Thursday, 16 March 2017

எலுமிச்சை ஜூஸும் ஐந்து ரூபாயும்...

காய்ச்சல் அடிக்கிறதா இல்லையா என்று குழப்பும் காய்ச்சல் ஒன்று எனக்கு வரும்.
வழக்கமாக இந்த குளிர்(?) ஸீசனில் இருந்து வெயிலுக்கு மாறும் அந்த இடைப்பட்ட காலத்தில் அப்படி வரும் என்று நினைத்து வைத்திருக்கிறேன்.
வெளியே தொட்டுப் பார்த்தால் காய்ச்சல் இருக்காது. ஆனால் உள்ளுக்குள் வசதியில்லாமல் இருக்கும். இரவு அப்படி காய்ச்சல் வரும்போது தூக்கம் வராது.
உருண்டு கொண்டே இருப்பேன். எழுந்து ஒரு குரோசின் போட்டால் வேர்த்து நன்றாக தூக்கம் வரும்.
அப்படித்தான் அன்றொருநாள் ‘கனவு வாரியம்’ திரைப்படம் பார்ப்பதற்காக மனைவியிடம் சொல்லிவிட்டு மாயாஜாலை நோக்கி பயணம் செய்தேன்.
பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கும் போது ஒரு கைக்குழந்தையை படுத்தவாக்கில் அம்மா தூக்கிக் கொண்டு நடந்தார். பார்க்க அழகாய் இருந்தது.
ஒஹோ நாம கூட வாழ்க்கையில வானத்தைப் பார்த்துக் கொண்டே மட்டும் சில காலம் இருந்திருக்கிறோம் என்று நினைத்ததும் அது ஒரு ஆர்வமாக மாறியது.
கழுத்தை மேல்வாக்கி திருப்பி வானத்தைப் பார்த்தேன். இதோ இப்படித்தான் பார்த்துக் கொண்டே, வானத்தை, மேல் கூரையை பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன். மறுபடி பார்த்தேன்.இதோ இப்படித்தான். மேலேயேஏஏஏஏ பார்த்துக் கொண்டு மட்டும் சிலகாலம் இருந்திருக்கிறேன்.
மாயாஜால் ஸ்டாப்பில் இறங்கி தியேட்டர் நோக்கி நடக்கிறேன்.
நடக்கும் போதுதான் என்னுடைய காய்ச்சல் சோர்வு பற்றி நினைவு வந்தது. உள்ளே போய் படம் பார்க்கப் போகிறோம். குளிராக இருக்கும். இந்தக் வித்தியாசக் காய்ச்சலுக்கு தாங்குவோமா?
நடக்கவே சோர்வாக இருக்கிறது. எதற்கும் ஒரு குரோசின் போட்டு விடுவோமா. பாகெட்டை தொட்டுப் பார்த்தேன்.
சில சமயம் ஒரே ஒரு குரோசின் வைத்திருப்பேன். இல்லை. சரி எதாவது கடையில் வாங்கலாம் என்று திரும்ப தியேட்டரை விட்டு நடந்தேன்.
ஒண்றிரண்டு வெத்தலைப்பாக்குக் கடையில் கேட்டேன். இல்லை இல்லை என்றார்கள். இப்போதெல்லாம் குரோசின் வெத்தலைப்பாக்குக் கடையில் கிடைப்பதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
முடிவில் ஒரு மெடிக்கல் கடையை கண்டுபிடித்து குரோசின் வாங்கினேன். விழுங்க வேண்டும். அதற்கு தண்ணீர் வேண்டும். வாட்டர் பாக்கெட் வாங்கலாமா என்று யோசித்தேன்.
அப்படியே நடந்து வரும் போது அந்த ஜூஸ் கடையைப் பார்த்தேன்.
எவர்சில்வர் பாத்திரங்களில் பாதாம்,ரோஸ்மில்க், ஆரஞ்ச், புரூட் மிக்சர், எலுமிச்சை ஜூஸ் என்று வைத்து விற்பார்களே அது மாதிரிக் கடை. ஒருகாலத்தில் இது போன்ற கடைகளில் புரூட் மிக்சர் வாங்கிக் குடிப்பேன்.
இங்கு ஆரஞ்சு ஜூஸ் வாங்கி, அதை வைத்துக் குரோசின் விழுங்கலாமா என்று நினைத்தேன். அப்படி நினைக்கும் போதே நீ முடிவில் புரூட் மிக்சர்தான் வாங்கப்போகிறாய் என்று இன்னொரு மனம் சொன்னது.
கடைக்குப் போனேன்.
“அண்ணே என்ன ஜூஸ் இருக்கு”
“ஆரஞ்சு... பாதாம்.. “ என்று சொன்னார்.
