Wednesday, 12 December 2012

நம் ரசனையை யார்தான் தீர்மானிக்கிறார்கள்.

ஐந்தாம் வகுப்பு முழுவருட லீவில் நானும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வீட்டில் யாருமில்லை.

இரவு எட்டரை மணி.”எட்டர மணிக்கு நாகர்கோவில் ரேடியோ ஸ்டேசன்ல பாட்டு போடுவானே.ரேடியோவை எடுத்துட்டு வாப்பா” என்றார் அப்பா.

ரேடியோ கம் டேப் ரெக்கார்டரை எடுத்து வந்தேன்.

ஸ்டேசனை டியூன் செய்தால் அன்று பழைய பாட்டு.

பழைய பாட்டா என்று சலித்து ஒடப்போன என்னை பிடித்து கட்டிலில் உட்கார வைத்து “அப்பாக்காக கேளேன்” என்று உட்கார வைத்துவிட்டார்.

முதல் பாட்டு “தங்கத்திலே ஒரு குறையென்றாலும் தரத்தினில் குறைவதுண்டோ” என்ற பாட்டு.

பொறுமையாய் கேட்க ஏதோ ஈர்த்து.

அடுத்த பாட்டு “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது”.

அடுத்த பாட்டு “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” அந்த பாசமலர் பாட்டில்தான் வாழ்க்கையில் பழைய பாட்டை திரும்பி பார்க்கிறேன்.

பத்து வயதான எனக்கு பழைய பாட்டின் மேல் ஆசை வருகிறது.அதன் இனிமையை பிடித்து விட்டேன்.

அன்று அப்பா என்னை இழுத்து பிடித்து கேட்க வைக்காவிட்டால் எந்த வயதில் பழைய பாட்டு பிடித்திருக்கும் என்று சொல்ல முடியாது.

நம் ரசனையை தீர்மானிப்பது யார்?

கண்டிப்பாக நாம் மட்டும் அல்ல.

பெற்றோர்கள்,ஆசியர்கள்,நண்பர்கள்,உணர்வுகள்,உடல்நிலை இன்னும் பல. (காமம் முக்கிய பங்கு வகிக்கும் ரசனையில்)

ஒரு தடவை 23 சி பஸ்ஸில் பெசண்ட் நகரில் இருந்து புரசைவாக்கம் போகும் போது, பக்கத்து சீட்டில் ஒருவர் நண்பரானார்.

அவரும் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உடையவர்.

அவர் நந்தனத்தில் இறங்கும் முன் திரும்ப திரும்ப சொன்னார்.

என்ன சொன்னார்

” பாஸ் ‘வால்காவில் இருந்து கங்கா” வரை புக்க கண்டிப்பா படிங்க.அது ஒரு அற்புதமான புத்தகம்.

இறங்க போகும் போது கூட சொன்னார்.

மனதில் பதிந்தது.

அதே பஸ் ஹிக்கின் பாதம்ஸ் பக்கத்தில் நிற்கும் போது இறங்கி “வால்கா முதல் கங்கா வரை” புத்தகத்தை வாங்கி படித்தேன்.

வாழ்க்கையில் என் சிந்ததனை ஓட்டத்தையே மாற்றி போட்ட புத்தகம் அது.

நம் இதிகாசங்கள் புனிதங்கள் எல்லாவற்றையும் இகழாமல் ஆனால் தர்க்க பூர்வமாக ஆராயும் நூல் அது.

நினைத்து பாருங்கள்.

அந்த புத்தகம் என் கையில் இருப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் வரை அது பற்றி என்னவென்றே எனக்கு தெரியாது.

யாரோ ஒருவர் என் பக்கத்தில் அமர்ந்து சொல்கிறார்.

நான் வாங்குகிறேன்.அந்த புத்தகம் என்னுடைய மொத்த யோசித்தலையே தடம் திருப்புகிறது.

நம் ரசனையை தீர்மானிப்பது யார்?

டில்லி 6 வரும் “மோலா மோலா” பாட்டை திரும்ப திரும்ப கேட்கிறேன். காலை நடை பயிலும் போது கூட கேட்கிறேன் என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதியிருப்பதை படித்து, உடனே டவுன்லோடு செய்த்து கேட்டால் அற்புதமான பாடல்.

சுகம்.

இப்போதும் அடிக்கடி கேட்கும் அந்த பாடல்.இது போன்று சாரு எவ்வளவு பாடல்களை சொல்லி தந்திருப்பார்.

நான்சி ஆஜ்ரமை அவர் சொல்லித்தானே எல்லோரும் கேட்டோம்.

கலையும் இலக்கியமும் ஆர்வமாய் இருந்தால் எங்கிருந்து வரும். எப்படி நம்மை தாக்கும் என்று சொல்ல முடியாது.நாம் விழிப்போடு இருப்பதே முக்கியம்.

பிளஸ் ஒன் முழுவருட லீவில் திருச்செந்தூர் செல்லும் போது, ஒரு அழகிய இரவில் மொட்டை மாடியில் அண்ணன் அக்கா மாமன் மகன் மகள்கள் எல்லோரும் சேர்ந்து சீட்டு விளையாடுகிறார்கள்.

எனக்கு சீட்டு விளையாடத்தெரியாது( பூராணை பார்த்தால் வரும் பயம் அருவருப்பு சீட்டு விளையாட்டை பார்த்தாலும் எனக்கு வருகிறது).

