Thursday, 4 April 2013

கதை போல ஒன்று - 81

முட்டி வரைக்கும் மிடி போட்டு, வெள்ளையாய் இருந்து, சிரித்தும் பேசினால் அந்தப்பெண்ணை சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும்தானே.

அப்படித்தான் ஜெபாவின் ரூமில் கூட்டம் வழிந்து கொண்டிருக்கும்.

என்ஜியரிங் டிசைன் கம்பெனியில் எல்லாம் லைப்ரரி கட்டாயம் இருக்கும்.அதில் நிறைய ஸ்டாண்டர்டுகள் கோட்கள்(code) இருக்கும்.

அதனை நிர்வகிக்கும் ஒற்றை லைப்பரியனாக வேலை செய்யும் ஜெபாவின் வயது முப்பத்தி ஒன்பது.

கம்பெனியில் டிரையினியாய் சேர்ந்த போதிருந்த வயதை விட பதினெட்டு வயது அதிகம்.

ஆனால் அது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.மற்ற ஆண்களோடு சேர்ந்து நானும் ஜெபாவுக்காக மோத ஆரம்பித்துவிட்டேன்.

முயற்சிப்போம்.கிடைத்தால் ஆச்சி.கிடைக்காவிட்டால் மயிராப்போச்சு என்பதான மனதில் இருந்தேன்.

ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

ஜெபாவின் அறையில் போய் இளித்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் பெரிய அதிகாரிகள்,பிஸினஸ் டெவலப்மெண்ட் ஆபீசர்,சில சமயம் துறைத்தலைவர்களையும், ஏன் ஜி.எம்மையும் கூட சிரித்து சிரித்து வெட்டியாக பேசி கண்களின் மட்டும் காமத்தை வைத்து கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கிறேன்.

ஆக கவனம் தேவை.கவனி.அவள் என்ன செய்கிறாள் என்று கவனி. எதாவது மாட்டும்.

கவனித்ததில் அவள் “ஜெப்ரி ஆர்ச்சர்” புத்தகத்தை புத்தங்களை அடிக்கடி வாசிப்பதை குறித்து கொண்டேன்.

ஆனால் வேளை இன்னும் வரவில்லை என்று கடந்த நாட்களை நினைத்து அவசரப்படவில்லை.வேட்டையில் பொறுமை அவசியம்.

காலம் வந்தது.

அது ஒரு எம்.டி.ஓ என்ற மெட்டீரியல் டேக் ஆஃப் புராஜெக்ட்.

அதற்கு நிறைய புத்தகங்கள் விதிகள் கோட்பாடுகளை ரிஃபர் செய்ய வேண்டும்.

செய்வதற்கு அடிக்கடி லைப்ரரி போகவேண்டும்.போனேன்.

“உடகார்” என்றாள் ஜெபா.ஜெபா ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசுவார்.முதல் மூன்று நாட்கள் ரொம்ப மரியாதையாக பேசினேன்.

நான்காவது நாள்

“அது ஒரு நல்ல காலைபொழுது,ஒரு நல்ல காபியை குடிக்க,ஒரு நல்ல சூரிய ஒளியை ரசிக்க,ஆனால் கண்டிப்பாக லாக்கப் போவதற்காக போலீஸ் ஜீப்பில் ஏறி போவதற்கு அல்ல” இதை யார் எழுதியது மேடம் என்றேன் புன்முறுவலோடு.

ஜெபா என்னை முதன்முதலில் அலுவலக வேளை இல்லாமல் நோக்கினாள்.அப்படியே சிரித்தாள். “மை ஜெப்ரி” என்றாள்.
”நீ கொஞ்சம் மாற்றி சொல்லிவிட்டாய்.ஜெப்ரி ஆர்ச்சர் படிப்பியா நீ”

“படிப்பேன்.நீங்கள் எப்படி அழகாக இருக்கீங்களோ அதுமாதிரி அவர் எழுத்தும் நேர்த்தியா இருக்கும்” என்று சிரித்தேன்.

என் புகழுரையை தவிர்த்து ஜெப்ரி ஆர்ச்சர் பற்றியே பேசிக்கொண்டிர்ந்ததை பார்த்து ஒன்று தெரிந்து கொண்டேன்.இலக்கியம் பேசுவதற்கு ஆளில்லாமல் தவித்திருக்கிறாள் என்று. தினமும் நிறைய பேசினோம்.