“லைம் குடுங்க”
“சரி”
“இல்ல இல்ல வேணாம் ஆரஞ்ச்”
“சரி”
“இல்ல ஆரஞ்ச் வேணாம். அதில்லாம புரூட் மிக்சர் இருக்கா”
”இருக்கு”
“அதையே குடுத்திருங்க”
வந்துவிட்டாயா உன் இச்சையை தணிப்பதாக நம்பும் புரூட் மிக்சருக்கு வந்துவிட்டாயா. நான் கண்டிரோலாக இருப்பேன் என்பதே தேவையில்லாத பாரம். தூக்கிப் போடு. வாழ்க்கையை அனுபவி. என்று குரல் கேட்டது.
”பாதாம் போடவா”
“ஆமா போட்ருங்க”
ஜூஸ் கடைக்காரர் கண்ணாடி கிளாஸை எடுத்து கால் பங்கு வெள்ளை பாதாம் பாலை ஊற்றி, அதன் உள்ளே ஆரஞ்சுக் கலர் புரூட் மிக்சரை ஊற்றிக் கொடுத்தார்.
வாங்கி ஒரு மடக்கு குடித்தேன். தரமான புரூட் மிக்சர்தான். இதை வைத்து குரோசின் சாப்பிடலாம்.
குரோசின் மாத்திரையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு புரூட் மிக்சரைப் பருகினேன்.
அப்படியே விழுங்கும் போது இந்த குரோசின் புரூட் மிக்சருக்குள்ள விழுந்தரனுமாம். நான் விரல விட்டு கிண்டி கிண்டி என் குரோசின் என் குரோசின்னு தேடுவேனாம்.
ஆஹா இப்படி நடந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். எழுதுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் நடக்க மாட்டேன் என்கிறதே என்று நினைக்கும் போதே குரோசினை விழுங்கியிருந்தேன்.
அதன் பிறகு புரூட் மிக்சரை நிதானமாக சுவைத்துக் குடித்தேன். நடுவில் கடைக்காரரை நோக்கி ஒரு புன்சிரிப்பு.
குடித்து முடித்தபிறகு கேட்டேன்.
“எவ்வளவுண்ணே”
“பதினைச்சி ரூபாய்”
இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். அதை வாங்கிக்கொள்ளும் போது
“புரூட் நல்லா இருந்திச்சிண்ணே”
“அப்படியா”
“எப்படி இனிமே வெயில் சீசன்ல வியாபாரம் நல்லா போகும் இல்ல”
“போகும்ன்னு நினைக்கிறேன் பாப்போம். நம்ம கடையில எல்லாமே நல்லா இருக்கும். நா கவனமா இருப்பேன். நல்லாயில்லாதத கொண்டு வர மாட்டேன்”
“ஒஹ்”
”பாருங்க லைம் ஜூஸ் எல்லாம் எசென்ஸ் இல்லாம ஒரிஜனல் லைம் ஜூஸ்.”
“ஒஹ் சூப்பர் நல்ல விஷயம்”
“நல்லாயிருக்கும். குடிச்சிப் பாக்குறீங்களா”
”இல்ல இல்ல வேணாம்”
“குடிங்க சும்மா. டேஸ்ட் பாருங்க”
“வேணாமுண்ணே”
“குடிங்க” என்று அன்போடு வற்புறுத்தி
ஒரு டம்ளரை எடுத்து பாதி அளவு எலுமிச்சை ஜூஸை ஊற்றிக்கொடுத்தார்.
நன்றாகவே இருந்தது. அதைப் பாராட்டினேன்.
கைகொடுத்து விடைபெற்றுக் கொண்டு மாயாஜாலை நோக்கி நடந்தேன்.
பரவாயில்லை மனிதர்கள் அன்பாகத்தான் இருக்கிறார்கள்.
கொஞ்சம் கனிவாக அவர்களை தொடர்பு கொண்டால் அப்படியே உருகிவிடுகிறார்கள். மற்றவர்களிடம் அன்பாக கனிவாக பழக வேண்டும் என்றும் ஒரு புரோகிராம் அவர்கள் மனதில் இருக்கிறது.
இந்த Rightness ஐதான் விவேகானத்தர் கடவுள் என்று சொல்லியிருக்கிறார். அதுக்கு முன்னாடியே புத்தர் சொல்லியிருக்கிறார்.
காரணகாரியமே இல்லாமல் சரியாக இருக்க வேண்டும்,
அன்பாக இருக்க வெண்டும், சக உயிர்களை நேசிக்க வேண்டும், கனிவு வேண்டும் என்னும் மனதை இன்னும் இன்னும் வளர்த்தெடுத்து ஒரு கனவு மனித சமுதாயத்தை அருளாளர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.
