனே எழும்புவேன்.

தலையை உதறிக்கொள்வேன்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் கண் சொக்கும்.தூங்கி மண்டை டொச்சென்று அவர் மேல் இடிக்கும் கணத்தில் விழிப்பேன்.

இரண்டு இமைகளையும் யாரோ கயிறால் இழுக்கும் தூக்கம்.

“தம்பி என் மடியில படுத்துகிறியா “என்றார்.

“இல்ல இல்ல நான் தூங்கமாட்டேன்.தூங்கல”

”சரி”

மனதின் வைராக்கியத்திற்கு இந்த உடல் கட்டுப்பட்டால்தானே.அதிலும் தூக்கம் எப்படிக்கட்டுப்படும்.

மறுபடியும் அவர் மேலேயே தூங்கி வழிந்தேன்.

இந்த முறை அவர் என்னைக்கேட்கவில்லை, என் தலையை எடுத்து அவர் மடியிலேயே வைத்துக்கொண்டார்.

நான் திமிறி எழுந்திருக்க போனேன்.”பயப்படாத தம்பி.மாமா மடியில படுத்து தூங்கு” என்று எழவிடாமல் தட்டிக்கொடுத்தார்.

தூங்கிவிட்டேன்.

தூங்குவதற்கு முன்னால் அவருடைய சாம்பல் நிற பேண்டின் கலர் என்னுள் ஆழப்பதிந்தது.அப்படித்தூங்கும் போது ஒன்றே ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

தினமும் தலையணையில் வடிக்கும் கோழாவை இவர் மடியில் வடித்து விடக்கூடாதென்று.

கடவுளிடம் சின்ன பிரார்த்தனை கூட செய்து கொண்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு போகாமல் கிடந்தேன்.

உள்ளே இழுத்துப்போவதற்கு தூக்கத்திற்கு என்ன தனிவகுப்பா நடத்தவேண்டும்.அய்ர ஆரம்பித்தேன்.

கனவில் இரண்டாம் வகுப்பில் கூடப்படித்த கல்பனா வந்தாள்.

இதோ விஜய் எல்ல பாய்ஸும் ,கேர்ள்ஸ் பேங்கில்ஸ் வைச்சுதுதான் பேப்பர்ல்ல சர்க்கிள் போடுறாங்க, நீ மட்டும் ஏன் கையால போடுற, இதோ என்னோட பேங்கிள்ஸ் வெச்சுக்க விஜய்”
அவளுடைய இரட்டை ஜடையும் நீண்ட முகமும் நினைவுக்கு வந்தது.

அம்மா வந்தாள் கனவில்,ஜிங்கிடி ஜிங்கிடி குரு சிஸ்யன் பாட்டு வந்தது, சர்க்கஸ் பெண்கள் வளப்பான கால்களைக்காட்டிக்கொண்டு ஆடினார்கள்” .

தூங்கும் காலத்தை மெதுவாக நகரவைக்க முடியும்.சார்ப்பியல் படி அது வேகமாகத்தானே போகவேண்டும்.

”ஆர்ச் இறங்கிரவங்கல்லாம் இறங்கிகிடுங்க,வண்டி கோவில் வாசல் பஸ்ஸ்டாண்டு வர போகும்”

மாமா என்னை உலக்கினார்.சட்டென்று முழித்துப்பார்த்தேன்.

மாமா என்னை அவசர அவசரமாக கீழே இறக்கி தானும் கிழே இறங்கிக்கொண்டார்.

இறங்கும் போது திகிலாய் அந்த் சாம்பல் நிறப்பேண்டை பார்த்தேன்.பெரிய வட்டமாக எச்சில் இழுக்க ”கோழா” வடித்து வைத்திருக்கிறேன்.

வெட்காமாய்ப் போனதெனக்கு.அவர் முகத்தைப்பார்த்தேன்.

புன்னகைத்தபடியே “பை என்று டாட்டா காட்டினார்.

அந்த இரண்டு மணிநேரம் தூங்கினது உடலுக்கு இதமாய் இருந்தது.கண்கள் எல்லாம் குளிர்ச்சியடைந்திருந்தது.
அந்த சாம்பல் நிற உடையணிந்தவர் என்னை அவர் மடியிலே தட்டிக்கொடுத்து தூங்கவைத்து உணர்வின் பெயரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இப்போது கூட எச்சில் பட முத்தம் கொடுத்தால் சட்டென்று துடைக்கும் மனைவியைப் பார்க்கும் போது ,பேண்டெல்லாம் எச்சிலாக்கி வைத்திருந்த என்னைப்பார்த்து என்ன கனிவு இருந்தால் “பை “என்று டாட்டா காட்டிருப்பார் என்று தோண்றுகிறது.

அயர்ந்த தூக்கம் என்பது அப்பாவையோ அம்மாவையோ மனைவியையோ நினைவுபடுத்துவதே இல்லை.

நல்லத்தூக்கம் அவரை நினைவுபடுத்துகிறது.

இந்த வயதிலும் அப்படித்தான்.

இன்னும் எண்பது வயதும் கூட ஆகி செத்தாலும் நல்லத்தூக்கம் அவரைத்தான் நினைவுபடுத்துமோ என்னவோ?

1 comment:

  1. எட்டு வயதில் என் வயதையொத்த தாய்மாமன் மகள்களுடன் படுத்துறங்கி தூக்கத்தில் டவுசரிலேயே சிறுநீர் கழித்து பழியை மாமன் மகள்கள் மேல் போட்டபோது அத்தை முறைக்க தாய்மாமா நமுட்டுச் சிரிப்பு சிரித்தது நினைவு வருகிறது…!

    ReplyDelete