Thursday, 11 April 2013

கதை போல ஒன்று - 83

ஜீவாவுக்கும் ஏழுமலைக்கும் இடையே சண்டை வந்தது “காட்டன் வேஸ்ட்” விசயத்தில்தான்.

சென்னை மாநகர டிப்போக்களின் ஒன்றான மவுண்ட் ரோடு டிப்போவில் எப்போதும் காட்டன் வேஸ்டுக்கு டிமாண்ட் இருக்கும்.

மெக்கானிக்குள் இன்ஜின், கியர்பாக்ஸ்,கிராங்க் சாஃப்ட் போன்றவைகளை துடைப்பதற்கும் தங்கள் கை கால்களில் ஒட்டியிருக்கும் கரியையும் மண்ணெனய்யும் துடைக்க பயன்படுவதுதான் காட்டன் வேஸ்ட்.

நானும் ஜீவாவும் அப்பரண்டீஸாக வேலைக்கு சேர்ந்த் முதல் நாள் புது காக்கி பேண்டும் காக்கி சர்டும் போட்டு ”ஜிந்தான்” மாதிரி வந்திருந்தோம்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை பிரிக்கப்பட்ட கியர் பாக்ஸில் மண்ணென்னய் தடவில் கார் வாக்ஷரில் கழுவி வரவேண்டும்.

கியர் பாக்ஸ் பாடிக்கு மண்ணென்னய் போட்டோம்.பிரிக்கப்பட்ட கியர்களுக்கும்தான்.

வண்டியில் எல்லாம் ஏற்றி, நான் உருட்ட ஜீவா பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான்.சட்டென்று முதல் கியர் “தனித்தவில்” மாதிரி வண்டியில் இருந்து விழுந்து இறங்கி ஒடி ஏழுமலை முன்னால் விழுந்தது.

ஜீவா அதன் பின்னால் ஒடி” மச்சி மண்ணு ஒட்டிகிச்சுடா என்று ஏழுமலை பக்கத்தில் இருந்த காட்டன் வேஸ்டை எடுத்து துடைக்கப்போகும் போது ஏழுமலை அவன் கைகளை காட்டன் வேஸ்டோடு பிடித்து கொண்டார்.

ஜீவாவுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.

ஏழுமலை கத்தினார் “என் வேஸ்ட நீ எப்படி எடுக்கலாம்.போடுடா கீழ.என்னடா நெனச்சிட்டிருக்க”

நான் உடனே ஒடிவந்தேன் “சார் வேஸ்ட்தான சார்.அவசரத்துக்குதான எடுத்தான்” அதுக்கு ஏன் டென்சன் ஆகுறீங்க”

“நீ யார்டா பெரிய இவனா.இவனுக்கு சப்போர்ட்டா.அப்படித்தாண்டா. குடுக்க மாட்டேன். ஓடுங்கடா இந்த எடத்த விட்டு”

காட்டன் வேஸ்டை தரவே இல்லை.
இன்னும் அவரிடம் சண்டை போடப்போனேன்.ஜீவா என் தோளை அமுத்தினான்.விட்டு விட்டேன்.

ஏழுமலை அந்த டிப்போவின் ராஜா.

டிப்போ முழுவதும் அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறது.

இன்ஜின் ஹெட்டர் பிளாக்கின் அழுத்த திறனை சோதனை செய்வதுதான் அவர் வேளை.

இன்ஜின் ஹெட்டரின் எல்லா துளைகளையும் போல்ட் போட்டு அடைப்பார்.அதற்கான ஃபிக்சரை வைத்து அதனுள் தண்ணீர் குழாயை விட்டு. தண்ணீர் சப்பளை செய்யும் டேங்கில் இருந்து அடிபம்பு மாதிரி அடிப்பார்.

குறிப்பிட்ட அழுத்தம் கொடுக்கப்படும் ஹெட்டரில் எங்காவது நீர் ஒழுகுகிறதா என்று பார்க்க வேண்டும்.

அவர் அந்த சிறிய நீர் நிரம்பிய டேங்கை ஒரு பலூன் வண்டி மாதிரியான அமைப்பில் வைத்திருப்பதாலும் அவர் மேல் எல்லோரும் கடுப்பில் இருப்பதாலும் அவரை “பலூன்காரன் “என்று அழைத்தார்கள்.

ஆதாயம் பெற்றவன், பெறுபவனின் குணம் பிடிக்கவில்லையென்றால் செய்யும் செயலைத்தான் டிப்போவில் எல்லோரும் ஏழுமலையிடம் செய்தார்கள்.

ஏழுமலை இல்லாத போது தூக்ஷிக்கவும்,நேரில் பார்க்கும் போது புகழவும் செய்தார்கள்.

