Thursday, 16 March 2017

அத்துமீறல்...

கொஞ்சம் என்னைப் புரிந்து கொண்ட பெண்களிடம் அவர்கள் சிறுவயதில் சந்தித்த Child abuse பற்றி கேட்பேன்.
இதில் பல வகை abuseகளை வெளியே ஒரு விஷயமாக சொல்ல முடியாது. உலகம் அதை ஏற்றுக் கொள்ளாது.
ஆனால் அது அவர்கள் மனதை கடுமையாக பாதித்திருக்கும். அதில் ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறேன்.
சின்னத் தொடலோ, பார்வையோ, அல்லத் பேச்சோ அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் சிறுபிள்ளைகளின் மனதை எவ்வளவு கடுமையாக பாதிக்கிறது என்பதைச் சொல்லத்தான் இந்த உதாரணம்.
ஒரு குட்டிப்பெண். வயது ஒன்பது இருக்கும்.
அப்பாவிடம் வெளியூர் எங்காவது அழைத்துச் செல்லுங்கள் என்று அடம்பிடித்துக் கொண்டே இருக்கிறாள்.
அப்பா அம்மா தாத்தா பாட்டியுடன் எங்காவது வெளியே டிரிப் சென்று வரவேண்டும் என்பது அவள் ஆசை. வெகுநாள் தட்டிக் கழித்த அப்பா, ஒருநாள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். விடியற்காலை கிளம்புமாறு டாக்சி ஏற்பாடு செய்கிறார்.
ஒருநாள் சுற்றுலா அது. காலை கிளம்பி இரவு திரும்பும் சிறு சுற்றுலா அது. எதுவானால் என்ன? மகிழ்ச்சி ஒரே மாதிரிதானே இருக்கும். அச்சிறுமியால் இரவு சரிவரத் தூங்கமுடியவில்லை. எப்படா விடியும் என்றிருக்கிறது.
விடிந்ததும் விடியாதுமாக, தம்பியை எழுப்புகிறாள். அம்மா அப்பாவை எழுப்புகிறாள். அவள் வேகமாக குளித்து, திட்டமிட்ட ஃப்ராக் உடையை எடுத்து அணிந்து கொள்கிறாள். கண்ணாடி முன்பு அழகு பார்த்துக் கொள்கிறாள்.
அம்மா உணவு தயாரிக்கிறார்கள். அதை எடுத்து வாயில் போட்டு வயிற்றை சீக்கிரமாக ரொப்பிக் கொள்கிறாள்.
டாக்சி வருகிறது. ”அம்மா நான் கார்ல இருக்கேன்” என்று காரை நோக்கி ஒடிவருகிறாள். முன் சீட்டில் டிரைவர் இருக்கிறார். இவள் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொள்கிறாள்.அந்த மத்திம வயது டிரைவர் திரும்பி ஒரு சிரிப்பு சிரிக்கிறார்.
இவளும் மலர்ந்து சிரிக்கிறாள். அவர்தானே இந்த சுற்றுலாவை நல்லபடியாக கொண்டு செல்லும் முக்கிய காரணி என்று அவள் மனம் நினைத்திருக்கலாம். டிரைவர் திரும்பி அவள் எந்த வகுப்பு படிக்கிறாள் என்றெல்லாம் கேட்கிறார்.இவளும் சொல்லிக் கொண்டு வருகிறாள்.
திடீரென்று டிரைவர் முன்சீட்டில் இருந்து பின்சீட்டை நோக்கி உடலை நுழைத்து எழுகிறார். எழுந்து கார் பின் சீட் இடது ஜன்னலோரம் அமர்ந்திருந்த இவளை நோக்கி வந்து “ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல அந்த ஜன்னல் சரியா பூட்டப் மாட்டேங்குது என்று அவர் வலது கையால் அந்த இடதோர ஜன்னலை சரிசெய்கிறார்.
அப்படி செய்யும் போது அவருடைய இடது கை இச்சிறுமியின் தொடைகளுக்கு நடுவே இருக்கும் சீட் பகுதியில் அவர் இடதுகையை வைத்து முட்டுக் கொடுத்துக் கொள்கிறார்.
சிறுமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நடுவில் மாட்டிக்கொண்டாள்.
