காலை நான்கு மணிக்கு அப்பா எழுப்பினார்? முழித்து சுயநினைவிற்கு வரும் போது அம்மா விசும்பி கொண்டிருந்தாள்.
அப்பா மிகக்கம்மிய குரலில் சொன்னார்? விஜய் சித்தி வீட்ல இருந்து போன் வந்துச்சு.நம்ம பிரபா இல்ல அவள் செத்துட்டாளாம்.தூக்கு போட்டுக்கிட்டாளாம்.
பத்தாம் வகுப்பு, அதிலும் சென்னையிலேயே பெரிய பள்ளியில் படிப்பதால் பிரபாவுக்கு பெருமையில்லை.ஆனால் எல்லா மாதங்களிலும் முதல் ரேங்க் எடுப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறாள்.
இதுவரை கணிதத்தில் நூற்றுக்கு குறைந்து எடுத்ததே இல்லை.
ஒரு தடவை ஜியோமெட்ரி படம் வரைந்த கணக்கில் மிஸ் இரண்டு மதிப்பெண்கள் குறைத்து விட்டார்.பிரபாவுக்கு பொறுக்கவில்லை.
”மிஸ் ஏன் மார்க்கு லெஸ் பண்ணுனீங்க”
“நீ படம் கரெக்டாத்தான் வரைஞ்சிருக்க.ஆனா புரொசீஜர்ஸ் சரியா எழுதலையே.புக்ல வேற மாதிரியில்ல இருக்கு”
“மிஸ் ப்ளீஸ் இதப்பாருங்க.புக்ல உள்ள சென்டண்ஸ மாத்தி எழுதியிருக்கிறேன் என்னோட சொந்த ஸ்டைல்ல.ஆனா சரியாத்தான எழுதியிருக்கேன்” என்று வாதிட்டு இரண்டு மார்க்கை வாங்கி நூறாக்கியவள்.
சித்தியும் சித்தப்பாவும் தங்கள் மகளை பற்றி பேசுவதின் மூலம் உலகின் எல்லா இன்பங்களையும் அடைய வரம் வாங்கி வைத்திருந்தார்கள்.படிப்பதின் பெருமையை அதன் புனிதத்தன்மையை சற்று ஆழமாகவே பிரபாவிடம் ஊன்றியிருந்தார்கள்.
படிப்பு என்பது அறிந்து கொள்வதைத்தாண்டி ஈகோவாக வளர்ந்து போயிற்று பிரபாவிடம்.
தன்னுடன் படிக்கும் மற்ற அழகான பெண்களுடன் ஒப்பிடும் போது பிரபா பேரழகியில்லையென்றாலும்,அந்த இழப்பை தன்னுடைய அகடமிக் முதன்மையால் சரிகட்டிக்கொண்டாள்.
ஓவ்வொரு தேர்விலும் முதன்மை வர வர புரோகிரஸ் ரிப்போர்ட்டை பெட்டினா மேரி சிஸ்டர் கொடுக்கும் போது முதுகில் தட்டிக்கொடுக்க கொடுக்க,காற்றில் மிதப்பது பிரபாதான்.
பெட்டினா மேரி சிஸ்டர் பிரபாவை "புரோடிகி(Prodigy) பிரபா” என்றே பட்டமாய் அழைப்பாள்.
தன்னுடைய பள்ளி சார்பாக எல்லா போட்டிகளுக்கும் அனுப்ப பிரபாவின் அறிவு பெட்டினா மேரி சிஸ்டருக்கு வசதியாய் இருந்தது.
இன்றுள்ளதுபடி நாளை.நாளை மாதிரி மறுநாள் என்று போனால் வாழ்க்கையில் பிரச்சனையே இல்லைதான்.
ஆனால் அது சாத்தியப்படாத தருணத்தில் ஏன் என்ற கேள்வியும் வரும் தருணத்தில் க்டவுள் என்ற கோட்பாட்டை இழுத்து அதன் மேல் எல்லா பாரத்தையும் ஏற்றி வைத்து விடுகிறோம்.
பிரபா மேலும் கடவுள் என்கிற கோட்பாடு விளையாடலாயிற்று.
அரைவருட பரிட்சைக்கு பத்து நாட்கள் இருக்கும் போது ஆக்ரோசமான “டைபாய்ட்” பிரபாவை தாக்கியது.
