குழந்தைகளை நாம் அதிகம் நேசிப்போம்.
ஆனால் நம்மைக் அதிகம் கஷ்டப்படுத்தும் போது சடாரென்று ஒரு கோபம் வரும்.
அந்த சமயத்தில் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்று பதிவு செய்யக் கூட முடியாதபடியான சமூகத்தின் நல்கண்கானிப்பில் இருக்கிறோம்.
சிறுவயதில் நானும் தம்பியும் ஒரு முறை அப்படி என் அத்தையை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தோம்.
அத்தை அரைத்த காய்ந்த மிளகாயை தூளை சிறுசிறு பாக்கெட்டுகளாக போட்டுக் கொண்டிருந்தார். நானும் தம்பியும் இங்கும் அங்கும் ஒடிக்கொண்டிருந்தோம்.
மிளகாய்ப் பொடி ஒருவேளை கால்பட்டு சிதறினால் அனைவருக்கும் கஷ்டம்.
அத்தை எங்களை எச்சரிக்கை செய்தார். திரும்ப திரும்ப கண்டித்தார்.
அடித்து எங்கள் சேட்டையை நிறுத்த வந்தார்.
நாங்கள் வீட்டுக்கு வெளியே ஒடிவிடுவோம். போய் ஹோய் ஹோய் என்று அழவம் காட்டுவோம். அத்தை வெளியே வந்து திட்டுவார். மறுபடி அத்தை அமர்ந்து பாக்கெட்டுகளை மெழுகுவர்த்தியில் ஒட்டும் போது போய் குறுக்க நெடுக்க ஒடுவோம்.
அப்படியே கடுப்பேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து அத்தை நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டு
“சனியன்களா கையில மாட்டுனீங்கன்னா பாருங்குல. அப்படியே இந்த வத்தல் பொடியை எடுத்து கண்ணுல தேய்ச்சி வெச்சிருவேன்” என்றார். அதைச் சொல்லும் போது அவர் கையில் ஒரு குத்து மிளகாய்ப் பொடி இருந்தது. நாங்கள் அப்போதும் வேடிக்கைக் அழவம் காட்டினோம்.
அடுத்து பத்து பதினைந்து நிமிடத்தில் அதை மறந்து ஒரு பாழும் கிணறு உண்டு அதனருகே விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த
சதுர வடிவத்திலான பாழுங்கிணற்றின் சுவரையும், பாத்ரூம் சுவரையும் இணைத்து அப்பா ஒரு தொட்டி கட்டியிருந்தார்.
நாகர்கோவில் ஒரு தண்ணீர் விளங்காத ஊர். அதிகம் தண்ணீர் தட்டுபாடுள்ள ஊர். குழாயில் நீர் வரும் போது அந்தத் தொட்டியில் நீர் ரொப்பி வைத்திருப்போம்.
அதனருகே விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த அத்தை என்னைப் பிடித்துக் கொண்டார். தம்பி எலிக்குஞ்சு மாதிரி தெறித்து ஒடிவிட்டான்.
என்னை பிடித்த அத்தை சட்டென்று கையில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து என் வாயில் வைத்து விட்டார். கண்ணிலும் வைத்துவிட்டார்.
சொன்னபடியே செய்து விட்டார் அத்தை.
இப்போது என்னருகே கேமராவை வையுங்கள்.
எனக்கு நடக்கிறது என்றே தெரியவில்லை. ப்பூம் ப்பூம் என்று மூச்சை எப்படியோ விட்டேன். எரிச்சல் தாங்கவில்லை.
பக்கத்தில் இருந்த தொட்டி நீரை எடுத்து வாயைக் கொப்பளித்தேன். நீரை முகத்தில் அறைந்து கொண்டேன்.
அங்கே ஒரு சிக்கல் தொட்டியில் நீர் 80 சதவிகிதம் காலியாகி இருந்தது. அதில் கொசுக்களின் லாவாப் பருவ கூத்தாடிப்புழுக்கள் துடித்துக் கொண்டிருந்தன.
அதோடு சேர்த்து வேறு வழியில்லாமல் நீரைக் கொப்பளித்தேன்.
சில சமயம் பண்டு நமக்கு நடந்த துன்பத்தில் ஒரு செர்ரி பழமாக இன்னொரு துன்பம் இருந்தால் அதைச் சொல்ல நன்றாக இருக்கும்.
அது மாதிரி வாயில் வத்தல் பொடியோடு நான் கூத்தாடி புழுக்கள் நிறைந்த நீரால் வாய்க்கொப்பளித்தேன் என்று சொல்ல இனிமையாகத்தான் இருக்கிறது
.
நான் துன்பப்படுவதை தூங்கிக் கொண்டிருந்த அம்மா எழுந்து வந்து பார்த்துவிட்டார்.
.
நான் துன்பப்படுவதை தூங்கிக் கொண்டிருந்த அம்மா எழுந்து வந்து பார்த்துவிட்டார்.
அம்மாவும் பாவம் காலையில் இருந்து வேலை. மதியம் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் நானும் அத்தையும் சேர்ந்து ஒரு செண்டிமெண்ட் டிராமாவைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
அம்மாவுக்கு தாங்கமுடியவில்லை. அந்த வீட்டில் ஒரு பவளமல்லி மரம் உண்டு. காலையானால் வாசம் மூக்கில் ஏறும்.
