Wednesday, 12 December 2012

அவரவர் அப்பா அவரவருக்கு ஒரு நாவல்

இன்று காலையில் கட்டிலில் நான் படுத்திருக்க, மனைவி அருகில் இருக்க மீரா வர்க்ஷினி துள்ளி துள்ளி விளையாடி தனக்கு தெரிந்த ரைம்ஸ், கதை இன்னும் பலவற்றை அடித்து விட்டு கொண்டிருக்க அதை ஊக்கபடுத்தி கேட்டு கொண்டிருந்தோம். 

என் கைகளை தலையில் வைத்து நான் படுத்திருந்த போஸ் திடீரென்று ஏதோ ஒன்றை சொல்லிற்று.

ஆமா இல்ல. அப்பா மாதிரியே படுத்திருக்கிறோம். 

அப்பாவையே இமிட்டேட் செய்திருக்கிறோம்.

இது பெரிய கண்டுபிடி
ப்பும் இல்லை.

ஆனா எனக்கு இன்னைக்குதான் இதை உணர முடிந்தது.

அப்பா எதைத்தான் சொல்லிதரவில்லை.

அப்பாவிடம் கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் வரும்.

மூணாங்கிளாஸ் படிக்கும் போது பஞ்சதந்திர கதைகள் படித்து “கொங்கை” என்றால் என்ன ? என்று கேட்டேன். கொங்கை என்றால் பெண்களின் மார்பகம் என்று பொருள்.

அந்த ஒரு கேள்விக்குதான் அப்பா பதில் சொல்லவில்லை.அதை பிற்பாடு நான் தெரிந்து கொண்டது தனி கதை.

கணிதம் சொல்லிதந்தார். விஞ்ஞானம் சொல்லித்தந்தார்.

எரிமலை பற்றி பல தகவல்கள் சொல்வார். நட்சத்திரத்தை பார்த்து பல விஞ்ஞான கதைகள்.

மில்டன் எப்படி தன் ”பாரடைஸ் லாஸ்ட்” எழுதினார்.

ஆஸ்கார் வைல்ட்க்கும் டிக்கிசினரி ஜான்சனுக்கும் உள்ள நட்பு,

பைரனின் “ஒல்டு புல்” இப்படி பல.

மகாபாரதம் ராமயாணத்தை அப்பா ராகம் போட்டு படிக்க கேட்க அருமையானதாக இருக்கும். எல்லா கிளைக்கதைகளையும் சொல்வார்.

எல்லாம் அந்த கட்டிலில் படுத்த படியே. நாங்கள் சுத்தி உட்கார்ந்திருப்போம்.

அந்த தருணம் எங்களுகெல்லாம் சொர்க்கம்.

”பீக்ஷ்ம சபதம்” அப்பாவுக்கு பிடித்த ஒன்று.

அஸ்ட வசுக்கள்’ காமதேனுவை திருடியதால் வந்த சாபத்தினால்தான் பூலோகத்தில் சந்துனு கங்கைக்கு மகனாக பிறக்கிறார்கள்.

கங்கையால் கொல்லபடுகிறார்கள். அதில் கடைசியாக பிழைத்ததே ’பீக்ஷ்மர்’ என்று அப்பா சொல்லும்போது செம சூப்பரா இருக்கும்.

அப்பா சிறுவயதிலேயே “ல” பதம் போட்டு வளர்ந்தவர். அதாவது ‘எல, வால, அத எடுல போன்று சொல்வது. ஆனால் எங்களை எல்லோரையும் “ட” பதத்திலேயே அழைப்பார். ”அத எடுடா”. “ஏண்டா” இப்படி பண்ற? இது மாதிரியான அழைப்புகள்.

இதன் பின்னாடி இருக்கும் சூட்சமம் எனக்கு புரிந்தே இருக்கிறது ரொம்ப யோசித்தால்.

இதனிடையில் அப்பாவின் வாழ்க்கை மிக கடினமானது.காலையில் ஆறுமணி ஏழுமணிக்கு கடை திறந்தால் நைட் மினிமம் பதினோரு மணி ஆகும்.

மளிகை கடை என்றால் தூசி,தும்மல் என்பது எல்லோரும் அறிந்ததே.

இதை எல்லாம் தாண்டி அப்பாவுக்கு உரையாடுதல் மேல் ஆர்வம் அதிகம்.

உரையாடுதலின் கண்ணியத்தை அப்பாவிடம் இருந்தே கற்றேன்.பிற்பாடு சுந்தர ராமசாமியிடமும் கற்றிருக்கிறேன் அவர் எழுத்தை படித்து.

’மாஜிக் தந்திரங்கள்’ என்றொரு புக் அப்பா வாங்கினார்.

அதை படித்து ஏதோ அட்டையெல்லாம் வாங்கி வந்து இரண்டு மூன்று மாஜிக்குகள் செய்தும் காட்டினார்.

எனக்கு எழுத்து கூட்டி படிக்கும் வழக்கம் வந்ததில் இருந்து அப்பா கடைவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது பேப்பரை எடுத்து தினமும் ஒரு பத்தி படிக்க சொல்வார். சத்தமாக. சதாம் ஹூசைன் ஜார்ஜ் புக்ஷ் எல்லாம் எனக்கு பழக்கமானது அப்படித்தான்.

சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்க பழக்கியது அப்பாவேதான்.

பீக்ஷ்மர் கதை துரோணர் கதை, ஈசாப் நீதிக்கதை என்று வீடு முழுவதும் புத்தகமாய் அதிரடிப்பார்.

பிற்பாடு என் வாசிப்பினால் அப்பாவை விட்டு விலக ஆரம்பித்தேன்.

பாலகுமாரனை நான் அதிகம் வாசிப்பது அப்பாவுக்கு பிடிக்கவில்லை.ஒக்ஷோ படிப்பதையும் திட்டுவார். அந்த “தாடிக்காரனுங்க” பின்னாடி போயிராதடா என்று கிண்டல் செய்வார்.

இதற்கிடையில் நான் வாசிப்பை தீவிரபடுத்தி இருந்தேன் “லெனின் வாழ்க்கை வரலாறு” ரஸ்யன் புக்ஸில் வரும் புரியவே புரியாத கம்யூனிஸ் புக்குகள். ( இப்போது எனக்கு புரிவதில்லை. வாத்தியார் வேணும்)

குடும்பத்தை பெருங்கஸ்டம் தாக்கி எல்லோரும் சென்னை வந்தோம்.

என்னிடம் உள்ள பைசாவில் சிறு சிறுக சேமித்து. நூற்றி என்பது ரூபாய் சேர்த்தேன்.

வீட்டில் தி.ஜானகிராமனின் “மோகமுள்” வாங்க போவதாய் அறிவித்தேன்.

எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி.

சாப்பாட்டு கஸ்டத்தில் இருந்தே ஒரு மாதம் முன் தான் மீண்டிருக்கோம்.

அண்ணன் பலமாய் திட்டினான். நான் அண்ணனிடம் சண்டை போட்டேன். “மோகமுள்” வாங்கத்தான் செய்வேன் என்றேன். பெரிய சண்டை ஆகிவிட்டது.

திடீரென்று அப்பா புகுந்து “இவ்வளவு சொன்ன பிறகும் நீ கேக்கலன்னா பிற்பாடு லைஃப்ல எந்த விசயத்திலும் அப்பா கிட்ட அலோசனை கேட்க கூடாது “ என்றார்
ஆவேசமாக.

நான் “கேட்கமாட்டேன்” என்று ஒத்தை வார்த்தையில் சொன்னேன்.

மனதளவில் படுகாயமடைந்து விட்டார்.

நான் வாழ்க்கையில் சொன்ன மிக அருவருப்பான வார்த்தை அதுதான்.

மறுநாளில் இருந்து நானும் அப்பாவும் பேசவில்லை.

இறுக்கமாய் இருந்தது வீடு.

இவ்வளவு நடந்தும் நான் “மோகமுள்” வாங்கினேன் (உலகமே அழிந்தால் எனக்கு என்ன?).

ஆனால் படிக்க முடியவில்லை.

அப்பாவின் அந்த சுருங்கின முகமே என்னை வருத்தியது.

இப்படியே மூன்று நாள் போனது.

நாலவது நாள் அப்பா தன் ஆஸ்தான கட்டிலில் படுத்து கொண்டு என்னை கூப்பிட்டார்.நான் தயங்கியே போனேன். “அந்த புக்க எடுத்துட்டு வாப்பா” என்றார்.

துள்ளி குதித்து எடுத்து வந்தேன்.

புக்கை கையால் நீவி கொண்டே ஜானகிராமன் பற்றி கேட்டார். நான் “மரப்பசு” பற்றி பத்து நிமிடம் சொன்னேன்.

ஆர்வமாய் கேட்டார்.

பின் மோகமுள் பத்தி கொஞ்சம் பேசி “நல்ல புக்குப்பா. படி “ என்று சிரித்தபடியே சொன்னதும் நிம்மதி வந்தது.

அதற்கப்புறம்தான் என்னால் மோகமுள்ளை படிக்க முடிந்தது.

அதன் பிறகு நான் எந்த புத்தகம் வாங்கினாலும் அப்பா எதுவும் சொல்வதில்லை.

இப்போதும் அந்த புக்கை பார்த்தால் அந்த நெகிழ்ச்சியான சம்பவம் நினைவுக்கு வரும்.

இன்று கட்டிலில் நான் படுத்து இருக்கும் போது அதே அப்பாவாய் நான் ஆகிவிட்ட உணர்வு.

அப்பா எனக்கு கொடுத்தவற்றில் பத்து சதவிகிதம் என் மகளுக்கு கொடுக்க முடியுமா என்று பெரிய சந்தேகம்தான்.

அப்பா மாதிரியான மேனரிசம் எனக்கு வந்தது பற்றி ஒருமாதிரியாய் இருந்தது.

சட்டென்று எழுந்து கண்ணாடியை பார்த்தேன்.

நல்லவேளை என்முகம்தான் இருந்தது. அப்பா முகம் அங்கில்லை.

No comments:

Post a Comment