Wednesday 12 December 2012

பெரிய மகிழ்ச்சியும் கவனமும்...

அன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்.அப்பா “ஐயர் தி கிரேட்” என்ற மலையாளபடம் கூட்டி போவதாய் சொல்லியிருந்தார்.

இரவு கடை அடைத்ததும் செகண்ட் க்ஷோதான் போவோம்.

காலையில் இருந்தே சினிமா பார்க்கும் ஆர்வத்தில் ஜாலியாக இருந்தேன்.

கடை அடைக்கும் நேரமும் வந்தது. 

கடைக்கு க்ஷட்டர் எல்லாம் கிடையாது.

பலகைதான்.ஒவ்வொரு பலகையாய் எடுத்து வைத்து கையால் தள்ள வேண்டும்.

பலகை போடும் நேரமெல்லாம் அப்பா என்னை பக்கத்தில் விட மாட்டார்.தள்ளிப்போ என்பார்.

அன்று அப்பாவின் நண்பர் வந்திருந்ததால் பேசிக்கொண்டே பலகை போட்டார் பாருங்கள். நான் என் அழகிய நான்கு தளிர் விரல்களை பலகை வரும் இடத்தில் வைத்திருந்தேன் பாருங்கள்.

நான்கும் பலகைகளுக்கு இடையில் சிக்கியது.

வலியால் துடித்து அழுகிறேன்.

அப்பா சட்டென்றும் பலகை எடுத்து கைகளை பார்த்தால் நான்கு விரல்களும் லட்சுமி வெடி மாதிரி வீங்கியிருந்தது.

படம் பார்க்க வேண்டாம் என்பதையும் ஏற்கவில்லை.
பார்த்தே ஆக வேண்டும் என்றேன்.

ஆனால் அன்று சினிமா பார்க்கவே முடியவில்லை.வலியால் அழுதுகொண்டே இருந்தேன்.

பாயிண்ட் என்னனென்னா பெரிய ஜாலிகளை சின்ன சின்ன கவனமின்மையால் இழந்து போவதின் தன்மை.

அம்மா தன் சொந்த தங்கை கல்யாணத்திற்கு நிறைய பிளான் செய்து விட்டு, கல்யாணத்திற்கு முந்தின நாள் பெரிய அரிசி அளக்கும் உழக்கை காலில் போட்டுவிட்டாராம்.

அப்புறம் கல்யாண மகிழ்ச்சியே போய்விட்டதாம்.

லோயர் மிடில் கிளாஸ் ஆசிரியை ஒருவர் ஸ்கூலில் கிறிஸ்த்துமஸ் கொண்டாட்டங்களுக்காக திட்டமிட்டு காசு சேர்த்து ஒரு பட்டுபுடவை வாங்குகிறார்.

கிறிஸ்த்துமஸ் அலங்காரங்கத்திற்காக கலர் பேப்பர்களை மடியில் வைத்து வெட்டும் போது பட்டு புடவையையும் சேர்த்து வெட்டி விடுகிறார்.

அவ்வளவுதான் பெரிய மகிழ்ச்சி சிறிய கவனமின்மையால் காணாமல் போகிறது.

கல்யாணம் ஆன புதிதில் ஹனிமூன் ஏற்பாடுகளில் ரொம்ப ஆர்வமாகி மூன்று நாட்களாக சுத்தமா தூங்கவே இல்லை.

அம்மா எச்சரித்து கொண்டே இருந்தார்”விஜய் நீ சரியா தூங்கலன்னா உனக்கு காய்ச்சல் வரும்” என்று.

அது காதில் ஏறவே இல்லை. சரியாக கொடைக்கானலில் கால் வைத்த உடன் காய்ச்சலும் சளியும் பிடித்து கொண்டது.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சந்திரசேகரும் மாதுரியும் அன்னியோன்யமாக இருப்பதற்கு ஹோட்டலில் ரூம் எடுப்பார்கள். சந்திரசேகருக்கு அம்மை போட்டு விடுமே அது போல ஆகிவிட்டது என் கதை.

ஹனிமூன் போய்விட்டு ,முக்கால் வாசி நேரம் ரூமில் சுருண்டு படுத்து வாந்தி எடுத்து கிடந்தேன்.

மனைவிதான் பாவம். சின்ன கவனகுறைவு மகிழ்ச்சியை கெடுத்தே விடுகிறது.

என்னுடன் வேலை பார்ப்பவர் குடகு மலையை ( கூர்க்) பார்க்க ஆசையாய் இருந்தார்.