அதனால் மெல்ல அவர்களிடம் இருந்து நழுவி என் மாமாவின் அறைக்கு வருகிறேன்.

அவர் ரூம் முழுவதும் புத்தகமாக இருக்கும்.பெரிய வாசிப்பாளர்.

அப்படியே ஒரு கண்களால் ஒரு ரவுண்ட் அடிக்கிறேன்.

பாலகுமாரன் நாவல் எல்லாம் பலமுறை படித்துவிட்டேன்.

அப்போது கொஞ்சம் பழைய புத்தகமாய் ஒரு புத்தகம் என்னை ஈர்க்கிறது.எடுத்து பார்க்கிறேன்.

“மரப்பசு” நாவல் ஜானகிராமன் எழுதியது.

முதலில் என்னால் படிக்கவே முடிய வில்லை.

பின் கொஞ்சம் கொஞ்சமாக படித்து அடுத்த மூன்று மாததிற்கு மரப்பசு மட்டுமே படித்தேன்.

தாகத்தோடு இருந்தால் நீரை எங்கிருந்தாவது கடவுள் அனுப்புகிறாரோ என்னவோ?

முதன் முதலில் என்னை உலக திரைப்படம் பார்க்க வைத்த பரிசல் சிவ செந்தில்நாதனை எப்படி பார்த்தேன் என்று சொல்கிறேன்.

அன்று காலையில் காலச்சுவடு படித்து கொண்டிருந்தேன்.

அதில் ஒரு கட்டம் கட்டி இடலோ கல்வினோ சிறுகதைகள் என்று பரிசல் பதிப்பகம் சார்பாக விளம்பரம் கொடுத்திருந்தது.

ஆபீஸ் போகும் வழியில் ஏதோ என்னை ஊந்த அப்படியே பரிசல் விலாசிற்கு சென்று விட்டேன்.

அது பரிசல் சிவ செந்தில்நாதனுடைய வீடு.

புத்தக்ங்கள் நிறைய இருந்தன.

இடாலோ கல்வினோ புத்தகத்தை வாங்கிவிட்டு பரிசல் சிவ செந்தில்நாதனிடம் பவ்யமாக பேசிக்கொண்டிருந்தேன்.

எனக்கு கொஞ்சம் இலக்கியம் தெரிந்திருக்கிறது என்று நினைத்தாரோ என்னவோ என்னை மறுநாள் “சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்” படம் போடுகிறோம்.வந்து பாருங்கள் என்று அழைத்தார்.

அந்த படம்தான் நான் பார்த்த முதல் உலகத்திரைப்படம்.

எது என்னை ஆபீஸ் போகாமல் பரிசல் சிவ செந்தில்நாதனை பார்க்க வைத்தது.

எது மறுநாளே உலகத்திரைப்படம் பற்றிய அறிவை கொடுத்தது.அனுபவத்தை கொடுத்தது.ஆச்சர்யம்தான்.

நம் ரசனையை யார் தீர்மானிக்கிறார்கள்.

வடபழனி பழைய புத்தககடையில் எதேட்ச்சையாக என் கண்ணில் பட்டவர் “ மார்வின் ஹாரிஸ்” என்ற மானுடவியலாலர் அவருடைய “கேனிபால்ஸ் அண்டு கிங்ஸ்” என்ற புத்தகம் மூலமாக.அதை வாங்குவதா வேண்டாமா என்று குழம்பினேன்.

அந்த கேனிபால்ஸ் ( நரமாமிசம் சாப்பிடுபவர்கள்) என்ற வார்த்தை ஈர்த்ததால் வாங்கினேன்.

அதிலிருந்து இரண்டு வருடத்தில் அவரின் பெரும்பான்மையான புத்தகத்தை படித்து விட்டேன்.

மார்வின் ஹாரிஸ் மூலம் டெஸ்மொண்ட் மோரிஸ் படித்தேன்.

மானுடவியல் மேல் காதல் உண்டாயிற்று. தேடல் வந்தாயிற்று.

என்னுடைய தோழி பதினாறு வருடமாக அரசுதுறையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டு வருடமாக வேலைக்கு போகமுடியவில்லை.

படுத்த படுக்கைதான் பெரும்பான்மையான நேரம்.

வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

மன அழுத்தம்.

கடவுளுக்கு கருணையின் அர்த்தம் தெரியாதோ என்று கடவுளையே சந்தேகிக்க தொடங்கினார் தோழி.

ஒரு நாள் தோழியின் பிள்ளைகள் ஒவியம் வரைந்து கொண்டிருக்க, தோழியும் நாமும் சும்மா டிரை பண்ணலாம் என்று வரைந்து பார்க்க, ஒவியம் அழகாக வந்திருக்கிறது.

அதைவிட அதை வரையும் போது உடல் உயிர் எல்லாம் அதுனுள்ளே கரைந்து போவதை உணர்கிறார்.

முறைப்படி ஒவியம் பயின்று ,அற்புதமான ஒவியர் ஆகிறார்.

இவ்வளவு வருடமும் அவருடைய ஓவிய ரசனை எங்கிருந்தது.

எப்படி அவர் ரசனையை முடிவாக கண்டுபிடிக்கிறார்.

நம் ரசனையை யார்தான் தீர்மானிக்கிறார்கள்.

சிலிர்த்துதான் போகிறது இது பற்றி சிந்தித்தால்.

No comments:

Post a Comment