Monday, 29 April 2013

கதை போல ஒன்று - 88


வாழ்க்கையின் பிடிப்பை உணர, ஆச்சி தயிர் கடைவதை பார்க்கவேண்டும்.

காலை ஆறுமணிக்கு சமைலைறை வழியே பின்கட்டுக்கு பல்விளக்க போனால், சமைலறையின் ஒரு மூலையில் குத்த வைத்து தயிர்பானையை இருகாலால் பிடித்து மரமத்து கொண்டு தயிரை கடைந்து கொண்டிருப்பார் ஆச்சி.

இரண்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை முழுவருட லீவிற்கு வரும்போதெல்லாம் இந்த காட்சியையே பார்க்கிறேன்.

தயிர் பானையை சீராக கடைவதும், திரழும் வெண்ணெய்யை பக்கத்தில் இருக்கும் சுத்தமான நீர்பாத்திரத்தில் மிதக்க விடுவதும்,

மிதக்கும் வெண்ணெய்பந்துகள் அங்குமிங்கும் கலம் போல ஒடுவதும் காலையில் பார்க்க பூரணமாய் இருக்கும்.

சில வெண்ணெய்துளிகள் அதிபிரசங்கித்தனமாய் மத்தின் கைப்பிடியில் ஏறி, தயிரில் இருந்து கடைந்து அவர்களை உருவாக்கியதற்கோ அல்லது காதலித்து கிடந்த தயிரில் இருந்து ஏன் என்னைப்பிரித்தாய்? என்று கேட்பதற்கோ மத்தின் கைப்பிடியில் ஏறி வழியில் ஏறமுடியாமல் ஒட்டிக்கொள்ளும்,

அவை அனைத்தையும் விரலால் வழித்து திரட்டும் லாவகமென்ன.

காலையில் உதிக்கும் சூரியன் உலகின் எல்லா சக்திக்கும் காரணமாய் அமைவது போல,ஆச்சிதான் குடும்பத்தின் அச்சானி என்று எல்லோருக்கும் அறிவிப்பதாய் இருக்கும் அவர் தயிர்கடையும் காட்சி.

மூன்று மகளையும் இரண்டு மகனையும் கொடுத்து விட்டு தாத்தா அம்பத்தியெட்டு வயதில் இறந்துவிடும் போது, ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமணமாகி இருந்தது.அது என் அம்மாதான்.

படிப்பு வராமல் தவித்த தன் இருமகன்களையும் பிளஸ் டூ வரை படிக்க வைத்தது ஆச்சி வளர்க்கும் பால்மாடுகளின் மூதாதையர்களும், பூ கட்டி கோயில் வாசலில் கொண்டு விற்றதும்,வீட்டு வேலை செய்ததும்,கடல் சிப்பியை நூலில் கோர்த்து விற்ற உழைப்பும்தான்.

பள்ளியைத் தாண்டி படிப்பு வராத பட்சத்தில் மூத்த மாமவை பழவியாபாரம் செய்ய சொன்னதும்,இளைய மாமாவை பெட்டிக்கடை வைக்க ஊக்குவித்து பணம் கொடுத்ததும் பாட்டிதான்.

நைட் செகண்ட் க்ஷோ முடிந்து வரும்போது ஒருவனுக்கும் பலபேருக்கும் தகராறு வர, எல்லோரும் சேர்ந்து அவனை அடித்து ஒடிவிட்டார்கள்.

மாமாவின் பழக்கடையை மூடப்போகும் போது, அடிபட்டவன் தள்ளாடி தள்ளாடி வந்து மாமாவின் கடைமுன்னால் விழுந்து விட. விசாரிக்க வந்த போலீஸ் மாமாவை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்றது.

தகவல் கிடைத்த பாட்டி இரவு இரண்டு மணிக்கு போலீஸ் ஸ்டேசன் முன்னால் நியாயம் கேட்டு மாமாவை கூட்டி வந்தாராம்.