/நல்ல டாப்பிக்கோ கெட்ட டாப்பிக்கோ பெண்ணை பேச்சுக்கு அடிமையாக்கு.உன்னிடம் பேசாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு கொண்டுவா.மீன் கிடைக்கும்/படித்த புத்தக விதி வேலை செய்தது.

இரண்டு நாள் லைப்ரரி பக்கம் போகாமல் இருந்தேன்.இண்டர்காமிற்கு அழைப்பு வந்தது “ஏன் வரவில்லை என்று”
உடனே போனேன்.”நான் வந்து விட்டேன் ஜெபா.கொஞ்சம் வேலை என்றேன்”

/பேச்சுக்கு அடிமையாக்கி விட்டாயா.இப்போது அக்கறை கொண்டவன் போல நடி.அல்லது பிதற்று/ புத்தக விதி.

“நெத்தியில என்ன தழும்பு ஜெபா”

“கீழே விழுந்துவிட்டேன்”

பக்கத்தில் போய் உரிமையுடன் தொட்டேன் நெற்றியை. எதிர்ப்பில்லை.
விட்டுவிட்டேன்.

அவள் தான் சிறுவயதில் சைக்கிளில் விழுந்த கதையை சொல்ல ஆர்வத்துடன் கேட்டேன்.

இருவருக்கும் உரிமை கூடிற்று.

/அக்கறை மாதிரி நடித்து விட்டாயா.பர்சனலுக்குள் நுழை.கொஞ்சம் கெட்ட மாதிரி பேசு.ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்டால் நான் இதைத்தானே சொன்னேன் என்று தப்பிப்பது மாதிரி பேசு/புத்தக விதி.

“ஜெபா எப்படி உங்க கால்கள் இவ்ளோ பளபளப்பா இருக்கு.ஒரு மார்பிள் சிலை மாதிரி “என்றேன்.

சிரித்தாள் “நன்றி நன்றி. உட்கார் விஜய் உன்னிடம் ஒன்று பேசவேண்டும்”

உட்கார்ந்தேன்.

“சிம்பன்சி தன்னுடைய பார்டனரை உடல் உறவுக்கு அழைக்க கொஞ்சம் பழங்களை லஞ்சமாக கொடுக்குமாம்.நட்பிலிருந்து உடலுறவுக்கு அழைத்துப்போக எடுத்துக்கொள்ளும் பததிற்கு ஆங்கிலத்தில் ”கோர்ட்ஷிப்” என்று பெயர்.நீயும் அதுமாதிரி என்னை “கோர்க்ஷிப்” பண்ண பார்க்கிறாயா? உனக்கு அது விருப்பமா” நேரடியாக சொல்.

செவுளில் அறைந்தது போலாகி விட்டது.

நேரடியாக கேட்டது, மனதை ஆணியடித்துவிட்டது.

“மன்னித்து விடு ஜெபா.இனிமேல் இது நடக்காது என்று கையை நீட்டினேன்”

“கையை குலுக்கி. நான் நேரடியாக இப்படி கேட்பது ஏன் என்றால் எனக்கு உன்னை பிடிக்கும் என்பதால்தான்.நீயும் என்னிடம் இப்படி பழகுவது எனக்கு அலுப்பாய் இருக்கிறது ஃபிரண்ட்” என்றாள்.

வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் முதல் ஜெபாவிடம் தப்பான நோக்கமில்லாமல் பழக முயற்சித்து இரண்டு நாட்களில் வெற்றியும் பெற்றேன்.

“நீ என் வாழ்க்கையில் முக்கியமானவன் “என்று சொல்வாள்.

அப்படியே காலம் போக எனக்கு வேறொரு கம்பெனியில் வேலைகிடைக்க ஜெபாவிடம் சொல்லிக்கொள்ள அவள் அறைக்குள் போனேன்.

மிகவும் வருத்தப்பட்டாள் பிரிவை எண்ணி.

போன் அடிக்கடி பண்ணு என்றாள்.இனி யாரிடம் புத்தகம் பற்றி பேசுவேன் என்றாள்.

உன் க்ஷர்ட் சைஸ் என்ன என்றாள்.சட்டை பிரசண்ட் செய்தால் வாங்கிக்கொள்வாயா என்றாள்”

“உங்களுடைய சம்பளமே சொற்பம் என்று எனக்கு தெரியும் ஜெபா சட்டையெல்லாம் வேண்டாம்” என்று உரிமையாய் மறுத்தேன்.

வாழ்த்து சொல்லி கைகொடுத்தாள்.

சும்மாவேனும் கிண்டலுக்கு அவளை வம்பிழுத்தேன்.