கம்பெனியில் எல்லோரும் மைசூர் வரை டிரயின் புக் செய்திருந்தோம்.

இவர் டிரயினில் போக போல அப்படி என்ஜாய் பண்ணனும் இப்படி என்ஜாய் பண்ணனும் என்று சொல்லி கொண்டே வந்தார்.

கடைசியில் இரவு தூங்கும்போது டிரயின் ஜன்னல் க்ஷட்டரை மூடத்தெரியாமல் மூட முயற்சி செய்து அது நேரே வந்து அவர் பெருவிரலை பதம் பார்த்தது.

கண்ணீர் விட்டு அழுதார்.

அதோடு டிரிப் முடியும் வரை பெருவிரலை பிடித்து கொண்டே இருந்தார்.

கவனம் பெரிய ஜாலியை இன்னும் ஜாலியாக ஆக்குகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா டூர் போனால் அதை திருவிழா மாதிரி கொண்டாடுவேன்.

அதிகாலையில் எழுந்து டீ போட்டு குடித்து கொண்டு காத்திருப்பேன் இன்பத்திற்காக.

அன்று ஏதோ ஒண்டே மேட்சுக்காக காத்திருந்தேன்.

அதில் பாருங்கள் டாஸ் போடும் போது ஒண்ணுக்கு வந்தது.

சீக்கிரம் போய்விட்டு யார் பேட்டிங் என்று பார்க்கும் ஆர்வத்தில் பாத்ரூமில் துள்ளி குதித்து இறங்கினேனா.

அப்படியே கால் சறுக்கி அங்குள்ள சிமெண்ட் மேடையில் என் இடது காதோடு தலை “ணங்” என்று அடித்தது.

அப்படியே படுத்திருந்தேன்.கத்த முடியாது.

கத்தினால் தூங்கிகொண்டிருந்த மனைவி அய்யோ அம்மா என்று பதறுவார்.

விடியல் ஐந்து மணிக்கு அது ஒவர் ஸீனாகி விடும்.

அதனால் பாத்ரூம் தரையில் அப்படியே மல்லாகக்க ஐந்து நிமிடம் படுத்திருந்தேன் அந்த தண்ணீருக்குள்.

அம்மா அம்மா என்று அம்மாவை கூப்பிட்டு மெலிதாய் அழுதேன்.

அப்புறம் சிறு குழந்தை மாதிரி தவழ்ந்து தவழ்ந்து வெளியே வந்து தட்டு தடுமாறி தரையில் படுத்து விட்டேன்.

கிரிக்கெட் பார்க்கவா முடியும்.

கண்டிப்பா சின்ன விசயங்கள் மேல கவனமாத்தான் இருக்கனும் போல இருக்கு.

சிறுவயதில் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் பார்க்க எங்கள் குடும்பம், அத்தை ( அப்பாவின் தங்கை குடும்பம்) எல்லோரும் சேர்ந்து திருச்செந்தூருக்கு போயிருந்தோம்.

கூட்டமென்றால் ஆவேசமான கூட்டம்.மிகமகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தோம்.

திடீரென்று அத்தை தன் பையனை ( என் வயதிருக்கும்) காணவில்லை என்றார்.

பதட்டம் வந்தது.

அப்பா சித்தப்பா எல்லோரும் தேடினார்கள்.கிடைக்கவில்லை.அத்தை என் பையனை கடல் தூக்கி போய்விட்டது என்று கடலை நோக்கி மணலை அள்ளி போட்டு பைத்தியம் போல் அழுதார்.

உடம்பெல்லாம் நடுங்கியது.

கடைசியில் பையன் ஒரு பலூன்காரன் பின்னாடி பலூனை பார்த்து கொண்டிருந்திருக்கிறான்.

அத்தை கவனக்குறைவாக பக்தி மோகத்தில் அவனை கவனிக்காமல் கூட்டத்தில் விட்டிருக்கிறார்.

அவன் கிடைத்ததும் மகிழ்ச்சிதான்.

ஆனால் பழைய உற்சாகம் இல்லை.

அப்பா சோர்ந்து விட்டார் மனதளவில்.

சீக்கிரம் சூரசம்ஹார விழாவில் இருந்து வெளியே வந்து நாகர்கோவிலுக்கு பஸ் ஏறினோம்.

சின்ன சின்ன கவனம், மகிழ்ச்சியான பொழுதுகளை இன்னும் மகிழ்ச்சியாக்குகிறது.

No comments:

Post a Comment