அதேப் போன்று காரண காரியமே இல்லாமல் மனதில் தோன்றும் Wrongness பற்றியும் யோசித்து அதை நீக்க தீர்வு சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
ஆனால் Rightness ஐ அளவுக்கு அதிகமாக உற்றுப் பார்த்து, Wrongness ஐ அந்த அளவுக்கு உற்றுப் பார்க்காமல் போய்விட்டார்கள்.
Rightness வளர்ந்தாலே Wrongness போய்விடும் என்று நினைத்திருக்கிறார்கள்.
ஆனால் Wrongness இல்லாத எதுவும் Rightnessதான் என்ற ரூட்டில் போனால்தான் அது சரிவரும் என்று இலக்கியவாதிகள் நினைத்திருக்கலாம்.
Wrongness ஐ மேலும் மேலும் உற்றுப் பார்த்து, பக்கத்தில் சென்று பார்த்து, பிரித்து ஆராய்ந்து, பெரிதாக்கிப் பார்த்தாலே அது நம்மை விட்டு போய்விடும் என்ற ரீதியில் இலக்கியம் படைத்திருக்கலாம்.
Wrongness உற்றுப் பார்க்கும் போது அது மனதில் இருந்து போவதற்கு பதிலாக அதுவே ஒரு கொண்டாட்டமுறையாக, பெருமையாக படிந்துவிடும்
ஆபத்து பற்றியும் இலக்கியவாதிகள் அறியாமல் இல்லை.
தோழியைக் கேட்டால் “தினமும் பத்து நிமிடம் மெடிட்டேசன் செய். அப்புறம் நீ நல்லது கெட்டது அனைத்தையும் கடந்த மனப்பக்குவத்துக்கு வருவாய்” என்பார்.
நல்லது கெட்டதைக் கடந்து என்ன செய்ய? அது ஒரு வாழ்க்கை முறையா? வாழ்க்கையில் Routine ஐ கவனித்துக் கொண்டிருந்தாலே நல்லது கெட்டதை கடக்கும் மனப்பக்குவம் வந்துவிடும் போல.
ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து அன்றைய செய்தித்தாளில் என்ன செய்தி இருக்கும் என்று பார்க்காமலே எழுதிவிடுவது மாதிரியான Routine யில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படி பலதும் நினைத்துக் கொண்டு தியேட்டரை அடைந்தேன். போன உடன் டாய்லட்டை நோக்கி ஒடினேன்.
சினிமா பார்க்கும் போது நிம்மதியாக பார்க்க வேண்டும்.
வாஷ் பேசனில் கைகழுவப் போகும்தான் நினைவுக்கு வந்தது.
“ஆமா கடைக்கார அண்ணன் நான் கொடுத்த 20 ரூபாயில் பதினைந்து ரூபாய் போக மிச்சம் 5 ருபாய் கொடுத்தாரா.
கொடுத்த ஞாபகம் இல்லையே.. கொடுத்திருப்பாரோ. எனக்கும் இது மாதிரி விஷயங்கள் மறந்துவிடும். கொடுக்கவில்லையோ, அல்லது அஞ்சு ரூபாய்க்குதான் எலுமிச்சை ஜூஸை ஊற்றிக் கொடுத்தாரோ. த்தா கடைக்காரன் ஏமாத்திட்டானோ நம்மள, மிச்சம் கொடுக்க வேண்டிய அஞ்சு ரூவாய்க்கு எலுமிச்சை ஜூஸ் உத்திக் கொடுத்திருக்கான். இல்லையே சில்லறை கொடுத்தானோ. இப்ப சினிமா விட்டுப் போகும் போது எலுமிச்சை ஜூஸ் குடிக்கிறேன் என்று சொன்னோமே, குடிக்கவா அல்லது அப்படியே ஒடிப்போயிடலாமா? கடைக்காரர் என்ன ஏமாத்திட்டாரா? இல்லையா? அல்லது எதுவும் பண்ணலையா? இப்படி இரண்டு நிமிடம் குழம்பினேன்.
சரி விடு என்று நினைத்துக் கொண்டு தியேட்டரை ஸ்கிரீனை நோக்கி நடந்தேன்.
நடக்கும்போது நான் ஏமாந்தேனா இல்லையா என்ற யதார்த்தம் புரியாமல் Wrongness, Rightness என்று நினைத்துக் கொண்டிருந்தது நினைத்து சிரிப்பு வந்தது.
டிக்கட் கிழிக்கும் இளைஞனைப் பார்த்து அந்த சிரிப்பை பிரதிபலித்தேன். 

No comments:

Post a Comment