வரும் போது இன்னொரு போலீஸ் சொன்னாராம் மெல்ல காதில் “நல்ல வேளைம்மா நீ அழுது புரண்ட.இல்லாட்டி இந்த சோம்பேரிகள் இவன் மேலயே கேச எழுதியிருப்பானுங்க.கேஸ் எழுதிட்டா அப்புறம் தப்பிக்க கஸ்டம்ம்மா” என்றாராம்.

மாமாவுக்கு ஆறுதல் சொல்லி மறுபடியும் பழக்கடையை திறக்க வைக்க சொல்ல அதிர்ஸ்டம் எட்டிப்பார்த்தது.

பழக்கடை பழமுதிர்ச்சோலையானது.தூத்துக்குடியில் இருக்கும் பிரபல ஹோட்டலின் எல்லா பழத்தேவையும் பூர்த்தி செய்யும் ஆர்டர் மாமாவுக்கு கிடைத்தது.மாமா கழுத்தில் தங்கச்சங்கிலி மோதிரம் எல்லாம் போட ஆரம்பித்தார்.தன் தம்பியையும் சேர்த்துக்கொண்டார்.

வீட்டை இடித்து பெரிதாக கட்டினார்.ஆச்சியிடம் மிகமரியாதையாக அன்பாய் இருந்தார்.

தன் தங்கைகளுக்கு பெரிய இடத்தில் கல்யாணம் செய்து வைத்தார்.
கார் கூட வாங்கிக்கொண்டார்.அடையாளத்துக்காக பெரிய மீசையும் சங்கிலி செயினும் என்ஃபீல்டுமாய் ஆகிப்போனார்.

ஒருகாலத்தில் மாமாவை போலீஸ் ஸ்டேசனில் அடித்து உதைத்த போலீஸ்காரர்கள் எல்லாம் மாமாவுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள் என்று கூட கேள்வி.

அன்று ஆச்சி தயிர்கடைந்து கொண்டிருக்கும் போது மாமா குளித்து ஆச்சியை கடந்து போகும் போது, ஆச்சி கூப்பிட்டார்.

“யய்யா இந்த வசந்தி பிள்ள வயசுக்கு வந்ததுக்கு எதாவது செய்யனும்லா”

மாமா கொஞ்சம் எரிச்சலுடன்.

“நீங்களே பாத்து எதாவது செய்ஞ்சிருங்கம்மா.எனக்கு வேல இருக்கு”

“அதில்ல அவுங்க நம்ம வீட்டு விசேசத்துக்கு எவ்வளவு செய்ஞ்சாங்கன்னு மொய் நோட்ட பாத்தாத்தான் நாம அவுங்களுக்கு எவ்வளு ரூவாயைக்கு செய்யனும்ன்னு தெரியும்”

“யம்மா நம்ம கிட்ட பணத்துக்கு என்னம்மா கொற.நோட்டெல்லாம் ஏன் பாக்கனும்.உங்களுக்கு என்ன செய்யனுமோ தாராளமா செய்ங்க.”

“ காசு இருந்தா அதை சும்மா தரையில போடுவியா.சும்மா கொண்டு காச குடுக்கமுடியாது.கூடாது”

“ஏன் நான் போடுவேன்,அதான் கஸ்டபட்டு சம்பாதிச்சேன் இல்ல.எப்படி தோணுதோ அப்படி செலவழிப்பேன்.இப்ப என்ன செய்ய சொல்றீங்க.”

ஆச்சி கொஞ்சம் கண்கலங்கினாள்.

மாமா கொஞ்சம் இறங்கி வந்தார்.

“ஏம்மா போட்டு காலங்காத்தால இப்படி வாதம் செய்றீங்க”

”சரி நான் உங்கிட்ட பேசல” என்று ஆச்சி மறுபடியும் தயிர்கடைய ஆரம்பித்தார்.

