Thursday, 13 December 2012

கதை போல ஒன்று - 62


திருமணத்திற்கு முன் மனைவியை அடிப்பது பற்றி உங்கள் கருத்து என்னவாய் இருந்தது?

வாசிக்கும் பழக்கம் இருந்ததால் பெண்களை சக உயிராய் மதிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தேன்.

மனைவியை மட்டுமல்ல, எந்த பெண்ணையுமே கை நீட்டி அடிக்க கூடாது என்று னைத்திருந்தேன்.பெண்ணை என்ன பெண்ணை எந்த உயிரையுமே அடிக்ககூடாது என்றிருந்தேன்.

திருமணத்திற்கு பிறகு மனைவியை அடித்தீர்களா?

ஆம். அடித்தேன். மனதில் நான் உருவாக்கி வைத்திருக்கும் கோட்பாடுகள் “நான்” அல்ல என்று உணர்ந்து கொண்டேன்.

நான் என்பது வேறு எதுவோ. அந்த நானை எனக்கு தெரியாமலே பலரும் உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் புரிந்தது.

சம்பவத்தை சொன்னால் கதை மாதிரி கொண்டு போவதற்கு வசதியாக இருக்கும்?

திருமணமாகி கூடி குலாவி கொஞ்சி சலித்து களைக்கும் போது குழந்தை பிறந்தது.

குழந்தைக்காக மகிழ்ச்சி, குழந்தையின் துன்பத்தை போக்க இருவரின் குழு முயற்சி போன்றவற்றில் இணைந்திருந்தோம்.

காதல் இல்லாமல் எல்லாம் இல்லை.

சில விடுமுறை மதிய வேளையில் அணைத்து கொண்டே இருவரும் காதலில் பினாத்தி கொண்டே இருப்போம்.

சூரிய உதய அஸ்தமனமாய் வாழ்க்கை சீராக போய் கொண்டிருந்தது.

குழந்தைக்கு எட்டு மாதம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆபிஸ் விட்டு வரும்போது தூங்கி கொண்டிருக்கிறாள் கட்டிலில்.

எனக்கோ ஆபிஸில் வேலை பளுவால் சரியான பசி.

பசியின் வீச்சு கூர்மையான கத்தியை விட மேலானது என்பதையெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?

வீட்டிற்கு வந்து சோறு போடு! என்று மனைவியடம் சொல்ல அமைதியாய் இருந்தாள்.

இன்னொரு முறை வலியுறுத்த ’முடியாது’ என்று மறுத்துவிட்டாள்.

சரி என்று நானே சமையல் கட்டுக்கு சென்று சாதம் போட பார்த்தேன்.சட்டியில் ஒற்றை சோற்றுப்பருக்கை இல்லை.

ஏதோ நடந்திருப்பது புரிந்தது.

மறுபடி மனைவிடம் வந்து விசாரித்தால், என் அம்மாவிடம் ஏதோ சண்டையாம்.

அம்மா திட்டியிருக்கிறார்கள்.பதிலுக்கு இவளும். பதிலுக்கும் அம்மாவும்.

அம்மா மனத்தாங்கலில் கோவிலுக்கு போய்விட்டார்கள்.

இவள் அழுது கொண்டே இருக்கிறாள்.

நான் கேட்க கேட்க சரியாகவும் சொல்லவில்லை காரணத்தை.

அம்மா வந்தார்கள்.

நான் உச்ச ஸ்தாயில் கத்துகிறேன். என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க? சும்மா அவள போட்டு டார்ச்சர் செய்துகிட்டு”

இப்போது அம்மா முகத்தில் கண்ணீர் வடிகிறது.

வயிற்று பசியோ எதையாவது சாப்பிடு அப்புறம் சண்டைபோடு என்கிறது.

உடனே மனைவி எழுந்து சாதம் வைக்க போக நான் சோபாவில் உட்கார்ந்தேன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு.

உட்காரபோகவும் “வீல்” என்றொரு சத்தம் கேட்டது.

குழந்தைதான் அழுகிறாள்.

பதறி வீட்டில் உள்ள எல்லோரும் ஒடிப்போய் பார்க்கிறோம்.

கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்து விட்டாள் .

அப்போது முதன் முதலாக வாழ்க்கையில் நான் நடுங்கினேன்.

ஒடிப்போய் அவளை அணைத்து பார்த்தால் பெரிய அடி ஒன்றுமில்லை. பயத்தில் அழுதிருக்கிறாள்.

”யாரு கட்டில்ல கிடத்தும் போது தலையணைய சைடுல வைக்காம போனது”

மனைவி கொதித்து போய்

“ஏன் நீங்க வரும் போது பாத்துகிட்டுதான இருந்தீங்க. நீங்க பில்லோவ வைச்சிருக்க வேண்டியதுதான”

“அவள தூங்க கிடத்தும்போது நீதான இருந்த. அது உன் ரெஸ்பான்ஸிபிலிட்டி நாய”

“நாய கீயன்னு சொன்னீங்கன்னா. இந்த கத்திய எடுத்து குத்திகிட்டு செத்துருவேன் என்று டைனிங் டேபிளில் இருந்து ஒரு கத்தியை எடுத்து ஆவேசமாக காட்டினாள்” மனைவி.