இதுத்தவிர ஏழுமலை வெளிநாட்டு பொருட்களை விற்பனையும் செய்வார்.

உடை மாற்றும் இடத்தில் ,கைலாசம் அண்ணன் ”ஃபாரின் லெதர் ரெயின் கோட்டு ஒரு இருநூறு ருபாய்க்கு இருந்தா பாருங்க ஏழுமலை ”என்று சொல்ல

“ஆமாப்பா ஃபாரின் ரெயின் கோட்டு என்ன ஊர்ல் ஒன் ஆத்தா போட்டிருக்கிற பழைய கிழிசலு சேலன்னு நினைச்சிட்டிருக்கியா இருநூறு ருபாய்க்கு கிடைக்க, மினிமம் எட்நூறுப்பா” என்று அலட்சியமாக பேசியதை பார்த்து ஜீவா முறைக்க,

அவனை நோக்கி

“நீயேண்டா ஜட்டியோட நின்னிட்டிருக்க பெருச்சாளி கடிச்சிர போகுது” என்று சொல்ல ,

உடனே ஜீவா

“ஏன் உங்க இத அல்ரெடி கடிச்சிருக்கோ” என்று சொல்ல அவர் அடிக்க பாய ஜீவாவை இழுத்து வெளியே வந்தேன்.

அன்று டிப்போ குளோசிங் டைமில் எல்லோரும் கைகளை கழுவிக்கொண்டிருந்தோம்.

டிப்போவில் மெக்கானிக்குள் முதலில் கைமுழுவது மண்ணென்னய் போட்டு ஊறவைப்பார்கள். பின் துணி துவைக்கும் சோப்பால் கைகளை நன்றாக கழுவுவார்கள்.அதன் பின்னர் உடலுக்கு போடும் வாசனை சோப்பை கொண்டு கழுவுவார்கள்.

அப்படி அன்று கழுவிக்கொண்டிருக்கும் போது, எழுமலையின் சோப்பை முனுசாமி எடுத்து விட்டார்.அதிலும் துணி சோப்பைத்தான் எடுத்து கழுவினார்.கழுவும் இடத்தில் ஏதேட்சையாக எடுத்து கழுவினார்தான்.

முனுசாமி இரண்டு வருடங்களில் ரிட்டரைட் ஆகக்கூடியவர்.டிப்போவில் எல்லோரும் அவரை மதிப்பர்.ஆனால் ஏழுமலைக்கு சோப்பை அவர் எடுத்தது பிடிக்கவில்லை.சட்டென்று முனுசாமி கழுவி வைத்ததும் அந்த சோப்பை எடுத்து தூர வீசினார்.அது கழிவுநீர் டிரைனேஜில் விழுந்தது.

முனுசாமிக்கு கண்ணீல் நீர் கோர்த்து கொண்டிருந்தது.சுற்றியிருந்த யாருக்கும் ஏழுமலையை கேட்க துணிவில்லை.மவுனம் உறைந்திருந்திருந்தது.

ஜீவாவும் கலங்கிவிட்டான்.ரொம்ப நேரம் புலம்பிக்கொண்டிருந்தான் “மச்சி எதாவது பண்ணனும்டா.எதாவது.அவன் என்ன பெரிய இவனா.யாரும் அவன கேள்வி கேட்க முடியாதாடா” என்று பேசிக்கொண்டே இருந்தான்.

”மச்சி நமக்கு முடிக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு.அப்பரண்டீஸ நல்ல படியா முடிச்சிட்டு போயிருவோம்டா.நீ எதுவும் பண்ணாத கிறுக்குத்தனமா “ என்றேன்.

ஜீவா அதற்கு “சரி” என்று தலையாட்டாததையும் கவனித்தேன்.

மறுநாள் மதியம் சாப்பிட கைகழுவும் போது ஏழுமலை வந்தார்.

கை கழுவும் இடத்தில் ஏதோ தேடினார்.பின் அவரே சொன்னார் “இல்ல என் வாசன சோப்பை இங்க வெச்சேனா நேத்து.காணல” என்று தேடிப்போனார்.

எதிர்கடையில் சோப்பு வாங்கி உபயோகபடுத்தினார்.

மறுநாள் மதியமும் ஏழுமலையின் சோப்பை காணவில்லை.”என் சோப்ப காணல. காணல” என்று தேடினார்.

அடுத்த நாளும் காணாமல் போகும் போதுதான் ஏழுமலைக்கு புரிந்தது, யாரோ அவரிடம் விளையாடுவது.

“என் சோப்ப எவனோ எடுத்துகிட்டு போறான்.அவன் மட்டும் கையில கிடைச்சான்.தொலைச்சிருவேன்”

எனக்கு ஏதோ புரிந்தது. ஜீவாவை பார்த்தேன்.முகத்தை சலனமில்லாமல் வைத்து கொண்டிருந்தான்.