”இதப்பாருங்க எப்ப பாத்தாலும் காலங்காத்தால தயிரகடைஞ்சிக்கிட்டு கைகாலெல்லாம் வயசான காலத்தில உங்களையே நீங்க கஸ்டபடுத்திகிட்டு.அப்படியே நீங்கதான் குடும்பத்த தாங்குறீங்கன்னு நினைப்பு.”

ஆச்சி சட்டென்று மாமாவை திரும்பிப்பார்த்தார்.

“ஆமாம்மா நான் சரியாத்தான் சொல்றேன்.நீங்க என்ன கடைக்கு வந்தா வியாபாரம் செய்ஞ்சீங்க,அப்படியே வீட்ல இருந்தே சமாளிச்சிட்டீங்க.லேடீஸ்க்கு என்ன பொறுப்பு .அது தேவையே இல்ல. நான் எல்லாம் கஸ்டபட்டுத்தானம்மா முன்னேறி இருக்கேன்.”

“நீ சொல்லுவ இரண்டு பசங்களையும் இரண்டு பொண்ணுகளையும் தேத்தி கொண்டு வந்த கஸ்டம் எனக்குத்தான தெரியும்”

“ஆமா கிழிச்சீங்க. ஒருநாள் கடையில வந்து இருந்தீக்கிருக்க மாட்டீங்க.ஏதோ கல்லாவுல இருந்து யாவாரம் பண்ணின மாதிரி.பேசாதீங்க போங்கம்மா” .

ஆச்சியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.மத்து கடைவது மெல்ல ஆகியது.மாமா பேச பேச அதன் வேகம் சுருங்கிக்கொண்டே இருந்தது.குறிப்பிட்ட நேரத்தில் நின்றே போய்விட்டது.எழுந்து கைகழுவி போய்விட்டார்.

அன்றிரவு முழுவதும் ஆச்சி அழுது கொண்டே இருந்தற்கான காரணம் மாமா அவமானப்படுத்தியதுதான் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது எனக்கு.

”அதான் காசு வந்தாச்ச இனிமேல் இந்த வீட்டு வேலை,ஆடு,மாடு,தயிர் எல்லாத்தையும் விட்டுருலாம்.

பொட்டச்சி நான் என்னால முடிஞ்சதத் குடும்பத்துக்கு செய்யலன்னா இப்போ இவன் இந்த குடும்பம் இப்படி வந்திருக்குமா” என்று அழுது புலம்பி கொண்டே இருந்தார்.

யோசித்து கொண்டே இருந்தேன்.

பணம் சம்பாதிப்பது மட்டுமா குடும்பத்தை காப்பது, ஏன் மாமா போலீஸ் ஸ்டேசனில் இருக்கும் போது அவரை மீட்டெதெல்லாம் கணக்கில் வராதா ? என்பது மாதிரியான கேள்விகள் என்னுள் அதிகம் இருந்தன.அப்படியே தூங்கியும் விட்டேன்.

மறுநாள் காலையில் சமைலறையை கடக்கும் போது ஆச்சி அங்கிருந்து தயிர்கடைந்து கொண்டிருக்கவில்லை.

ஆச்சி மனக்கஸ்டபபட்டு விட்டார். தயிர்கடைவது எல்லாம் போய் விட்டத.நான் பின் பக்கம் போனபோது ஆச்சி அங்கிருந்து சாணியை அள்ளிக்கொண்டிருந்தார்.

“என்ன ஆச்சி தயிர் கடையலையா”

”கடைஞ்சுட்டேனே.நீ இன்னைக்கு எழுந்திருக்க லேட் அதான் உனக்கு தெரியல என்று சொல்லி ஆச்சி சிரித்தார்.

நானும் சிரித்தேன்.

1 comment:

  1. கண்களுக்குத் தெரியாத பெண்களின் உழைப்பு உதாசீனப்படுத்தப் பட்டாலும் அந்த நேர அங்கலாய்ப்போடு முடித்துக் கொள்வதில் வெளிப்படுகிறது அவர்களது மகோன்னதம் - என் அம்மாவும் இப்படித்தான்…!

    ReplyDelete