அந்த ஜன்னலை வலது கையால் சரி செய்ய முயற்சி செய்யும் டிரைவர், தன் இடது கையை இன்னும் கொஞ்சம் நகர்த்தி சிறுமியை ஐந்து விநாடிகள் வேகமான ஒரு பாலியல் அருவருப்பு தொடல் செய்கிறார். கண்ணைத் திறந்து மூடுவதற்குள் அதைச் செய்துவிட்டு இயல்பாக தன் இருக்கையில் அமர்ந்து விடுகிறார்.
அடுத்து சிறுமியிடம் இயல்பாகப் பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து அப்பா அம்மா தம்பி தாத்தா பாட்டி அனைவரும் வர கார் கிளம்புகிறது. கொஞ்ச நேரம் முன்பு வரை சுற்றுலா உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்த சிறுமியின் மனம் இப்போது உற்சாகத்தில் இல்லை.
ஏதோ குழப்பமாக இருக்கிறது அவளுக்கு.
அந்த டிரைவர் விநாடி நேரத்தில் என்ன செய்தார் என்பது குழப்பமாக இருக்கிறது அவளுக்கு. அவமானமாக இருக்கிறது. மூச்சை சீராக விடமுடியாதது போல் இருக்கிறது.
உடம்பு முழுவதும் கவனமாக பார்த்துக் கொள்ளும் கவனம் அச்சிறுமிக்கு வந்துவிடுகிறது. அவள் உடம்பின் ஒவ்வொரு உறுப்பையும் யாராவது எங்காவது தொட்டுவிடுவார்களோ என்ற கவனம் வந்துவிடுகிறது.
வாழ்க்கை முழுவதும் அவளுக்கு அந்த பெரிய பாரத்தை தலையில் வைக்கும் கொடுமை ஆரம்பிக்கப் போகிறது.
அவள் பெரியவளாகி ஒரு கம்பெனியில் வேலை
பார்த்தால், அங்கே ஒருவருக்கு பிறந்தநாள் என்று கேக் வெட்டினால், ஆண்கள் மாதிரி முண்டியடித்து கேக் துண்டுகளை எடுத்துக் கொள்ள முடியாது. கூட்டத்தில் சென்றால் யாராவது உடலை எங்காவது தொட்டு வைத்துவிடுவார்களோ என்ற பயம் வந்தாயிற்று.
ஏதோ ஒரு வகையில் இது மாதிரியான சரிவர வெளியில் சொல்லமுடியாத அப்யூஸ்கள் அவளை பல இடங்களில் முடக்கிப் போடப் போகின்றன.
அன்றைய சுற்றுலாவே அவளுக்கு சுறுசுறுப்பு இல்லாமல் போகிறது. அதைக் கொண்டாடும் மனநிலையே இருக்கவில்லை. அமைதியாகிவிடுகிறாள்.
அப்பா சிரிக்கும் போது ஒரு சிரிப்பு,
அம்மா சிரிக்கும் போது ஒரு சிரிப்பு,
அனைவரும் சிரிக்கும் போது ஒரு சிரிப்பு.
சிரிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் மட்டும் ஆகிவிடுகிறாள்.
இதுமாதிரி கோடிக்கணக்கான சிறுமிகள் ஒருநாளைக்கு பாதிப்படைகிறார்கள்.
அவர்களுக்கு நடக்கும் அப்யூஸை வெளியே சொல்லவே முடியாது.
“இல்ல டிரைவர் கை தெரியாம பட்டிருக்கும்”. “சித்தப்பா சாதரணமா செய்திருப்பார்”. “சார் கை ஏதேட்சையா பட்டிருக்கும். அவரு என்ன அங்க வெச்சிட்டேயா இருந்தார். உடனே எடுத்துட்டாருதான. இதப் பெரிய விஷயமா எடுத்துக்காத” என்ற பதில்தான் கிடைக்கும்.
அடுத்து “நீ ஏன் காருக்குள்ள முன்னாடி போய் உட்காந்துக்குற” என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகலாம்.
ABUSE என்றாலே பாலியல் வல்லுறவுதான் என்ற எண்ணம் நமக்குள் இருப்பது ஆபத்தானது.
அந்த டிரைவரின் இச்சை ஒரு சிறுமியின் ஒட்டுமொத்த மனநிலையே பாதித்துவிடுகிறது. இதுமாதிரி இன்னும் இரண்டு சம்பவங்கள் அச்சிறுமிக்கு நடந்தாள் அவள் வீட்டை விட்டு வெளியே போவது பற்றியே யோசிக்க ஆரம்பித்துவிடுவாள்.
