Thursday, 16 March 2017

புத்தகக் காதல்....

வெள்ளி சிறுவர்மலர் வரும்.
அதை முதலில் படிக்கும் உரிமை எனக்கு.
ஞாயிறு வாரமலர் வரும். அதை முதலில் படிக்கும் உரிமை பெரிய அண்ணனுக்கு.
சனிக்கிழமையும் ஒரு மலர் வரும். அதன் பெயர் கதைமலர். அதை முதலில் படிக்கும் உரிமை சின்ன அண்ணனுக்கு.
அதாவது சிறுகதைகளுக்காக ஒரு இதழ் வந்தது.
ஆர்னிகா நாசர், சாரு நிவேதிதா, அய்கண், மகரிஷி மாதிரி எழுத்தாளர்கள் எல்லாம் எனக்கு அப்படித்தான் தெரியும்.
அந்த கதைமலரை இரண்டாவதாகப் படிக்கும் முன்னுரிமை எனக்குக் கிடைத்திருந்தது.
ஒருநாளில் எல்லாக் கதைகளையும் படித்து முடித்துவிடுவேன்.
ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படித்த ஞாபகம். வெகுசன இதழ்களின் சிறுகதைகள் அனைத்தும் உள்ளேப் போய்விடும். சரி இது தற்புகழ்ச்சி. அது கிடக்கட்டும்.
அந்தக் கதைமலரில் ஒரு கதைப் படித்தேன்.
அது என்னை மிகவும் பாதித்தது. கதை என்ன?
அதாவது ஒரு வயதான அப்பாவுக்கு படிக்கும் பழக்கம் உண்டு. நிறைய புத்தகம் படிப்பவர். அவர் கண்ணாடி உடையவே மகனிடம் இன்னொரு மூக்குக்கண்ணாடி கேட்பார். மகனுக்கோ பெரிய வேலை வருமானமில்லை. ஆகையால் இன்னைக்கு நாளைக்கு என்று மூன்று மாதங்கள் இழுத்து விடுகிறான்.
அதன் பிறகு கஷ்டப்பட்டு அப்பாவுக்கு மூக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுக்கிறான். அப்பா அதை வாங்கி போட்டுக் கொள்ளும் போது அவர் பேரன் ஒடி வந்து கண்ணாடியைத் தட்டி கண்ணாடி உடைந்து போகிறது. அதோடு கதை முடிந்துவிடும்.
இது ஒரு சாதரணக் கதையாகத் தெரியலாம். ஆனால் அந்த வயதில் எனக்கு அது மிக நெகிழ்ச்சியான கதை. அந்த வயதானப் பெரியவரின் நிலையை நினைத்து நினைத்து கவலை கொள்வேன்.
ச்சே அது உடையும்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும். இப்படியெல்லாம் தோன்றும்.
அதாவது ”மூக்குக் கண்ணாடியின்மை” வாசிப்பதை தடையும் செய்யும் பொருளாக ஆகிப் போகும் போது ஏற்படுத்தும் பதட்டம் கொடுமையானது.
அம்பேத்கருக்கு அப்படி ஒரு நிலமை ஏற்படுகிறது. 1933 ஆம் வருடம் சமயத்தில் அவர் இந்தியாவுக்கும் லண்டனுக்கும் அடிக்கடி அலைகிறார்.
இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. கண்பார்வை மங்குகிறது. இந்தக் கண்பார்வை மங்குவது பற்றி அம்பேத்கர் அதிகம் வருத்தப்படுகிறார்.
புத்தகங்கள் மீது அம்பேத்கர் கொண்டுள்ள காதல் அப்படி.
1.வெளிநாட்டில் படித்து விட்டு அம்பேத்கர் கப்பலில் வரும் போது மொத்தம் 24 பெட்டிகளில் அவருடைய புத்தககங்களை எடுத்து வந்தாராம்.
2.லண்டனுக்கு பேச்சுவார்த்தை நடத்தப் போனாலும் இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் “என் புத்தகங்களை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கடிதத்தில் எழுதுகிறார்.