வெறி வந்தது.முகமெல்லாம் ரத்தம் பரவி துடித்து போயிற்று.

இடது கையால வீசி அடித்தேன்.

அவள் கன்னத்தில் அறை ஒங்கி விழுந்தது. வலது கையினால் அடிப்பதை கண்டிரோல் செய்யலாம் ஆனால் இடது கையால் அடித்தால் அடியின் வலி அதிகம் என்று உணர்ந்தேன்.

மனைவிக்கு அதிர்ச்சி.

அம்மா தலையில் அடித்து “சில லோக்கல் பேமிலியில் நடக்கிறமாதிரி நடக்குறானே” என்று என்னை திட்டுகிறார்.

மனைவி அழுதாள்.விக்கி விக்கி அழுதாள்.

முடியை கலைத்து போட்டு அழுதாள்.

ஒடிப்போய் ரூம் கதவை சாத்திக்கொண்டாள்.

என கை வலித்து கொண்டே இருந்தது.

கொஞ்ச நேரத்தில் மனைவி கதவை திறந்ததும் சட்டையை போட்டுக்கொண்டு வெளியே சென்று விட்டேன்.

நான் படித்த புத்தகங்களும், கருத்துக்களும் என்னை சுற்றி சுற்றி ஆடின பாடின.

இதோ நான் அடித்து விட்டேன்.

வலிமையான என் உடலால் வலிமை குறைந்த ஒரு உடலை காயப்படுத்திவிட்டேன். மனதையும்.

உடல் அரசியல்.

எந்த காரணமும் சொல்ல முடியாத தவறை செய்து விட்டேன்.

ஒருமணி நேரம் முடிந்து வீட்டிற்கு வரும் போது சோற்றை போட்டு காத்திருந்தாள் மனைவி.

என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.இப்படித்தான் நான் மனைவியை அடித்தேன்.

சரி தவறை உணர்ந்துவிட்டீர்கள்.இனிமேலும் மனைவியை அடிப்பீர்களா?

அடிப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

எப்படி சொல்கிறீர்கள்?

தெரியவில்லை. ஆனால் அடிப்பேன்.

வேறு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஆம்! மனைவியை அடித்த அன்று இரவு அவளை உறவுக்கு அழைத்தேன்.

முதலில் கோபத்தில் மறுத்தவள் பின் ஒப்புக்கொண்டார்.

ஒரு உடலுறவு எப்போது நடக்கும்.

அளவிற்கு அதிகமான காதலினால், அல்லது காமத்தினால், அல்லது இரண்டும் கலந்ததினால்.

அல்லது பணத்திற்காக.

ஆனால் எங்களுக்குள் நடந்தது ஒரு சடங்காக.

அது நடக்கவில்லை என்றால் இனி எப்போதுமே வாழ்க்கையில் சேர மாட்டோம் என்பது மாதிரியான பயம் எங்கள் ஆழ்மனதில் இருந்தது.

நீ இப்போது எனக்கு பிடித்தமானவனாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உன்னை நான் இழக்கவிரும்பவில்லை என்று பரஸ்பரம் உறுதிபடுத்துவதற்காக உறவு கொள்ள விரும்பினோம் போல.

அதற்காக கலந்துவிட்டோம்.

அதுமாதிரியான மோசமான சூழ்நிலை யாருக்குமே வரக்கூடாது என்றுதான் சொல்லுவேன்.

கலந்து முடிந்ததும், அடுத்த ஐந்து நிமிடத்தில் மனைவி கேவி கேவி அழுதாள்.

அந்த அழுகையை கேட்டு பைத்தியமானேன்.

எங்காவது ஒடி போய்விடலாமா அல்லது செத்து விடலாமா என்று தோண்றியது உண்மை.

இப்போது சொல்லும் போதே பைத்தியம் பிடிக்கும் போல் இருக்கிறது.

முடித்துக்கொள்வோம் நம் கேள்வி பதில் செக்ஷனை.

4 comments:

 1. நீ இப்போது எனக்கு பிடித்தமானவனாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உன்னை நான் இழக்கவிரும்பவில்லை என்று பரஸ்பரம் உறுதிபடுத்துவதற்காக உறவு கொள்ள விரும்பினோம் போல.

  ReplyDelete
 2. வலிமையான என் உடலால் வலிமை குறைந்த ஒரு உடலை காயப்படுத்திவிட்டேன். மனதையும்.

  ReplyDelete
 3. அருமை..மிக அருமை..

  ReplyDelete
 4. ரொம்ப நெகிழ்ச்சி யா இருக்கு விஜய்.... அருமை......

  ReplyDelete