ஹாஸ்பிடலில் ஒருவாரம் அட்மிட் ஆகி சுயநினைவை இழந்து, தூங்கி எழுந்து தூங்கி எழுந்து வாந்தியெடுத்து, ரத்த சாம்பிள்கள்,டிரிப்ஸ் ஏத்த கைகளை உணர்வே இல்லாமல் நீட்டிக்கொண்டிருக்கும் போது கூட பிரபாவின் ஆழ்மனதில் ஒடிக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான்.ஹாஃப் இயர்லி எக்சாம் எழுத முடியுமா? முடியாதா?
ஒருவாரம் முடிந்தது டைபாடால் தன்னுடைய முடி கொட்டிய அலங்கோலமான நிலையை கூட கண்டுகொள்ளவில்லை.
“அப்பா நா எக்சாம் எழுதனும்” என்றாள்.
“எழுதலாம்.டாக்டர்கிட்ட கேட்போம்” என்றார் அப்பா.
டாக்டர் வேறு விதமாக சொன்னார்.இவளை வீட்டுக்கு அழைத்து சென்று இன்னும் இருபது நாட்கள் பெட் ரெஸ்டிலே வைத்து பக்குவம் பாருங்கள்.பரிட்சை எழுத வேண்டாம்.அரைவருட பரிட்சைதானே என்று அனுப்பி வைத்தார்..
அப்பா தயங்கி தயங்கி நின்னார்.
“என்னப்பா எக்சாம் எழுதாலாம்தானே”
“ம்ம்ம்... இல்லம்மா நீ ரொம்ப ரொம்ப வீக்காயிருக்கியாம்.பரிட்சை எழுத வேண்டாம்ன்னு சொன்னார்”
பிரபா எட்டிகாலை வீசியதில் பக்கத்து ஸ்டூலில் இருந்த பழைய ஃப்ளாஸ்க் கிழே விழுந்து தன் மெர்க்குரி பூச்சை சிதறடித்து கொண்டது.
“இல்ல நா எழுதுவேன்.எழுதுவேன்.எழுதுவேனும்பா” மயங்கி விழுந்தாள்.
மறுபடி ரெண்டு மணி நேரம் கழித்து எழுந்து அம்மாவிடம் அழுதாள்
“இந்த ஸ்கூல் ரூல்ஸ் தெரியுமில்ல.இங்க டென்த் பப்ளிக் எக்சாம் மார்க்க வைச்சு மட்டும் பிளஸ் ஒன் குரூப் தரமாட்டாங்கம்மா.
டென்த்தோட ஹாஃப் யியர்லி ஆனுவல் மார்க்கையும் ஆவரேஜ் எடுத்து அந்த மார்க்குத்தான் குரூப் கொடுப்பாங்க. இப்ப நான் பரிட்சை எழுதலன்னா எனக்கு பாதி மார்க்குதான் வரும்.அப்போ ஃபர்ஸ்ட் குரூப் கிடைக்காதும்மா.”
“ரொம்ப யோசிக்காத பிரபா.உடம்பு சரியில்லன்னா என்ன செய்ய முடியும்” அம்மா சொன்னாள்.
“என் பிரஸ்டீஜ் என்னாகும்மா.வசந்தி, டெல்மா எல்லாம் ஃபர்ஸ்ட் குரூப் படிப்பாங்க.நான் மட்டும் செகண்ட் குரூப் எடுக்கனுமா.எப்படியாவது பரிட்சை எழுதனும்மா.இதுவரை மார்க் கொறைஞ்சதே இல்லம்மா”
பிரபாவை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
பரிட்சை எழுத வேண்டும் என்றே சொல்லிக்கொண்டிருந்தாள்.
டாக்டரை வீட்டுக்கே அழைத்தார்கள்.
“நீயே தனியா ஹெல்ப் இல்லாம பாத்ரூம் போயிட்டு வாம்மா.நான் உன்ன பரிட்சை எழுத அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு போனார்.
அவருக்கு தெரியும் பிரபாவால் அது முடியாதென்று.
முதல் நாள் பரிட்சை முடிந்தது.
இரவில் வெறிக்க பார்த்து கொண்டிருந்தவளிடம் அம்மா நீட்டிய மாத்திரையை தூக்கி எறிந்தாள்.
அம்மாவுக்கு கோவம் வந்தது.பிரபாவின் முதுகில் அடித்தாள்.
