நானும் இலங்காமணி சித்தப்பாவும் ராமசாமி தாத்தாவும் வடசேரி பஸ்ஸடாண்டில் நின்றிருந்தோம்.
என்னை தாத்தாவின் கைகளை உறுதியாய் பற்றி கொள்ள செய்து விட்டு இலங்காமணி சித்தப்பா திருசெந்தூர் பஸ் நிலவரங்களை பார்க்க பஸ்ஸடாண்டில் அங்கும் இங்கும் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்தார்.
நாகர்கோவில் திருசெந்தூர் பஸ்கள் எப்போதும் கூட்டமாய்தான் இருக்கும். அது தோவாளை வள்ளியூர் சாத்தான்குளம் வழியாக போவதால் அப்படி என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.
ராமசாமி தாத்தாவால் நிற்க முடியவில்லை.அவர் கால்கள் ஆடிக்கொண்டே இருக்கிறது. தலையும் தோளும் தாளகதியில்.
ராமசாமி தாத்தா அப்பாவின் பெரியப்பா.
சிறுவயதிலேயே கொழும்புவிற்கு பக்கத்தில் உள்ள ஹட்டன் என்னும் மலைவாழ் இடத்திற்கு போய் மளிகைகடையில் பொட்டனம் போடும் பையனாக வேலைக்கு சேர்ந்து, அங்கேயே உழைத்து கிடந்தவர்.
அவரின் உழைப்பை கண்டு ,பிடித்து போன வெள்ளைக்காரத்துரை தாத்தாவுக்கு எஸ்டேட் முழுவதும் அரிசி விற்பனை செய்யும் “ரைஸ் கீப்பர்” பதவி கொடுக்க ராமசாமி தாத்தாவிற்கு ஏறுமுகம்தான்.
ஆறு மாததிற்கு ஒரு முறை சொந்த ஊர் வந்து, இரண்டு மாதம் தங்கி சொத்து சுகம் எல்லாம் வாங்கிப்போட்டு தங்கத்தால் பாட்டிக்கு நகைகளை இழைத்து விட்டு போவார்.
அவர் வரும் போது பாட்டி கர்ப்பமாக வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டிருக்காமல் சும்மா இருந்தால் தயங்காமல் கர்ப்பமாக்கி விட்டு போவார்.
கொழும்பில் சொந்த வீடு வைத்திருந்தாராம்.
கார் கூட உண்டாம்.அதன் மேல் ஜம்மென்று ராமசாமி தாத்தா அமர்ந்திருக்கும் காட்சி, ஏதோ ராஜா தேரில் இருப்பது போல இருக்கும்.
ஊரில் முதன்முதலில் கிராம்போனும் ஆர்மேனியப்பெட்டியும் வைத்திருந்தவர் என்ற பெருமையும் ராமசாமி தாத்தாவுக்குதான்.
அவர் ஆர்மேனியப்பெட்டியை எடுத்து ”சாலமன் கதையை” பாடினால் ஊரில் எல்லோரும் கூடி கேட்டு களிப்பார்களாம்.
பிறவியால் இந்துவானாலும், கிறிஸ்த்துவத்திற்கு மாறவில்லை என்றாலும், கிறிஸ்த்துவம் மேல் அபரிதமான ஈடுபாடு உடையவர்தான் அவர்.
1950 களில் சிலோனில் வந்தேறிகளுக்கு மூன்று நாட்கள் நோட்டீஸ் கொடுக்கபட்டதாம்.
அதாவது அவர்கள் எல்லோரும் மூன்று நாட்களில் சொத்து சுகங்களை வந்த விலைக்கு விற்று இந்தியா போய்விட வேண்டுமாம்.
ராமசாமி தாத்தா தன் கார் வீடு எல்லாவற்றையும் ஊர் வந்து சேரும் போது “நம்ம மொழி பேசுறவன்களே கள்ளத்தோணின்னு நம்மள சொல்றானுவ” என்று சலித்து கொண்டாராம்.
கொழும்பில் ராமசாமி தாத்தாவுடன் பணம் சம்பாதித்த வியாபாரிகள் தமிழ்நாட்டில் மூன்று இடத்திற்கு வியாபாரம் வைக்க போனார்களாம். திருச்சி, கோயமுத்தூர், அப்புறம் சென்னை.
ராமசாமி தாத்தாவுக்கு எங்கேயும் போக விருப்பமில்லாமல் நாகர்கோவிலில் கடை வைத்தாராம்.
நாகர்கோவிலில் பெரிய மளிகைக்கடை போடும்போது” பாண்டிக்காரன் எப்படி எங்க இடத்தில கடை போடலாம்”ன்னு நாகர்கோவில்காரகள் சண்டைக்கு வரும் போது தாத்தா தன் தைரியத்தால் எல்லோரையும் அடக்கினாராம்.
அடுத்த ஐந்தாவது வருடத்தில் வியாபாரிகள் சங்கத்தலைவரும் ஆனாராம். ராமசாமி பாண்டிகாரன்களிலேயே கொஞ்சம் நல்லவ்ரு “ என்று பேசிக்கொண்டார்களாம்.
தாத்திவிற்கு பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை இதோ அழுக்கு வேஸ்டி கட்டி கொண்டு திருச்செந்தூர் பஸ்ஸுக்கு அலைந்து கொண்டிருக்கிறாரே அந்த இலங்காமணி சித்தப்பா தான்.