3.தாழ்த்திவைக்கப்பட்ட மாணவர்கள் விடுதியில் சென்று உரையாற்றும் போது ”கல்வி கற்கும் போது பல்தரப்பட்ட புத்தகங்களை திரும்ப திரும்ப சேகரித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் குறிப்பிட்ட அறிவை பெறுவரையில் படிக்கும் போது எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளத்தேவையில்லை. அறிவை வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புத்தகங்கள தொடர்ச்சியாக வாசியுங்கள்” என்கிறார்.
4.இன்னொரு கல்லூரி உரையில் “ என் வாழ்க்கையின் லட்சியமே ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கிப் படித்து பேராசிரியராகி வாழ்நாள் முழுவதும் ஒரு மாணவனாக கற்க விரும்பினேன். ஆனால் சமூகவிஷயங்கள் என்னை போராட்டக்காரனாக்கி விட்டது. புத்தகங்கள் வாசிப்பது மட்டும் எனக்கு போதும்” என்கிறார்.
5.பிற்காலத்தில் ”ராஜ்கிரகா” என்றொரு நூலகத்தை பார்த்து பார்த்து கட்டி, புத்தகங்களை அடுக்கி, புத்தகங்கள் மீது காதல் கொண்டுள்ளார்.
6.ஒருமுறை கப்பலில் லண்டன் செல்லும் போது அவரது கால்வலி காரணமாக கப்பலில் உலாத்தவே முடியத நிலையில் இருக்கிறார். இருந்தும் அவர் கவலைப்படவில்லை. புத்தகங்கள் படித்தே பல நாட்களைக்
போக்கிவிடுகிறார்.
7. நான் சுவாரஸ்யமானவனோ, எளிதில் நட்பு கொள்பவனோ கிடையாது. புத்தகம் வாசித்துக் கொண்டே அது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதால் என் முகம் சிடுசிடுபாகவே இருக்கும் என்றொரு உரையில் பேசியிருக்கிறார்.
இந்த அளவுக்கு புத்தகங்களை நேசிக்கும் ஒரு மனிதருக்கு கண்பார்வை மங்கினால் எப்படி மனம் பதைபதைக்கும்.
வேறு ஒரு கண்ணாடி மாற்றுகிறார். அதுவும் கொஞ்சநாளில் ஏமாற்றிவிட, இன்னொரு மூக்குக்கண்ணாடியை கேட்டு அணிந்திருக்கிறார். இது பரவாயில்லை.
இது மாதிரியான குழப்பம் வரும் போது அம்பேத்கருக்கு ஒரு பயம் வருகிறது. கால்வலி கைவலி போன்ற உடல்ப் பிரச்சனைகளை அவர் கண்டுகொள்வதில்லை. ஆனால்
தன் கண்பார்வையில் பிரச்சனை என்று வரும் போது அவர் அதிகம் கலங்குகிறார்.
வயதானக் காலத்தில் எனக்கு கண்பார்வையில் பிரச்சனை வந்துவிடுமோ என்று கலங்கி ஒருநாள் தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.
பெரிய பெரிய பிரச்சனைகளையெல்லாம் நெஞ்சுரம் கொண்டு தைரியமாக எதிர்கொண்டவரால்,
புத்தகம் வாசிக்க முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தைக் கூட தாங்க முடியாமல் அழுதிருக்கிறார் என்றால் அவர் புத்தகங்களை எவ்வளவு நேசித்திருப்பார் பாருங்கள்.
அம்பேத்கர் ஏன் புத்தகத்தை அவ்வளவு நேசித்தார்? ஏன் அப்படி ஒரு வெறி?
அந்த புத்தக நேசம்தான்
ஒரு சமத்துவமான கருத்துத்தளத்தை ஏற்படுத்தி,
இப்போதைய இந்தியாவை கொஞ்சமாவது ஒற்றுமையாக வைத்திருக்கிறது என்று நினைத்து பாருங்கள்.
அவர் அழுகையைப் புரிந்து கொள்வீர்கள்.

No comments:

Post a Comment