“மாத்திர சாப்பிடு சாப்பிடு...இல்லன்னா சாவு..செத்து போயிரு”
பிரபாவுக்கு அழுகை வந்தது.போய் அப்பாவிடம் ஓண்டினாள்.அப்பாவும் அவளை தன் இடது கையால் தள்ளிவிட்டார்.
“மாத்திர சாப்பிடு அப்புறமா எதுனாலும் பேசு.அப்பாவும் பொறுத்து பொறுத்து பாத்துட்டேன்.நீ ரொம்ப பண்ற” என்று கத்தினார்.
வாழ்க்கையில் அம்மாவும் அப்பாவும் ஒருசேர ஒதுக்கியது இன்றுதான்.
அதெல்லாம் அவளுக்கு பெரியதாக தெரியவில்லை, பரிட்சை எழுத முடியாத வேதனை முன்னால்.
பிரபா முழித்து கொண்டே இருந்தாள்.
மொபைலைப்பார்த்தாள் இரவு இரண்டு மணி.
சாதரணமாக பக்கத்து ரூமிற்கு போனாள்.பெரிய ஸ்டூலில் ஏறினாள்.
எட்டவில்லை.
மறுபடி சமையல் அறைக்கு சென்று “மனைப்பலகை”யை எடுத்து வந்தாள்.
கால்கள் நடுக்கம் எல்லாம் அவள் மனவைராக்கியம் முன்னால் நின்று போயிருந்தது.
அம்மாவின் சேலையை பேனில் போட்டு தயார் செய்து கொண்டாள்.
ஸ்டூலை உதைத்து கீழே தள்ளும் முன்னர் தூக்கத்தில் அம்மா இருமும் சத்தம் கேட்டது.
எதுவும் அவள் மனதை கரைக்கவில்லை.
தன்னுடைய ஸ்கூல்தான் உலகம்.தன்னுடைய தோழிகள் என்ன நினைப்பார்கள் என்ற கற்பனை உலகத்தை நம்பிய, ஒன்றுமே இல்லாத அவமானத்தை அவமானமாக நினைத்த பிரபா,
ஸ்டூலைதட்டி விட்டு ,அந்தரத்தில் தன் கால்களை உதைத்து செத்து கொண்டிருக்கும் போது அந்த ஒன்றும் தெரியாத, ஒற்றைக்கோர் மகளைப்பெற்ற, மகளுக்குகாக நகை சேர்த்து பணம் சேர்த்து, இப்பவே அவள் கல்யாணத்திற்கு பட்டுப்புடவைகள் சேகரிக்க தொடங்கிருந்த,ஒருமாததிற்கப்புறம் வரப்போகிற மகளுடைய பிறந்தநாளுக்கு பிரபல ஹோட்டலின் பார்ட்டி ஹாலை புக் செய்து வைத்திருந்த அப்பாவி அம்மாவும் அப்பாவும் தூங்கிகொண்டிருந்தார்கள்.
நான் பிரபாவின் சாவுக்கு போகவே இல்லை.
இறந்து போனால் வெறுக்ககூடாதா? நான் வெறுப்பேன்.
ஒருவாரம் முடிந்து சாதரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா சொன்னாள்.
“பிரபாவுக்கு நல்ல அறிவு.அவ ஸ்டூலை தட்டி விடும் போது கீழ விழுந்து சத்தம் கேட்டுரும்னு, ஸ்டூல சுத்தி பெட் க்ஷீட்ட மொத்து மொத்துன்னு வைச்சிருந்திருக்கா. அவளுக்கு ஆண்டவன் கொடுத்த அறிவ பாத்தியா”
“யம்மா போங்கம்மா இந்த இடத்தவிட்டு” என்று அகலமாய் வாயைத்திறந்து நெஞ்சில் ஆழத்திலிருந்து ஒலமிட்டு கத்தினேன்.
நெஞ்சைத் தொட்ட கதை.அதிலும் கடைசி இரண்டு பாரா,ஐயோ பயங்கரம்… எண்கள் நம் எதிர்காலத்தை,நம் நட்புகளை,நம் ஈகோவை ஏன் நம் விதியையே நிர்ணயிக்க வல்லன என்பதை செவுட்டில் அடித்தாற்போல் சொல்லிய கதை…! இக்கதை உண்மைச் சம்பவமாக இருப்பின் ஆழ்ந்த அனுதாபமே ஏற்படுகிறது - பிரபாவின் பெற்றோரிடம் - இன்னும் திருந்தாததற்கு…!
ReplyDelete