தன் ஐந்து தங்கைகளுக்கும் கல்யாணம் முடிக்க, ராமசாமி தாத்தாவிற்கும் , ஊரில் உள்ள இன்னொரு பெரிய மனிதருக்கும் சொத்து பிரச்சனை வர கோர்ட்டு கேஸுன்று எல்லா பணத்தையும் இழந்தாராம்.
இலங்காமணி சித்தப்பாவின் கடை சிறிதாக மாறி, இப்போது சிறிய பெட்டிக்கடை போன்ற மளிகைகடையாகவும் ஆகிவிட்டது.
ராம்சாமி தாத்தாவை வைத்து கவனிக்க இலங்காமணி சித்தப்பாவினால் முடியவில்லை.சொந்த குடும்பத்தை வைத்து காப்பாற்ற முடியாத சித்தப்பாவுக்கு தன் எண்பது வயது அப்பா பெரிய பாரமாய் விளங்கினார்.
சித்தப்பா என் அப்பாவிடம் விசயத்தை சொல்ல, அப்பா “ பெரியப்பாவ ஊர்ல போய் விட்டுட்டு வாயேன். ஊர்லதான் எங்க அம்மா அப்பா இருக்காவல்லா” என்றார்.
அப்பாவால் யோசனைதான் சொல்ல முடிந்ததே தவிர இலங்காமணி சித்தப்பாவுக்கு பணம் கொடுக்க முடியவில்லை.
அப்பா என்னை அழைத்து “சித்தப்பா கூட ஊரு வரைக்கு போயிட்டு வந்துரு.தனியா தாத்தாவ அவன் கூட்டி போக கஸ்டப்படுறான்” என்றார்.
கொஞ்சம் கூட்டமாக பஸ் உள்ளே வந்தது. எல்லோரும் உள்ளே வரும்போதே சீட்டை பிடித்து விட்டார்கள்.சித்தப்பாவால் முடியவில்லை.
தடுமாறி தரையில் விழுந்து விட்டார்.சுதாரித்து எழுந்தவர் எங்கள் பக்கத்தில் வந்து “வாங்க போகலாம்” என்றார்.
ராமசாமி தாத்தா தத்தி தத்தி என் கையை பிடித்து கொண்டு நடந்து வந்தார்.
பஸ்ஸில் ஏறினோம்.
எல்லா சீட்களிலும் மனிதர்கள்.சித்தப்பா தயக்கத்தோடு எல்லோரையும் ஒருமுறை பார்த்தார்.ராமசாமி தாத்தாவை தன் பக்கத்தில் நிற்க வைத்துகொண்டார்.
பின் கையெடுத்து கும்பிட்டபடியே பேசத்தொடங்கினார்.
எனக்கோ வெட்கமாய் இருந்தது.
பேசினார்.
”இவரு வயசானவரு. சாத்தான்குளம் போகனும். என் அப்பாதான்.எனக்கு கார் பிடிச்சி கூட்டிட்டு போக வசதியில்லை.அதான். யாராவது சீட் கொடுத்தீங்கன்னா வசதியாயிருக்கும்” என்றார்.
அப்போது சித்தப்பாவின் குரலை பார்க்கவேண்டுமே.
தொடர்ந்து ஒரு மணி நேரம் அழுது பின் பேசினால் குரல் எப்படி நடுங்கும்.
எப்படி பதுங்கும்.
அதுமாதிரி இருந்தது.
ராமசாமி தாத்தாவுக்கும் கொஞ்சம் புரிந்திருக்க வேண்டும் குனிந்த தலை நிமிரவே இல்லை.
சித்தப்பாவின் குரல் கேட்டு ஒரே ஒருவரின் உருவம் அசைந்தது. அவர் தாத்தாவுக்கு இடம் கொடுத்தார்.
சித்தப்பா அவர் கையை பிடித்து நன்றி சொன்னார்.பெரிய பிரச்சனைக்கு விடை கிடைத்தது.
பஸ் கிளம்பி தோவாளை கடந்து வள்ளியூர் வந்தது.சித்தப்பா வள்ளியூர் முறுக்கு வாங்கித்தந்தார்.
ராமசாமி தாத்தா தூங்கிகொண்டிருந்தார்.
வள்ளியூர் தாண்டியதும் தாத்தா சித்தப்பாவை கூப்பிட்டு ஏதோ சொன்னார்.
சித்தப்பா எல்லாம் என் தலையெழுத்து என்று தன் தலையில் அடித்தார்.
கண்டெக்டரிடம் ஏதோ கெஞ்சினார். கண்டெக்டர் கறாராக இறக்கி விட்டார்.
ராமசாமி தாத்தாவை கூட்டி உடைமரத்துக்கு பின்னால் விட்டோம்.
உட்கார்ந்து வயிற்றை சுத்தப்படுத்தினார் தாத்தா.
நான் வாட்டர் பாட்டிலில் ஒரு பனைஒலை குடிசை வீட்டில் தண்ணீர் வாங்கி வந்து தாத்தாவுக்கு ஊற்றினேன்.
தாத்தா கழுவினார்.
மறுபடி நான் இலங்காமணி சித்தப்பா, மற்றும் ராமசாமி தாத்தா மூன்று பேரும் வேகமாய் வரும் பஸ்களை கைக்காட்டி நிறுத்துவதற்காக காத்திருந்தோம்.
தலைக்கு மேல் அடித்த சுள் வெயில், கால்களுக்குஅடியில் கிடந்த சரள்கற்கள் மணலை வறுத்தெடுத்தது, நடுவில் நின்றிருந்த எங்களையும் சேர்த்து.
No comments:
Post a Comment