ஒரு பாஸ்கெட்டுக்குள் இருக்கும் பால்பாகெட்டுகளை இன்னொரு பாஸ்கெட்டுக்கு மாற்றவேண்டும். பதிமூன்று வயது சிறுவன் இருகைகளையும் உபயோகித்து படபடவென்று எடுத்துப் போடுகிறான். ஆனால் பதிமூன்று வயது சிறுமி ஒரு கையை வைத்து தன் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ஒரே ஒரு கையால் பால் பாக்கெட்டுகளை எடுத்துப் போடுகிறாள்.
சமூகம் செய்யும் அப்யூஸ்தான் அது. பார்வையாலேயே செய்யும் அப்யூஸ் அது.
ஒரு ஆணுக்கு வாழ்க்கையின் இறுதிவரை தன் உடலை யாராவது தொட்டு அத்துமீறிவிடுவார்களோ என்ற கவலையே இல்லை. (அல்லது மிக மிக குறைவு)
அதனாலேயே பெண்ணின் வைக்கப்படும் மெலிதான(?) பல அப்யூஸ்கள் அவனுக்கு புரிவதே இல்லை.
உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன. அதில் பாலுறுப்புகள் என்ற நிலையில் இருந்து, பாலுறுப்புகளை பாதுக்காப்பதுதான் என் முதல் பணி என்ற நிலைக்கு பெண்ணின் மனதை தயார்படுத்தும் கொடுமையை இது மாதிரி சிறுசிறு(?) அப்யூஸ்கள் ஏற்படுத்திவிடுவது கொடுமை.
ஒரு ஆம்பிளைப்பையன் கராத்தே கிளாஸ் சேர்த்துவிட வேண்டுமா? சேர். ஒவிய வகுப்பு சேர்க்க வேண்டுமா? சேர். பொம்பளைப் பிள்ளைய சேர்க்க வேண்டுமா? யார் வாத்தியார்? யார் சொல்லிக் கொடுக்கிறார்|? அவர் நல்லவரா? நல்லபடியாக நடந்து கொள்வாரா? இந்த கேள்வி தன்னிச்சையாக பெற்றோர்களுக்கு வந்துவிடுகிறது.
இந்த இடத்திலேயே ஆண் பெண்ணை விட முன்னேறிச் செல்ல ஆரம்பித்துவிடுகிறான்.
இது பற்றிய புரிதல்களை எல்லாம் எப்படி சமூகத்தில் ஏற்படுத்துவது என்று தெரியவில்லை.
ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் இது போன்ற விஷயங்களை சிறுவயதிலேயே சொல்லிக் கொடுக்கலாம்.
ஒரு அம்மா தான் சந்தித்த ஒரு சிறு அப்யூஸை பசங்களுக்கு சொல்லிக் அதனால் தான் அடைந்த மன வேதனையை ஒரே ஒருநாள் சொல்லும் போது அவன் மனதில் அது தைக்கலாம்.
இது மாதிரி நாசுக்கான(?) அப்யூஸ்களை நிறைய பெண்களிடம் கேட்டுத் தொகுக்க வேண்டும்.
அப்படி தொகுக்கும் போது அதைப் படிக்கும் ஆணுக்கு பாலியல் கிளர்ச்சி வராமல், உண்மையான கவலை வரும்படியாக கவனமாக எழுதித் தொகுக்க வேண்டும்.
’ஒஹ் இப்படிக் கூட பிரச்சனை இருக்கா’ என்று தெரியாத பலர் இன்னும் இங்கே இருக்கிறார்கள்.

1 comment:

  1. //ஒரு ஆணுக்கு வாழ்க்கையின் இறுதிவரை தன் உடலை யாராவது தொட்டு அத்துமீறிவிடுவார்களோ என்ற கவலையே இல்லை. (அல்லது மிக மிக குறைவு)
    அதனாலேயே பெண்ணின் வைக்கப்படும் மெலிதான(?) பல அப்யூஸ்கள் அவனுக்கு புரிவதே இல்லை//
    //இது மாதிரி நாசுக்கான(?) அப்யூஸ்களை நிறைய பெண்களிடம் கேட்டுத் தொகுக்க வேண்டும்.
    அப்படி தொகுக்கும் போது அதைப் படிக்கும் ஆணுக்கு பாலியல் கிளர்ச்சி வராமல், உண்மையான கவலை வரும்படியாக கவனமாக எழுதித் தொகுக்க வேண்டும்//

    ReplyDelete