”இரண்டு வாரம் முன்பு உங்கள் அறையில் நான் நுழையும் போது பார்க்க முடியாத ஒரு காட்சியை கண்டேன் ஜெபா”

சட்டென்று என்னை இறுக்கமாக பார்த்தவள்.
“என்ன பார்த்தாய் “என்று சிரித்தபடியே கேட்டாள்.

”நான் சும்மா விளையாடினேன் ஜெபா.ஒன்றுமே பார்க்கவில்லை” என்றேன்.

”ஏன் இந்த காமடி விளையாட்டு” என்று என்னிடம் பேச்சை இழுத்தவள்.
“சொல்லி நீ என்னப்பார்த்தாய்”

“அய்யோ மேடம் நான் ஒண்ணுமே பார்க்கவில்லை சும்மா கலாய்த்தேன்” என்றேன்.

விடைபெற்று வேறு கம்பெனியில் சேர்ந்து முதல் இரண்டு மாதம் ஜெபாவுக்கு போன் செய்வேன்.
அப்போதும் ஒருமுறை “என்னப்பார்த்தாய் “ என்று கேட்டாள்.

குழம்பிவிட்டேன்.சொன்ன பதிலையே சொன்னேன்.

தூரப்போய் விட்டவர்களை எளிதில் மறந்து பக்கத்தில் உள்ளவர்களிடம் பழகுவது என் பழக்கம்.

முன்று வருடங்கள் கழித்து கல்யாணப்பத்திரிக்கையை கொடுக்க ஜெபா ஆபீஸுக்கு சென்றேன்.அவள் ரூமிற்கே அழைத்து சென்றாள்.
பெண்ணைப்பற்றி விசாரித்தவள் தன் பையிலிருந்து க்ஷோபா டே எழுதிய “ஸ்பொஸ்(Spouse)” புத்தகத்தை கொடுத்தாள்.

“என்ன ஜெபா நான் வருவேன் என்றே இந்த புத்தகத்தை வாங்கிவைத்தீர்களா”

“இல்ல தற்செயலா நடந்ததுதான்.படிச்சிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணு “ என்றாள்.

ஐந்து நிமிடம் பேசினதற்கப்புறம்.

“விஜய் நான் ஒன்று கேட்பேன்.கடவுள் மேலே பிராமிஸ் சொல்வாயா.அன்று என் அறையில் என்னப்பார்த்தாய்”

நான் எரிச்சலானேன்.அடிமனதில் இருந்து ஆவேசம் வந்தது.

“என்னுடைய அம்மா மீது பிராமிஸாக சொல்கிறேன்.நான் ஒன்றும் பார்க்கவில்லை.கேலிக்காக அப்படி சொன்னேன்.இப்போது நான் உன்னிடம் பொய் சொன்னால் கடவுள் மேல் ஆணையாக என் அம்மாவுக்கு எதாவது நடக்கும்” என்று அடிக்குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக கத்தினேன்.

சட்டென்று டேபிளில் முகத்தை வைத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவள் உடலெல்லாம் அதிர்ந்தது.

மூக்கை உறிஞ்சியபடி கர்சீஃபால் மூக்கை துடைத்து , கண்களையும் துடைத்து கட்டாய சிரிப்பை சிரித்து

“ஸாரி ஸாரி.நீ என்னை நல்லவளாக நினைக்க வேண்டும் என்று மனது விரும்புகிறது.

என்னையறியாமல் அழுதுவிட்டேன்.

உன் கல்யாணத்திற்கு கண்டிப்பாக வருவேன். வாழ்த்துக்கள்” என்றாள்.

லைப்ரரியின் புத்தகங்கள் எல்லாம் ஜெபாவுக்கு அறுதல் சொல்வதை மவுனமாக பார்த்துகொண்டிருந்து விட்டு வெளியேறினேன்.

1 comment:

  1. அருமையான கதை.பெண்ணை இச்சைக்கு இணங்க வைக்க ஆண் நரி,குரங்கு,முதலை,மலைப்பாம்பு ஆகிய அனைத்து விலங்குகளின் குணங்களையும் கொள்கிறான்….சிம்மம் போல நேரடி தாக்குதலில் இறங்கும் பெண்களே தப்பிக்கின்றனர். குற்ற உணர்ச்சிக்கு கண்ணீருடன் கூடிய மௌனமே பலநேங்களில் சாட்சியாக நிற்கின்றன… அனுபவித்திருக்கிறேன் இவ்வுணர்வுகளை…!

    ReplyDelete