அதனடியில் என்னையும் தம்பியையும் வைத்துக் கொண்டு வெகு நேரம் அம்மா அழுது கொண்டிருந்தார்.
அம்மாவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. அப்பா வந்தார். அத்தையை திட்டினார். ஆனால் பெரிதாக ஒன்றும் திட்டவில்லை. பிற்பாடும் அப்பா இந்த சம்பவத்தைக் கேட்கும் போது ஒரு புன்சிரிப்போடு கடந்து விடுவார்.
கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கும். அம்மா அந்த டாப்பிக்கை எடுத்தாலே ரெளத்திரமாகிக் கொதிக்கும் போது அப்பா அமைதியாகவே இருப்பார்.
செவ்வாய்க்கிழமை அப்பாவுக்கு கடை லீவென்றால் நாங்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்போம். அப்பாவை விட சிறந்த பொழுதுபோக்கு எங்களுக்கு கிடைக்காது. மகாபாரதம், ராமாயணம், ஆலிவர் கோல்டு ஸ்மித், சாமுவேல் ஜான்சன், அறிவியல், எரிமலை, வானம், சூரிய குடும்பம், அவரது சிறுவயது அனுபவங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
நம்மையும் பேச அனுமதிப்பார்.
மிகச்சிறுவயதிலேயே அப்பாவைப் பார்த்து நீஙகள் ஒரு முட்டாள். பத்தாம் பசலி என்றெல்லாம் நான் கத்தியிருக்கிறேன். அதற்கெல்லாம் கோபப்படவே மாட்டார்.
அப்படி அப்பாவுடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போது அப்பா ஒருவிதமான நெகிழ்ச்சி மனநிலையில், என் கண்ணில் மிளகாய்ப் பொடியை தேய்த்த அத்தைப் பற்றி சொன்னார்.
“எனக்கும் அவளுக்கும் வயசு வித்தியாசம் அதிகம். நான் முதல் பையன். அதுக்கடுத்தது அஞ்சு பேர். அவ அறாவது பிள்ள. அவ பிறக்கும் போது நான் பெரிய பையன். நாலோ அஞ்சோ வயசுல அவளுக்கு அம்மை போட்டிருந்துச்சி. அப்படியே படுத்த படுக்கையா கிடந்தா.
நா நாகர்கோவில்ல இருந்து ஊருக்கு பாக்கப் போனேன். அப்ப கட்டில்ல சின்னப் பிள்ளையா படுத்திருந்தா. உடம்பு முழுசும் பொக்களம். வாயைத்திறக்க முடியாது. எல்லாரும் அவ செத்திருவான்னே பேசிகிட்டு இருந்தாங்க.
அப்ப அவ என்னப் பாத்து கண்ண கண்ண முழிச்சா ( என்று அது மாதிரி முழித்துக் காட்டினார்) அப்படியே எனக்கு கண்ணுல தண்ணி அருவி மாதிரி கட்டிப்போச்சு. ஓன்னு அழுதுட்டேன். அப்பா அழுதா எப்படி இருக்கும் தெரியுமா? வெடிச்சிருவேன்.யாராலும் சமாதானப்படுத்த முடியாது. அப்படி இருக்கும் போது எப்படியோ பிழைச்சா.
அவள நாங்க யாரும் எதுவும் சொல்றதில்ல. அவ உலகத்துக்கு மீண்டு வந்ததே பெரிய விஷயம். அதுல அவள என்ன கேக்குறது, திட்டுறது அப்படினே எனக்கு தோணும். ஏதோ சின்னப்பிள்ள ஒரு வயசுல தப்பு செய்வா. அப்புறம் திருந்திருவா என்ன. அப்பாவெல்லாம் அப்படித்தான் நினைச்சிகிடுவேன்பா.” என்றார்.
அப்பா இதைச் சொல்லி முடிக்கும் போது நான் நெகிழ்ந்து விட்டேன்.
என்னைப் போல அப்பாவுக்கு அத்தையும் ஒரு குழந்தையாகத்தான் இருந்திருக்கிறார். இருக்கிறார்.
தன் இரண்டு குழந்தைகள் சண்டை போடும் போது ஒரு அப்பா நிச்சயம் நியாயம் பேச மாட்டார்.
“ரெண்டு பேரும் சண்ட போடாம இருங்கப்பா” என்று அன்பாக கெஞ்சத்தான் செய்வார்.
ஒருவரிடம் அன்பும் வாஞ்சையும் சரியான நேரத்தில் சரியானபடி மனதில் விழுந்துவிட்டால் அதை எப்படி எதை வைத்து அழித்தாலும் அழியாது.
அது அழகான சுடராக ஒளிவிட்டுக் கொண்டுதான் இருக்கும்.
அப்படியான ஒரு அன்பும் வாஞ்சையும் அத்தையின் மேல் அப்பாவுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
நெகிழ்ச்சியை விட அழகானது வாழ்க்கையில் எது சொல்லுங்கள்
இதே மொளகா பொடி கண்ணில் உங்க அத்தை போட, உங்கள் அப்பா ,அந்த சமயத்தில் இருந்து .அவருடன் அதிகம் பேசாமல். அவரை உறவிலிருந்து தள்ளி விட்டது போல .உங்கள் முந்தய பதிவில் உள்ளது. சரி பார்க்கவும். ஒரே கதையை, ரஷோமான் ஸ்டைலில் எத்தனை விதமா சொல்லுவீங்க?
ReplyDelete