”ஜீவா நீதான மச்சி சோப்ப எடுக்கிறது” என்றேன்.

“மச்சி வாய மூடு நான் ஏன் சில்லரத்தனமா செய்யப்போறேன்.” என்னை அடக்கினான்.

ஏழுமலையின் சோப்பு காணாமல் போவது டிப்போ முழுவதும் பரவியது.

ஏழுமலையும் எங்கெல்லாமோ ஒளித்து வைத்து பார்த்தார்.சோப் காணமல்தான் போனது.

அவருக்கு என்று கொடுத்திருந்த பெட்டி மாடியில் உடை மாற்றும் அறையில் இருந்தது.அதில் சோப்பை வைத்து பூட்டினார்.அன்று சோப் காணாமல் போகவில்லை.ஆனால் தினமும் கைகழுவ மாடிக்கு போய் சோப்பை எடுக்க முடியாதல்லவா? அதனால் கீழே வைத்தார்.அன்று மறுபடியும் காணாமல் போயிற்று.

வொர்க்ஸ் மேனஜரிடம் போய் கம்பளியிண்ட் கொடுத்தால் “சோப்பு ஒரு பிரச்சனையா ஏழுமலை.போன மாசம் கண்ணனோட பத்தாயிரம் ரூபாய் காணம போச்சி.அவரே அமைதியாத்தான் இருந்தார்” என்று திருப்பி அனுப்பபட்டார்.

டிப்போவாசிகளுக்கு “யார்டா அவன் சோப்ப எங்குன வைச்சாலும் தூக்குறான்” என்று ஒரே சிரிப்பு.
பலூன்காரன் பட்டத்தில் இருந்து “சோப்பு” என்ற பட்டபெயரை கொடுத்தனர்.

“என் சோப்பை தூக்குறவன் அம்மா தினத்துக்கும் ஆட்டோல போய் தொழில் செய்றவ.அவன் அப்பன் ஒரு பேடிப்பய” என்னவல்லாமோ சொல்லிப்பார்த்தார்.சோப்புகட்டிகள் காணமல்தான் போனது.

இதை ஜீவாதான் செய்கிறான் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.ஆனால் கேட்டால் அவன் வாயால் சொல்ல மாட்டென் என்கிறான்.

எங்கள் அப்பரண்டீஸ் முடிந்தது. ஒரு வாரம் கழித்து சர்டிபிக்கேட் அப்ளை செய்வதற்கு டிப்போ வொர்க்ஸ் மேனஜர் கையெழுத்து வாங்கப்போனோம்.

விசாரித்ததில் அப்போதும் ஏழுமலையின் சோப்பு கட்டிகள் காணாமல்தான் போய்கொண்டிருக்கிறதாம்.
தினமும் அல்ல,ஆனால் வாரம் ஒருமுறை அப்படி நடக்கிறதாம்.இப்போதெல்லாம் ஏழுமலையின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிகிறதாம்.கொஞ்சம் அடக்கமாகிவிட்டாராம்.யாரையும் அதிகம் புண்படுத்துவதில்லையாம் வார்த்தைகளால்.

வெளியே வந்து டி.வி.எஸ் பேக்ஆபீஸ் பக்கத்தில் உள்ள டீ கடையில் டீ குடிக்கும் போது “மச்சி சாரிடா நீதான் அந்த சோப்பை எடுத்து போட்டுருப்பன்னு நம்புனேன்.ஆனா இப்ப நீ வந்த் பிறகு சோப்பு காணாம போகுதுன்னு தெரிஞ்சபிறகு மொக்கயாயிட்டேண்டா.” என்றேன்.

ஜீவா என்னை பார்த்து சிரித்தபடியே “என்னடா நீ சுத்த வெங்காயமா இருக்க.சோப்ப எடுக்கிற குரூப்ல நானும் ஒருத்தந்தான்.நான்தான் அந்த குரூப்பையே அமைச்சேன்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் சோப்ப எடுப்போம்.ஒருத்தந்தான் சோப்ப எடுக்கனுமா.ஒரு கூட்டம் எடுக்க கூடாதா” ஏழுமலை அலறனும்.அவருக்கு புரியனும். அதுவரைக்கும் நா இல்லன்னாலும் இது தொடரும் மச்சி”

“அட நாய நீ இவ்வளவு பெரிய கிரிமினலா.இப்ப அந்த குருப்புக்கு தலைவன் யாரு”

”அதச்சொல்ல மாட்டேன் மச்சி.நீ ஒட்டவாயி.உளறிருவ” என்று டீயை உறிஞ்சினான் ஜீவா.

1 comment:

  1. சற்றே நீள எளிய நகைச்சுவைக் கதை… எடிட்டிங் இன்னும் செய்யணும்…

    ReplyDelete